Friday, March 10, 2017

Keerthivasan

ஈழப் போரின் இறுதி நாட்கள் – 2

அமெரிக்க – நார்வே திட்டம்


அமெரிக்க – நார்வே திட்டம் 4 அம்சங்களுடன் உருவாகிவிட்ட நிலைமையில்தான் புலிகளின் சார்பில் கே.பி. என்று அறியப்பட்ட குமரன் பத்மநாதன் அல்லது செல்வராசா பத்மநாதனுடன் இந்த ஏற்பாடு பற்றி மேலும் விவாதிக்க விரும்பியது நார்வே. அப்போது மலேசியாவில் தங்கியிருந்த கே.பி.- யுடன் பிப்ரவரி 26-ம் தேதி நார்வே அதிகாரிகள் சந்தித்து தமது திட்டம் பற்றி பேசினர்.

புலிகளின் சார்பாகப் பேசுவதற்கு நார்வே, கே.பி.யை தேர்ந்தெடுத்தது எதற்காக என்பதைத் தெரிந்துகொள்ள முன், இது நடைபெற்ற நாட்களில் புலிகளுக்கும் ஸ்ரீலங்கா ராணுவத்துக்கும் இடையிலான யுத்தம், எங்கே நடைபெற்றுக் கொண்டு இருந்தது என்பதை தெரிந்து கொள்வது அவசியம்.

அப்போதுதான் புலிகள் பிப்ரவரி மாத இறுதியில் ராணுவ ரீதியில் எந்த நிலையில் இருந்தார்கள் என்று தெரிந்து கொள்ள முடியும். காரணம், யுத்தம் முடிவடைவதற்கு இரண்டரை மாதங்களே மீதமிருந்த சூழ்நிலை அது.

புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த வன்னி பகுதியில் ஸ்ரீலங்கா ராணுவம், 2007-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் தரை மார்க்க யுத்தத்தை ஆரம்பித்தது. ராணுவத்தின் 57-வது டிவிஷன் படைப்பிரிவு வவுனியா பகுதியில் தாக்குதலை தொடங்கியது. அங்கே தாக்குதல்களை நடைபெற்றுக் கொண்டிருக்க, செப்டெம்பர் மாதத்தில் இரண்டாவது போர்க்களம் ஒன்றை மன்னார் மாவட்டத்தில் திறந்தது ராணுவம். ராணுவத்தின் அதிரடிப்படை -1 இந்தக் களமுனையில் புலிகளை தாக்கியது.

இந்த இரு முனைகளிலும் புலிகளால் சில மாதங்களுக்கு தாக்குப்பிடிக்க முடிந்தது.

இந்த இரு முனைகளிலும் யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருக்க, ஜனவரி 2008-ல், 3-வது போர்க்களத்தை வெலிஓயாவில் திறந்தது ராணுவம். இந்த முனையில் புலகளைத் தாக்கியது ராணுவத்தின் 59-வது டிவிஷன் படைப்பிரிவு. இப்படியே வெவ்வேறு இடங்களில் போர்க்களங்களை திறப்பதன் மூலம், ஸ்ரீலங்கா ராணுவத்தின் 5 டிவிஷன் படைப்பிரிவுகளும், 3 அதிரடிப்படை படைப்பிரிவுகளும் இணைந்து 8 வெவ்வேறு இடங்களில் தாக்கத் தொடங்கின. புலிகள் ஒவ்வாரு முனையிலும் பின்வாங்கத் தொடங்கினர்.

முதலில் தாக்கத் தொடங்கிய 57-வது டிவிஷன் படைப்பிரிவு மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ் தலைமையில் கிளிநொச்சி நகரை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது. 2009-ம் ஆண்டு புத்தாண்டு தினத்துக்கு மறுநாள் (ஜனவரி 2-ம் தேதி) கிளிநொச்சி நகரம் 57-வது படைப்பிரிவால் கைப்பற்றப்பட்டது. புலிகள், பின்வாங்கி முல்லைத்தீவு மாவட்டத்துக்குள் சென்றனர்.

மறுபக்கத்தில் 58-வது டிவிஷன் படைப்பிரிவு அடம்பன் டவுனில் தொடங்கி, ஒவ்வொரு இடமாக கைப்பற்றியபடி நகர்ந்தது. முள்ளிக்கண்டல், பரப்பக்கண்டல், பாப்பாமோட்டை என்று இடங்களைக் கைப்பற்றிச் சென்ற இந்த டிவிஷன், பெரியமடு என்ற இடத்துக்கு வந்தபோது, 57-வது படைப்பிரிவும் மற்றொரு பாதையில் இடங்களைக் கைப்பற்றியபடி அங்கு வந்திருந்தது.

பெரியமடுவுக்கு தென்மேற்கே இரு டிவிஷன்களும் இணைந்து கொண்டன.

அதன்பின் 58-வது படைப்பிரிவு விடத்தல் தீவு நோக்கி நகர்ந்து, அதைக் கைப்பற்றியது. தொடர்ந்து, நாச்சிக்குடா, நொச்சிமோட்டை, பூநகரி, பரந்தன், தர்மபுரம், விஸ்வமடு டவுன் என்ற பாதையிலுள்ள அனைத்து இடங்களையும் கைப்பற்றியபின், இந்தக் கட்டுரையில் கே.பி.-யை நார்வே சந்தித்ததாக நாம் குறிப்பிடும் பிப்ரவரி 26-ம் தேதியில் தேவிபுரம் என்ற இடம்வரை வந்துவிட்டிருந்தது.

பிரிகேடியர் சவேந்திர சில்வாவின் தலைமையில் இயங்கிய படைப்பிரிவு அது. (அதிரடிப்படை-1 படைப்பிரிவுதான், 58-வது டிவிஷன் என பெயர் மாற்றப்பட்டிருந்தது)

மற்றொரு திசையில் புலிகளை தாக்கத் தொடங்கியிருந்த 59-வது படைப்பிரிவு, புலிகளின் முன்னகம் முகாமைக் கைப்பற்றியதுடன் தொடங்கி, ஜனவரி 25-ம் தேதி முல்லைத்தீவு டவுனை கைப்பற்றியிருந்தது. மறுமுனையில் 55-வது படைப்பிரிவு நகர்ந்து, சாலை என்ற இடத்தை பிப்ரவரி 5-ம் தேதி கைப்பற்றியிருந்தது.

அதிரடிப்படை-2, புளியங்குளம் டவுனை கைப்பற்றி, அங்கிருந்து நகர்ந்து ஒவ்வொரு இடமாகக் கைப்பற்றியபடியே ஜனவரி 21-ம் தேதி உடையார்கட்டு குளம் அணைக்கட்டை கைப்பற்றியிருந்தது. அதிரடிப்படை-3, மாங்குளத்தில் ஆரம்பித்து, அம்பகாமம் வரை வந்திருந்தது. அதிரடிப்படை-4 ஒட்டிசுட்டான் வரை கைப்பற்றியிருந்தது.

மொத்தத்தில், 2007-ல் பெரிய வன்னிப் பிரதேசத்தை தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்த புலிகள் ஒவ்வொரு முனையிலும் பின்வாங்க நேர்ந்ததில், மிகச் சிறிய பகுதி ஒன்றுக்குள் பெட்டிக்குள் அடைபட்டதுபோல முடக்கப்பட்டு இருந்த நிலையில்தான், பிப்ரவரி 26-ம் தேதி மலேசியாவில் புலிகளுக்காக அதிகாரபூர்வமாக பேசத் தொடங்கினார் கே.பி.

கே.பி. பேசத்தொடங்கிய தினத்தில், 57-வது டிவிஷன் விஸ்வமடு டவுனிலும், 58-வது டிவிஷன் தேவிபுரத்திலும், 59-வது டிவிஷன் முல்லைத்தீவு டவுனிலும், 55-வது டிவிஷன் சாலை கிராமத்திலும், அதிரடிப்படை-2 உடையார்கட்டு குளத்திலும், அதிரடிப்படை-3 அம்பகாமத்திலும், அதிரடிப்படை-4 ஒட்டுசுட்டானிலும் நின்றிருக்க, புலிகளின் போராளிகள் தளபதிகள், தலைவர் உட்பட சிறிய நிலப்பரப்பு ஒன்றில் முற்றுகையில் சிக்கியிருந்தனர்!

கே.பி.-யை புலிகளின் அதிகாரபூர்வ பேச்சாளராக நார்வே ஏற்றுக்கொண்டு அவருடன் பேசியதன் காரணம் என்ன?

இது நடப்பதற்கு ஒன்றரை மாதங்களுக்கு முன்னர் விடுதலைப் புலிகள் அமைப்பு கே.பி-யை தமது பிரதான ராஜதந்திரியாக அறிவித்திருந்தது. புலிகள் அமைப்பின் தலைவர் வே.பிரபாகரனின் கையொப்பத்துடன் கூடிய கடிதம் ஒன்றையும் வெளியிட்டிருந்தது.

இங்கேயும் ஒரு விஷயத்தைக் கவனியுங்கள். யுத்தம் முடிவுக்கு வந்து, புலிகளின் தலைவர்கள் யாரும் தற்போது இல்லை என்ற நிலையில் இந்தக் கடிதம் பற்றிய வெவ்வேறு கருத்துக்கள் வெவ்வேறு தரப்புகளிடம் இருந்து வருகின்றன. ஆனால், குறிப்பிட்ட கடிதம் வழங்கப்பட்ட காலத்தில் அது பற்றிய சந்தேகத்தை யாரும் எழுப்பியிருக்க இல்லை.

இந்தக் கடிதம் ரகசியமாக வைக்கப்பட்டிருந்த கடிதம் அல்ல. இதன் பிரதிகள் இணையத்தளங்களிலும் அச்சு ஊடகங்களிலும் வெளியாகி இருந்தன. யுத்தம் முடிவதற்குமுன், புலிகளின் முக்கியஸ்தர்கள் உயிருடன் இருந்த நிலையில் இந்தக் கடிதம் பகிரங்கப்படுத்தப் பட்டிருந்தது.

அப்போது இந்தக் கடிதம் பற்றி யாரும் சந்தேகத்தைக் கிளப்பவில்லை.

அந்தக் காலகட்டத்திலும், அதற்குப் பிறகு மே மாதம் நடுப்பகுதி வரையிலும், வன்னிக்குள் இருந்த புலிகளின் முக்கியஸ்தர்கள், அதன் தலைவர் பிரபாகரன் உட்பட, வெளியேயுள்ள பலருடன் தொடர்பில் இருந்தனர். அப்போதெல்லாம் இந்தக் கடிதம் பற்றி யாரும் சந்தேகத்தை எழுப்பவில்லை.

இது ஒரு போலியான கடிதமாக இருந்தால், கடிதம் வெளியான உடனேயே புலிகள் மறுத்திருப்பார்கள் (கடிதம் ஜனவரி 2009-ல் வெளியாகியிருந்தது). அதற்குப்பின் சுமார் 5 மாத காலத்தின் பின்னரே யுத்தம் முடிவுக்கு வந்தது. அந்த 5 மாதங்கள் என்பது மறுப்பு தெரிவிப்பதற்கு மிகத் தாராளமான கால அவகாசம்.



இந்தக் காலப்பகுதியில் புலிகளின் பிரதான ராஜதந்திரியாக கே.பி., புலிகளின் தலைவர் பிரபாகரனால் நியமிக்கப்பட்டது குறித்து வன்னிக்கு உள்ளேயிருந்து எந்த மறுப்பும் வரவில்லை. வன்னிக்கு வெளியேயிருந்து எந்த சந்தேகமும் எழுப்பப்படவில்லை.

இந்த உண்மை புரிந்தால், யுத்தம் முடிந்தபின், புலிகள் தரப்பில் இருந்து மறுப்பதற்கு யாருமில்லாத நிலையில், இதே கடிதம் பற்றி எழுப்பப்படும் சந்தேகங்கள் பற்றி, நீங்களே முடிவு எடுத்துக் கொள்ளலாம்.

மொத்தத்தில் விடுதலைப்புலிகள் தொடர்பான ராஜதந்திர விவகாரங்களை இலங்கைக்கு வெளியே பேசுவது என்றால், பேசக்கூடிய அதிகாரமுடைய ஒரேயொரு நபர் கே.பி. மாத்திரமே என்பதுதான் அப்போது இருந்த நிலை. நார்வேக்கும் இந்த நிலைப்பாடு புலிகளால் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதையடுத்தே, கே.பி.-யுடனான சந்திப்புக்கு நார்வே ஏற்பாடு செய்தது.

புலிகளைப் பொறுத்தவரை யுத்தம் மிகவும் இக்கட்டான நிலையில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்படியான நிலையில் நார்வே, கே.பி.-யுடன் என்ன பேசியது என்பது மிக முக்கியமானது. மலேசியாவில் நடைபெற்ற அந்தச் சந்திப்பில் என்ன நடந்தது? இரு தரப்பிலும் யார் யார் கலந்து கொண்டனர்? என்ன பேசப்பட்டது? என்ன முடிவு எடுக்கப்பட்டது?

வெளியே பெரிதாக அறியப்படாத மிக முக்கியமான இந்தத் தகவல்களை தெரிந்துகொள்ள வேண்டுமா? கட்டுரையின் அடுத்த பாகத்தில் படிக்கலாம்.

தொடரும்...

Source
nadunadapu

Keerthivasan

About Keerthivasan -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :