Friday, March 10, 2017

Keerthivasan

ஈழப் போரின் இறுதி நாட்கள் – 4

தாய்லாந்தில் இருந்து மலேஷியா சென்ற கேபி


Karthikeyan, then SIT chief, in Chennai in the early ’90s - Source: Outlook India.com
உருத்திரகுமாரன் அமெரிக்காவில் இருந்து விமானம் ஏறி போய் இறங்கிய இடம் பாங்காக் என்று கடந்த பாகத்தை முடித்திருந்தோம். கேப்பிட்டலுக்கு வாருங்கள் என்று மலேசியாவின் தலைநகருக்கு வருமாறு கூறினால், தாய்லாந்தில் தலைநகர் பாங்காக் விமான நிலையத்தில் போய் இவர் எதற்காக இறங்கினார்?

காரணம், கே.பி. தாய்லாந்தில் வசித்து வந்தார் என்ற விபரம் ஒரு பரபரப்பான சூழலில் வெளியாகி இருந்தது. பரபரப்பு எதற்கு என்றால், அவரை இன்டர்போல் தாய்லாந்தில் வைத்து கைது செய்துள்ளது என்ற தகவல் பத்திரிகையில் வெளியாகியிருந்தது. அதிலிருந்து தொடங்கியது பரபரப்பு.

அப்போது இந்திய வெளியுறவு அமைச்சர் தாய்லாந்தில் நின்றிருந்தார். கே.பி.-யை தம்மிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அவர் கோரியிருந்தார். கே.பி. கைது செய்யப்பட்டார் என்ற தகவல் கிடைத்ததும், ஸ்ரீலங்கா உளவுத் துறையினரும் அங்கே போய் இறங்கினார்கள். ஆனால் கே.பி.-யை காணவில்லை. மாயமாக மறைந்து விட்டிருந்தார்.

அவரைக் கைது செய்யவில்லை என்றது இன்டர்போல் போலீஸ். அவரைக் கைது செய்யும் விஷயமே தமக்கு தெரியாது என்றது தாய்லாந்து போலீஸ்! எல்லாமே ஒரே மர்மமாக இருந்தன.

இந்தப் பழைய நினைப்பில்தான் உருத்திரகுமார் பாங்காக், தாய்லாந்து விமான நிலையத்தில் போய் இறங்கியிருந்தார். அவர் அங்கிருந்து கோலாலம்பூரில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளுக்கு எப்படிப் போய்ச் சேர்ந்தார் என்பதைப் பார்க்குமுன், தாய்லாந்தில் இருந்து மாயமாக மறைந்ததாக சொல்லப்படும் கே.பி., மலேசியாவரை எவ்வாறு போய்ச் சேர்ந்தார்?

அந்த சுவாரசியமான விபரங்களைப் பார்த்துவிட்டுச் செல்லலாமா?

கே.பி.-க்கு தாய்லாந்தில் என்ன நடந்தது என்பது தொடர்பாக பலவித வதந்திகள் உலாவி வந்தன. ஆனால், தென்-கிழக்கு ஆசிய உளவு வட்டாரங்களில் இருந்து எமக்கு கிடைத்திருந்த தகவல்கள் நிஜமானவை. முக்கியமான தென்கிழக்கு ஆசிய நாட்டு உளவுத்துறையில் இருந்து கிடைத்த தகவல்கள் இவை.

2007-ம் ஆண்டு செப்டெம்பர் முதல் வாரத்தில் சர்வதேச போலீஸ் இன்டர்-போல், கே.பி.-யை கைது செய்வது என்ற முடிவை எடுத்தது. அதற்கான உத்தரவுடன் இன்டர்போல் அதிகாரிகள் செப்டெம்பர் 2-வது வார இறுதியில் தாய்லாந்து வந்து இறங்கினார்கள். இந்த விஷயத்தில் இன்டர்போல் மிக ரகசியமாக வைத்திருந்தது. எவ்வளவு ரகசியம் என்றால், தாய்லாந்து உளவுத்துறைக்கே இந்த விஷயத்தை இன்டர்போல் அறிவிக்கவில்லை.

தாய்லாந்தில் இருந்த இன்டர்போல் ஸ்டேஷன் சீஃப்-க்கு மட்டுமே சொல்லப்பட்ட ரகசியமாக இருந்தது. அது.

2-வது வார இறுதியில் வந்திறங்கிய இன்டர்போல் அதிகாரிகள், அந்த திங்கட்கிழமை கே.பி.-யை கைது செய்யும் திட்டத்தில் இருந்தார்கள். திங்கட்கிழமை, செப்டெம்பர் 10-ம் தேதி (2007)

இதில் ஒரு நடைமுறை இருக்கிறது. இன்டர்போல் அமைப்பின் அங்கத்துவ நாடுகளில் அவர்கள் யாரையும் இன்டர்போல் தலைமையக வாரண்ட் ஒன்றுடன் கைது செய்ய முடியும். ஆனால் அதற்குமுன் லோக்கல் கோர்ட் ஒன்றில் அந்த வாரண்ட் என்டோஸ் செய்யப்பட்டு, லோக்கல் ஆர்டர் ஒன்று பெற வேண்டும். திங்கட்கிழமை காலை இந்த வேலையை முடித்துக்கொண்டு, அன்று மாலையே கே.பி.-யை கைது செய்வது என்ற திட்டம், அவர்கள் நினைத்தது போல நிறைவேறவில்லை.

லோக்கல் கோர்ட்டில் ஆர்டர் பெறுவது இழுபறி விவகாரமாக முடிந்தது. அத்துடன் காதும் காதும் வைத்ததுபோல ரகசியமாக செய்ய முயன்ற வேலை கோர்ட் ஆர்டர் பெறும் காரியத்தில் சிலருக்கு தெரிய வந்துவிட்டது. இந்த விவகாரம் முதலில் ஒரு ஆங்கில இணையத்தளத்துக்கு தெரியவரவே, அவர்கள் அதை சிறியதாக பிளாஷ் செய்தார்கள். பாங்காக்கில் இருந்து வெளியாகும் ஆங்கில நாளேடு பாங்காக் போஸ்ட் அந்த நியூஸை பிக் பண்ணியது. அவர்கள் மேலதிகமாக சில தகவல்களை விசாரித்தார்கள்.

இந்த நியூஸ் மறுநாள், செவ்வாய்க்கிழமை காலை வெளியான பாங்காக் போஸ்ட் பத்திரிகையில் இடம்பெற்றது.

இதில் ஒரு சறுக்கல் நடந்தது.

கே.பி.-யை திங்கட்கிழமை கைது செய்வதற்கு என்றே இன்டர்போல் கோர்ட் ஆர்டர் கேட்டு விண்ணப்பம் செய்திருந்தது. அந்தச் செய்தியை மறுநாள் காலை பாங்காக் போஸ்ட் பத்திரிகையில் வெளியிடும்போது, திங்கட்கிழமை கே.பி. கைது செய்யப்பட்டார் என்று வெளியிட்டிருந்தார்கள். ஆனால், திங்கட்கிழமை மாலைவரை கோர்ட் ஆர்டர் கிடைக்காத காரணத்தால், தமது கைது செய்யும் திட்டத்தை செவ்வாய்க்கிழமைக்கு (11-ம் தேதி) மாற்றி விட்டிருந்தது இன்டர்போல்!

அதுதான் இன்டர்போலுக்கு ஏற்பட்ட சறுக்கல். செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு கே.பி-யை கைது செய்வது என்று அவர்கள் தயாராக இருந்தார்கள். ஆனால், அன்று காலை 6 மணிக்கு வெளியான பாங்காக் போஸ்ட் பத்திரிகையில், முதல்நாள் மாலையே கைது நடந்து விட்டதாக செய்தி வெளியாகியிருந்தது!

மறுநாள் இந்திய மீடியாவில் இந்தச் செய்தி எப்படி வெளியானது தெரியுமா? இதைவிட சுவாரசியமான அந்த விஷயத்தை ‘கே.பி. கைது தொடர்பாக சி.பி.ஐ.-க்கும், கார்த்திகேயனுக்கும் என்ன தெரியும்?’ என்ற எமது பெட்டிச் செய்தியில் பார்க்கவும்.

கே.பி. தாய்லாந்தில் வைத்துக் கைது செய்யப்பட்டார் என்ற செய்தி இந்திய மீடியாக்களில் பரபரப்பாக அடிபடத் தொடங்கியது 2007-ம் ஆண்டு செப்டெம்பர் 12-ம் தேதி! இந்திய மீடியாக்களில், ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகைதான் முதல் முதலில் இதை பிரேக்கிங் நியூஸாக வெளியிட்டு பரபரப்பைத் தொடக்கி வைத்தது.

“விடுதலைப் புலிகள் அமைப்பின் பிரதம ஆயுத விநியோகஸ்தரான கே.பி. எனப்படும் குமரன் பத்மநாதன் பாங்காக்கில் அகப்பட்டுக் கொண்டது நிஜம். ஆனால், அவர் சட்டரீதியாக கைது செய்யப்பட்டார் என்பதைவிட, தடுத்து வைக்கப்பட்டுள்ளார் (under ‘detention’, though not ‘legally under arrested’) என்ற பொருளிலேயே ஹிந்துஸ்தான் டைம்ஸ் எழுதியிருந்தது.

பாங்காக் போஸ்ட் செய்தி வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியதற்கு மறுநாள்தான் இந்தச் செய்தி இந்திய மீடியாக்களுக்கு வந்து சேர்ந்தது.

ஹிந்துஸ்தான் டைம்ஸின் புதன் கிழமை (செப். 12-ம் தேதி) காலைப் பதிப்பில், “பெயர் வெளியிட விரும்பாத சோர்ஸ்கள் கொடுத்த தகவல்களின்படி, கே.பி. அல்லது குமரன் பத்மநாதன் மிகக் கடுமையான கண்காணிப்பு வளையத்துக்குள் உள்ளார். இவரிடம் கடுமையான விசாரணைகள் இப்போது நடைபெறுகின்றன என்பதே இதன் அர்த்தம்” என்றும் எழுதப்பட்டிருந்தது.

‘பெயர் வெளியிட விரும்பாத சோர்ஸ்கள்’ என்று அந்த தகவலை வெளியிட்டிருந்த ஹிந்துஸ்தான் டைம்ஸ், அப்போது டில்லியில் இருந்த டி.ஆர்.கார்த்திகேயனைத் தொடர்பு கொண்டு, இதுபற்றிய அவரது கருத்தையும் கேட்டு வெளியிடிருந்தது. ராஜிவ் காந்தி கொலை வழக்கு விசாரணைகளை மேற்கொண்ட சிறப்பு புலனாய்வு குழுவின் தலைவராக இருந்தவர் கார்த்திகேயன்

இந்திய புலனாய்வுத்துறை சி.பி.ஐ.-யின் சார்பில் ராஜிவ் காந்தி கொலைவழக்கு புலனாய்வில் ஈடுபட்டவர் என்ற வகையில், விடுதலைப் புலிகள் பற்றிய விபரங்களை இவர் அறிந்திருப்பார் என்ற அடிப்படையில் அவர் ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகையால் தொடர்பு கொள்ளப்பட்டிருக்கலாம். இதோ அவர்கள் வெளியிட்ட செய்தியின் ஒரு பகுதி-

சி.பி.ஐ.-யின் சிறப்பு புலனாய்வுக் குழுவின் (Special Investigating Team – SIT) தலைவர் கார்த்திகேயனை, நாம் (ஹிந்துஸ்தான் டைம்ஸ்) புதுடில்லியில் போனில் தொடர்பு கொண்டபோது, கே.பி. தாய்லாந்து அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்றே தாம் நம்புவதாகத் தெரிவித்தார். “கே.பி.-யின் உருவ அமைப்புடன் ஒத்துப் போகும் ஒருவர் தாய்லாந்து உளவுப் பிரிவினால் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்பது எமக்கு கிடைத்துள்ள தகவல்” எனவும் அவர் எம்மிடம் தெரிவித்தார்.

இந்தியப் புலனாய்வு அமைப்பான சி.பி.ஐ.-யும், கே.பி. தாய்லாந்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவே கருதியது. இந்த விவகாரம் பரபரப்பாக அடிபடத் தொடங்கியதும், புதன்கிழமை (12-ம் தேதி) இது தொடர்பாக டில்லியில் பிரஸ்மீட் ஒன்றை நடாத்தினார் சி.பி.ஐ.-யின் அப்போதைய தலைவர் விஜய் ஷங்கர். அந்த பிரஸ்மீட்டில், ‘கைது செய்யப்பட்டார்’ என்ற சொல்வதை மிகக் கவனமாகத் தவிர்த்த அவர், ‘தடுத்து வைக்கப்பட்டுள்ளார்’ என்பதை மீண்டும் மீண்டும் தெரிவித்தார்.

2007 செப்டெம்பரில், பாங்காக்கில், கே.பி. விவகாரத்தில் என்ன நடந்தது என்பது குறித்து ஊடகங்கள் இப்படியாக செய்தி வெளியிட்டுக் கொண்டிருக்க…

பாங்காக் போஸ்ட் செய்தி வெளியாகும்வரை தாய்லாந்து உளவுத்துறைக்கு இந்த செய்தி தெரிந்திருக்கவில்லை. தாய்லாந்து உளவுத்துறையில் ஒரு எலிமென்ட்டுக்கு கே.பி.-யுடன் நெருக்கமான பரிச்சயம் இருந்தது. காலை 10 மணிக்கு இன்டர்போல் கைது செய்ய போகும் முன்னரே அவர்கள் கே.பி.-யை தொடர்பு கொண்டு தமது இடம் ஒன்றுக்கு வரச் சொன்னார்கள்.

இந்த நிலையில் தாய்லாந்து உளவுத்துறை ஒரு முடிவு எடுத்திருந்தது.

கே.பி. தாய்லாந்தில் வைத்து கைது செய்யப்பட்டால், இன்டர்போல் அவரை தம்முடன் அழைத்துச் செல்ல தயாராக வந்திருப்பார்கள். தகவல் வெளியே வந்தவுடன், கே.பி.-யை தம்மிட்ட ஒப்படைக்குமாறு இந்தியாவும் கோரிக்கை விடும், ஸ்ரீலங்காவும் கோரிக்கை விடும். தாய்லாந்து அரசு தர்மசங்கடமான சூழ்நிலையில் சிக்கிக் கொள்ளும். அதிலிருந்து தப்பித்துக் கொள்ள வேண்டுமென்றால், கே.பி.-யை தாய்லாந்தில் இருந்து வெளியேற்றுவது என்பதே அவர்கள் செய்த முடிவு.

தாய்லாந்து உளவுத்துறை கூறியிருந்த இடத்துக்குச் சென்ற கே.பி.-யிடம் இன்டர்போல் அவரைக் கைது செய்தால், தாங்கள் நினைத்தால்கூட காப்பாற்ற முடியாது என்று தெரிவித்த அவர்கள், கே.பி.-க்கு உள்ள ஒரே சாய்ஸ், உடனடியாக நாட்டைவிட்டு வெளியேறுவதுதான் என்றார்கள். கே.பி-யை கைது செய்யும் விஷயம் பாங்காக்கில் இனிஷியேட் பண்ணப்பட்ட காரணத்தால், பாங்காக விமான நிலையத்தில் இருந்து பயணம் செய்வதை தவிர்த்து, சிறிய விமான நிலையம் ஒன்றின் ஊடாக வெளியேறுவது என்று முடிவாகியது.

அந்த சிறிய விமான நிலையம், உடொன்-தானி (Udon Thani)

உடொன்-தானி (Udon Thani) விமான நிலையம்.

உடொன்-தானி, தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து வட-கிழக்கே 450 கி.மீ. தொலைவில் உள்ளது. தாய்லாந்து-லாவோஸ் எல்லைக்கு அருகே உள்ளது இந்த இடம். தாய்லாந்தில் இருந்து லாவோஸ் நாட்டுக்குள் தரை மார்க்கமாக செல்ல பிரபலமான பாதை, நொங்-காய் (Nong Khai) பாலம். தரை மார்க்கமாக செல்லாமல் விமான மார்க்கமாக லாவோஸ் செல்வது என்றால், நொங்-காய் நகரில் இருந்து வெறும் 55 கி.மீ. தொலைவில் உள்ளது நாம் கூறிய உடொன்-தானி விமான நிலையம்.

அந்த விமான நிலையம் ஊடாக கே.பி. தாய்லாந்தில் இருந்து வெளியேறி லாவோஸ் நாட்டுக்குள் செல்வது என்பதே திட்டம்.

அதிலும் ஒரு சிக்கல் உள்ளது என்பதை தாய்லாந்து உளவுத்துறைக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை. அந்த சிக்கல் கே.பி. வைத்திருந்த பாஸ்போர்ட்!

தொடரும்….

Source
nadunadapu

Keerthivasan

About Keerthivasan -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :