Tuesday, December 16, 2014

Keerthivasan

குருவின் அவசியம் - 1



குருவின் அவசியம் - 1 


பொதுவாக மனிதர்களை கீழ்க்கண்ட நான்கு வகையில் தரம் பிரிக்கலாம்:

1) நாத்திகன் - இவன் கடவுளே தேவை இல்லை என்று சொல்கிறான்.

2) சந்தர்ப்பவாதி - இவன் என் தேவைக்கு உதவாத கடவுள் தேவையில்லை என்று சொல்கிறான்.

3) உண்மையான பக்தன் - இவன் கடவுளைத்தவிர வேறு எதுவும் தேவை இல்லை என்று சொல்கிறான்.

4) பரிபூரண நிலையை அடைந்தவன் - இவன் எதுவும் தேவையில்லை, அவ்வளவு ஏன், அந்த கடவுளும் தேவை இல்லை என்று சொல்கிறான். அதாவது பிரம்மமான ஒரு நிலை.

மனிதனின் முழுமையான வளர்ச்சி முதல் பிரிவில் ஆரம்பித்து நான்காவது பிரிவில் முடிகிறது. ஆனால் பலர் இரண்டு அல்லது மூன்றாவது பிரிவிலேயே நின்று விடுகிறார்கள். இதில் நான்காவது பிரிவை அடையும் போது தான் மனிதன் முழுமையடைகிறான். அது போன்ற நிலையை அடைவதற்கு உதவுகிறவர் தான் உண்மையான குரு என்கிறவர்.

பெரும்பாலான ஹிந்து நண்பர்கள் செய்யும் தவறு என்ன? அதை எப்படி தவறு என்று பார்க்கலாம்.






கடந்த நூற்றாண்டிலும் அதற்கு முந்தைய நூற்றாண்டுகளிலும் வாழ்ந்த குருமார்களான ஸ்ரீ ராகவேந்திரர் ஸ்வாமிகள், ராமகிருஷ்ண பரமஹம்சர், சுவாமி விவேகானந்தர், ரமண மஹரிஷி, காஞ்சி மகா பெரியவர் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் போன்றவர்களை நம் ஹிந்துக்கள்
போற்றினார்கள். அவர்களை உண்மையான சந்நியாசிகளாக தான் பார்த்தார்கள். அவர்கள் போலிகளாக இருக்கலாம் என்று கனவில் கூட கற்பனை செய்து கொண்டதில்லை.

ஆனால், தற்சமயம் உள்ள குருமார்களை பற்றி பலருக்கு அப்படி ஒரு எண்ணம் இல்லை. இப்போதுள்ள குருமார்களை பலர் ஏற்றாலும், பலர் அவநம்பிக்கையாக பேசுகிறார்கள். இது தவிர சில போலி சாமியார்கள் வேறு வந்து விட்டார்கள். அவர்களிடம் ஏமாறுவதற்கு என்று ஒரு கூட்டம்.


போலிகளான பிரேமானந்தா, கல்கி பகவான், நித்யானந்தா (இவர் பக்தர்கள் யாராவது இருந்தால் மன்னிக்கவும்) போன்றவர்களை விட்டு விடுவோம். இவர்களை நம்பி பிரயோஜனம் இல்லை. நம்பாமல் இருப்பதே நல்லது.

மற்ற குருமார்களான ஸ்ரீ சத்ய சாய் பாபா, காஞ்சி ஸ்ரீ ஜெயேந்திரர் சரஸ்வதி ஸ்வாமிகள், ஸ்ரீ விஜயேந்திரர் சரஸ்வதி ஸ்வாமிகள், மாதா அமிருதானந்த மயி போன்றவர்களுக்கு கணிசமான பக்தர்கள் இருக்கிறார்கள் - அதே சமயத்தில் இவர்களை திட்டுகிறவர்களும் கணிசமாக இருக்கிறார்கள்.

இவர்களை திட்டுகிறவர்கள் இவர்கள் மீது வைக்கும் குற்றச்சாட்டு, இவர்களில் சிலர் மீது வந்த கொலை வழக்கு (அதிலிருந்து விடுதலை ஆன பிறகும்), மற்றவர்கள் மீது மேற்படியான மோசமான குற்றச்சாட்டுகள் (அதற்கு ஆதாரம் இருக்கிறதோ, இல்லையோ, குற்றச்சாட்டுகள் மட்டும் வருகிறது).
இவர்களை திட்டுகிறவர்கள் எல்லோரும் நாத்திகர்கள் என்று சொல்ல முடியாது. தெய்வ நம்பிக்கை உடைய பலரும் இருக்கிறார்கள். இவர்களுக்கு ஒன்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

இந்த குருமார்கள் பெரும்பாலான மக்களால் ஏற்கப்படுவதற்கு காரணம் அவர்களிடம் இருக்கும் ஏதோ ஒரு சக்தி - அதை சிலர் தெய்வத்தன்மை என்பார்கள். சிலர் சித்து விளையாட்டுஅல்லது மூளை சலவை என்பார்கள். இவர்களை நம்புகிறவர்களுக்கு மன நிம்மதியும், மனித உருவில் இருக்கும் கடவுளிடமே தமது கஷ்டங்களையும் பாரங்களையும் இறக்கி வைத்து விட்டோம் என்கிற ஆறுதலும் கிடைக்கிறது.


ஆனால் இவர்களை எதிர்ப்பவர்களுக்கு என்ன கிடைக்கிறது? இவர்கள் தங்களுடைய கஷ்டங்களுக்காக கோவில் கோவிலாக போகிறார்கள். சில சமயங்களில் இவர்கள் பிரச்சினைகள் தீருகிறது. ஆனால் பல சமயங்களில் அது நடப்பதில்லை. இவர்கள் மனம் வெதும்புகிறார்கள். இதன் விளைவாக சிலர் நாத்திகர்களாகவும் மாறி விடுகிறார்கள். ஆக மொத்தம் இவர்களுக்கு குருமார்களை நம்புகிறவர்களுக்கு கிடைக்கும் நிம்மதி கிடைப்பதில்லை.

குருமார்களை நம்பாதவர்கள் கேட்கலாம் இவர்களெல்லாம் உண்மையான குருமார்கள் தானா? ஒரு வேளை போலியாக இருந்தால் இவர்களை நம்பினால் பயன் கிடைக்காதே என்று? அதற்கு என்னுடைய பதில் இது தான் - உண்மையான நம்பிக்கை என்றுமே வீண் போவதில்லை. இவர்கள் மீது பக்தி செலுத்தினால், இவர்கள் சொல்லும் நல்ல கருத்துக்கள் இவர்களின் பக்தர்களை பண்பட்ட மனிதர்களாக்கி விடும்.


ஒரு வேளை இந்த குருமார்கள் எல்லாம் பாவங்கள் செய்திருந்தால் - என்றும் சிலர் கேட்கிறார்கள். அப்படி ஒரு வேளை அது உண்மையாக இருந்தால் கூட அதனால் இவர்களின் பக்தர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. அவரவர் கர்மாவை அவரவர் தான் அனுபவிக்க வேண்டும்.

இவர்களை பற்றிய நேர்மாறான சிந்தனைககளை (Negative thoughts) வளர்த்துக்கொண்டால் அதன் அதிர்வலைகள் நமக்கு வரவேண்டிய நல்லதையும் வரவிடாமல் செய்து விடும். நமக்கு வழிகாட்டும் ஒரு குரு நமக்கு கிடைப்பார் என்று விதி இருந்தால் அதையும் தடுத்து விடும்.
ஆகவே போலி சாமியார்களை கூட திட்டாதீர்கள். உங்களுக்கு பிடிக்கவில்லையா - அவர்களை உங்கள் நினைப்பிலிருந்தே அகற்றி விடுங்கள். அவர்களை பற்றி நினைக்கவோ மற்றவர்களிடம் பேசுவதையோ தவிர்த்து விடுங்கள். இது தான் ஹிந்து சகோதரர்களுக்கு நான் சொல்ல வருவது.

இனி அடுத்த பதிவில் குரு என்று ஒருவர் நம் வாழ்க்கையில் இருக்க வேண்டியதன் அவசியம் பற்றி சொல்கிறேன்.

Keerthivasan

About Keerthivasan -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :