மூன்றுபக்கம் இராணுவத்தாலும், ஒருபக்கம் கடலாலும் சூழ்ந்த நிலையில் பேச்சுவார்த்தை...
![]() |
சுற்றி வளைத்திருக்கும் இலங்கையின் இராணுவ நிலைகள் - பிப்ரவரி 2009ல் |
உருத்திரகுமாரனின் ஸ்ரீலங்கா பாஸ்போர்ட்டுக்கு விசா கொடுப்பதற்கு 24 மணி நேரம் கால அவகாசம் தேவை என்று கூறிவிட்டது தாய்லாந்தில் இருந்த மலேசிய தூதரகம். அதன்படி, நார்வே குழுவினருடன் பேச்சுவார்த்தை நடைபெறும் 26-ம் தேதிதான் விசா கிடைக்கும் என்றாகிவிட்டது. 26-ம் தேதி காலை 9 மணிக்கு கோலம்பூர் ஹில்டன் ஹோட்டலில் இவர்களைச் சந்திக்க நார்வே குழு சகல ஏற்பாடுகளையும் செய்துவிட்ட நிலையில், அதிலும் மாற்றங்கள் ஏதும் செய்ய முடியாது.
இந்த நிலையில் இவர்களுக்கு இருந்த ஒரே சாய்ஸ், உருத்திரகுமாரனை பாங்காக்கில் விட்டுவிட்டு, பேரின்பநாயகம் மலேசியா திரும்ப வேண்டியதுதான்.
உருத்திரகுமாரன் 26-ம் தேதிவரை பாங்காக்கில் காத்திருந்து மலேசிய விசாவை எடுத்துக்கொண்டு, அதன்பின் கோலாம்பூர் வந்து சேர்வதைத் தவிர வேறு வழியில்லை. பேச்சுவார்த்தையில் கலந்து கொள்வதற்கு என்று அமெரிக்காவில் இருந்து வந்த அவர், நார்வே குழுவினருடன் 26-ம் தேதி காலை நடைபெறவிருந்த பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ள முடியாது போனது துரதிஷ்டமே. ஆனால், ஒருவேளை நார்வே குழுவினருடனான பேச்சுவார்த்தை ஒரு செஷனுடன் முடிந்து விடாமல் அடுத்தடுத்த நாட்களும் தொடர்ந்தால், புலிகள் குழுவில் இவரும் கலந்துகொள்ள முடியும்.
இப்படி முடிவு எடுக்கப்பட்டபின், உருத்திரகுமாரனை பாங்காக்கில் விட்டுவிட்டு 25-ம் தேதியே கோலாலம்பூர் திரும்பினார் பேரின்பநாயகம்.
2009 பிப்ரவரி மாதம் 26-ம் தேதி. வியாழக்கிழமை. மலேசியா தலைநகர் கோலாலம்பூர்.
ஜாலன் ஸ்டெசென் சென்ட்ரல் பகுதியில் அமைந்துள்ள ஹில்டன் ஹோட்டலில் நார்வே குழு, புலிகளை ரகசியமாக சந்திப்பது என்று ஏற்பாடு ஆகியிருந்தது.
ஸ்ரீலங்கா வடபகுதியில் ராணுவத்துக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே யுத்தம் கடுமையாக நடைபெற்றுக்கொண்டிருந்த நேரம் அது. ராணுவம் வேகமாக முன்னேறிக் கொண்டிருந்தது. புலிகள் ஒவ்வொரு முனையிலும் தமது இடங்களைக் கைவிட்டு பின்வாங்கிக் கொண்டிருந்தனர்.
விடுதலைப்புலிகளின் அதிகாரபூர்வ பிரதிநிதியாக புலிகளின் தலைவர் பிரபாகரனால் நியமிக்கப்பட்ட கே.பி., நார்வே குழுவைச் சந்திக்க வேண்டிய 2009, பிப்ரவரி 26-ம் தேதி, யுத்த முனையில் புலிகளின் நிலைமை மிகவும் கவலைக்குரிய விதத்தில் இருந்தது. புலிகளை தாக்கியபடி முன்னேறிய ஸ்ரீலங்கா ராணுவத்தின் 57-வது டிவிஷன் விஸ்வமடு டவுனுக்கும், 58-வது டிவிஷன் தேவிபுரத்துக்கும், 59-வது டிவிஷன் முல்லைத்தீவு டவுனுக்கும், 55-வது டிவிஷன் சாலை கிராமத்துக்கும், அதிரடிப்படை-2 உடையார்கட்டு குளத்துக்கும், அதிரடிப்படை-3 அம்பகாமத்துக்கும், அதிரடிப்படை-4 ஒட்டுசுட்டானுக்கும் வந்து விட்டது.
மூன்று புறமும் ராணுவம், ஒரு புறம் கடல் என்று மிகச்சிறிய பகுதி ஒன்றில் புலிகள் முற்றுகையில் சிக்கியிருந்தனர். புலிகளின் தலைவர் பிரபாகரன் உட்பட போராளிகள், தளபதிகள், அனைவருமே அந்த சிறிய நிலப்பரப்புக்குள்தான் இருந்தனர்! வேகமாக முன்னேறும் ராணுவத்தை தடுத்து நிறுத்தாவிட்டால், முற்றுகைக்குள் சிக்கியிருந்த புலிகளை விரைவில் ராணுவம் முழுமையாக அழித்துவிடும்.
ஸ்ரீலங்காவுக்கு வெளியேயுள்ள தமிழ் மக்களிடம், புலிகள் பெரிய தாக்குதல் ஒன்றை நடத்தி ராணுவ முற்றுகையை உடைக்கப் போகிறார்கள் என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். தமிழக அரசியல்வாதிகளும் கிட்டத்தட்ட அப்படியொரு பிரமையைதான் ஏற்படுத்திக் கொண்டிருந்தார்கள். மொத்தத்தில் பிரச்சாரம் வேறு, நிஜம் வேறு என்ற நிலையில் இருந்தது போர்க்களம். ஸ்ரீலங்காவுக்கு வெளியே மிகச் சிலருக்கே நிலைமையின் தீவிரம் புரிந்திருந்தது.
நிலைமை புரிந்திருந்த சிலரில் கே.பி.யும் ஒருவராக இருந்தார். வேகமாக முன்னேறிவரும் ஸ்ரீலங்கா ராணுவத்தை யுத்த நிறுத்தம் ஒன்றின் மூலம் தடுக்கும் முயற்சியில்தான் அவர் நார்வே குழுவை ரகசியமாகச் சந்திக்க முனைந்திருந்தார்.
வியாழக்கிழமை காலை கே.பி. குழுவினர் ஹில்டன் ஹோட்டலை சென்றடைந்தபோது, ஹோட்டல் முழுவதுமே மலேசிய உளவுத்துறையின் கண்கள் பரவியிருந்தன.
இந்தச் சந்திப்புக்காக ஸ்ரீலங்காவுக்கான நார்வே தூதர் டோர் ஹட்டேர்ம் இதற்காக கொழும்பிலிருந்து மலேசியா வந்திருந்தார். ராஜதந்திர நடைமுறைப்படி அவரது வருகை நார்வே அரசினால் மலேசிய வெளியுறவுத் துறைக்கு அறிவிக்கப்பட்டிருந்தது. ஹில்டன் ஹோட்டலில் அவர் ஒரு பேச்சுவார்த்தையில் கலந்து கொள்கிறார் என்ற விபரமும் கூறப்பட்டிருந்தது.
ஸ்ரீலங்காவில் யுத்தம் நடைபெற்றுக்கொண்டு இருக்கையில் இரு தரப்புக்கும் இடையே நோர்வே பேசிக்கொண்டிருக்கிறது என்ற விபரமும் ராஜதந்திர வட்டாரங்களில் தெரிந்திருந்தது. மலேசிய உளவுத்துறைக்கு இந்த விபரங்கள் போதுமே, இவர்கள் சந்திக்கப்போவது புலிகளின் பிரதிநிதிகளைத்தான் என்று ஊகித்துக் கொள்வதற்கு! அதனால், அன்று காலையில் இருந்தே ஹில்டன் ஹோட்டல் மலேசிய உளவுத்துறையின் கடுமையாக கண்காணிப்பில் இருந்தது.
இங்குள்ள அடுத்த ரிஸ்க், கே.பி.யை கைது செய்வதற்காக தேடிக்கொண்டு இருந்தது சர்வதேச போலீஸ் இன்டர்போல்.
ஹில்டன் ஹோட்டலில் புலிகளின் சார்பில் தலைகாட்டப்போவது அவர்தான் என்று தெரியவந்தால், உடனடியாக கைது செய்ய வந்துவிடுவார்கள் அவர்கள். இப்படியொரு நிலையில் ரிஸ்க் எடுத்துத்தான் ஹில்டன் ஹோட்டல் சந்திப்புக்காகச் சென்றிருந்தார் கே.பி. அவருடன் சென்றிருந்தவர்கள், கனடாவில் இருந்து சென்றிருந்த பேரின்பநாயகம், ஆஸ்திரேலியாவில் இருந்து சென்றிருந்த ஜோய் மகேஸ்வரன், மற்றும் கே.பி.யின் உதவியாளர் பொறி.
காலை 9 மணிக்கு ஹில்டன் ஹோட்டலில் இருந்த suit ஒன்றில் பேச்சுவார்த்தை தொடங்கியது. இந்தச் சந்திப்புக்காக ஸ்ரீலங்காவுக்கான நார்வே தூதர் டோர் ஹட்டேர்முடன், நோர்வே தலைநகர் ஆஸ்லோவில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டிருந்த தாமஸ் என்பவரும், எரிக் சோஹேமின் உதவியாளர் ஒருவரும் கலந்து கொண்டனர்.
யுத்தம் நடைபெறும் பகுதியில் சிறிய ஏரியாவில் பொதுமக்கள் சிக்கியுள்ளதை சுட்டிக்காட்டிய கே.பி., ‘யுத்த முனையில் இருந்து மக்களை வெளியே கொண்டு வருவதற்கு யுத்த நிறுத்தம் ஒன்று அவசியம் என்பதுதான் எமது (புலிகளின்) நிலைப்பாடு. அதற்கு நீங்கள் ஏற்பாடு செய்ய வேண்டும்’ என்று ஆரம்பித்தார். இது ஒருவிதமான பார்கேயினிங் தந்திரம்தான். (‘மக்களைக் காப்பாற்றுவதற்கும்’ என்றுள்ள நிலைமையை, ‘மக்களைக் காப்பாற்றுவதற்கு’ என்று ஒரு ‘ம்’மை தவிர்த்துவிட்டு சொல்வது)
அதேநேரத்தில், யுத்த முனையில் என்ன நடக்கிறது, யாருடைய கை மேலோங்கி இருக்கிறது, நிலைமை யாருக்கு சாதகமாக இருக்கிறது என்பது நார்வே குழுவினருக்கு நன்றாகவே தெரிந்திருந்தது.
நார்வே தூதர் டோர் ஹட்டேர்ம், “நாம் வெளிப்படையாகப் பேசுவோமா? ஸ்ரீலங்கா அரசு தமக்கு வெற்றி நிச்சயம் என்ற நிலையில் இருக்கிறது. உங்களை ராணுவம் எல்லாத் திசையிலும் சூழ்ந்து முற்றுகை இட்டிருக்கிறது எனபது உங்களுக்கு நன்றாக தெரியும். வெற்றி நிச்சயம் என்ற நிலையில் யுத்த நிறுத்தம் ஒன்றுக்கு வருவதற்கு ஸ்ரீலங்கா அரசுக்கு எந்த தேவையும் கிடையாது. யுத்த நிறுத்தம் ஒன்று உங்களுக்கு அவசியமாக இருக்கிறது” என்றார்.
“புலிகளுக்கு அழிவு என்பதைவிட, யுத்தத்தை தொடர்ந்தால் பொதுமக்கள் தரப்பிலும் அழிவு அதிகமாக இருக்கும் என்பதையும் நீங்கள் கவனிக்க வேண்டும்” என்றார் கே.பி.
“அது எங்களுக்கும் புரிகிறது. அதை தவிர்க்க விரும்பினால் நீங்களும் இறங்கி வர வேண்டும். நீங்கள் இருக்கும் இடத்திலேயே இருந்துகொண்டு அரசாங்கம் இறங்கி வரவேண்டும் என்று எதிர்பார்த்தால் ஏதும் நடக்காது. காரணம், இறங்கிவர வேண்டிய தேவை ஏதும் அவர்களுக்கு கிடையாது. அவர்கள் யுத்தத்தை முழுமையாக நடத்தி முடிப்பதையே விரும்புகிறார்கள்”
“யுத்தத்தை நடத்தி முடிப்பது, அரசியல் தீர்வு என்பதற்கான சான்ஸையே இல்லாது செய்துவிடும். யுத்தம் நடந்து முடிந்துவிட்டால், தமிழர்களுக்காக அரசுடன் பேசுவதற்கு யாரும் இருக்க மாட்டார்கள். அதனால்தான், யுத்த நிறுத்தம் ஒன்றை கோருகிறோம்” என்று மற்றொரு கோணத்தில் வந்தார் கே.பி.
“நீங்கள் சொல்வதை ஏற்றுக் கொள்கிறோம். யுத்த நிறுத்தம் வந்தால் நல்லதுதான். அதே நேரத்தில் நாங்கள் சொல்வதையும் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். இப்போது பலமான நிலையில் இருப்பது ஸ்ரீலங்கா அரசாங்கம்தான். அவர்களை சம்மதிக்க வைக்க வேண்டுமானால், நீங்கள் எதையாவது இழக்கத் தயாராக இருக்க வேண்டும். To get something, you need to give something first. அதற்கு நீங்கள் தயாரா என்பது முதலில் தெரிய வேண்டும்”
“நாங்கள் எந்தளவுக்கு இறங்கிவர வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?”
“யுத்தம் இறுதிக் கட்டத்துக்கு வந்துவிட்டது. உங்களுக்கும் கால அவகாசம் அதிகம் இல்லை. இப்போது உள்ள நிலையில் உங்களால் ஒரேயொரு விதத்தில்தான் இறங்கிவர முடியும்”
“அது என்ன?”
“ஒரே வழி, நீங்கள் ஆயுதங்களைக் கீழே வைக்கச் சம்மதிக்க வேண்டும். அதை நீங்கள் செய்யத் தயாராக இருந்தால், நாம் ஸ்ரீலங்கா அரசுடன் பேசிப் பார்க்கலாம். அதற்கு நீங்கள் தயார் இல்லை என்றால், விரைவில் யுத்தம் முடிவுக்கு வருவதைப் பார்ப்பீர்கள். அந்த முடிவு எப்படி இருக்கும் என்பதை நாங்கள் சொல்ல வேண்டியதில்லை” என்றார் நார்வே தூதர் டோர் ஹட்டேர்ம்.
“இதைப்பற்றி நான் முடிவெடுக்க முடியாது. புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன்தான் முடிவெடுக்க வேண்டும்.”
“சரி. அவருடன் பேசிவிட்டுச் சொல்லுங்கள்”
“இப்போது அங்குள்ள நிலை உங்களுக்குத் தெரியும். யுத்தம் மிக மும்மரமாக நடந்துகொண்டுள்ள நிலையில், அவரை நேரில் சந்தித்துதான் இது தொடர்பாக விளக்க முடியும். ஆயுதப் போராட்டம் நடத்தும் ஒரு அமைப்பிடம் ஆயுதங்களை கீழே வையுங்கள் என்று போனில் சொல்லிச் சம்மதிக்க வைக்க முடியாது என்பதை நீங்கள் புரிந்து கொள்வீர்கள்” என்றார் கே.பி.
தனது கூற்றை நியாயப்படுத்துவதற்காக, கடந்த 80-களின் இறுதியில் இந்திய அமைதிப்படை ஸ்ரீலங்காவில் இருந்தபோது இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலை ஏற்பட்டதை சுட்டிக்காட்டிய கே.பி., அப்போது தாமும், ஆன்டன் பாலசிங்கமும் பாங்காக் சென்ட்ரல் ஹோட்டலில் வைத்துச் செய்த ரகசிய நடவடிக்கை ஒன்றை மேலோட்டமாக தெரிவித்தார்.
பாங்காக் சென்ட்ரல் ஹோட்டலில் சுமார் 1 வாரம் நடைபெற்ற அந்த ரகசிய நடவடிக்கையின் பின்னரே, புலிகளின் ஈழப்போரில் ஒரு பெரிய திருப்பம் ஏற்பட்டது. அது என்ன என்பதை பாப்போம்?
தொடரும்...
Source
nadunadapu