Tuesday, December 16, 2014

Keerthivasan

சனிபகவானின் இன்னல்கள் தீரும் அனுமனை வணங்கினால்

சனிபகவானின் இன்னல்கள் தீரும் அனுமனை வணங்கினால்



சனீஸ்வரர், தெய்வங்களை ஆட்டிபடைக்க வேண்டிய காலம் வரும்போது அவர்களின் அனுமதி வாங்கியபிறகுதான் பிடிக்க வேண்டும் என்பது ஒரு விதி. அதுபோல ஒரு சமயம், அனுமனை பிடிக்க வேண்டிய நேரம் வந்து விட்டது என்பதால், அனுமாரிடம் சென்ற சனி பகவான்,

“என் கட்டுப்பாட்டுக்குள் நீ சில காலம் இருக்க வேண்டியது உன் விதி. அதனால் நான் எப்போது வந்து என் கடமையை செய்ய வேண்டும்?” என அனுமதி கேட்டார். அதற்கு ஆஞ்சநேயர், “நல்லது. இப்போது நான் ஸ்ரீஇராமசந்திர மூர்த்திக்கு உதவியாக இருப்பதால், இந்த தருணத்தில் நீ என்னை பிடித்தால், இதனால் ஸ்ரீஇராமருக்கு என்னால் உதவ முடியாமல் ஆகிவிடும். அதனால் நான் அழைக்கும் போது நீ வந்து என்னை தாராளமாக பிடித்துக் கொள்.” என்றார் அனுமன்.

தன் நலனுக்காக இல்லாமல் ஸ்ரீஇராமருக்கு உதவி செய்ய வேண்டும் என்கிற சுயநலம் இல்லாத அனுமனின் நல்ல எண்ணத்திற்காக சனிபகவான், “அப்படியே ஆகட்டும். உன் அனுமதியோடு நான் உன்னை பிடிக்கிறேன். ஆனால் என் பொறுமைக்கும் எல்லை உண்டு. நீ என்னை அழைக்காமல் இருந்தால் உனக்கு கூடுதலாக பல இன்னல்களை கொடுப்பேன். என்னிடம் இருந்து சர்வேஸ்வரனே தப்பிக்க முடியாமல் சிக்கினார் என்பதை நீயும் அறிவாய். அதை மறக்க வேண்டாம்.” என்று கூறி அந்த இடத்தை விட்டு சென்றார் சனி பகவான்.

இராம-இராவண யுத்தத்தில் நாகாஸ்திரத்தால் அடிபட்டு மூர்ச்சையாகிவிட்டார் லட்சுமணர். அவரை உயிர் பிழைக்க வைக்க சஞ்சீவி மூலிகை வேண்டும் என்று சொல்ல, அந்த மூலிகையை நான் எடுத்து வருகிறேன்.” என சொல்லி புறப்பட்டார் அனுமன்.

சஞ்சீவி மூலிகை இருக்கும் மலைக்கு வந்த அனுமன், வந்த அவசரத்தில் சஞ்சீவி மூலிகை எப்படி இருக்கும்? எவ்வளவு தேவை? என்பதையெல்லாம் கேட்க மறந்தோமே என குழப்பம் அடைந்தார். அந்த மலையில் எண்ணற்ற பல மூலிகைகள் இருந்ததால் சஞ்சீவி மூலிகை எது என்று அனுமனால் அறிய முடியவில்லை. அதனால் அந்த மலையையே பெயர்த்து எடுத்து தன் உள்ளங்கையில் தாங்கி அங்கிருந்து புறப்படும் போது அவருக்கு சனிஸ்வர பகவானின் ஞாபகம் வந்தது.

உடனே சனி பகவானை அழைத்தார் அனுமன். அனுமனை இன்று பிடித்துவிடலாம் என்ற ஆவலில் வந்த சனி பகவானின் முதுகில் அந்த சஞ்சீவி மலையை தூக்கி வைத்தார் அனுமன். இதை சற்றும் எதிர்பாராத சனி பகவான், சஞ்சீவி மலையை சுமந்து வர தயங்கினார். இதனால் தன் விஸ்வரூபத்தை காட்டினார் ஆஞ்சநேயர். சனிபகவான் கதி கலங்கி போனார். அனுமனின் கட்டளைக்கு பணிந்து, தன் முதுகில் மலையை சுமந்துக் கொண்டு வந்தார். சிறிது தூரம் வந்தவுடன் சனி பகவானால் அந்த மலையின் சுமை தாங்க முடியாமல் துவண்டார்.

துவண்ட நிலையில் சனீஸ்வரர் “வாயு புத்திரனே என்னை மன்னித்து விடு. சூரியனையே கலங்கடித்தவன் நீ. அவ்வளவு ஆற்றல் படைத்த உன்னை சாதாரணமாக நினைத்துவிட்டேன். ஆனால் இப்போது உன் ஆற்றலை நேரில் கண்டேன். இனி உன்னை நான் பிடிக்க மாட்டேன். அத்துடன் உன்னை வணங்கும் பக்தர்களுக்கும் நான் இன்னல் தர மாட்டேன். தயவு செய்து என் முதுகில் இருக்கும் இந்த மலையை இறக்கி என்னை விடுவித்து விடு.” என்று ஆஞ்சநேயரிடம் கெஞ்சினார் சனி பகவான். சரி போனால் போகட்டும் என்று சனி பகவானின் மீது பரிதாபப்பட்டு, சனி பகவானின் முதுகில் இருந்து மலையை இறக்கி தன் உள்ளங்கையில் அந்த சஞ்சீவி மலையை தாங்கி அங்கிருந்து புயல் வேகத்தில் யுத்த களம் நோக்கி பறந்தார் வாயு புத்திரரான ஆஞ்சநேயர்.

இந்த சம்பவத்திற்கு பிறகுதான் ஆஞ்சநேயரை வணங்கினால் சனிபகவானின் இன்னல்கள் நமக்கு ஏற்படாது என்ற உண்மையை தெரிந்துக் கொண்டாம். ஏழரை சனி, அர்தாஷ்டம சனி, அஷ்டம சனி, போன்றவற்றால் பாதிப்பு அடைந்து வருகிறவர்கள், அனுமனை வணங்குங்கள். அத்துடன் சனி கிழமையில் அனுமாருக்கு வெண்ணை, வடைமாலை, வெற்றிலை மாலை, துளசி இதில் ஏதாவது ஒன்றை ஆஞ்சநேயருக்கு சமர்பித்து வணங்கினால் நிச்சயம் சனீஸ்வர பகவானால் எந்த இன்னலும் ஏற்படாது.

தகவல்: நாரதர் கலகம்

Keerthivasan

About Keerthivasan -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :