Friday, March 10, 2017

Keerthivasan

ஈழப் போரின் இறுதி நாட்கள் – 8

கிட்டு இந்திய உளவுதுறைக்கு காட்டிய ‘விளையாட்டு’


மலேசியாவில் இந்த ஆலோசனை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, புலிகளின் தலைவர் பிரபாகரன், கே.பி.யுடன் நேரடி தொடர்பில் இருந்தார்.

யுத்தம் கடுமையாக நடந்து கொண்டிருந்த காரணத்தால் பிரபாகரனுடன் மிகச் சுருக்கமாகவே கே.பி.யால் பேச முடிந்தது. அமெரிக்காவும் நார்வேயும் தெரிவித்த விஷயங்களை மேலோட்டமாக தெரிவித்த கே.பி., மீதி விபரங்களை தாமே நேரில் வந்து விளக்கமாக தெரிவிப்பதாக பிரபாகரனிடம் கூறினார்.

ஆனால், நார்வே தூதர் டோர் ஹட்டேர்ம் கடும் சிக்கலில் இருந்தார். கொழும்பில் இருந்து அவர் எப்படி ரகசியமாக கோலாலம்பூர் வந்து கே.பி.யை சந்தித்தார் என்பதை ஏற்கனவே எழுதியிருந்தோம். அப்படியான வழியில் வந்துவிட்டு, ஸ்ரீலங்கா அரசிடம் எப்படி உதவி கேட்க முடியும்? அதுவும், பிரபாகரனுக்கு செய்தி கொண்டுபோகவுள்ள நபர் கே.பி. என்று சொன்னால், இவர் எப்படி கே.பி.யை தொடர்பு கொண்டார் என்று ஸ்ரீலங்கா அரசு திருப்பிக் கேட்கும்.

இதனால், நார்வே தலைநகர் ஆஸ்லோவில் உள்ள வெளியுறவு அமைச்சு மூலம், கொழும்புவை தொடர்பு கொள்ளும் முயற்சியில் இறங்கினார் நார்வே தூதர் டோர் ஹட்டேர்ம்.

நார்வே குழுவைச் சந்தித்துவிட்டு தமது ஹோட்டல் ரூமுக்கு திரும்பிய விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகளான கே.பி., பேரின்பநாயகம், ஜாய் மகேஸ்வரன் பொறி ஆகிய நால்வரும், இதற்கு புலிகள் தரப்பில் மாற்று வழி எதையாவது செய்ய முடியுமா என்று ஆலோசனையை தொடங்கினார்கள். பாங்காக்கில் இருந்து கோலாலம்பூர் வந்திறங்கிய உருத்திரகுமாரனும் (தற்போது அமெரிக்காவில், நாடு கடந்த தமிழீழ அரசு என்ற அமைப்பில் பிரதமராக உள்ளவர்) இந்த ஆலோசனையில் கலந்து கொண்டார்.

இதற்கிடையே நார்வே குழுவினர், புலிகளின் பிரதிநிதிகளை தம்முடன் டின்னரில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்திருந்தனர். உருத்திரகுமாரனையும், ஜாய் மகேஸ்வரனையும் டின்னருக்கு அனுப்பியபின், முன்பு புலிகளுக்காக கடல் போக்குவரத்து விவகாரங்களில் முன்பு உதவிகள் செய்த இரு கப்பல் கேப்டன்களையும் அழைத்து ஆலோசனையை தொடங்கினார் கே.பி.

நார்வே அரசு எவ்வளவு கடுமையாக முயன்றாலும், யுத்தம் நடைபெறும் பகுதிக்குள் கே.பி.யை அனுப்பி வைக்க ஸ்ரீலங்கா அரசு சம்மதிக்காது என்று கே.பி. கருதினார். ஸ்ரீலங்கா அரசு சம்மதிக்காவிட்டால், கப்பல் மூலமாக யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்த முல்லைத்தீவு மாவட்ட கடற்கரைக்கு கே.பி. செல்வது எந்தளவுக்கு சாத்தியம் என்பது அலசப்பட்டது.

இங்குள்ள ஒரு முக்கிய விஷயம் என்னவென்றால், அந்த நேரத்தில் ஸ்ரீலங்கா கடற்படையின் கடல் முற்றுகைக்குள் இருந்த முல்லைத்தீவு பகுதியை கப்பல் மூலம் சென்றடைவது பற்றி கே.பி. தவிர வேறு யாராலும் கற்பனைகூட செய்து பார்க்க முடியாது.

என்ன காரணம்? கடந்த காலங்களில் விடுதலைப் புலிகள் வெற்றியடைந்த பல யுத்தங்களின்போது, கப்பல் மூலம் ஆயுத சப்ளை செய்தவரே கே.பி.தான்.

1980களின் இறுதியில் இருந்து இலங்கையில் புலிகள் ஒவ்வொரு தாக்குதலை நடத்திய போதும், தேவையான ஆயுதங்கள் கே.பி. மூலமாக தடையின்றி வந்து இறங்கிக் கொண்டிருந்தன. விடுதலைப்புலிகள் அமைப்பு 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறிது சிறிதாக கட்டியெழுப்பிய ராணுவப் பலம், வெறும் கரங்களால் யுத்தம் புரிந்து பெறப்பட்டதல்ல. அதில் ஆயுதங்களும் பெரும் பங்கு வகித்தன.

ஓயாத அலைகள்-3 (ஆனையிறவு தாக்குதல்) 2000-ம் ஆண்டு ஏப்ரல் 22-ம் தேதி புலிகளுக்கு வெற்றியாக முடிந்தது. விடுதலைப் புலிகளின் சரித்திரத்தில் மிகப்பெரிய ராணுவ வெற்றி அதுதான்.

அது முடிந்தபின் புலிகளின் தளபதிகள் அனைவரையும் அழைத்த பிரபாகரன், ‘இந்த வெற்றியில் உங்கள் அனைவரின் பங்களிப்பும் உள்ளது. மிகப் பெரிய பங்களிப்பு, யுத்தத்துக்கு தேவையான ஆயுதங்களை கே.பி. உரிய நேரத்தில் சாதுர்யமாக இங்கே கொண்டுவந்து சேர்த்ததுதான். கே.பி. அனுப்பிய ஆயுதங்களே இந்த வெற்றியை உறுதிப்படுத்தின’ என்று அறிவித்தார். அந்த வெற்றிக்குப் பின்னரே பல வெளிநாடுகள் விடுதலைப் புலிகளுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டன.

2002-ம் ஆண்டுவரை வெளியேயிருந்து அந்த ஆயுத சப்ளையை செய்து கொடுத்தது கே.பி. என்ற ஒருவர்தான்.

2002-ம் ஆண்டு நிலைமை மாறியது. ‘பணம் இருந்தால் ஆயுதங்கள் வாங்கலாம். கப்பல் இருந்தால் அவற்றை ஏற்றி வந்து இறக்கலாம். இதில் பெரிதாக சூட்சுமம் ஏதும் கிடையாது’என்ற கண்டுபிடிப்பு ஏற்றுக் கொள்ளப்பட்டது. கே.பி.யிடமிருந்து ஆயுத சப்ளை புதியவர்களிடம் கைமாற்றப்பட்டது. கே.பி.-யின் ஆயுத சப்ளை காலத்தில், புலிகளின் ‘ஈழப்போர் 1ம், 2ம், 3-ம் கட்டம்’ என்று நடந்தது. புதியவர்களின் புண்ணியத்தில், ‘ஈழப்போர் இறுதிக் கட்டம்’ நடந்து முடிந்தது.

அது பெரிய கதை. இந்த தொடர் முடிந்தபின் அதையும் விலாவாரியாக எழுதலாம். இப்போது விட்ட இடத்துக்குச் செல்லலாம்.

கே.பி. தமது அனுபவங்களை வைத்து, நார்வே மற்றும் ஸ்ரீலங்கா அரசின் உதவி இல்லாமலேயே கப்பல் மூலம் முல்லைத்தீவு கரைக்குச் சென்று பிரபாகரனைச் சந்திப்பது எந்தளவுக்கு சாத்தியம் என்று மற்றையவர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். புலிகளால் கடலில் வெற்றிகரமாக செய்யப்பட்ட பல போக்குவரத்துகளும் இருந்தன. கப்பல்கள் அடிபட்ட சம்பவங்களும் இருந்தன. முக்கியமானவர்கள் உயிரிழந்த சம்பவங்களும் இருந்தன.

இறுதி யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் கே.பி.யின் பயணம் உயிரைப் பணயம் வைத்து செய்யப்பட வேண்டிய ஒன்று என்பதால், கடந்த காலத்தில் புலிகளின் முக்கியஸ்தர் ஒருவர் இலங்கை நோக்கி கப்பலில் செல்லும்போது உயிரிழந்த சம்பவத்தில், விடப்பட்ட தவறுகள் தொடர்பாக இவர்கள் அலசினார்கள்.

அந்த சம்பவம், புலிகளின் முக்கியஸ்தர் கிட்டு (சதாசிவம் கிருஷ்ணகுமார்) இலங்கைக்கு வரும் வழியில் இந்தியக் கடலில் உயிரிழந்த சம்பவம்.

இது தொடர்பாக அதிக தகவல்களை புலிகள் வெளியிடவில்லை. ரகசியம் காக்கப்படுவதற்காக அவர்கள் அப்படி செய்திருக்கலாம். இதனால் அநேகருக்கு என்ன நடந்தது என்பது மேலோட்டமாகதான் தெரியும்.

இதோ கிட்டு உயிரிழந்த பின்னணியை முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள்.

கிட்டு தனது காலை இழந்து இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்ட நிலையில் இருந்தபோது, அவரை தன்னுடன் வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்ல பிரபாகரனிடம் அனுமதி கேட்டு பெற்றவர் கே.பி.தான். அப்போது புலிகளின் வெளிநாட்டு ஆபரேஷனுக்கு கே.பி. பொறுப்பாக இருந்த காரணத்தால், தன்னுடன் நன்கு பரிச்சயமான கிட்டு, தமக்கு உதவிகரமாக இருப்பார் என்று கூறியே அனுமதி பெற்றிருந்தார்.

கிட்டு லண்டனில் தங்கியிருந்து புலிகளின் ஐரோப்பிய விவகாரங்களை கவனிக்கத் தொடங்கிய நிலையில், சில ராஜதந்திர முறுகல்கள் ஏற்பட்டன. கிட்டு தொடர்ந்தும் பிரிட்டனில் தங்கியிருப்பது தமக்கு சில சங்கடங்களை ஏற்படுத்துவதாக ஹோம் மினிஸ்ட்ரி தெரிவித்தது. ஒரு கட்டத்தில் கிட்டு பிரிட்டனில் இருந்து நாடு கடத்தப்படலாம் என்ற நிலையும் ஏற்பட்டது.

நிலைமை இறுகுவதைப் புரிந்துகொண்ட கே.பி., கிட்டுவை பிரிட்டனில் இருந்து சுவிட்சலாந்துக்கு நகர்த்தினார்.

அங்கே சிறிதுகாலம் கிட்டு தங்கியிருந்த நிலையில், விடுதலைப்புலிகள் அமைப்புடன் அதிகாரபூர்வமற்ற முறையில் சில விஷயங்களை விவாதிக்க விரும்பியது அமெரிக்க அரசின் முக்கிய டிப்பார்ட்மென்ட் ஒன்று. அமெரிக்க ஸ்டேட் டிப்பார்ட்மென்ட் இதில் சம்மந்தப்படவில்லை. இதனால், வெளிநாடுகளில் உள்ள அமெரிக்க தூதரகங்களை இதில் தொடர்பு படுத்த அவர்கள் விரும்பவில்லை. இதில், தூதரக அழைப்போ, அஃபிஷியல் விசாவோ கிடையாது.

அமெரிக்காவுக்குள் வைத்து பேசவும் அவர்கள் விரும்பவில்லை. அத்துடன் மற்றைய நாட்டு உளவுத்துறைகள் அதிகளவில் செயற்படும் ஐரோப்பிய நகரங்களையும் தவிர்க்க விரும்பினார்கள்.

இப்படியான சூழ்நிலையில் பெருத்தமாக இடம், அமெரிக்காவுடன் தரை எல்லை வழியாக இணைக்கப்பட்டுள்ள நாடான மெக்சிகோதான்.

மெக்சிகோவில் வைத்து பேசலாம் என்ற சிக்னல் கொடுக்கப்பட்டது. கே.பி.யின் அனுமதியுடன், சுவிஸ்ஸில் இருந்து மெக்சிகோ அனுப்பி வைக்கப்பட்டார் கிட்டு. அங்கு சிறிது காலம் இருந்தபின், மீண்டும் ஐரோப்பா திரும்புவதில் விசா தொடர்பான சிக்கல்கள் எழுந்தன. பெரிய ஆசிய நாடு ஒன்று, கிட்டுவுக்கு எந்த ஐரோப்பிய நாட்டிலும் விசா கிடைக்காதபடி பார்த்துக் கொண்டது. அந்த நாடு… இந்தியா!

இதில் இந்தியாவின் கோணத்தில், அவர்களை குறை சொல்ல முடியாது. காரணம் கிட்டு, காலை இழந்தபின் இந்தியாவில் தங்கியிருந்த போதும், அதன்பின் லண்டனில் தங்கியிருந்த போதும், இந்திய உளவுத்துறை ஒன்றுக்கு தனிப்பட்ட முறையில் கொஞ்சம் ‘விளையாட்டு’ காட்டியிருந்தார்.

இவரை, அவர்கள் தமது இன்ஃபார்மர் என்று நீண்ட காலமாக நம்பியிருந்தனர். கிட்டு லண்டனில் இருந்த காலத்தில்கூட அவர்களது தொடர்பில் இருந்தார். குறிப்பிட்ட உளவுத்துறையின் ஒரு உயரதிகாரி, இவரை முற்று முழுதாக நம்பியிருந்தார். ராஜிவ் காந்தி கொல்லப்பட்டபோது கிட்டு லண்டனில் இருந்தார். அந்தக் கொலைக்கும் புலிகளுக்கும் தொடர்பு ஏதும் கிடையாது என்று இந்திய உளவுத்துறைக்கு கூறியவரும் கிட்டுதான்.

அதன்பின் விஷயங்கள் யு-டர்ன் அடிக்க, கிட்டு தம்மை சுற்றலில் விட்டிருந்ததை இந்திய உளவுத்துறை ஹார்டு-வேயில் புரிந்து கொண்டது.

தம்மை ஏமாற்றிய கிட்டுவை லேசில் விடுவதில்லை என்று முடிவெடுத்து வேலை செய்தார் அந்த உயரதிகாரி. உளவுத்துறையும் அதே நிலைப்பாட்டையே எடுத்திருந்தது. கிட்டுவை ஆரம்பத்தில் லண்டனில் இருந்து கிளப்பியதிலும் அவர்களது பங்கு இருந்தது.

இங்கு மற்றொரு விஷயத்தை ஒப்புக்கொள்ள வேண்டும். இந்திய உளவுத்துறை ஐரோப்பாவில் கிட்டுமீது கை வைக்கவில்லை. இதுவே சி.ஐ.ஏ.யாக இருந்திருந்தால் ஆளையே தூக்குவதுதான் அவர்களது நடைமுறை. பல தடவைகள் அப்படி செய்தும் உள்ளார்கள், சில ரஷ்ய ராஜதந்திரிகளின் மர்ம மரணங்கள் உட்பட!

மொத்தத்தில் கிட்டு இந்திய உளவுத்துறையுடன் விளையாடிய விளையாட்டு, அவருக்கே வினையாகி, ஐரோப்பிய நாடுகள் எதிலும் அவருக்கு விசா கிடைக்க முடியாத நிலையை ஏற்படுத்தியது.

நிலைமையின் தீவிரத்தைப் புரிந்துகொண்ட கே.பி., கிட்டுவை மெக்சிகோவில் இருந்து உக்ரேன் நாட்டுக்குள் கொண்டுவந்தார். சிறிது காலம் அங்கு தங்கியிருந்தபின் அதுவும் சரிவராத காரணத்தால், கிட்டுவை போலந்து நாட்டுக்கு நகர்த்தினார் கே.பி.

போலந்தில் தங்கியிருந்த கிட்டு, தன்னை வந்து சந்திக்குமாறு அவசர தகவல் உன்றை கே.பி.க்கு அனுப்பினார். அப்போது தாய்லாந்தில் இருந்த கே.பி., போலந்து சென்று, கிட்டு தங்கியிருந்த வீட்டுக்கு சென்றார்.

அப்போது அங்கே கே.பி. கண்ட காட்சி, அவரை அதிர வைத்தது. அந்தக் காட்சிதான் கிட்டு கப்பல் மூலம் இலங்கை திரும்பவும் காரணமாக இருந்தது.

தொடரும்...

Source
nadunadapu

Keerthivasan

About Keerthivasan -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :