Tuesday, January 2, 2018

Keerthivasan

மகாபாரதம் பேசுகிறது - என் பார்வை - 02


அறிமுகம்



மஹாபாரதம் போன்ற புராணங்களில் சற்றும் நம்பிக்கையே இல்லாதவர்களையும் நம்ப வைத்தே தீர்வது என்ற வீண் முயற்சி அல்ல இந்த அறிமுகம். நம்பிக்கை இருந்தாலும் கூட நம்பிக்கையற்றவர்களின் வாதங்களினால் அவ்வப்போது குழப்பம் அடைவோர்கள், சற்று மனம் தெளிந்து, நடந்திருக்க வாய்ப்பு உண்டு என்ற எண்ணத்தை பெற, இந்த அறிமுகம் உதவும் என்று கருதுகிறேன்.

18 பிரிவுகள்;
அவற்றில் 98 பகுதிகள்;
அவற்றில் 2,382 அத்தியாங்கள்;
அவற்றில் 96,635 செய்யுட்கள் – ஸ்லோகங்கள்.

இதுதான் நமது வசமிருக்கும் வியாஸ பாரதம். வியாசர் அருளிய 60 லட்சம் சுலோகங்களில், பூவுலகில் இவ்வளவுதான் இருந்து வருகிறது என்று கூறப்படுகிறது. இப்போது இருப்பதையே புஸ்தகமாக, முழுமையாக வெளியிட்டால், கிட்டதட்ட பத்தாயிரம்  பக்கங்கள் வரலாம்.

மகாபாரதத்தை முழுவதுமாகக் கண்ட வியாஸர் அதை எழுதி வைக்க விரும்பினார். பிரம்மா காட்சியளித்தார், “வியாஸ மகரிஷியே! அறம், பொருள், இன்பம், வீடு – என்ற நான்கு விஷயங்கள் பற்றியும் விரிவாகச் சொல்லும் பாரதம் என்கிற கதிரவனால், மனிதர்கள் சிக்கியிருக்கும் இருட்டாகிய அறியாமையைப் போக்கி விட்டீர். இந்தப் புராணத்தின் மூலமாக மனித குளத்தின் அறிவு மலர்ந்து விரிவடையும்” என்று கூறி, பாரதத்தை எழுத்தில் வடிக்க, விநாயகரை வேண்டிக் கொள்ளச் சொன்னார். அதன் பிறகு வியாசர் அவ்வாறே செய்ய, அவரது வேண்டுகோளை விநாயகர் ஏற்றார். வியாசர் சொல்லச் சொல்ல விநாயகர் எழுதிக் கொண்டே வந்தார். இப்படி மஹாபாரதம் எழுத்து வடிவில் வந்தது.

இந்த இடத்தில் ஒரு விஷயத்தை சொல்ல விரும்புகிறேன் வியாசர்தான் மகாபாரதத்தை இயற்றினார் என்பதற்கு என்ன ஆதாரம்? அவர் சொன்னாராம் விநாயகர் எழுதினாராம்! வினாயகரே உண்டோ? என்றெல்லாம் கேள்விகளை அடுக்கிக் கொண்டே போகலாம். இதற்கெல்லாம் சரி, மகாபாரதம் போன்ற புராணங்களில் உள்ள பல விஷயங்களுக்கும் சரி ஆதாரங்களை யாரும் காட்டப்போவதில்லை. ஆதாரம் இல்லை. ‘அப்படியே தான் நடந்தது’ என்று நம்பிக்கை உடையவர்கள் ஏற்கலாம்; அப்படி நடக்கவே இல்லை’ என்று நம்பிக்கையில்லாதவர்கள் நிராகரிக்கலாம். அப்படியே நடந்தது என்பதற்கு எப்படி ஆதாரம் காட்ட முடியாதோ, அதே போல் அப்படி நடக்கவே இல்லை என்பதற்கும் ஆதாரம் காட்ட முடியாது.

இந்த இரண்டு நிலைகளுக்கும் நடுவில் ஒரு நிலை இருக்கிறது. அதற்கு அடிப்படையாவது, அனுமானம். அப்படியேதான் நடந்தது என்று சொல்வது – நம்பிக்கை. அப்படி நடக்கவே இல்லை என்று சொல்வது – அவ நம்பிக்கை. பெருமளவு அப்படி நடந்திருக்க வாய்ப்புகள் உண்டா, கிடையாதா என்பதை யோசித்து ஒரு முடிவுக்கு வருவது – அனுமானம். மகாபாரதத்தில் சொல்லப்பட்டுள்ள விஷயங்கள், அதில் விவரிக்கப்பட்டுள்ள நிகழ்ச்சிகள், அதில் நடமாடுகிற மனிதர்கள், அவர்களை பற்றிச் சொல்லப்படுகிற குணாதிசயங்கள், அதிலுள்ள நீதிகள், விவாதங்கள் எல்லாவற்றையும் பார்க்க வேண்டும். சரித்திரம் என்பது எப்படி எழுதப்படுகிறது, அதை நாம் எப்படி ஏற்கிறோம் என்பதையும் கொஞ்சம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இலக்கியகர்த்தாக்கள், தாங்கள் எடுத்துக் கொண்ட விஷயத்தை எப்படி அணுகுகிறார்கள் என்பதையும் சற்று யோசிக்க வேண்டும். இப்படிப் பல கோணங்களிலிருந்து சிந்தித்துப் பார்த்தால் மஹாபாரத நிகழ்ச்சிகள் பெரும்பாலும் நடந்திருக்கக் கூடியவையே என்ற அபிப்பிராயம் நமக்கு ஏற்படுகிறது.

எனது இந்த அபிப்பிராயத்தை விளக்குவதற்காக, ஒரு கற்பனை உரையாடலை இங்கே தருகிறேன். அவநம்பிக்கையாளர்க்கும், அனுமானிப்பவருக்கும் இடையில் ஒரு விவாதம் நடக்கிறது என்று கற்பனை செய்கிறேன்.

அவநம்பிக்கையாளர்: எப்போதோ, யாரோ எழுதி வைத்தார்கள் என்று சொல்லப்படுகிற இவர்ரைஎல்லாம் நம்புவது எப்படி?

அனுமானிப்பவர்: பழங்கால சரித்திரம் என்று இன்றைய சரித்திரப் பாடங்களிலும், புஸ்தகங்களிலும் காணப்படுவதை நாம எப்படி நம்புகிறோம்?

அவநம்பிக்கையாளர்: இன்றைய சரித்திரப் புஸ்தகங்களில் காணப்படுவது ஆராய்ச்சியாளர்கள் கஷ்டப்பட்டு சேகரித்த உண்மையே. அவை ஆராய்ச்சியின் பலன் அதனால் நம்புகிறோம்.

அனுமானிப்பவர்: ஒரு சரித்திர ஆசிரியர் என்ன ஆராய்ச்சிகளை செய்தார் என்பது நமக்கு தெரியாது. ஆதாரம் என்று அவர் கருதியவை உண்மையிலேயே ஏற்கக் கூடிய ஆதாரங்கள்தானா என்பதும் நமக்குத் தெரியாது. சரி, ஒரு பேச்சுக்காக நாம் இப்போது படிக்கும் சரித்திரம் எல்லாம் உண்மையே என்று வைத்துக் கொள்வோம். அப்படியானால் அவற்றுக்குள் ஏன் முரண்பாடுகள்?

ஆரியர் என்று ஒரு இனம் இந்தியாவில் நுழைந்தது என்று ஒரு சில சரித்திர ஆசிரியர்கள் சொல்ல அப்படி நடக்கவில்லை என்று வேறு சிலர் அடித்துச் கொள்கிறார்கள். இருதரப்பாருமே, புத்த பொருள் ஆராச்சியில் கிடைத்த விஷயங்களைத் தாங்கள் வாதத்திற்கு ஆதாரமாகக் காட்டுகிறார்கள். அவரவர்கள் மனநிலைக்கு ஏற்றார் போல நாமும் இதில் ஒவ்வொரு தரப்பு வாதத்தை ஏற்கிறோம். இதில் எது உண்மை என்று உறுதியிட்டு சொல்லக் கூடிய அளவுக்கு நமக்கு என்ன ஆராய்ச்சித் தகுதி இருக்கிறது? நம்புகிறோம் அவ்வளவுதான்.

மூலம்: சோவின் மகாபாரதம் பேசுகிறது.

Keerthivasan

About Keerthivasan -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :