Saturday, July 11, 2015

Keerthivasan

சைவ சித்தாந்தம்: நான் புரிந்து கொண்டது. – 5

சைவ சித்தாந்தம்: நான் புரிந்து கொண்டது. – 5


திருச்சிற்றம்பலம்


மாயாமலம்

தனு கரண புவன போகங்களுக்கும் (தனு = உடம்பு; கரணம் = மனம் முதலிய கருவி; புவனம் = உடம்புக்கு ஆதாரமாகிய உலகம். போகம் = அநுபவிக்கப்படும் பொருள்) மாயை எனும் பொருளே வித்தாகும். அது ஓர் அறிவற்ற சடப்பொருள். அது ஒன்றேயாயினும் எங்கும் வியாபித்திருக்கும் ஒரு நுண்பொருள்(சூக்குமம்).

இறைவனின் உடைமைப்பொருள் அவன் விருப்பப்படி வெளிப்படும். இதனை மாயாமலம் என்பர். இதுவும் அழிவற்ற ஒரு நித்தியபொருளாகும். உயிரை ஆதிமுதல் பற்றி நின்ற ஆணவம் நித்தியப் பொருளாதல் இயல்பு. ஆனால் இடையில் வந்து பற்றிய மாயை எவ்வாறு நித்தியபொருளாகும்.
உயிர்களைச் சூழ்ந்த ஆணவமாகிய இருளினை நீக்கும் ஒரு விளக்கே மாயாமலம்.


கன்ம மலம்:

ஒரு மரம் முளைத்து வளர வித்து,மண்,நீர்,சூரிய ஒளி ஆகிய நான்கும் வேண்டும். அவற்றுள் வித்தின்றி மற்ற மூன்று மட்டும் இருந்தால் போதாது. வித்து ஒன்றே மரத்திற்கு மூல காரணம். அதுபோன்றே கன்மம் என்ற முன்வினையே உயிர்கள் உடம்பைப் பெறவும் வாழ்நாளில் இன்பதுன்பங்களை நுகரவும் மூலகாரணமாகும். நல்வினை புண்ணியத்தையும் தீவினை பாவத்தையும் கொடுக்கும். அவற்றைச் செய்த உயிர்களே அப்புண்ணிய பாவங்களை அனுபவிக்க வேண்டியது நியதி. அதனால் சடப் பொருள்களாகிய அப்புண்ணிய பாவங்களை அவற்றைச் செய்த அந்தந்த உயிர்களுக்குத் தவறாது கூட்டி வைப்பவன் பதியே ஆவான்.


பாவ புண்ணியம்

பாவ புண்ணியங்களின் தோற்றம் உள்ளதே தோன்றும் என்ற சர்காரியவாதத்தின்படி வினை தோன்றுவதற்கு முன் அது ஓர் மூலப்பொருளாக இருக்கவேண்டும். அதுவே மூல வினையாகும்.
இது எப்பொழுதும் ஒரே நிலையில் இருக்கும். இதிலிருந்து தோன்றும் வினைகளே மனத்தாலும் உடலாலும் வாயாலும் பற்பல செயல்களைச் செய்யும். அவற்றின் பயனாகத் தோன்றுவதே பாவ புண்ணியங்கள்.
புண்ணியங்கள் பதிபுண்ணியம்,பசுபுண்ணியம் என இருவகைப்படும். பதி புண்ணியம் சிவபுண்ணியம் எனவும்படும். பசு புண்ணியம் உயிர்புண்ணியம் எனவும் படும். பதி புண்ணியம், சிவபெருமானை நோக்கிச் செய்யப்படும் நற்செயல்கள் ஆகும். சிவபெருமானைத் தவிர்த்து வேறு எவரையும் நோக்கிச் செய்யும் நற்செயல்கள் அனைத்தும் பசுபுண்ணியம் ஆகும். பதி புண்ணியங்கள் ஒருபோதும் அழிவில்லாமல் என்றும் நின்று முத்தியைக் கொடுக்கும். பசு புண்ணியங்களுக்கும் பயன் உண்டு; ஆனால், அப்பயன் அனுபவித்து முடிந்ததும் அழிந்துவிடும். பதி புண்ணியப்பயன் உயிர்களுக்கு நிலையான இன்பத்தைத் தருவதே ஆகும். சிவ புண்ணியங்களைச் செய்தவர் சிவ இன்பத்தையும், சீவ ( உயிர் ) புண்ணியங்களைச் செய்தவர் சுவர்க்க இன்பத்தையும் அனுபவிப்பர்.
“பசித்து உண்டு, பின்னும் புசிப்பானை ஒக்கும் இசைத்து வருவினையில் இன்பம்."
- சிவஞானபோதம் எட்டாம் சூத்திரம் முதல் அதிகரணத்தில் உள்ள வெண்பாவில் மெய்கண்டார் தெளிவுற அருளிச்செய்துள்ளார்.

இதன் பொருள் பசியோடு இருக்கும் ஒருவனுக்கு உணவு கொடுப்பது பசு புண்ணியம்; அவ்வுணவின் பயனாக, அவனுக்குள்ள பசி ஆறுகிறது. அவனுக்கு மீண்டும் பசி வரும்போது, முன்பு உண்ட உணவின் பயன் அனுபவிக்கப்பட்டுவிட்டதால், அவனுக்குச் செய்த பசு புண்ணியமும் அத்தோடு அழிந்துவிடுகிறது.


சிவமே முதல் எனக் கருதிச் செய்யப்படும் அனைத்தும் சிவ புண்ணியமாகும். சைவ சமயக் குரவர்களும் நாயன்மார்களும் காட்டிய, செய்த, நெறிகளே சிவ புண்ணியம். சரியை, கிரியை போன்றவைகளே சிவ புண்ணியங்களாகும். இப்புண்ணியங்களில் ஈடுபடுவதற்கு முதற்கண் நற்குருவை நாடவேண்டும். சிவாலயத்துக்கும் சிவனடியார்களுக்கும் தொண்டு செய்தலை சைவம் சிவ தொண்டென அழைக்கிறது.

சிவ பாவத்திற்கு ஈடான பாவம் இல்லை. இதைச் செய்தவர்களுக்கு பரிகாரம் என்பதே கிடையாது.

திருச்சிற்றம்பலம்.
பதிவை பற்றிய உங்கள் கருத்துக்களுக்கு: Janarthanam Karthik

Keerthivasan

About Keerthivasan -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :