Friday, March 10, 2017

Keerthivasan

ஈழப் போரின் இறுதி நாட்கள் – 3

 பாங்காக்கில் இறங்கிய உருத்திரகுமாரன்

உருத்திரகுமாரன்


வன்னியில் ரொம்பவும் ஆபத்தான சிறிய பகுதிக்குள் சிக்கியிருந்த புலிகளின் தலைவர், தளபதிகள், போராளிகள் மற்றும் பொதுமக்களை காப்பாற்றும் முயற்சிகள் தொடங்கின. இந்த முயற்சியில் அமெரிக்காவும் நார்வேயும் ஒன்றாகவே இறங்கியிருந்தாலும், அமெரிக்கா சைலன்ட் பார்ட்னர் போல நார்வேயை முன்னிறுத்தியே காரியங்களைச் செய்தது.

புலிகளுடன் பேசும் பொறுப்பை நார்வே ஏற்றுக்கொண்டது. நார்வே நாட்டுப் பிரதிநிதிகள் வெளிநாடு ஒன்றில் ரகசியமாக புலிகளுடன் பேசுவது என்ற திட்டம் தயாரானது. புலிகளுடனான சந்திப்பு மிக ரகசியமாகவே வைக்கப்பட வேண்டியதன் காரணம் என்ன?

ஸ்ரீலங்கா தலைநகர் கொழும்புவில் அப்போதைய நோர்வே தூதுவர் டோர் ஹட்டேர்மை வைத்தே புலிகளுடன் பேசுவது என்று நார்வே தீர்மானித்திருந்தது. அதே நேரத்தில், இந்த சந்திப்பு பற்றிய தகவல் எதையும் ஸ்ரீலங்கா அரசுக்கு நார்வே தெரிவித்திருக்கவில்லை. அதனால்தான் அனைத்துமே ரகசியமாக வைக்கப்பட வேண்டியிருந்தது.

காரணம், ராஜதந்திர ரீதியில் இது ஒரு சிக்கலான விஷயம். Diplomatic code of conduct on international practices-க்கு எதிராகவே புலிகளைச் சந்திக்கத் துணிந்திருந்தது நார்வே.

எப்படியென்றால், ஒரு நாட்டின் விவகாரங்களில், அந்த நாட்டில் உள்ள மற்றொரு நாட்டின் தூதர் தலையிடும்போது, குறிப்பிட்ட நாட்டுக்கு தகவல் தெரிவிக்கப்பட வேண்டும் என்பது diplomatic code of conduct நடைமுறை. அதை மீறியே, புலிகளுடனான இந்தச் சந்திப்பில் கொழும்பில் பணியாற்றிய நார்வே தூதுவரை ஈடுபடுத்தியிருந்தது நார்வே வெளியுறவு அமைச்சு.

கொழும்புவில் அப்போதைய நோர்வே தூதுவராக பணிபுரிந்த டோர் ஹட்டேர்ம், நோர்வே தலைநகர் ஆஸ்லோவில் உள்ள வெளியுறவு அமைச்சின் உத்தரவுக்கு அமைய இந்த ரகசிய முயற்சியில் இறங்கியிருந்தார். ஆஸ்லோவின் திட்டப்படி, டோர் ஹட்டேர்ம் கொழும்புவில் இருந்து வெளிநாடு ஒன்றுக்கு செல்ல வேண்டும். ஆஸ்லோவில் (வெளியுறவு அமைச்சில்) இருந்து வேறு சிலரும் அந்த நாட்டுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். புலிகளை அங்கு வைத்து ரகசியமாகச் சந்திக்க வேண்டும்.

புலிகளின் தரப்பில் இருந்து, வெளிநாடு ஒன்றில் பேசக்கூடிய ஒரேயொரு நபர் என்ற அந்தஸ்து செல்வராசா பத்மநாதனுக்கு (கே.பி.) மாத்திரமே வழங்கப்பட்டிருந்தது பற்றி ஏற்கனவே குறிப்பிட்டிருந்தோம் (பாகம்-2). இதனால், எந்த வெளிநாட்டில் சந்திப்பது என்பதை முடிவு செய்வதற்கு நார்வே வெளியுறவு அமைச்சு கே.பி.-யை தொடர்பு கொண்டது.

கே.பி.-யால் குறிப்பிடப்பட்ட இடம்தான் மலேசியாவின் தலைநகர், கோலாலம்பூர். இதனால் சந்திப்பை அங்கே வைத்துக் கொள்வது என்பது முடிவானது.

இந்த இடத்தில் நார்வே புலிகளின் சார்பில் கே.பி.-யை புலிகளின் அதிகாரபூர்வ பிரதிநிதியாக சந்திப்பது பற்றிய சுவாரசியமான உபகதை ஒன்றும் உள்ளது. நார்வேயின் எரிக் சோல்ஹேமும் கே.பி.-யும் இதற்கு முன் தாய்லாந்தில் சந்தித்துக் கொண்ட அந்த உபகதை, பெட்டிச் செய்தியாக உள்ளது. அதைப் படிக்க விரும்பினால்,


இந்த பெட்டிச்செய்தியை பார்வையிடவும்

2002-ம் ஆண்டு ஸ்ரீலங்காவில் ரணில் விக்ரமசிங்கேவின் அரசுக்கும், விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கும் இடையே சமாதான ஒப்பந்தம் ஏற்பட்டது. அதையடுத்து இரு தரப்புக்கும் இடையே பேச்சுவார்த்தைகள் தொடங்கின. தாய்லாந்தின் தலைநகர் பாங்காக்கில் ஆரம்பித்து, வெவ்வேறு நாடுகளில் இந்தப் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தன.

ஆரம்பத்தில் விடுதலைப்புலிகள் அமைப்பின் குழுவுக்கு தலைமை தாங்கியவர், ஆன்டன் பாலசிங்கம். பேச்சுவார்த்தைகள் முடிவதற்குமுன் அவர் உடல்நலம் பாதிப்படைந்து விட, தொடர்ந்து பேச்சுவார்த்தைகளுக்கு செல்ல முடியாத நிலை அவருக்கு ஏற்பட்டது. அதையடுத்து, தமது பேச்சுவார்த்தை குழுவுக்கு புதிய தலைவரைத் தேடும் நிலை புலிகளுக்கு ஏற்பட்டது.

புலிகளின் தலைவர் பிரபாகரன் அப்போது தேர்ந்தெடுத்த நபர் கே.பி. என்று அமைக்கப்படும் செல்வராசா பத்மநாதன்தான். அவரை பேச்சுவார்த்தை குழுவுக்கு தலைமை தாங்கவைக்க ஆவன செய்ய முடியுமா என்ற கோரிக்கை அப்போது புலிகளின் அரசியல் பிரிவு தலைவராக இருந்த தமிழ்செல்வனிடம் இருந்து கொழும்பில் உள்ள நார்வே தூதரகத்துக்கு வந்து சேர்ந்தது.

அப்போது கொழும்பில் நார்வே தூதராக இருந்தவர் ஹான்ஸ் பிராட்ஸ்கர். அவர் இந்தக் கோரிக்கையை ஆஸ்லோவில் இருந்த எரிக் சோல்ஹேமிடம் தெரிவித்தார். கொழும்பு வந்த எரிக் சோல்ஹேம், நேரடியாக ஸ்ரீலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவிடம் இது பற்றி பேசினார். “புலிகள் தமது குழுவுக்கு கே.பி. தலைமை தாங்க வேண்டும் என்று விரும்புகின்றனர். இதில் உங்களுக்கு ஆட்சேபணை ஏதும் உள்ளதா?”

ரணில் விக்ரமசிங்கேவுக்கு கே.பி. தலைமை தாங்குவதில் ஆட்சேபணை ஏதும் இருக்கவில்லை.

வன்னியில் இருந்த தமிழ்செல்வனிடம் இந்தத் தகவலை தெரிவித்தார் எரிக் சோல்ஹேம். வன்னியில் இருந்து தகவல் அப்போது தாய்லாந்தில் வசித்துவந்த கே.பி.-க்கு தெரிவிக்கப்பட்டது. பேச்சுவார்த்தை நடைபெறும் நாடுகளுக்கு பயணம் செய்வதற்காக கே.பி.-க்கு நார்வே நாட்டு ட்ராவல் டாக்குமென்ட் (பாஸ்போர்ட்) வழங்கவும் சம்மதித்தார் எரிக் சோல்ஹேம்.

எரிக் சோல்ஹேம் கொழும்புவில் இருந்து நார்வே திரும்பும்போது, அவரது பயணத் திட்டம், கொழும்புவில் இருந்து டில்லி சென்று அங்கிருந்து ஆஸ்லோ செல்வதாக திட்டமிடப்பட்டு இருந்தது. புலிகளின் பேச்சுவார்த்தைக் குழுவின் புதிய தலைவராக வரப்போகும் கே.பி.-யை நேரில் சந்தித்து பேசிவிட்டு செல்ல விரும்பிய எரிக், கொழும்பு-டில்லி-பாங்காக்-ஆஸ்லோ என்று பயணத் திட்டத்தை மாற்றிக் கொண்டார்.

இதையடுத்து கே.பி.-க்கு தகவல் அனுப்பிய எரிக், பாங்காக்கில் உள்ள நார்வே தூதரகத்தில் தன்னை வந்து சந்திக்குமாறும், அப்போது போட்டோ கொண்டு வந்தால், அங்கே வைத்தே ட்ராவல் டாக்குமென்ட் வழங்கக்கூடியதாக இருக்கும் எனவும் தெரிவித்துவிட்டு டில்லி புறப்பட்டுச் சென்றார்.

புலிகளின் பேச்சுவார்த்தைக் குழுவுக்கு புதிய தலைவராக கே.பி. வரவுள்ளார் என்ற தகவலை எரிக் கூறியபோது, அதை கடுமையான எதிர்த்தது டில்லி. “அந்த நபரை சமாளிப்பது கஷ்டமான காரியம்” என்பதுதான் அதற்கு புதுடில்லி கொடுத்த காரணம். (அதற்குமுன் புலிகளின் பேச்சுவார்த்தைக் குழு தலைவராக இருந்த ஆன்டன் பாலசிங்கத்துக்கும், எம்.கே.நாராயணனுக்கும் இடையே இருந்த நட்பு வெளியே பலருக்கும் தெரியாது)

இதை சரியாகப் புரிந்து கொள்ளுங்கள்.

பேச்சுவார்த்தை நடப்பது ஸ்ரீலங்கா அரசுக்கும், புலிகளுக்கும் இடையே. அதன் ஏற்பாட்டாளர் நார்வே. புலிகளின் பேச்சுவார்த்தைக் குழுவுக்கு தலைவராக கே.பி.-யை நியமிக்க புலிகள் விரும்புகின்றனர். ஸ்ரீலங்கா அரசுக்கு ஆட்சேபணை கிடையாது. நார்வே கே.பி. பயணம் செய்ய பாஸ்போர்ட் கொடுக்க தயாராக இருக்கின்றது.

ஆனால், காட்சியில் எங்கும் வராத புதுடில்லி எதிர்க்கிறது!

முடிவு? புதுடில்லியின் எதிர்ப்பை நார்வேயால் நிராகரிக்க முடியவில்லை.

அப்படியிருந்தும் தனது பயணத் திட்டத்தை மாற்றிக் கொள்ளாத எரிக் சோல்ஹேம் பாங்காக் சென்று, அங்கிருந்த நார்வே தூதரகத்தில் கே.பி.-யை சந்தித்து தமது நிலைமையை விளக்கிவிட்டு ஆஸ்லோ சென்றார்.

இப்படியாக இருந்த நிலையில், ஸ்ரீலங்கா அரசுக்கும் புலிகளுக்கும் இடையே பேச்சுக்கள் முறிந்தன. யுத்தம் வந்தது. யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் கே.பி.-யை விடுதலைப் புலிகளின் பிரதான ராஜதந்திரியாக நியமித்து அந்த அமைப்பின் தலைவர் பிரபாகரன் கொடுத்த கடிதம், நார்வேயை மீண்டும் கே.பி.-யுடனேயே ரகசியமாகப் பேச வைத்தது.

அதை புதுடில்லியால் தடுக்க முடியவில்லை. இதைத்தான் விதி என்பார்கள்!
கோலாலம்பூரில் இந்த ரகசிய சந்திப்புக்காக ஹில்டன் ஹோட்டலில் ஒரு suite புக் பண்ணப்பட்டிருந்தது. 2009-ம் ஆண்டு பிப்ரவரி 25-ம் தேதி, ஸ்ரீலங்காவுக்கான நோர்வே தூதுவர் டோர் ஹட்டேர்ம் கொழும்பில் இருந்து மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் தடம் இலக்கம் MH178-ல் கோலம்பூர் புறப்பட்டுச் சென்றார்.

1962-ல் பிறந்த டோர் ஹட்டேர்ம், நார்வேயில் திறமைசாலியான ராஜதந்திரிகளில் ஒருவர். அதனாலோ என்னவோ, யுத்தம் நடக்கும் இடங்களுக்குத்தான் அவரை தூதுவராக அனுப்புவது நார்வே வெளியுறவு அமைச்சின் வழக்கம்.

2007-ம் ஆண்டு ஸ்ரீலங்காவுக்கான தூதுவராக அனுப்பப்பட்ட அவர், 2010-ம் ஆண்டுவரை கொழும்புவில் இருந்தார். பின்னர் கொழும்புவில் இருந்து பணி மாற்றம் செய்யப்பட்டு அவருக்கு வழங்கப்பட்ட குறுகியகால அசைன்மென்ட், கார்ட்டூம் நகரில் (சூடான்) இயங்கிவந்த நோர்வே தூதரகத்தை பொறுப்பேற்பது. அதன்பின் இந்த ஆண்டு (2011) தொடக்கத்தில் காபுல் நகரில் (ஆப்கானிஸ்தான்) உள்ள நோர்வே தூதரகத்தில் அடுத்த அசைன்மென்ட் கொடுக்கப்பட்டு, தற்போது ஆப்கானிஸ்தானுக்கான நார்வே தூதுவராக பணியாற்றுகிறார்.

டோர் ஹட்டேர்ம் கொழும்பில் இருந்து கோலாலம்பூர் செல்ல, நார்வே தலைநகர் ஆஸ்லோவில் இருந்து வேறு இருவரும் கோலாலம்பூருக்கு வெளியுறவு அமைச்சால் அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்கள் இருவரில் ஒருவர் வில்லிஸ், வெளியுறவு அமைச்சின் உயரதிகாரி. இரண்டாவது நபரான தாமஸ், எரிக் சோல்ஹேமின் அந்த நாளைய செயலாளர்.

2009 பிப்ரவரி மாதம் 26-ம் தேதி வியாழக்கிழமை. மலேசியா தலைநகர் கோலாலம்பூர், ஜாலன் ஸ்டெசென் சென்ட்ரல் பகுதியில் அமைந்துள்ள ஹில்டன் ஹோட்டலில் இவர்கள், புலிகளை ரகசியமாக சந்திப்பது என்று ஏற்பாடு ஆகியிருந்தது.

இதோ, நார்வே குழுவினர் கோலாலம்பூர் சென்று இறங்கப் போகின்றனர். அவர்கள் அங்கே போய்ச் சேர்வதற்குமுன், புலிகள் தரப்பில் இவர்களை ரகசியமாக சந்திக்கப் போகும் ஆட்கள் யார், அவர்கள் எப்படி கோலாலம்பூர்வரை சென்றார்கள் என்பதைப் பார்க்கலாமா?

புலிகளின் அதிகாரபூர்வ ராஜதந்திரியாக நியமிக்கப்பட்டிருந்த கே.பி.-யிடம், “நார்வேயின் பிரதிநிதிகள் உங்களை மலேசியாவில் வந்து சந்திப்பார்கள். உங்கள் (புலிகள்) தரப்பில் யார் இந்தப் பேச்சுக்களில் கலந்து கொள்ளப் போகின்றீர்கள்?” என்று நார்வே வெளியுறவு அமைச்சில் இருந்து கேட்கப்பட்டது.

இதற்கு பதில் கொடுக்க ஒரு நாள் அவகாசம் தேவை என்று கே.பி.-யிடமிருந்து வெளியுறவு அமைச்சுக்கு தகவல் சென்றிருந்தது. மறுநாள் நார்வே வெளியுறவு அமைச்சை தொடர்பு கொண்ட கே.பி., தமது தரப்பில் மூவரும், ஒரு உதவியாளரும் கலந்து கொள்வார்கள் என்று தெரிவித்திருந்தார். கலந்து கொள்பவர்களின் பெயர்களும் மலேசியாவில் இருந்து ஆஸ்லோவுக்கு வந்து சேர்ந்தது.

புலிகளிடமிருந்து வந்து சேர்ந்த பட்டியலில் இருந்த முதலாவது நபர், செல்வராசா பத்மநாதன் (கே.பி.) அவர் அப்போது மலேசியாவில் தங்கியிருந்ததால், பயண ஏற்பாடுகள் ஏதும் அவசியமாக இருக்கவில்லை.

பட்டியலில் இருந்த இரண்டாவது நபர் யார் தெரியுமா? தற்போது நன்கு அறியப்பட்ட பிரபலம். அவர், அவரது பெயர், விசுவநாதன் உருத்திரகுமாரன்! ஆம். நாடுகடந்த தமிழீழ அரசின் பிரதமர் என தற்போது அறியப்பட்டுள்ள உருத்திரகுமார்தான் அது. அவர் அமெரிக்காவில் இருந்ததால், அமெரிக்காவில் இருந்து மலேசியாவுக்கு வருவதற்கு பயண ஏற்பாடுகள் அவசியமாக இருந்தது.

பட்டியலில் இருந்த மூன்றாவது பெயர், ஜோய் மகேஸ்வரன். இவர் ஆஸ்திரேலியாவில் இருந்து வரவேண்டியிருந்தது.

இந்த மூவருடன் இணைந்து கலந்து கொள்ளப் போவதாக பட்டியலில் நான்காவதாக இருந்த உதவியாளரின் பெயர் பொறி. அவர் அப்போது கே.பி.-யின் தனி உதவியாளராக மலேசியாவில் பணிபுரிந்து கொண்டிருந்தார்.

இந்த நால்வரில் இருவர் ஆஸ்திரேலியாவில் இருந்தும், அமெரிக்காவில் இருந்தும் மலேசியாவுக்கு வருவதற்கான ஏற்பாடுகளை துரிதமாகச் செய்யுமாறு அறிவித்தது ஆஸ்லோவில் இருந்த வெளியுறவு அமைச்சு. மறுநாளே ஆஸ்லோவுக்கு மலேசியாவில் இருந்து ஆச்சரியகரமான தகவல் ஒன்று வந்து சேர்ந்தது.

அமெரிக்காவில் இருந்து உருத்திரகுமாரன் புலிகளின் பணத்தில் மலேசியா செல்ல விரும்பவில்லை என்பதே அந்த தகவல்.

அமெரிக்காவில் வசிக்கும் தனக்கு, புலிகளின் பணத்தில் பயணம் செய்வது பின்னாட்களில் சிக்கல்களை ஏற்படுத்தலாம் என்று வழக்கறிஞரான உருத்திரகுமார் கருதுவதாக இருந்தது, ஆஸ்லோ வெளியுறவு அமைச்சுக்கு புலிகளின் தரப்பிலிருந்து வந்த தகவல். (விடுதலைப்புலிகள் அமைப்பு அமெரிக்காவில், தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகள் பட்டியலில் இருந்தது)

இதற்கு உடனடியாகவே பதில் கொடுத்தது நார்வே.

“திரு. உருத்திரகுமாரன் தனது சொந்தப் பணத்தில் டிக்கெட் எடுத்துக்கொண்டு வந்தால், டிக்கெட்டுக்கான பணத்தை நார்வே கொடுத்து விடும். அதில் சிக்கல் ஏதுமில்லை” என்பதே நார்வே, கே.பி.-க்கு அனுப்பிய பதில். (நார்வேயின் அனுசரணையில் விடுதலைப்புலிகள் அமைப்புக்கும் ஸ்ரீலங்கா அரசுக்கும் இதற்கு முன்பு நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின்போது, புலிகளின் பிரதிநிதிகள் பயணம் செய்வதற்கு பிசினெஸ் கிளாஸில் விமான டிக்கெட் வழங்கியது நார்வேதான்)

இந்தப் பதில் கிடைத்ததும், மலேசியாவில் இருந்து உருத்திரகுமாரனுக்கு தகவல் அனுப்பப்பட்டது. “டிக்கெட்டுக்கு பணம் ‘அவர்கள்’ கொடுக்கிறார்களாம். நீங்கள் டிக்கெட் எடுத்துக் கொண்டு ‘கேப்பிடலுக்கு’ (தலைநகர்) வரவும்” என்பதுதான் சுருக்கமான தகவல்.

புலிகள் அமைப்போடு தொடர்புடைய அனைவரதும் தொடர்புகள் எல்லாம் வெளிநாடுகளில் ஒட்டுக் கேட்கப்பட்டுக் கொண்டிருந்த நிலையில், இப்படி சுருக்கமாக தகவல் அனுப்புவது புலிகளின் வழக்கம். அந்த வகையில் இப்படி சுருக்கமாக போய்ச் சேர்ந்தது மெசேஜ்.

தகவல் கிடைத்தபின், உருத்திரகுமாரன் அமெரிக்காவில் இருந்து விமானம் ஏறினார். அவர் போய் இறங்கிய இடம் எது தெரியுமா? சொன்னால் நம்ப மாட்டீர்கள், இருந்தாலும் சொல்கிறோம்… பாங்காக்!

கேப்பிட்டலுக்கு வாருங்கள் என்று மலேசியாவின் தலைநகருக்கு வருமாறு கூறினால், தாய்லாந்தில் தலைநகர் பாங்காக் விமான நிலையத்தில் போய் இறங்கிவிட்டார் அவர். கே.பி. மலேசியாவில் வசிப்பதற்குமுன் தாய்லாந்தில் வசித்ததை அறிந்திருந்த உருத்திரகுமாரன், கே.பி. அழைப்பது தாய்லாந்துக்குத்தான் என்று நினைத்து விட்டார். பாங்காக்குக்கு டிக்கெட் எடுத்து, அங்கே போய் இறங்கிவிட்டார்.

தொடரும்…

Source
nadunadapu

Keerthivasan

About Keerthivasan -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :