Friday, March 10, 2017

Keerthivasan

ஈழப் போரின் இறுதி நாட்கள் – 6

தாய்லாந்தில் தாமதமாகிய உருத்திரகுமாரன் பயணம்...




பாங்காக்கில் இந்திய உளவுத்துறை றோ ஒரு பக்கமாக கே.பி.-யைத் தேடிக் கொண்டிருக்க, இந்தியாவின் அன்றைய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி எப்படியாவது கே.பி.-யை இந்திய அரசிடம் ஒப்படைக்குமாறு தாய்லாந்து அரசுக்கு அழுத்தம் கொடுக்கத் தொடங்கினார். தாய்லாந்து வெளியுறவு அமைச்சுக்கு கே.பி. பற்றி எந்தத் தகவலும் தெரிந்திராத நிலையில், பிரணாப் முகர்ஜி, தாய்லாந்து பிரதமரிடம் இது தொடர்பாக நேரில் பேசினார்.

இதையடுத்து தாய்லாந்து பிரதமர் அலுவலகமும் இந்த விவகாரத்தில் ஆர்வம் காட்டத் தொடங்கியது.

பிரணாப் முகர்ஜியும் தமது தாய்லாந்து சுற்றுப் பயணத்தின் நாட்களை நீடித்து, பாங்காக்கில் மேலதிகமாக இரு தினங்கள் தங்கியிருந்தார். றோ தமது ஆட்களை பிரைவேட்டாக கே.பி.யை தேடும் நடவடிக்கையில் இறக்கியதுடன், தாய்லாந்தில் 5 பிரதான உளவு அமைப்புகளில் ஒன்றான தேசிய பாதுகாப்பு கட்டமைப்பு முலம் தேடிக்கொண்டு இருந்தது.

ஸ்ரீலங்கா உளவுத்துறை, தாய்லாந்து போலீஸ் துறையின் உதவியுடன் தேடிக் கொண்டிருக்க, சர்வதேச போலீஸ் அமைப்பான இன்டர்போல் கே.பி.யை கைது செய்ய இன்டர்நேஷனல் வாரண்ட், மற்றும் தாய்லாந்து நீதிமன்ற அனுமதி ஆகியவை சகிதம் பாங்காக்கில் கே.பி. தொடர்பான இடங்களை முற்றுகையிட்டு தேடியது.

இப்படியாக 4 தரப்பினர் தேடிக்கொண்டிருந்த நேரத்தில்தான், உடொன்-தானி ஏர்போர்ட்டில் இருந்து லாவோஸ் செல்ல முடியாமல் கே.பி. பாங்காக் நோக்கி திரும்பி வந்துகொண்டிருக்கும் விஷயம், தாய்லாந்து உளவுத்துறையின் குறிப்பிட்ட ஒரு எலிமென்டுக்கு தெரியவந்தது. இவர்களுக்கு பாங்காக்கில் கே.பி.-யை ஆளுக்காள் தேடிக் கொண்டிருக்கும் சகல விஷயங்களும் தெரியும்.

கே.பி. பாங்காக்கில் தலையைக் காட்டினால், ஏதோ ஒரு தரப்பிடம் சிக்கிக் கொள்ள சான்ஸ் உள்ளது என்பதைப் புரிந்துகொண்ட இந்த உளவுத்துறை எலிமென்ட், கே.பி.-யை தாய்லாந்துக்கு வெளியே அனுப்பிவிடுவதுதான் தற்போது செய்ய வேண்டியது என்று முடிவெடுத்தது. பாங்காக்கில் அவரைத் தேடும் 4 தரப்பினராலும் ஏற்பட்ட நெருக்கடி இருந்ததால், வேறு மார்க்கமாகவே வெளியே அனுப்புவது என்று முடிவு செய்தது.

அதற்காக தமது தொடர்புகளை பயன்படுத்தி சில முன்னேற்பாடுகளைச் செய்தார்கள் அவர்கள். அவர்களுக்கு ஏற்பாடு செய்ய சுலபமான எக்ஸிட் பாயின்டாக இருந்த இடம் உடொன்-தானி என்பதால், அங்கிருந்து வெளியேறுவதற்கான ஏற்பாடுகளே அவர்களால் செய்யப்பட்டன.

பாங்காக் நோக்கி வந்துகொண்டிருந்த கே.பி.-யை தொடர்பு கொண்ட அவர்கள், வந்த பாதையிலேயே மீண்டும் திரும்பி உடொன்-தானிக்கு போகச் சொன்னார்கள். அந்த விமான நிலையத்தில் இருந்து வெளியேறுவதற்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு விட்டதாக தெரிவித்த அவர்கள், கே.பி.-யிடமுள்ள பாஸ்போர்ட்டுடன் எந்த நாட்டுக்கு செல்ல முடியுமோ, அங்கே செல்ல ஏற்பாடுகளைச் செய்யச் சொன்னார்கள்.

அடுத்த சில மணி நேரத்தில் கே.பி.-யிடம் இருந்து தகவல் வந்து சேர்ந்தது. மலேசியா செல்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக அந்தத் தகவல் கூறியது. அந்த நாட்களில் உடொன்-தானி ஏர்போர்ட்டில் இருந்து சிங்கப்பூர் செல்வதற்கு, சாட்டர் ரூட் சர்விஸ் ஒன்றை நடாத்திவந்தது டைகர் ஏர்வேஸ். அதில் கே.பி.-க்கு டிக்கெட் எடுக்கப்பட்டிருந்த விபரம் தாய்லாந்து உளவுத்துறை எலிமென்டுக்கு வந்து சேர்ந்தது.


இந்த ஏற்பாடு, சுலபமாக இருந்தது. உடொன்-தானி ஏர்போர்ட்டில் உள்ள இமிகிரேஷன் அதிகாரிகள் மனது வைத்தால் போதும், சிக்கல் இல்லாமல் தாய்லாந்தைவிட்டு வெளியேறிவிடலாம். அதை கச்சிதமாக செய்து முடித்தது தாய்லாந்து உளவுத்துறையின் எலிமென்ட்.

இப்படியாக கே.பி. தாய்லாந்திலிருந்து வெளியேறிய பின்னர், அதையே தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டது தாய்லாந்து உளவுததுறை. தாய்லாந்தில் அவரைத் தேடிக் கொண்டிருந்த 4 தரப்பினரிடமும், உடொன்-தானி ஏர்போர்ட் இமிகிரேஷன் எக்ஸிட் ரெக்கார்டுகளை காட்டி, கே.பி. இப்போது தாய்லாந்தில் இல்லை என்று எஸ்டாபிளிஷ் பண்ணிக் கொண்டார்கள்.

இப்படித்தான் கே.பி. தாய்லாந்தில் இருந்து வெளியேறி, சிங்கப்பூர் ஊடாக மலேசியா சென்று அங்கே தங்கியிருந்தார். அதையடுத்தே நார்வே அதிகாரிகளை கோலாலம்பூரில் சந்தித்து பேச்சுவார்த்தைகள் நடாத்துவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

தாய்லாந்து எபிசோட் நடைபெற்ற நீண்ட காலமாகிவிட்ட நிலையில், நார்வே அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தைக்கு தம்மை தாய்லாந்துக்கு வருமாறு அழைத்திருப்பதாக நினைத்துக்கொண்டு அமெரிக்காவில் இருந்து உருத்திரகுமாரன் பாங்காக் சென்று இறங்கியது இப்படித்தான்.

பாங்காக்கில் தன்னை அழைத்துச் செல்ல யாரும் வரவில்லை என்று அறிந்தவுடன், திட்டம் ஏதோ ஒரு இடத்தில் சறுக்கி விட்டது உருத்திரகுமாரனுக்கு தெரிந்தது. அவர், தனது தொடர்பாளர் ஒருவரிடம் தாம் பாங்காக் விமான நிலையத்தில் இறங்கி நிற்பதாகவும், கே.பி.-யின் ஆட்கள் யாரையும் அங்கே காணவில்லை என்றும் தெரிவித்தார். அந்தத் தகவல் மலேசியாவுக்கு போய்ச் சேர்ந்தது.

அதன்பிறகே என்ன நடந்தது என்று புரிந்து கொள்ளப்பட்டது. உருத்திரகுமாரனை பாங்காக்கில் இருந்து புறப்பட்டு கோலாலம்பூருக்கு வந்து சேருமாறு தகவல் கொடுக்கப்பட்டது.

இங்கே வந்தது அடுத்த சிக்கல்.

உருத்திரகுமாரன் பயணம் செய்தது ஸ்ரீலங்கா பாஸ்போர்ட்டில். அப்போது அந்த பாஸ்போர்ட்டுக்கு மலேசியா செல்வதற்கு விசா தேவை. இவரோ அமெரிக்காவில் மலேசியா விசா எடுக்காமலேயே தாய்லாந்துவரை வந்திருந்தார். இந்தக் கட்டத்தில் இருந்த ஒரே வழி, பாங்காக் ஏர்ப்போர்ட்டுக்கு வெளியே சென்று, அங்கிருந்த மலேசியத் தூதரகத்தில் விசா எடுக்க வேண்டும்.

மலேசியத் தூதரகம் பாங்காக் டவுன்-டவுனில் துங்மகாமெக் என்ற இடத்திலுள்ள சத்தோன் ரேடில் உள்ளது. உருத்திரகுமாரனுக்கோ, பாங்காக் பரிச்சயமில்லாத இடம். தன்னை யாராவது வந்து மலேசிய தூதரகத்துக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்றார் அவர்.

பாங்காக்கில் இருந்து வெளியேறியபின், தனது பாங்காக் தொடர்புகளை பயன்படுத்த கே.பி விரும்பவில்லை. பாங்காக்கில் இருந்து உருத்திரகுமாரனை மலேசியாவுக்கு கொண்டுவந்து சேர்க்க வேண்டுமென்றால், யாரையாவது பாங்காக் ஏர்போர்ட்டுக்கு அனுப்ப வேண்டும். வன்னியிலோ யுத்தம் இறுதிக் கட்டத்தை நெருங்கிக் கொண்டிருந்தது. மலேசியாவிலோ, நார்வே குழுவினரைச் சந்திப்பதற்கு நாள் குறிக்கப்பட்டு விட்டது.

உருத்திரகுமாரனோ, பாங்காக் ஏர்போர்ட்டின் அரைவல் ஹாலில் நிற்கிறார். அதிக அவகாசம் கிடையாது.

நார்வே குழுவினருடன் பேசுவது என்று முடிவாகியதும், அமெரிக்காவில் இருந்து உருத்திரகுமாரன், ஆஸ்திரேலியாவில் இருந்து ஜோய் மகேஸ்வரன் ஆகியோருடன் கோலாலம்பூருக்கு வருமாறு கூறப்பட்ட மற்றொருவர் பேரின்பநாயகம். இவர் கனடாவில் இருந்து கோலாலம்பூர் வந்து சேர்ந்திருந்தார்.

உருத்திரகுமாரனை பாங்காக்கில் சந்தித்து மலேசிய விசா எடுத்துக் கொடுத்து கோலாலம்பூர் அழைத்துவர பேரின்பநாயகத்தை அனுப்பி வைப்பது என்று முடிவாகியது. பேரின்பநாயகம் உடனடியாக கோலாலம்பூரில் இருந்து விமானம் பிடித்து பாங்காக் செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

அவர் கனேடிய பாஸ்போர்ட்டில் பயணிப்பதால், இந்த நாடுகள் எதற்கும் முன்கூட்டியே விசா எடுக்கத் தேவையில்லை.

கோலாலம்பூரில் இருந்து பாங்காக் செல்ல விமானப் பயணம் வெறும் 2 மணி நேரம்தான். இதனால், உருத்திரகுமாரன் பாங்காக் ஏர்போர்ட்டில் காத்திருக்க சில மணி நேரத்தில் அங்கே போய் இறங்கினார் பேரின்பம். இவர்கள் இருவரும் பாங்காக் விமான நிலையத்துக்கு வெளியே வரும் நேரத்தில், மலேசியத் தூதரகத்தின் அலுவலக நேரம் முடிந்து விட்டது.

2009 பிப்ரவரி மாதம் 26-ம் தேதி வியாழக்கிழமை. மலேசியா தலைநகர் கோலாலம்பூர், ஜாலன் ஸ்டெசென் சென்ட்ரல் பகுதியில் அமைந்துள்ள ஹில்டன் ஹோட்டலில் நார்வே குழுவினர், புலிகளை ரகசியமாக சந்திப்பது என்று ஏற்பாடு ஆகியிருந்தது. ஹில்டன் ஹோட்டலில் ஒரு suite-ல் காலை 10 மணிக்கு பேச்சுவார்த்தைகள் தொடங்கப்பட வேண்டும்.

அதற்குமுன் உருத்திரகுமாரனும், பேரின்பநாயகமும் மலேசியா திரும்ப வேண்டும்.

உருத்திரகுமாரன் பாங்காக் வந்திறங்கியது 24-ம் தேதி. பேரின்பம் அவரை பாங்காக் விமான நிலையத்தில் சந்தித்ததும் 24-ம் தேதி. ஒருநாள் இரவு அவர்கள் பாங்காக் ஹோட்டல் ஒன்றில் தங்கிவிட்டு சத்தோன் ரோடில் உள்ள மலேசியத் தூதரகத்துக்குச் சென்றது 25-ம் தேதி காலை. அன்றைய தினமே விசா கொடுத்துவிட்டால், 26-ம் தேதி காலை 10 மணிக்கு கோலாலம்பூரில் நார்வே குழுவினருடன் பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்ள முடியும்.

இந்த இடத்தில் அடுத்த சிக்கல். ஸ்ரீலங்கா பாஸ்போர்ட்டுக்கு விசா கொடுப்பதற்கு 24 மணி நேரம் கால அவகாசம் தேவை என்று கூறிவிட்டது தாய்லாந்தில் இருந்த மலேசிய தூதரகம். அதன்படி, பேச்சுவார்த்தை நடைபெறும் 26-ம் தேதிதான் விசா கிடைக்கும்.

தொடரும்...

Source
nadunadapu

Keerthivasan

About Keerthivasan -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :