Friday, March 10, 2017

Keerthivasan

ஈழப் போரின் இறுதி நாட்கள் – 1

அறிமுகம் – 1



முள்ளிவாய் பேரவலத்துக்கு யார் காரணம்? கடைசிக்கட்ட போரில் பெருந்தொகையான மக்கள் கொல்லப்படுவதற்கு காரணமாக இருந்தவர்கள் பிரபாகரனா அல்லது மகிந்தவா? தமிழர்களை காப்பாற்ற உதவிய கே.பி துரோகியா அல்லது தனது உயிரைக் காப்பாற்றுவதற்காக தமிழர்களை நந்திக்கடல் வரை கூட்டிக்கொண்டுபோய் கொல்ல வைத்த பிரபாகரன் துரோகியா என்பதை ‘பகுத்தறிவுள்ள தமிழர்கள்’ புரிந்து கொள்ள இக் கட்டுரை உதவும் என நம்புகின்றோம்…

நார்வேயின் Pawns of Peace அறிக்கையில் வெளியாகியுள்ள சில விஷயங்கள் ஏற்படுத்திய சர்ச்சைகள் ஓயவில்லை. மாறாக, முன்பைவிட அதிகமாகின்றன. சர்வதேச அரசியல் நகர்வுகள் பற்றிய அன்டர்ஸ்டான்டிங் இருந்தால், இந்த அறிக்கை இவ்வளவு நாட்களின் பின் இப்போது ஏன் வெளியிடப்படுகின்றது என்பது சுலபமாக புரியும்.

ஸ்ரீலங்காவில் உள்ள பிரதான தமிழ் கட்சியான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் குழு ஒன்று திடீரென அமெரிக்காவரை அழைக்கப்பட்டபோது, அதைத் தொடர்ந்து வேறு சில விவகாரங்களும் கிளப்பி விடப்படும் என்பதை சுலபமாக ஊகிக்கலாம். ராஜதந்திர அரசியலில் அதுதான் வழமை. அப்படி இந்த நேரத்தில் வெளிவர வைக்கப்பட்டதுதான் நார்வே அறிக்கை.

அந்த விதத்தில், அறிக்கை வெளியிடப்பட்ட நேரம், அறிக்கை வெளியிட்டவர்களுக்கு (அல்லது வெளியிட வைத்தவர்களுக்கு) வெற்றிதான்! காரணம், அவர்கள் நினைத்த திசையில்தான் விவகாரம் சுலபமாக செல்கிறது.

நார்வே வெளியுறவு அமைச்சில் இருந்து பெறப்பட்ட தகவல்கள் மற்றும், இந்த விஷயத்தில் டீல் பண்ணிய முக்கியஸ்தர்களின் நேரடி பேட்டிகள் ஆகியவற்றில் இருந்து தயாரிக்கப்பட்டது இந்த Pawns of Peace அறிக்கை. கடந்தவாரம் வெளியாகியிருந்த இதிலுள்ள சில பகுதிகள், ஸ்ரீலங்காவில் யுத்தம் நடைபெற்ற இறுதி நாட்களில் இந்தியா மற்றும் தமிழகத்தில் நடந்த சில விஷயங்கள் பற்றிக் குறிப்பிடுகின்றன.

அறிக்கையிலுள்ள இந்தியா தொடர்பான பகுதிகளே சர்ச்சைக்கு காரணம். அந்தப் பகுதிகள் என்ன சொல்கின்றன என்பதையும், நாம் தெரிந்து கொண்ட விஷயங்களையும் கலந்து தருகிறோம்.

ஸ்ரீலங்காவில் யுத்தம் இறுதிக் கட்டத்துக்கு வந்து விட்ட நேரத்தில், புலிகள் தோற்கலாம் என்ற நிலை கிளிநொச்சி வீழ்ந்த உடனேயே வந்துவிட்டது. உள்விஷயம் அறிந்தவர்களுக்கு அது நன்றாகவே தெரியும். ஆனால், அதை வெளியே சொல்ல தமிழர் தரப்பில் யாரும் தயாராக இல்லை. சொன்னால் துரோகி பட்டம் கிடைக்கும் என்பது மிகமிக நன்றாகவே தெரிந்ததால், ஒதுங்கி வேடிக்கை பார்த்தார்கள்.

ஆனால், வெளிநாடுகள் சொன்னார்கள். சில நாடுகள் யுத்தத்தை ஏற்கனவே நடந்த அழிவுகளோடு நிறுத்திக்கொள்ள சீரியசாகவே சில முயற்சிகளைச் செய்தார்கள். ஸ்ரீலங்கா அரசுக்கும் சில அழுத்தங்கள் கொடுக்கப்பட்டன.

வெளிநாட்டு ராஜதந்திரிகள் பலர் விடுதலைப்புலிகள் தலைமையை நன்றாகவே புரிந்து கொண்டிருந்தார்கள். ‘சொல்லிப் பார்க்கலாம். கேட்டால் சரி, இல்லாவிட்டால் முழுமையான அழிவுவரை போவதற்கு விட்டுவிடலாம்’ என்பதே இந்த விவகாரத்துடன் சம்மந்தப்பட்ட முக்கிய ராஜதந்திரிகளின் மென்டாலிடியாக இருந்தது.

வெளிநாட்டு அழுத்தங்கள் காரணமாக, 2009-ம் ஆண்டு, பிப்ரவரி 1-ம் தேதி, ஸ்ரீலங்கா அரசு இரு நாட்களுக்கான (3-ம் தேதி வரை) யுத்த நிறுத்தம் ஒன்றை அறிவித்தது. இந்த இரு தினங்களும் யுத்தம் நடைபெற்ற இடத்தில் (புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதி) இருந்த பொதுமக்கள், அரசுக் கட்டுப்பாட்டு பகுதிக்குள் செல்லலாம் என்ற அறிவிப்பு வெளியாகியது.

இந்த தேதிதான் பிரேக்கிங் பாயின்ட். இந்த இடத்திலிருந்து போராட்டத்தின் போக்கை திருப்பியிருந்தால், கொல்லப்பட்ட பலர், போராளிகள், பொதுமக்கள், புலிகளின் முக்கியஸ்தர்கள் உட்பட இன்று உயிருடன் இருந்திருப்பார்கள்.

ஆனால், விடுதலைப் புலிகள் இயக்கம், மக்கள் தமது கட்டுப்பாட்டுப் பகுதியில் இருந்து வெளியேறுவதை அனுமதிக்கவில்லை. அன்றைய யுத்த நிலைமையைப் பொறுத்தவரை மக்களை வெளியேற அனுமதிப்பதும், புலிகள் தோற்பதும் ஒன்றுதான். மக்கள் வெளியேறி விட்டால், யுத்தம் 3 மணி நேரத்தில் முடிந்திருக்கும்.

பிப்ரவரி 3-ம் தேதி, உதவி வழங்கும் நாடுகள் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. பப்ளிக் ஸ்டேட்மென்ட் பாணியில் விடப்பட்ட இந்த அறிக்கையில், விடுதலைப்புலிகள் தமது ஆயுதங்களை கீழே வைக்குமாறு கோரப்பட்டிருந்தது. புலிகளால் இனியும் தாக்குப்பிடிக்க முடியாது, இருப்பவர்களின் உயிர்களையாவது காப்பாற்றுங்கள் என்பதே அந்த அறிக்கை கூறிய உட்கருத்து.

ஆனால், புலிகள் இயக்கம் இந்த வேண்டுகோளுக்கு செவிசாய்க்கவில்லை.

இந்தக் கட்டத்தில், வெளிநாடுகள் ஒதுங்கத் தொடங்கின. (“சொல்லிப் பார்க்கலாம். கேட்டால் சரி, இல்லாவிட்டால் முழுமையான அழிவுவரை போவதற்கு விட்டுவிடலாம்”)

எல்லோரும் கைவிடத் தொடங்குகிறார்கள் என்பது புரியத் தொடங்கவே, பிப்ரவரி 24-ம் தேதி, விடுதலைப் புலிகள் இயக்கம் வெளிநாடுகளுக்கு கடிதங்களை அனுப்பத் தொடங்கியது. ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா, ஜப்பான், நார்வே ஆகியவற்றுக்கு அனுப்பப்பட்ட கடிதங்களில், யுத்த நிறுத்தம் ஒன்றை ஏற்பாடு செய்து கொடுங்கள் என்று கோரியிருந்தது புலிகள் இயக்கம்.

ஆனால், உத்தேச யுத்த நிறுத்தம் குறித்து புலிகள், தமது தரப்பிலிருந்து விபரமான உறுதி மொழி எதையும் அந்தக் கடிதங்களில் தரவில்லை. பொதுவாகவே இப்படியான விவகாரங்கள், ‘நாங்கள் பாதிவழி வருகிறோம். நீங்கள் பாதிவழி வாருங்கள்’ என்ற பாணியில் இருந்தால்தான் வெற்றி கிடைக்கும்.

புலிகள் வெளிநாடுகளுக்கு அனுப்பிய கடிதங்களில், வெளிநாடுகள் ஏற்கனவே கோரியிருந்தபடி ஆயுதங்களை கீழே வைக்கும் முடிவோ, மக்களை வெளியே அனுப்பும் முடிவோ இல்லை. அதனால், இந்தக் கடிதங்கள் புலிகளை எந்த விதத்திலும் காப்பாற்றவில்லை.

இந்தக் கடிதங்களின் விபரங்கள் ஸ்ரீலங்கா அரசுக்கு தெரியவந்தபோது, ‘நடைமுறைக்கு ஒத்துவராத யுத்த நிறுத்தத்துக்கான பிரார்த்தனைகள்’ என்றனர். இந்தக் கட்டத்திலும் வெளிநாட்டு அரசுகள் சில தொடர்ந்தும் முயற்சிகள் செய்தன. ஆயுதங்களை கீழே வைக்குமாறு புலிகளுக்கு வேண்டுகோள் விடுத்த வண்ணம் இருந்தன.

இப்படியான நிலையில் இரு நாடுகள் இந்த விவகாரத்தில் தலையிட முடிவு செய்தன. நார்வேயும், அமெரிக்காவும் இந்த விவகாரம் குறித்து தமக்கிடையே பேசத் தொடங்கியன.

‘பொதுமக்கள் கொல்லப்படுவதைத் தடுப்பதற்கு, ஒரே வழிதான் இருக்கின்றது, புலிகள் ஏதோ ஒரு விதத்தில் சரணடைய வேண்டும்’ என்பதே இந்தப் பேச்சின் அடிப்படை விஷயமாக இருந்தது.

அமெரிக்க – நார்வே பேச்சுக்கள், இந்த யுத்தத்தை சில வழிமுறைகளை கையாள்வதன் மூலம் முடிவுக்கு கொண்டுவரலாம் என்ற ரீதியில் இருந்தன.

4 வழிமுறைகள் பரிசீலனையில் இருந்தன.

1) விடுதலைப் புலிகள் அமைப்பில் உச்ச தலைமை (பிரபாகரன், பொட்டம்மன்) தவிர்ந்த மற்றைய போராளிகள் சரணடைந்தால் பொது மன்னிப்பு உத்தரவாதத்தை ஸ்ரீலங்காவிடம் இருந்து பெறுவது.

2) விடுதலைப் புலிகள் தமது ஆயுதங்களை ஸ்ரீலங்கா ராணுவத்திடம் ஒப்படைக்காமல் ஐ.நா.விடம் ஒப்படைப்பது.

3) புலிகளின் போராளிகள் ஸ்ரீலங்கா ராணுவத்திடம் சரணடையாமல், ஐ.நா. அல்லது, ரெட்-கிராஸிடம் சரணடைவது.

4) அமெரிக்கா, நார்வே உட்பட உதவி நாடுகள் பொதுமக்களின் நலன்களைக் கவனிப்பது, மற்றும் ஸ்ரீலங்காவில் இனப்பிரச்சினைக்கு தீர்வு ஒன்றைக் காண்பது.

இந்த வழிமுறைகளை நடைமுறைப் படுத்துவதற்காக சரணடைதல் நடைபெறும் நேரத்தில் சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகள் அந்த இடத்தில் இருப்பதற்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டன. அந்த முன்னேற்பாடுகளில், சரணடையும் நேரத்தில் அந்த இடத்தில் அனைத்தையும் கவனிக்கும் பார்வையாளர்களாக இரு நாடுகள் இருப்பது என முடிவு செய்யப்பட்டது. அந்த இரு நாடுகளில் ஒன்றாக அமெரிக்கா இருப்பது எனவும், 2-வது நாடாக இந்தியாவை அழைத்துக் கொள்வது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

இந்த ஏற்பாடுகள் குறித்து நோர்வே, ஸ்ரீலங்கா அரசுக்கும் அறிவித்ததில், சாதகமான சிக்னல்கள் கிடைத்தன. இது நடைபெற்ற காலப்பகுதியில் (யுத்தம் முடிவதற்கு இரண்டரை மாதங்கள் இருந்த நிலை) புலிகள் சரணடைவதை ஏற்றுக் கொள்ளும் நிலையில் ஸ்ரீலங்கா அரசும் இருப்பதாகவே நோர்வேக்கு தெரியவந்தது. ஆனால், ஐ.நா. இதில் காட்சிக்குள் வருவதை ஸ்ரீலங்கா அரசு விரும்பவில்லை என்றும் தெரிந்தது.
இந்த அப்பாவி உயிர்கள் கொல்லப்பட்டதற்கு யார் காரணம்? கொலைக் களத்துக்கு அனுப்பிய பிரபாகரனா அல்லது கொன்ற இராணுவத்தினரா யார் காரணம்?

விடுதலைப்புலிகள் இந்த ஏற்பாட்டுக்கு சம்மதிப்பார்கள் என நோர்வே நம்பியது. அதற்கு என்ன காரணம்? சிறிய நிலப்பரப்பில் ஸ்ரீலங்கா ராணுவம் முற்றுகையிட்டிருக்க, தோல்வியடையும் நிலையில் புலிகள் இருந்ததால், இப்படியொரு ஏற்பாட்டை அவர்கள் ஏற்றுக் கொள்வார்கள் என நோர்வே நம்பியது.

இந்த திட்டம் தொடர்பாக வெவ்வேறு தரப்புகளுடன் பேசியதன்மூலம், புலிகளின் முக்கியஸ்தர்களை என்ன செய்வது என்ற விஷயத்தில் ஒரு யோசனை இருந்தது. யுத்தம் நடைபெற்ற வன்னியில் இருந்து கொழும்புக்கு புலிகளின் முக்கியஸ்தர்களை அழைத்துச் செல்வது எனவும், கொழும்பில் அவர்களது நலன்களுக்கு சர்வதேச உத்தரவாதம் கொடுப்பது என்பதுமே அந்த முடிவு.

இதை மற்றொரு விதத்தில் சொன்னால், புலிகளின் முக்கியஸ்தர்களை வெளிநாட்டு பாதுகாப்பு உத்தரவாதத்துடன் கொழும்பில் வைத்திருப்பது இந்திய அமைதிப்படை ஸ்ரீலங்காவில் இருந்து வெளியேறியபோது, அன்றைய வடக்கு-கிழக்கு முதல்வர் வரதராஜ பெருமாளுக்கு இந்தியா கொடுத்த உத்தரவாதம் போன்றது இது.

இந்தியா வழங்கிய பாதுகாப்புடன் வரதராஜபெருமாள் இந்தியாவில் தங்க வைக்கப்பட்டார். இன்றும் இந்தியாவில் வசிக்கிறார். அதேபோல புலிகளின் முக்கியஸ்தர்களை கொழும்பில் தங்க வைப்பதற்கான திட்டம் இது.

ஒரு விஷயத்தைக் கவனியுங்கள். இது நடைபெற்ற காலப்பகுதியில் (பிப்ரவரி கடைசி வாரம்) ராணுவத்தினால் முற்றுகையிடப்பட்ட பகுதிக்குள் புலிகளின் முக்கியஸ்தர்கள் பலர் (தளபதிகள், பல்வேறு பிரிவுகளின் தலைவர்கள்) உயிருடன் இருந்தார்கள். அவர்களை கொழும்பில் வெளிநாட்டு பாதுகாப்பு உத்தரவாதத்துடன் வைத்திருப்பதற்கான திட்டம் இது.

அமெரிக்க-நார்வே திட்டம் இந்த அளவுக்கு வந்துவிட்ட நிலைமையில்தான் புலிகளின் சார்பில் கே.பி. என்று அறியப்பட்ட குமரன் பத்மநாதன் அல்லது செல்வராசா பத்மநாதனுடன் இந்த ஏற்பாடு பற்றி மேலும் விவாதிக்க விரும்பியது நார்வே. அப்போது மலேசியாவில் தங்கியிருந்த கே.பி.-யுடன் பிப்ரவரி 26-ம் தேதி நார்வே அதிகாரிகள் சந்தித்து இதுபற்றிப் பேசினர்.

புலிகளின் சார்பில் பேசுவதற்காக நார்வே ஏன் கே.பி.-யை அணுக வேண்டும்? அமெரிக்க-நார்வே திட்டம் கே.பி.-யை சந்தித்தபின் எப்படி மாறியது? கே.பி. இதை ஹான்டில் பண்ணியது எப்படி? அமெரிக்கா என்ன உறுதிமொழி கொடுத்தது? புலிகளின் முக்கியஸ்தர்களை அழைத்துச் செல்ல திரிகோணமலை துறைமுகத்துக்கு கப்பல் வருவதாக இருந்த கதை உண்மையா? அதன் பின்னணி என்ன?

தொடரும்…

Norway's Pawns of Peace



Source
nadunadapu

Keerthivasan

About Keerthivasan -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :