Wednesday, April 10, 2019

Keerthivasan

கல்கி தலையங்கம் - திரு மாலன் பதில்

வெறுமனே திரு.மோடி அவர்களின் மீது வெறுப்பை மட்டுமே முன் வைத்து தலையங்கம் எழுதியுள்ள கல்கி பத்திரிக்கைக்கு பத்திரிக்கையாளர் திரு.மாலன் மாலன் நாராயணன் அவர்களின் பதில்.


பெருமதிப்பிற்குரிய கல்கி ஆசிரியர் அவர்களுக்கு,

வணக்கம்

இந்த வார (2019 மார்ச் 23) கல்கித் தலையங்கம் “ மகாராஜனே சாட்சி! தலையங்கம் கண்டேன் திடுக்கிட்டேன்.

அந்த அதிர்சியின் காரணமாகவே இதனை எழுதத் தலைப்பட்டேன்.

“அவரது (மோதியின்) பல நடவடிக்கைகள் நாட்டின் எதிர்காலம் குறித்த அச்சத்தை ஏற்படுத்துகின்றன….” என்கிறது கல்கி தலையங்கம்.
1.மோதியின் நடவடிக்கைகள் குறித்து கறுப்புப் பணம் வைத்திருப்பவர்கள் அஞ்சுகிறார்கள்.ஏனெனில் அவரது ஆட்சிதான் கறுப்புப் பணச் சட்டத்தை (Black Money (Undisclosed Foreign Income and Assets) and Imposition of Tax Act, 2015) இயற்றியது.

2.அவரைக் குறித்து பினாமிச் சொத்துக்கள் வைத்திருப்பவர்கள் அஞ்சுகிறார்கள் ஏனெனில் அவரது ஆட்சிதான் Benami Transactions (Prohibition) Amendment act 2016 இயற்றியது.

3.அவரைக் கண்டு கடன் வாங்கிவிட்டு அயல்நாட்டுக்கு ஓடிப் போய் ஒளிந்து கொள்கிறவர்கள் அஞ்சுகிறார்கள் ஏனெனில் அவரது அரசுதான் ( The Fugitive economic offenders act 2018) இயற்றியது.

சுருக்கமாகச் சொன்னால் ஊழல் செய்தவர்கள், பொருளாதாரக் குற்றங்கள் செய்தவர்கள் அச்சத்தினால் குடும்பத்தோடு போய் நீதிமன்றங்களில் முன் ஜாமீன் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் நேர்மைக்குத் தாயென்று சொல்லுமளவிற்கு நேர்மையோடும், கண்ணியத்தோடும்  பத்திரிகை உலகில் கோலோச்சி வரும் எங்கள் கல்கி ஏன் மோதியைக் கண்டு அஞ்ச வேண்டும்?

அரசு விழாக்களில் கட்சி அரசியல் பேசி  எதிர்க்கட்சிகளைத் தாக்குகிறார். என்று ஒரு குற்றச்சாட்டு. ஆனால் அவர் திருப்பூருக்கு வந்த போதும் சரி, வண்டலூருக்கு அருகே கிளாம்பாக்கம் வந்த போதும் சரி, இரு மேடைகள் அமைக்கப்பட்டன. அரசு நிகழ்ச்சிகளுக்கு ஒன்று. கட்சி நிகழ்ச்சிக்கு ஒன்று  (காண்க தினமலர் செய்தி1 :

” திருப்பூரில் இ.எஸ்.ஐ., மருத்துவமனை ஆகிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா ஆகியவற்றில் பங்கேற்க, பிரதமர் மோடி, நாளை மதியம் திருப்பூர் வருகிறார்.பெருமாநல்லுார் அருகில், விழா மேடையில் இருந்து, வீடியோ கான்பரன்சிங் மூலம் துவக்கி வைக்கிறார். கவர்னர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம், மத்திய அமைச்சர்கள் பங்கேற்கின்றனர்.நிகழ்ச்சிக்கு பின், மற்றொரு மேடையில் நடக்கும் பா.ஜ., பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார். –தினமலர் பிப்ரவரி 09 2019. செய்தி நறுக்கை இணைத்துள்ளேன்)

இது கிளாம்பாக்கக் கூட்டம் பற்றி தமிழ் இந்து வெளியிட்டுள்ள செய்தி2: “தேர்தல் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்கு முன்னதாக, மத்திய அரசு திட்ட தொடக்க விழாவிலும் பிரதமர் மோடி பங்கேற்கிறார். இதற்காக, கிளாம்பாக்கத்தில் தேர்வு செய்யப்பட்ட இடத்தில், அருகருகே இரு மேடைகள் அமைக்கப்பட்டுள்ளன.” இந்து தமிழ் திசை மார்ச் 23. செய்தி நறுக்கை இணைத்துள்ளேன்)

இந்தச் செய்தி நறுக்குகளே உங்கள் குற்றச்சாட்டு ஆதாரமற்றவை என்பதை மறுக்கும்

“இந்து மதம்தான் தேசபக்தி என்ற மாயத் தோற்றம்” ஏற்பட என்ன காரணம்?
இந்திய நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்தியவர்கள் யார்? மும்பையில் தாக்குதல் நடத்தி 174 அப்பாவி உயிர்களை பலி வாங்கியவர்கள் யார்? கோவையில் குண்டு வெடிப்பை நிகழ்த்தியவர்கள் யார்? இந்தத் தாக்குதலுக்குப் பின்னுள்ள நோக்கம் என்ன? தேசத்தின் மீது பற்று இருப்பவர்கள் நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்திய அப்சல்குருவை ஆதரித்துப் பேசுவார்களா? ஆண்டர்சன், அமெரிக்க FBIஐயிடம் மும்பைத் தாக்குதல் ISIயின் ஆணையின்படி நடத்தப்பட்டது என்று ஒப்புதல் வாக்குமூலம் அளித்து அதற்கான தண்டனையையும் அனுபவித்து வரும் போது, பாகிஸ்தானைக் குற்றம் சொல்லக் கூடாது என்று பேசுகிறவர்கள் தேசபக்தர்களா? பாலகோட் தாக்குதலில் சேதம் ஏற்பட்டதை முகமது அசாரின் சகோதரரே ஏற்றுக் கொண்ட பின்பும் நாட்டின் ராணுவத்தின் திறமையையும், உறுதிப்பாட்டையும் சந்தேகிப்பவர்கள் தேசபக்தர்களாக இருக்க முடியுமா?

பாடத்திட்டத்தில் 'ஒரே மதம் ஒரே மொழி' என்பது போல திணிகப்பட்டிருக்கிறதா இல்லையா என்பதை எந்த CBSE மாணவர்களிடமாவது புத்தகத்தை வாங்கிப் பார்த்து உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டுகிறேன். இது காங்கிரஸ் ஆட்சியில் எப்படிக்  கையாளப்பட்டது என்பதை அறிந்து கொள்ள ஏதுவாக அப்போது அந்தக் குழுவில் உறுப்பினராக இருந்த கன்னட எழுத்தாளர் பைரப்பா எழுதிய கட்டுரையை3 இத்துடன் இணைத்துள்ளேன்.

இது தொடர்பாக இன்னொரு சான்றும் தருகிறேன். காங்கிரஸ் ஆட்சியில் சிபிஎஸ்சி பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட 9ஆம் வகுப்புப் பாடப்புத்தகத்தில் நாடார்களை இழிவுபடுத்தும் விதமாக  எழுதப்பட்ட பகுதிகள் இருந்தன. அதை நீக்கக் கோரி ஜெயலலிதா கடிதம் எழுதினார். கருணாநிதி வைகோ போன்றவர்கள் அறிக்கை விட்டனர். ஆனால் அவை நீக்கப்படவில்லை. ஆனால் அண்மையில் அவை மோதி ஆட்சியில் நீக்கப்பட்டுள்ளன.

மாநில உரிமைகள் படிப்படியாக பறிக்கப்படுகின்றன என்ற கவலையில் உண்மையிருந்தால் அது நியாயமான கவலை. அப்படிக் கவலைப்படுகிறவர்கள், மாநில அரசுப் பட்டியலில் இருந்த கல்வி பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்டது எப்போது,  ஜிஎஸ்டி கவுன்சில் மாநிலங்களுக்கு பிரதிநிதித்துவம் இருக்கும் வகையிலும் அமைக்கப்பட்டிருப்பதை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.

ரூ 500, ரூ 1000 நோட்டுக்கள் செல்லாததாக அறிவிக்கப்பட்ட அறிவிப்பு ரகசியமாக வைக்கப்பட்டிருந்ததுதான். அதற்குக் காரணம் அந்த நடவடிக்கையை பகிரங்கப்படுத்திவிட்டு மேற்கொள்ள முடியாது என்பதும். வங்கி அதிகாரிகளுக்கும் கறுப்புப் பணம் வைத்திருக்கும் பணக்காரர்களுக்கும் இடையே உண்டான உறவு அறியப்பட்ட ஒன்றே என்பதும்தான். இது போன்ற அதிமுக்கியமான நடவடிக்கையை மேற்கொள்ளும் போது அதை ரகசியமாகச் செய்வது இது முதன் முறை அல்ல. அமைச்சரவை ஒப்புதல் பெற்றா இந்திரா அவசர நிலையை அறிவித்தார் இந்திரா?

வேலை இழப்பு என்பதும் தவறான பிரச்சாரம். இப்போதுள்ள சட்டங்களின்படி, மூன்று மாதங்களுக்கு ஒரு முறை புதிதாக வேலைக்குச் சேர்ந்தவர்களின் எண்ணிக்கையை பிராவிடண்ட் பண்ட் அலுவலகத்திற்குத் தெரிவிக்க வேண்டும். அதே போல ஜிஎஸ்டி ரிடர்னிலும் ஒவ்வொரு மாதமும் எத்தனை நிரந்திர ஊழியர்கள், எத்தனை ஒப்பந்தப் பணியாளர்கள் உள்ளார்கள் என்ற தகவல் அளிக்கப்பட வேண்டும். இந்தத் தகவல்களின்படி கணக்கிடப்பட்ட விவரம் ஒன்றரைக் கோடிப் பேர் புதிதாக வேலை பெற்றுள்ளார்கள் எனத் தெரிவிக்கிறது. எந்தக் கட்சியையும் சேராத ஆதி கோத்ரஜ்ஜும் வேலை இழப்பு என்பது எதிர்க்கட்சிகளின் அரசியல் நோக்கம் கொண்ட பிரசாரம் என்கிறார்.

பொருளாதார வளர்ச்சியைப் பற்றி விரிவாக எழுத இடம் இல்லை. ஆதி கோத்ரஜ் நம்முடைய வாங்கும் சக்தி பற்றித் தெரிவித்துள்ள கருத்துக்களும், உலக வங்கித் தலைவர் கூறியுள்ளவையும் அதைப் பற்றிப் பேசும்.

சாக்ஷி மகாராஜ் நீண்டகாலமாக எம்.பி.யாக இருந்து வருகிறார் என்ற போதும் பாஜகவின் அதிகாரப் பூர்வ செய்தித் தொடர்பாளரோ, தலைமைப் பொறுப்பில் உள்ளவரோ அல்ல. அவர் இது போன்ற சர்ச்சைக்குரிய கருத்துக்களை பல முறை வெளியிட்டு வந்திருக்கிறார். கர்நாடகத்தில் ஒரு காங்கிரஸ் தலைவர் மோதியைக் கொல்ல வேண்டும் என்று பேசியிருக்கிறார். அது காங்கிரசின் கருத்தாகிவிடுமா?

எமெர்ஜென்சிக்குப் பிறகு ஜனநாயகத்தைப் பாதுகாக்க அரசமைப்புச் சட்டத்தில் பல திருத்தங்கள் செய்யப்பட்டுவிட்டன. எனவே கவலை வேண்டாம். இந்தியாவில் சர்வாதிகாரம் ஏற்படாது. நாம் பாகிஸ்தான் இல்லை. இந்தியா!

என்றாலும் நாடு முன்னேற ஒரு வலுவான தலைமை வேண்டும். நீங்கள் சொல்வதை ஏற்று மோதிக்கு எதிராக வாக்களிக்க நான் தயார். ஆனால் அவருக்கு மாற்று யார் என்று சுட்டிக் காட்டுங்கள். காங்கிரசே பிரதமராக அறிவிக்கத் தயங்குகிற, ஒரு மாநிலத்தில் அமைச்சராகக் கூட இருந்திராத அனுபவமற்ற ராகுல் காந்தியா? அல்லது நாற்பது தொகுதிகளில் மாத்திரமே போட்டியிடுகிற (அதில் எத்தனை ஜெயிப்பார்களோ?) மாயாவதி, மம்தாவா? சொல்லுங்கள், யார் மோதிக்கு மாற்று?

காங்கிரசிலிருந்து வெளியேறிய பின் அதைக் கடைசி மூச்சுவரை எதிர்த்தவர் ராஜாஜி. அவருக்கு அந்தக் கட்சியின் மீது தனிப்பட்ட காழ்ப்பு ஏதும் இல்லை. அந்தக் கட்சியின் கொள்கைகள், செயல்பாடுகள் ஏற்கத்தக்கனவாக இல்லை என்பதால் அவர் அதை எதிர்த்தார். நாட்டில் ஊழல் குறைய வேண்டும் என்பது அவரது வேட்கைகளில் ஒன்றாக இருந்தது. வாரிசு அரசியல் ஜனநாயகத்திற்கு ஆரோக்கியமானதல்ல என்பது அவர் நம்பிக்கை அவர் எதிர்த்த காங்கிரஸ் இப்போது மேம்பட்டுவிட்டதா? இல்லை மேலும் மோசமாக ஆகியிருக்கிறதா? இந்தக் கேள்வியை கல்கி இதழ் ஆராய்ந்து அதற்கேற்ப முடிவெடுக்கட்டும்.

கல்கியின் தொடக்க கால வாசகங்கள் நினைவுக்கு வருகின்றன. கல்கியின் இலட்சியம் தேசநலன், தேசநலன், தேச நலன் என்று மும்முறை அறுதியிட்டுச் சொன்னார் பேராசிரியர் கல்கி. அது என்றும் தொடர வேண்டும் என விரும்பும் நெடுநாளைய வாசகன் நான்.

கடிதம் நீண்டுவிட்டது. மன்னிக்க. ஆனால் விரிவாக எழுதுவது தவிர எனக்கு வேறு வழி தெரியவில்லை. இது உங்களுக்குச் சிந்திக்க சிறு பொறியேனும் தருமானால் மகிழ்வேன்

பேரன்புடனும், பெரும் மதிப்புடனும்

வாசகன்

மாலன்

கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளனவற்றிற்கான இணைப்புக்கள்:

1.https://www.dinamalar.com/news_detail.asp?id=2209631&Print=1

2.https://tamil.thehindu.com/tamilnadu/article26433712.ece

3.https://www.prekshaa.in/dr-s-l-bhyrappa-distorting-indian-history

4.https://www.dailythanthi.com/News/State/2016/12/22010613/CBSE-9th-grade-Social-Science-at-the-Nadar-community.vpf

5.https://www.financialexpress.com/economy/modi-vindicated-as-iim-study-debunks-jobless-growth-theory-says-15-million-added-to-labour-force-yearly/1018590/?fbclid=IwAR0bEni_sMwXrlwyu1FyZgHesom7SSibrxPMzsc1WEAAe0g8AI8qdmZrFmk

6.https://www.livemint.com/news/india/shortage-of-jobs-it-s-a-wrong-perception-created-by-oppn-adi-godrej-1551033466994.html

7.https://indianexpress.com/article/india/world-bank-president-congratulates-pm-modi-as-india-rises-in-ease-of-doing-business-ranking-5431887

Keerthivasan

About Keerthivasan -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :