Friday, March 10, 2017

Keerthivasan

ஈழப் போரின் இறுதி நாட்கள் – 5

கே.பி.க்கு வலை வீசிய இந்தியா...



கே.பி., தாய்லாந்து உளவுத்துறை கூறியபடி உடொன்-தானி விமான நிலையம் ஊடாக தாய்லாந்தில் இருந்து வெளியேறி லாவோஸ் நாட்டுக்குள் செல்வது என்பதே திட்டம். அதிலும் ஒரு சிக்கல் உள்ளது என்பதை தாய்லாந்து உளவுத்துறைக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை. அந்த சிக்கல் கே.பி. வைத்திருந்த பாஸ்போர்ட்!

அவர் பயணம் செய்த பாஸ்போர்ட், காலாவதியாகாமல் இருந்தது, ஆனால், அதில் போதியளவு பக்கங்கள் காலியாக இல்லை. லாவோஸ் நாட்டு விசா ஒரு ஸ்டிக்கர் வடிவில் இருந்தது. அதை இவரது பாஸ்போர்ட்டில் எந்தப் பக்கத்திலும் ஒட்டுவதற்கு இடமில்லை. லாவோஸ் செல்வதென்றால் புதிய பாஸ்போர்ட் எடுக்க வேண்டும். அதிலும் ஒரு சிக்கல். அவர் வைத்திருந்தது தாய்லாந்து பாஸ்போர்ட்டோ அல்லது, வேறு எந்த ஆசிய நாட்டு பாஸ்போர்ட்டோ அல்ல. ஒரு ஆபிரிக்க நாட்டு பாஸ்போர்ட்! அதனால் தாய்லாந்தில் வைத்து சுலபமாக புதிய பாஸ்போர்ட் எடுப்பது சாத்தியமில்லை.

புதிய பாஸ்போர்ட் எடுப்பதென்றால் அதை வழங்கிய நாட்டுக்குத்தான் போக வேண்டும். முதலில் அந்த பாஸ்போர்ட்டுடன் உடொன்-தானி ஊடாக தாய்லாந்தைவிட்டு வெளியேற கே.பி. முயற்சி செய்ய, இமிகிரேஷன் அதிகாரிகள் அனுமதிக்கவில்லை.

இப்படியான நிலையில், அந்த பாஸ்போர்ட்டில் இருந்த சைனீஸ் விசா ஸ்டிக்கர் ஒன்றை உரித்து எடுத்து, பாஸ்போர்ட்டில் காலியான பக்கம் ஒன்று உருவாக்கப்பட்டது. மீண்டும் அந்த பாஸ்போர்ட்டுடன் லாவோஸ் நாட்டு ஸ்டிக்கர் விசாவை காலியான அந்தப் பக்கத்தில் ஒட்டலாம் என்று கூறப்போக, இமிகிரேஷன் அதிகாரிகள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை.

பாஸ்போர்ட்டில் உள்ள எந்தவொரு பதிவையும் அகற்றக் கூடாது என்ற விதிமுறை உள்ளது.


லாவோஸ் நாட்டு ஸ்டிக்கர் விசா

உடொன்-தானி பெரிய இடம் என்றால் அந்த பாஸ்போர்ட்டில் ஒரு பக்கம் இவர்களால் காலியாக்கப்பட்டுள்ளது என்பது தெரியாமல் போயிருக்கும். ஆனால், உடொன்-தானியில் இருப்பதே 4 இமிகிரேஷன் அதிகாரிகள்தான்.

இவர் ஏற்கனவே காலியான பக்கங்கள் ஏதும் இல்லாத பாஸ்போர்ட் ஒன்றுடன் வந்து, திருப்பி அனுப்பப்பட்டவர் என்று அவர்கள் 4 பேருக்குமே தெரிந்திருந்தது. மொத்தத்தில், உடொன்-தானி விமான நிலையம் ஊடாக வெளியேறும் திட்டம் நிறைவேறவில்லை.

இந்த விபரங்கள் தாய்லாந்து உளவுத்துறைக்கு தெரியவர, அவர்கள் கே.பி.-யை பாங்காக் வருமாறு சொன்னார்கள்.

கே.பி.யை தாய்லாந்து உளவுத்துறையினர் எதற்காக உடொன்-தானிக்கு போகுமாறு சொன்னார்கள் என்பது தெரியாதவர்கள் (இந்தத் தொடரின் 4-ம் பாகத்தைப் பார்த்துவிட்டு இங்கே அழுத்தவும்,) தொடர்ந்து படிக்கவும். இல்லாவிட்டால் புரிவது சிரமமாக இருக்கும். இப்போது உடொன்-தானியில் இருந்து மீண்டும் பாங்காக் செல்லவேண்டிய வேண்டிய நிலை கே.பி.-க்கு ஏற்பட்டது.

பாங்காக்கிலோ நிலைமை மிக இறுக்கமாக இருந்தது.

இன்டர்போல் ஒரு பக்கமாக கைது செய்ய வாரண்ட் சகிதம் தேடிக்கொண்டு இருந்தது. இன்டர்போல் விஷயத்தில் ஒரு முரண்பாடு இருந்தது. அது என்ன தெரியுமா? இன்டர்போல் தலைமைக்கு தெரிந்திராத ரகசியம் ஒன்று, இன்டர்போல் பாங்காக் ஆபிஸில் அப்போது இருந்தது.

பாங்காக் அலுவலகத்தால் இன்டர்போல் தலைமைச் செயலகத்துக்கு அனுப்பப்பட்ட தகவலின்படி கே.பி. கைது செய்யப்பட்டு விட்டார். ஆனால், நிஜத்தில் அவரை செவ்வாய்க்கிழமை (செப். 11-ம் தேதி) காலையில் கோட்டை விட்டிருந்த விபரங்களை கடந்த பாகத்தில் குறிப்பிட்டிருந்தோம். முதலில் அனுப்பிய தகவலை உண்மையாக்க வேண்டும் என்றால், கே.பி.-யை கைது செய்ய வேண்டும். அல்லது கைது செய்யவில்லை என்ற உண்மையை தலைமைச் செயலகத்திடம் ஒப்புக்கொள்ள வேண்டும்.

இதனால், கே.பி.-யை கைது செய்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்தது பாங்காக்கில் இருந்த இன்டர்போல் டீம்.

செவ்வாய் காலை தனது வீட்டிலிருந்து கிளம்பிய கே.பி. அதன்பின் அங்கு வரவில்லை என்பதை இன்டர்போல் அறிந்திருந்தது. பாங்காக்கில் எங்கோ இருப்பார் என அவர் தொடர்புடைய இடங்களில் கண்காணித்துக் கொண்டிருந்தார்கள். ஆனால், கே.பி. உடொன்-தானி சென்ற விஷயத்தை அவர்களால் டிடெக்ட் பண்ண முடிந்திருக்கவில்லை.

இப்படியான நிலையில், உடொன்-தானியில் விமானம் ஏற முடியாத கே.பி., மீண்டும் பாங்காக் வருவது, இன்டர்போலிடம் வலியப் போய் தலையைக் கொடுப்பதற்கு ஒப்பானது. பாங்காக்கில் காத்திருந்த முதல் ஆபத்து அது.
thailand-buddha-temple

இரண்டாவது ஆபத்து, ஸ்ரீலங்கா உளவுத்துறை!

கே.பி. கைது என்ற தகவல் பாங்காக் போஸ்ட் பத்திரிகையில் வெளியானதில், ஸ்ரீலங்கா உளவுப் பிரிவினர் பாங்காக் வந்து இறங்கியிருந்தனர் என்று ஏற்கனவே குறிப்பிட்டிருந்தோம். அவர்கள் தாய்லாந்து வெளியுறவு துறையிடம் கே.பி.-யை தம்மிடம் ஒப்படைக்க வேண்டும் என்று தமது தூதரகம் ஊடாக கோரிக்கை விடுத்திருந்தனர்.

இவர்களது டீலிங் பாங்காக் போலீஸ் தலைமையத்துடன் இருந்தது. இது நடைபெற்ற காலத்தில் (செப்டெம்பர் 2007) பாங்காக் போலீஸ் பிரிவில் இந்த விவகாரத்தை டீல் பண்ணியவர் லெப்டினென்ட் ஜெனரல் ரொனாரொங் யொங்யுன் (Lieutenant-General Ronnarong Youngyuen) என்பவர்.

அவர், “கே.பி. என்ற நபர் இங்கே இல்லவே இல்லை” என்று சூடம் அடித்து சத்தியம் செய்யாத குறையாகச் சொல்லிக் கொண்டிருந்தார். ஸ்ரீலங்கா உளவுத்துறை, தாய்லாந்து போலீஸிடம் கே.பி.-யின் 3 வெவ்வேறு பெயர்களை கொடுத்திருந்தது. குமரன் பத்மநாதன், செல்வராசா பத்மநாதன், தர்மலிங்கம் செல்வராசா பத்மநாதன் என்ற ஏதாவது ஒரு பெயரில் கே.பி. தாய்லாந்தில் தங்கியிருக்கலாம் என்று கூறியிருந்தார்கள்.

தாய்லாந்து இமிகிரேஷன் ரெக்கார்டுகளின்படி இந்த மூன்று பெயர்களிலும் யாரும் சமீபகாலத்தில் தாய்லாந்துக்குள் நுழையவில்லை என்று சொல்லிக் கொண்டிருந்தார் பாங்காக் போலீஸ் அதிகாரி யொங்யுன். இங்குள்ள மற்றொரு விஷயம், நிஜமாகவே கே.பி. விவகாரம் தாய்லாந்து போலீஸ் துறைக்கு தெரிந்திருக்கவில்லை.

தாய்லாந்து இன்டெலிஜென்ஸ் பிரிவின் ஒரு எலிமென்டுடன் கே.பி.-க்கு இருந்த தொடர்பு பற்றி கடந்த பாகங்களில் கூறியிருந்தோம். அது ஒரு ரகசியமான தொடர்பாக இருந்ததால், தாய்லாந்து காவல்துறையிடமோ, வேறு நிர்வாகப் பிரிவுகளிடமோ, கே.பி. தொடர்பான ரெக்கார்டுகள் ஏதும் இல்லாதவாறு பார்த்துக் கொள்ளப்பட்டிருந்தது.

புதன்கிழமை (12-ம் தேதி) காலை, லெப்டினென்ட் ஜெனரல் ரொனாரொங் யொங்யுன்னிடம் 3 போலீஸ் பிரிவுகளிடம் இருந்து கிடைத்த ரிப்போர்ட்கள் இருந்தன. தாய்லாந்து இமிகிரேஷன் போலீஸ், மெட்ரோபோலிட்டன் போலீஸ், ஸ்பெஷல் டிவிஷன் ஆகிய முன்று பிரிவுகள் கொடுத்த ரிப்போர்ட்களிலும், கே.பி. என்ற நபரைப் பற்றிய தகவல் ஏதும் தம்மிடம் கிடையாது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்தத் தகவல்தான் ஸ்ரீலங்கா உளவுப் பிரிவுக்கு தாய்லாந்து போலீஸ் தரப்பிலிருந்து கூறப்பட்டிருந்தது. இருந்த போதிலும் கே.பி. என்ற நபர் தமக்கு தெரியாமல் தாய்லாந்துக்குள் நடமாடுகிறாரா என்று தேடுதல் மேற்கொள்ள உத்தரவிட்டு இருப்பதாகவும் போலீஸ் தலைமையகம் கூறியது.

இந்த விதத்திலும் கே.பி.க்கு பாங்காக்கில் வலை விரிக்கப்பட்டிருந்தது. இது பாங்காக்கில் காத்திருந்த இரண்டாவது ஆபத்து. மூன்றாவது ஆபத்துதான் பெரியது. அது, இந்தியாவால் ஏற்பட்டிருந்தது.

பிரணாப் முகர்ஜி

புதுடில்லி அரசியலில் தற்போது ஸ்பெக்ட்ரம் வழக்கு தொடர்பாக உட்துறை அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு பாதகமான பைல் லீக் ஆகிய விவகாரத்தில் சர்ச்சைக்கு உள்ளாகிய இன்றைய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜிதான், இந்தச் சம்பவங்கள் நடைபெற்ற காலப் பகுதியில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்தார்.

கே.பி. கைது என்ற செய்தி பாங்காக் போஸ்ட் பத்திரிகையில் வெளியான தினத்தன்று காலை பிரணாப் முகர்ஜி பாங்காக்கில் இருந்தார்.

அமைச்சர் பிரணாப் முகர்ஜி பாங்காக் வந்தது, கே.பி. விவகாரத்துக்காக அல்ல. அவரது விஜயம் முன்கூட்டியே திட்டமிடப்பட்டிருந்த டிப்ளமட்டிக் டூர். கோயின்சிடென்டாக அவரது வருகையும், கே.பி. கைது என்ற செய்தி வெளியானதும் ஒரே நேரத்தில் நடந்திருந்தன. பாங்காக் போஸ்ட் பத்திரிகையில் கே.பி. கைது என்று வெளியான செய்தியை நம்பிய பிரணாப் முகர்ஜி, கே.பி.-யை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று தாய்லாந்து வெளியுறவு அமைச்சிடம் வேண்டுகோள் விடுத்தார்.

தாய்லாந்து வெளியுறவு அமைச்சுக்கு கே.பி. விவகாரம் பற்றி அடியும் தெரிந்திருக்கவில்லை, நுனியும் தெரிந்திருக்கவில்லை.

இதற்கிடையே பாங்காக்கில் உள்ள இந்தியத் தூதரகத்தில் இயங்கிவந்த இந்திய உளவுத்துறை றோ (Research and Analysis Wing – R&AW or RAW) இந்த விவகாரத்தில் குதித்தது. அவர்கள் தமது லோக்கல் நெட்வேர்க் மூலமாக பாங்காக்கில் கே.பி. விஷயம் பற்றி அறிய முயன்றார்கள். அத்துடன், புதுடில்லியிலுள்ள றோ தலைமைச் செயலகத்துக்கும், கே.பி. கைது பற்றிய தகவலை உடனே அறிவித்தார்கள்.

புதுடில்லியில் இந்த விவகாரத்தை கையில் எடுத்துக் கொண்டார் அசோக் சதுர்வேதி.


அசோக் சதுர்வேதி றோ தலைவராக இருந்தபோது உபயோகித்த இந்திய டிப்ளமட்டிக் பாஸ்போர்ட்!

இந்த விவகாரம் நடைபெற்ற செப்டெம்பர் 2007-ல், றோ உளவுத்துறையின் டைரக்டராக இருந்தவர் அசோக் சதுர்வேதி. கே.பி.-யை பாங்காக்கில் இருந்து இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான கடும் முயற்சியைத் தொடங்கினார் அவர். அசோக் சதுர்வேதி கான்பூரில் பிறந்த, உத்திரப்பிரதேசத்துக்காரர். ஆனால், மத்தியப் பிரதேசத்தில் இருந்தே இந்திய போலீஸ் சர்விஸில் (ஐ.பி.எஸ்.) இணைந்து கொண்டவர் (1970 பேட்ச்).

அசோக் சதுர்வேதி றோவின் டைரக்டராக பதவியேற்குமுன், சிறிதுகாலம் கனடாவிலும், பிரிட்டனிலும் றோ அதிகாரியாகப் பணிபுரிந்தவர். விடுதலைப்புலிகளின் வெளிநாட்டு செயற்பாடுகள் இந்த இரு நாடுகளிலும் அதிகம் இருந்தது. அந்த விதத்தில், விடுதலைப்புலிகளின் வெளிநாட்டுத் தொடர்புகள் பற்றி நன்றாக அறிந்தவர்.

புலிகளின் வெளிநாட்டு ஆபரேஷன்களில், 1980-களின் இறுதியில் இருந்து கே.பி.-யின் பங்களிப்பு பற்றி, கனடாவிலும் பிரிட்டனிலும் உள்ள இந்தியத் தூதரகத்தில் றோ அதிகாரியாக பணிபுரிந்த காலத்தில் இவருக்கு நன்றாகவே தெரியும். அதனால், கே.பி. பிடிபட்டால் அது பெரிய கேட்ச் என்பதும் அவருக்கு தெரியும்.

இதனால்தான், பாங்காக்கில் கைதான (என்று அவர் நம்பிய) கே.பி.-யை எப்படியும் இந்தியாவுக்கு கொண்டுவரும் முயற்சிகளில் இறங்கினார் அசோக் சதுர்வேதி. (2009-ல் றோ அமைப்பில் இருந்து ஓய்வுபெற்ற அசோக் சதுர்வேதி, சமீபத்தில் மூன்று மாதங்களுக்குமுன் செப்டெம்பர் 18, 2011-ல் புதுடில்லியின் மரணமடைந்தார்)

இந்த அசோக் சதுர்வேதி தொடர்பான சில முரண்பாடான சிந்தனைகள் றோ அமைப்புக்குள் இருந்தன.

ஒரு விதத்தில் பார்த்தால், றோ-வின் டைரக்டராக இவர் பதவி பெற்றதே பாலிட்டிக்கல் அப்பாயின்ட்மென்ட்தான். இது நடைபெற்ற காலத்தில் புதுடில்லியில் பிரதமர் அலுவலகத்தில் பிரமிக்கத்தக்க செல்வாக்குடன் இருந்த கபினெட் செகிரெட்டரி பி.கே.சதுர்வேதியின் நெருங்கிய உறவினர் அசோக் சதுர்வேதி. அந்த வழியில்தான் இவர் றோ அமைப்புக்கு தலைவரானார்.

எம்.கே.நாராயணன்

அசோக் சதுர்வேதிக்கு இந்தப் பதவி கிடைக்கக்கூடாது என்று அந்த நாட்களில் அழுத்தம் கொடுத்தவர் யார் தெரியுமா? விடுதலைப் புலிகள் விவகாரத்தில் டில்லியில் இருந்து டீல் பண்ணிய மற்றொருவர்! அவர்தான், தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருந்த மாயன்கோட் கேலத் நாராயணன் (எம்.கே.நாராயணன் – தற்போது மேற்கு வங்க கவர்னர்)

கே.பி. பாங்காக்கில் கைது என்ற (தவறான) தகவல் கிடைத்ததும், அசோக் திரிவேதி இதில் றோவை ஈடுபட வைத்தார். தென்கிழக்கு ஆசியாவில் றோவின் பெரிய நெட்வேர்க் இருக்கும் இடங்களில் பாங்காக்கும் ஒன்று. அந்த விதத்தில், றோ அமைப்பு கே.பி.-யை தமது கைப்பிடிக்குள் கொண்டுவரும் முயற்சியைத் தொடங்கியது.

அதாவது, இந்திய அரசு இரு விதங்களில் கே.பி.-யை இந்தியாவிடம் ஒப்படைக்க வைக்க முயன்றது. அன்றைய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி பாங்காக்கில் இருந்துகொண்டு ராஜதந்திர ரீதியாக முயற்சிகளில் ஈடுபட்டார். றோ-வின் தலைவர் சதுர்வேதி டில்லியில் இருந்து கொண்டு, தமது ஆட்களை வைத்து பாங்காக்கில் தனிப் பாதையில் அதே முயற்சியில் ஈடுபட்டார்.

அமைச்சர் முகர்ஜி, தாய்லாந்து வெளியுறவு அமைச்சின் ஊடாக கே.பி.-யை கைப்பற்றப் பார்த்தார். றோ தமது ஆட்களை பிரைவேட்டாக இதில் இறக்கியதுடன், தாய்லாந்தின் மற்றோர் அமைப்புடனும் தொடர்பில் இருந்தது. அந்த அமைப்பின் பெயர், சம்னக்காவோகுரொங் ஹங்சாட். (Sahmnakkhaogrong-Hangshaat) தாய்லாந்திலுள்ள 5 பிரதான உளவு அமைப்புகளில் இதுவும் ஒன்று. அதன் பெயரை தமிழுக்கு கொண்டுவந்தால், தேசிய பாதுகாப்பு கட்டமைப்பு.

தாய்லாந்து வெளியுறவு அமைச்சு கே.பி. பற்றி எந்தத் தகவலையும் கொடுக்க முடியாத நிலையில் இருக்க, பிரணாப் முகர்ஜி, தாய்லாந்து பிரதமரிடம் இது தொடர்பாக நேரில் பேசினார்.

பிரணாப் முகர்ஜியால் என்ன செய்ய முடிந்தது? றோவால் எதுவரை போக முடிந்தது? அந்த விபரங்கள் தொடரின் அடுத்த பாகத்தில்…

Source
nadunadapu

Keerthivasan

About Keerthivasan -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :