Thursday, October 17, 2013

Keerthivasan

ஆர்.எஸ்.எஸ் மீதான தடை நீக்கம் நிபந்தனையற்றது

ஆர்.எஸ்.எஸ் மீதான தடை நீக்கம் நிபந்தனையற்றது

கட்டுரையாளர் --  திரு.எஸ்.குருமூர்த்தி, அரசியல் மற்றும் பொருளாதாரத் துறை நிபுணர்

rss

தி ஹிந்து பத்திரிக்கையில் the forgotten promise of 1949 என்ற தலைப்பிலான கட்டுரையில், ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக் சங்கம், தான் அரசியல் சார்பில்லாமல் இருப்பதாக வாக்களித்ததால் தான் சர்தார் படேல் அதன் மீது விதிக்கப்படிருந்த தடையுத்தரவை 1949ல் அகற்றினார் என்று கட்டுரையாளர் வித்யா சுப்ரமணியம் அவர்கள் வலியுறுத்திக் கூறியிருக்கிறார்.

மஹாத்மா காந்தி படுகொலையானதும், ஆர்.எஸ்.எஸ் தலைவர் எம்.எஸ். கோல்வால்கர் அவர்கள் கைது செய்யப்பட்ட பிறகுதான் இவை அனைத்தும் தொடங்கியது. 1948ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 4ம் தேதியன்று, ஆர்.எஸ்.எஸ் இயக்கம் தனது வெளியிடப்பட்ட கொள்கைகளுக்கு எதிராக, ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்கள் வன்முறை நடவடிக்கைகளில் ஈடுபட்டார்கள் என்றும், சட்டவிரோதமாக ஆயுதங்களை சேகரித்தார்கள் என்றும், மக்களை வன்முறைக்கு தூண்டி விட்டார்கள் என்றும் குற்றும் சாட்டி ஆர்.எஸ்.எஸ் அமைப்பை அரசு தடை செய்தது. குற்றச்சாட்டுகளை மறுத்து, அதே சமயம் சட்டத்தை மதித்து, கோல்வால்கர் அவர்கள் ஆர்.எஸ்.எஸ்ஸின் செயல்பாடுகளை  நிறுத்தி வைத்தார். 6 மாதங்கள் கழித்து, அவர் விடுவிக்கப்பட்டார், ஆனால் நாக்பூர் விட்டு வெளியே செல்ல முடியாதபடி அவர் நடமாட்டத்தைக் கட்டுபடுத்தியது. ஆகஸ்ட் மாதம் 11ம் தேதியன்று, அவர் நேருவுக்கு எழுதிய கடிதத்தில், உயர் அதிகாரத்தில் இருப்பவர்கள் ஆர்.எஸ்.எஸ்ஸுக்கு எதிராக "ஆராயாமலும், நிதானம் தவறியும்" செயல்பட்ட இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் அவர்களுக்கு தான் ஒத்துழைப்பு அளிக்க முன் வந்ததாக எழுதியிருந்தார்.

நேரு தந்திரமாகவோ, முறையாகவோ, கோல்வால்கர் அவர்களின் கடிதத்தை படேலுக்கு அவர் பதில் கோரி அனுப்பி வைத்தார், ஏனென்றால், காந்தியடிகளின் படுகொலைக்கு முன்பாக லக்னௌவில் பேசிய படேல், "காங்கிரஸில் அதிகாரத்தில் இருந்தவர்கள்", தேசபக்தி நிறைந்த ஆர்.எஸ்.எஸ்ஸை "நசுக்க" மேற்கொண்ட முயற்சிகளுக்கு எதிராக எச்சரிக்கை விடுத்திருந்தார். படேல், தனக்கு ஆர்.எஸ்.எஸ் மீது இருக்கும் தெளிவான கருத்துக்களை நினைவு கூர்ந்து, இளம் ஆர்.எஸ்.எஸ் சேவகர்கள் எப்படி ஹிந்து சமுதாயத்துக்கு சேவை செய்து, பெண்களையும், குழந்தைகளையும் பாதுகாத்தார்கள் என்று பாராட்டியிருந்தார். ஆனால் பழி வாங்கும் வெறியோடு, அப்பாவி ஹிந்துக்கள் பட்ட துயரங்களுக்கு வஞ்சம் தீர்க்க முஸல்மான்களைத் தாக்குகிறார்கள் என்று குற்றஞ்சாட்டியதோடு, காந்தியடிகளின் உயிரை பலி வாங்கிய மதவாத நஞ்சைப் பரப்புவதாக குறை கூறினார். இந்த நிலையிலும் கூட, ஆர்.எஸ்.எஸ் தனது நாட்டுப் பற்றுப் பணிகளை காங்கிரஸுக்கு எதிராக செயல்படாமல், காங்கிரசோடு இணைந்து மேற்கொள்ள வேண்டும் என்று படேல் கேட்டுக் கொண்டார். ஆச்சரியமாக இந்தக் கடிதம் கோல்வால்கர் அவர்கள் கைகளுக்கு வந்து சேரவில்லை.

செப்டெம்பர் 24ம்தேதி, கோல்வால்கர் அவர்கள் மீண்டும் படேல் அவர்களுக்கும், நேரு அவர்களுக்கும் கடிதம் எழுதினார்; ஆர்.எஸ்.எஸ்க்கு எதிராக நாடு முழுவதிலும் மேற்கொள்ளப்பட்ட புலனாய்வுகளும், தேடுதல் வேட்டையும் எந்த உறுதியான ஆதாரத்தையும் அளிக்காததால், குற்றச்சாட்டுகளும், தடை உத்திரவும் திரும்பப் பெற வேண்டும் என்று அதில் கோரியிருந்தார். செப்டம்பர் 26ம் தேதியன்று படேல் அவர்கள் அந்தக் கடிதத்துக்கு. மத்திய மாகாணங்கள் மற்றும் பெராரின் ப்ரீமியர் ஆர்.எஸ். சுக்லா மூலமாக பதில் எழுதி இருந்தார். அதனோடு கோல்வால்கர் அவர்களை அடையாத முந்தைய கடிதத்தையும் வைத்து அனுப்பி இருந்தார். அனைத்து மாகாணங்களுமே இந்த தடையுத்திரவு தொடர வேண்டும் என்று ஒருமித்த வகையில் கருதுவதால், "அதற்கு ஏதோ ஒரு ஆதாரம் கண்டிப்பாக இருக்க வேண்டும்" என்று தெரிவித்திருந்தார். "காங்கிரஸின் விதிகளுக்கு உட்பட்டு ஆர்.எஸ்.எஸ் செயல்பட வேண்டும் என்று அவர் ஆர்.எஸ்.எஸ்க்கு அறிவுரை கூறியிருந்தார். அதற்கு ஏதோ ஒரு ஆதாரம் கண்டிப்பாக இருக்க வேண்டும்" என்பதிலேயே ஆதாரம் ஏதும் இல்லை என்பது ஒப்புக் கொள்ளப்பட்டிருக்கிறது.

செப்டெம்பர் 27ம் தேதியன்று, பிரதம மந்திரி அலுவலகத்தைச் சேர்ந்த ஒரு அதிகாரி, தடை உத்திரவை விலக்குவதோ, வைத்திருப்பதோ உள்துறை அமைச்சகத்தின் தனிப்பட்ட உரிமை சார்ந்த விஷயம் என்று கோல்வால்கர் அவர்களுக்கு எழுதியிருந்தார்; அதே சமயம் அரசுகளிடத்தில் "ஏராளமான ஆதாரங்கள்" இருப்பதாகவும், உத்திர பிரதேச அரசு ஏற்கெனவே "ஆதாரங்கள்" பற்றிய ஒரு "குறிப்பை" கோல்வால்கர் அவர்களுக்கு அனுப்பி இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். நவம்பர் மாதம் 3ம் தேதியன்று, கோபமுற்ற கோல்வால்கர் அவர்கள், அப்படி எந்த ஒரு "குறிப்பும்" தனக்கு வரவில்லை என்றும், இந்த "ஏராளமான ஆதாரங்களை" வெளிப்படுத்தி, ஆர்.எஸ்.எஸ்ஸை சட்டத்தின் முன் கொண்டு நிறுத்துமாறும் அரசுக்கு சவால் விடுத்தார். ஆர்.எஸ்.எஸ் காங்கிரசோடு இணைய வேண்டும் என்று படேல் அவர்கள் கூறிய அறிவுரைக்கு பதிலளிக்கும் வகையில், காங்கிரஸ் அரசியல் களத்திலும், ஆர்.எஸ்.எஸ் காலாச்சாரத் துறையிலும் பணியாற்றும் என்று கோல்வால்கர் அவர்கள் பதிலுரைத்தார். கோல்வால்கர் அவர்களின் வெளிப்படையான சவாலுக்குப் பிறகும் எந்த ஆதாரமும் முன் வைக்கப்படவில்லை.

நவம்பர் மாதம் 10ம் தேதி, நேரு, கோல்வால்கர் அவர்களுக்கு எழுதிய கடிதத்தில், அரசிடத்தில் "ஆர்.எஸ்.எஸ்ஸுக்கு எதிராக பெரிய அளவில் தகவல் இருப்பதாக" வலியுறுத்தியிருந்தார். மூடிய மனது உடையவர் என்று நேருவை குற்றம் சாட்டிய கோல்வால்கர் அவர்கள், "பெரிய அளவில் ஆதாரம்" பற்றி பேசும் அதே வேளையில், அதை வெளியிடாத அரசின் செயல்பாடு, ஒரு மனிதனை இருண்ட காலங்களில் எப்படி ஆதாரம் ஏதும் இல்லாமல் தண்டிப்பார்களோ, அப்படி தண்டிப்பதற்கு சமமாகும் என்று கூறினார். அவரது கடினமான சொற்கள் அரசின் கோபத்தைக் கிளறியது. நவம்பர் மாதம் 13 தேதியன்று, உள்துறைச் செயலர் தடையை விலக்க மறுத்து, கோல்வால்கர் அவர்களை மீண்டும் நாக்பூருக்கு செல்லப் பணித்தார். இவை எல்லாம் "காட்டுமிராண்டிகள் காலத்தைச் சேர்ந்த, யதேச்சாதிகார ஆட்சியின் அடக்குமுறை செயல்களாகவே" இருப்பதாகவும், "நாகரீகமான நாட்டின்" செயலாக தெரியவில்லை என்று கொதித்தெழுந்தார் கோல்வால்கர் அவர்கள். "ஒன்று நிரூபியுங்கள் அல்லது குற்றச்சாட்டுகளை திரும்பப் பெறுங்கள்" என்று அவர் படேல் அவர்களுக்கு சவால் விடுத்தார். தில்லியை விட்டு விலக மறுத்த அவர், ஆர்.எஸ்.எஸ் சேவகர்களை, தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்த ஷாகாக்களை மீண்டும் தொடக்க உத்திரவிட்டார். உடனடியாக கோல்வால்கர் அவர்கள் கைது செய்யப்பட்டார். "குற்றச்சாட்டுக்களை நிரூபியுங்கள், தடையை விலக்குங்கள், குருஜி (கோவால்கர்) அவர்களை விடுதலை செய்யுங்கள்" என்று கோரி ஆர்.எஸ்.எஸ் டிசம்பர் மாதம் 9ம் தேதி முதல் சத்தியாகிரஹத்தில் ஈடுபட்டது. ஒரே மாதத்தில் சுமார் 80000 ஆர்.எஸ்.எஸ் சேவகர்கள் கைது செய்யப்பட்டார்கள். ஆனாலும் ஆர்.எஸ்.எஸ் தவறு செய்ததற்கான எந்த ஒரு ஆதாரமும் வெளியிடப்படவில்லை.

அப்போது மதராஸ் மாகாணத்தின் முன்னாள் தலைமை வழக்கறிஞரும், servants of india societyன் தலைவருமான TR. Venkatrama Shastri அவர்கள் தலையிட்டார். அவர் தி ஹிந்து பத்திரிக்கைக்கு தன் மன உளைச்சலை வெளிப்படுத்தி ஒரு கடிதத்தை எழுதியதோடு, சர்தார் படேலைச் சந்தித்து, தடையை அகற்றவும் வலியுறுத்தினார். மீண்டும் மேற்கொள்ளப்பட்ட பேச்சு வார்த்தைகளில், ஒரு புதிய வாதம் பிறந்தது - அதற்கென எழுத்து பூர்வமான அரசியலமைப்பு ஏதும் இல்லாத காரணத்தால், ஆர்.எஸ்.எஸ் ரகசியமாக செயல்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டது. "காங்கிரஸோடு இணையுங்கள்" அல்லது "காங்கிரஸ் விதிகளைப் பின்பற்றுங்கள்" என்ற நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டதை இது விளக்குகிறது. சாஸ்திரி அவர்கள் ஆர்.எஸ்.எஸ் அரசியலமைப்பின் வரைவை ஏற்படுத்தி சமர்ப்பித்தார். ஆனாலும் பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்தது.

ஜூலை மாதம் 9ம் தேதி, 1949ம் ஆண்டு, "அடிப்படை வேறுபாடுகளைக்" காரணம் காட்டி, அரசு தடையுத்தரவை விலக்கிக் கொள்ள மறுத்தது. சாஸ்த்ரி அந்த நிலையில், விவாதிக்கப்பட்ட உண்மையான விஷயங்களின் விபரங்களை வெளியிட முடிவு செய்தார் - ”ஒன்று, ஆர்.எஸ்.எஸ் தனது அடுத்த தலைவரை நியமிப்பதில் இருக்கும் அதிகாரம் பற்றியது, மற்றொன்று, அதன் செயல்பாடுகளில் சிறு வயதுடையவர்கள் பங்கு பெறுவது குறித்தது.”

ஆர்.எஸ்.எஸ்ஸும் அரசியலும் என்பது குறித்த விஷயத்தில், "அவர்கள் அரசியல் சார்பில்லாத இயக்கமாக தங்களைக் கூறிக் கொண்டாலும், அரசியல் சார்புடையவர்களாக உடனடியாகக் கூட மாற முடியும்" என்று தெரிவிக்கப்பட்ட கருத்துக்கு திரு சாஸ்திரி அவர்கள் பதில் கூறுகையில், "அவர்கள் அரசியலில் ஈடுபடட்டுமே. அப்படி ஈடுபட்டால், அது ஒன்றும் குற்றமில்லையே" என்றார். காந்தியடிகளின் படுகொலைக்கு பின்னணியில் ஆர்.எஸ்.எஸ் இருப்பதாக கருதப்படும் ஐயப்பாடுகள், "எந்த ஒரு உண்மையான அடித்தளமுமே இல்லாதவை" என்றும், சில வழக்குகளில் ஆர்.எஸ்.எஸ்ஸுக்கு எதிராக சாட்டப்படும் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட முடியாதவை என்பதால், தடையுத்தரவை தொடர்வது சட்டப்படி செல்லுபடியாகாது என்றும் தெரிவித்தார்.

ஜூலை மாதம் 11ம் தேதியன்று, சாஸ்த்ரியின் அறிக்கை தி ஹிந்துவுக்கு அனுப்பப்பட்டு, அதை ஜூலை மாதம் 14ம் தேதி அந்தப் பத்திரிக்கை வெளியிடுவதற்கு முன்னதாக ஜூலை மாதம் 11ம் தேதியே அரசு தடையுத்திரவை விலக்கிக் கொண்டது. எந்த ஒரு உண்மையான ஆதாரமும் இல்லாத நிலையில் தடையுத்திரவை நீட்டிப்பது என்பது இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்துக்கு புறம்பானது என்பது அறிவுறுத்தப்பட்டிருக்க வேண்டும்.

தடையுத்திரவு நிபந்தனைகளேதுமில்லாமல் விலக்கிக் கொள்ளப்பட்டது. இதோ அதற்கான சான்று. செப்டம்பர் மாதம் 14ம் தேதி 1949ம் ஆண்டு, உள்துறை அமைச்சர் மொரார்ஜி தேசாய் அவர்கள் பம்பாய் சட்டப்பேரவையில் சமர்ப்பித்த எழுத்துப் பூர்வமான அறிக்கையில், ஆர்.எஸ்.எஸ் மீதான தடை இனி தேவையே இல்லை என்று ஒப்புக் கொண்டார்; ஆகையால் அது எந்த நிபந்தனையும் இல்லாமல் விலக்கிக் கொள்ளப்பட்டது; ஆனால் ஆர்.எஸ்.எஸ் எந்த உறுதிமொழியும் அளிக்கவில்லை.


1949ம் ஆண்டு எந்த உறுதி மொழியும் அளிக்கவில்லை என்றால், அதை மீறுவது என்ற கேள்வி எங்கே 2013ம் ஆண்டு எழுகிறது?
 
Article Source: http://www.thehindu.com/opinion/op-ed/lifting-of-ban-on-rss-was-unconditional/article5237922.ece?homepage=true

Keerthivasan

About Keerthivasan -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :