Saturday, December 20, 2014

Keerthivasan

எது தர்மம்? - சோ


தர்மத்தின் சூட்சுமம், ஞானிகளுக்கே கடினமான விஷயம் என்றால், நாம் எல்லாம் இதை எவ்வளவு ஆராய வேண்டியிருக்கும்? ஒரு சிறிய பிரச்சனையாக இருந்தாலும், அதில் எது தர்மம் என்பதை ஆராய்ந்துதான் நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

ப்ரஹஸ்பதி ஸ்மிருதியில் ‘எந்தெந்த விதிமுறைகள் ஒரு கால கட்டத்தில் மக்களால் வெறுக்கத் தக்கவை ஆகிவிடுகின்றனவோ, அவற்றை விட்டுவிட வேண்டும்; காலத்திற்கேற்ப, விதிமுறைகளை மாற்றிக் கொள்ள வேண்டும்’ – என்று கூறப்பட்டிருக்கிறது.

அதாவது – தர்ம சாஸ்திரத்திலேயே விதிமுறைகள் மாறத்தக்கவை என்று வருகிறது.

ஆகையால் இந்த விதிமுறைகள் மாறுதலுக்கு உட்பட்டவைதான். தர்மம் என்கிற தத்துவம் ஒன்று – அது நிலையானது; ஆனால் அதற்குட்பட்ட விதிமுறைகள் மாறுதலுக்குரியவை.

ஆக, தர்மம் என்பது சாஸ்வதம். அது ஒருவன் தன் மனசாட்சிக்கு விரோதம் இல்லாமல், காரியங்களைச் செய்வது என்று கொள்ளலாம். அது சாஸ்வதமானது.

ஆனால் பெரும் ஜன சமூகத்தில் புழங்கும்போது எது சரியானது, எது தவறானது, எது தர்மம் என்று நிச்சயிக்கிற விதிமுறைகள் மாறுதலுக்குட்பட்டவைதான்.

இன்னொரு அம்சத்தைப் பார்ப்போம்.
மஹாபாரதத்தில் கிருஷ்ணர் எப்படி யுத்தம் நடத்தினார்? எனக்குப் புரிந்த வரையில் கிருஷ்ணர் தர்ம யுத்தமே செய்யவில்லை. அதர்ம யுத்தம்தான் அவர் செய்தார்.

‘அஸ்வத்தாமா ஹத: குஞ்சர’ – அதாவது அஸ்வத்தாமா என்ற யானை இறந்தது என்பதைப் பிரித்துச் சொல்லி, துரோணரை வில், அம்புகளைக் கீழே போடுமாறு செய்தது; கர்ணனை பலவீனப்படுத்தியது; சூரியன் அஸ்தமனமாகிற மாதிரி தோற்றத்தை ஏற்படுத்தி, ஒருவனை மாய்த்தது...’ என்று பல கட்டங்களிலும் தந்திரங்களை அவர் கையாண்டார்.

அதனால்தான் துரியோதனன் அடிபட்டு கீழே விழுந்து கிடக்கும்போது கிருஷ்ணரைப் பார்த்து, ‘உனக்கு வெட்கமாக இல்லையா?’ என்று கேட்கிறான்.
மேலும் ‘உன்னை மக்கள் இகழ மாட்டார்களா? ஒவ்வொருவரையும் இந்தந்த வகையில் நீ வென்றிருக்கிறாய். இது உனக்குக் கூச்சத்தை ஏற்படுத்தவில்லையா?’ என்று கேட்கிறான்.

அப்படி துரியோதனன் கேட்டபோது, தேவ வாத்தியங்கள் முழங்கின. நாற்புறமும் நறுமணம் வீசியது. தேவர்கள் அவன் மீது பூமாரி பொழிந்தார்கள் – என்று வியாஸர் சொல்கிறார். ஏனென்றால் துரியோதனன் பேசியது உண்மை.
கிருஷ்ணரே கூட ‘அவன் கூறுவது உண்மை. முற்றிலும் தர்ம யுத்தத்தை நாம் நடத்தியிருந்தால், நாம் ஜெயித்திருக்க மாட்டோம்’ என்றே சொல்கிறார்.
ஆனால் அவர் ஏன் இப்படியெல்லாம் செய்தார்?

‘லார்ஜர் குட்’. (LARGER GOOD)
‘லார்ஜர் குட்’ – பெருமளவில் நன்மை – அனேகம் பேருக்கு நன்மை – என்கிற நியாயம் முக்கியமானது.

நியாயம் நிலைநாட்டப்படுவதற்கு, யுத்தத்தில் பாண்டவர்கள் ஜெயிக்க வேண்டும். அந்தப் பெரிய நன்மைக்காக அங்கே யுக்திகளை கையாள வேண்டியதாகப் போயிற்று.

அந்தப் பெரிய நன்மையை நினைத்துப் பார்க்கும்போது, யுத்த தந்திரங்கள் அதர்மம் என்று நிராகரிக்கப்படத் தக்கதல்ல என்று ஆகிவிடுகிறது.
இந்த அளவுக்கு சிந்தனை, இந்த பூமியில் நடைமுறைக்கு ஏற்றவாறு இருந்திருக்கிறது.

யோக்கியர்களை, சமூக விரோதிகளை போலீஸ் துறை எப்படி நடத்த வேண்டுமென்றால், தயை தாட்சண்யமில்லாமல்தான் நடத்த வேண்டும். இப்படி ஓர் உரிமை தரப்படுவதால், சில தவறுகள் நேர்ந்து விடலாம். ஆனால், இப்படி நடந்து கொள்ள போலீஸாருக்கு உரிமை இருந்தால்தான், சமுதாயத்திற்கு நன்மை என்கிற – லார்ஜர் குட் – சாதிக்கப்படும்.

ஆகையால் ‘பெருமளவில் நன்மை’ என்பதை சமூக அளவிலும், ‘மனசாட்சியின்படி யோசித்து நடப்பது’ என்பதை தனிமனித அளவிலும், கொண்டு பார்க்கும்போது, எது சரியாக அமைகிறதோ, அதுதான் தர்மம்...

Cho

Keerthivasan

About Keerthivasan -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :