Monday, December 22, 2014

Keerthivasan

உலகம் துன்பமயமானதா?



இந்த உலகத்தைத் துன்பக் கடலாகத்தான் எல்லோரும் சொல்லிக்கொண்டே இருக்கின்றனர். துன்பங்களைத் தாங்க முடியாத நிலையில் தான் பலர் ஆன்மீகத்தைத் தேடி வந்துள்ளனர். ஆனால் உலகம் துன்பமயமானதா? துன்பங்கள் ஏன் தொடர்ந்து நமக்கு ஏற்பட்டன, என்று ஆராய்ந்திருக்கின்றீர்களா? இறைச் சக்தி தன்னைத் தேடுவதற்காகத்தான் எனக்குத் துன்பங்களைத் தந்தது. வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் ஒருவன் பெறுகின்ற துன்பங்கள் தான் அவனை உயர் பரிணாம வளர்ச்சிக்குக் கொண்டு செல்கின்றன.

உங்களது வாழ்க்கையின் எல்லாக் கோணங்களிலும் ஆன்மீகம் போக அனுமதித்தால், அனைத்தையும் ஆன்மீகப் பார்வையால் கூர்ந்து பார்க்கப் பழகினால், எதையும் சிந்தித்துப் பார்த்துச் செய்ய முற்பட்டால், உங்களை விட்டு ஈகோவைத் துரத்திவிட நீங்கள் வழி வகுத்தால், நிச்சயம் அந்தப் பரிணாம வளர்ச்சிக்கு உங்களை உயர்த்திக் கொள்ள முடியும். ஈகோவையும் விடாமல் பிடித்துக்கொண்டு ஆன்மீகம், ஆன்மீகம் என்று சொல்லிக்கொண்டு திரிந்தால் பயனில்லை. ஈகோவுடன் செயல்படும் தன்மையை மாற்றி ஆன்மீகமாகச் செயல்படுங்கள். அரைவாசிப் பிரச்னைகள் இல்லாமற் போய்விடும். மற்ற பிரச்னைகளும் உங்களுக்கேற்றவாறு மாற்றி அமைக்கப்படும்.

உயர் உணர்வு நிலையில் செயல்படுவதால், நீங்கள் ஈடுபடுகின்ற செயல் சார்ந்த சூழ்நிலையில் உள்ள குறைபாடுகள் எல்லாம் தானாக நீங்கி, எல்லா இடங்களிலும் நிறைந்திருக்கின்ற தெய்வீக ஆற்றல் அங்கு வெளிப்பட்டு, எதிரிடையான மனப்போக்குகள் எல்லாம் கூட உங்களுக்கு ஒத்துப்போகின்ற மன நிலைக்கு மாறி நின்று செயல்படத் துவங்குவதோடு, உங்களது செயல், வெற்றி; பெறக்கூடிய சூழ்நிலை தானாகவே அமையும். இது தான் ஆன்மீகத்தின் சிறப்பு.

இப்படித் தொடர்ந்து உயர் உணர்வு நிலையிலேயே நம்மை நாம் வைத்திருக்கின்றபோது நமக்கு எதிரில் உருவாகும் நிகழ்ச்சிகள் எதுவும் நமது உணர்ச்சிகளைத் துhண்டினாலும் அவற்றை நிதானமாகப் பதற்றமின்றி எதிர்கொள்ளக்கூடிய வலிமை, துணிவு நம்மில் நிறைந்திருக்கும். கோபமோ, வெறுப்போ ஏற்பட்டாலும் அவை வெளிப்படாமல், வெறும் எண்ணமாகி மறைந்து போகும். கெட இருக்கின்ற சூழ்நிலை, காப்பாற்றப்படும்.இவ்வளவும் நாம் உயர் ஆற்றலில் நிற்கின்றபோது தான் சாத்தியப்படும். உணர்ச்சிகளால் தளும்பினால் சாத்தியப்படாது.

சிலர் குடும்பத்தில் சத்தம் போட்டால்தான் காரியம் ஒழுங்காக நடக்கும்! என்று கூறுவர்.ஏன்? அதற்கு மாறாக அன்பால் கொண்டு செல்லலாமே! அன்பு அந்தச் சூழ்நிலையையேஅழகாக மாற்றித் தந்துவிடுமே! நான் சொல்வது புரிகின்றதா? நான் சொல்கிறேன், செய்! என்பதை விட, விரும்பினால் செய்! என்று சொல்லிப் பாருங்கள்! உங்களுக்கும் நிம்மதி! அவர்களிடமும் எதிர்மறை உணர்ச்சிகள் வெளிப்படாது.

நம்மை நாமே நமக்கு ஒளித்து வாழ்கின்ற வாழ்க்கை, உண்மையான வாழ்க்கை இல்லை. அது சாதாரண வாழ்க்கை. ஒளிவு மறைவின்றிக் கருணை மயமான ஆத்மாவாக மட்டுமாக நாம் வாழ்கின்றோமா என்று ஒரு நிமிடம் ஆழமாக யோசித்துப் பார்க்க வேண்டும். ஆத்மாவை அறிந்து அனுபவிக்கின்ற நிலைக்குப் போகின்றபோது, அடிக்கடி நம்மை நாமே ஆராய்ந்து பார்த்துக்கொண்டு இருந்தால் தான், குறைகளைத் திருத்திக் கொள்ளமுடியும்.
புற உலகில் ஏற்றத் தாழ்வுகள், விருப்பு வெறுப்புகளை அடிப்படையாக வைத்து மனிதர்களைப் பாகுபடுத்தி, நம் மனதிற்கேற்றவாறு அவர்களை நடத்துவது ஒரு விதம். அனைவரையும் ஆத்மாவாக மட்டுமே பார்த்துக் கருணையினால் அணுகுகின்ற முறை மற்றொரு விதம். சாதாரண மனித வாழ்க்கையில் நம்மை நாம் வெளிப்படுத்தாமல், ஒளித்துக்கொண்டு, விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்றவாறு தாரதம்யம் பார்த்துத் தான் நடந்து கொள்கின்றோம். ஆனால் இப்போது அகமாற்றம் ஏற்பட்டுவிட்ட நிலையிலும், இப்படி வேறுபாடாக நடந்து கொள்வது பிழை.

அன்பும், கருணையும் மட்டுமே உள்ளத்தின் வெளிப்பாடாக, எல்லோரையும் ஒரே விதமாகப் பார்த்து, உயர்வாகவே நடத்துவது தான் ஓர் ஆன்மீகவாதியின் உயர் பண்பாக இருக்கும். என் எதிரியை நான் கருணையுடன் அணுகுகின்றபோது, அது அவரிலும் மாற்றத்தை ஏற்படுத்தும். மகளை ஒரு விதமாகவும், மருமகளை வேறு விதமாகவும் நடத்துகின்ற மாமியார்கள் எத்தனை பேர்? தன் தாயைப் பாசத்துடனும், தன் மாமியாரை அலட்சியமாகவும் நடத்துகின்ற பெண்கள் எத்தனை பேர்?
நடைமுறையில் நாம் முதலில் எண்ண அலைகளால் தான் பிறருடன் தொடர்பு கொள்கின்றோம். மனதால் தான் நமக்கு மிகப் பிரியமானவர்களையும், எதிரிகளைப் பற்றியும் அடிக்கடி நினைக்கின்றோம். அப்படி நாம் அவர்களை நினைக்கின்றபோது நமது ஆற்றல், எண்ண அலைகளால் எழும்பி அவர்களைச் சென்றடையும். இப்படி எழுகின்ற எண்ண அலை, நமது விருப்பு, வெறுப்புகளால் கலக்கப்பட்டு பிறகு அவர்களைச் சென்றடைந்தால், அவை இருவரிடத்திலும் பாதிப்பை, நல்லதாகவோ, கெட்டதாகவோ ஏற்படுத்தும். வெறும் கருணை மயமானதாக மட்டும் அவை எழுபவையாக அமைந்தால் அது தான் ஆன்மீக உயர் நிலை.


குறிப்பாக எதிரியையும், பாவம், அவர்கள் தெரியாமல்தான் இப்படி நடந்துகொள்கிறார்கள்! என்று கருணையோடு குற்றங்களை நீக்கிப் பார்க்கின்ற நிலை. குடும்ப உறவுகளிடம் அன்புகொண்டு நெருங்குகின்றபோது, அவையும் அன்பையே பிரதிபலிக்கும். மேலும் புரிந்துகொள்ளாமல் வெறுக்கின்றவர்களிடமும் அன்பு செலுத்த வேண்டியது, நமது நிலை. நம்மைத் தொடர்ந்து அவர்கள் வெறுத்துக் கொண்டிருந்தால், அது அவர்களது நிலை! இப்படிப் பார்த்தால் எவ்வளவு சிறப்பு? பிறகு அங்கு ஏது மனஸ்தாபம்?
ஆன்மீக உயர்நிலைக்குப் போக முயன்று கொண்டிருக்கின்ற நிலையில் நம்மிடமுள்ள குறைபாடுகளைக் கவனித்து நீக்கிக்கொண்டே இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த நிபந்தனைகள் நமக்கு மிக அவசியம் என்று சொல்கிறேன்.

உலக நடைமுறையில் ஈடுபட்டு வாழ்கின்ற வாழ்க்கையில் நாம் என்ன செய்தாலும், உள்ளுக்குள் என்னோடு நான் இணைந்திருக்கின்ற நிலையை, நாம் பழக வேண்டும். இது ஆற்றல் செலவழியா நிலை! செயல்படாத அமைதி நிலை! தியானம் செய்பவர்களுக்கு இந்நிலை விளங்கும். தியானம் செய்யாதபோதும் இப்படி இருக்க முயன்று பார்க்க வேண்டும்.

நமக்கு ஒருவலி வருகின்றது. ஆ! என்று உணர்ச்சியை வெளிப்படுத்துகின்றோம். சரியான வலி! என்று முனகுகின்றோம். வலிக்கின்ற இடத்தைத் தொட்டுப் பார்த்து, இங்கே தான் வலி! என்று சுட்டிக் காட்டுகின்றோம். இவையெல்லாமே விழிப்புணர்வின் வெளிப்பாடு. ஆனால் இந்த வலி ஆழ்ந்த நித்திரையில் தெரிவதில்லையே! அப்படியானால், இந்த வலி உடலில் இருக்கிறதா? மனதில் இருக்கிறதா? மனம் விழித்திருந்தால், வலி தெரிகின்றது. துாக்கத்தில் மனமில்லை.

கர்மாவின் தொகுப்புத்தான் மனமாக இயங்குகின்றது. மனதில் எழும் எண்ணங்கள் எல்லாமே கர்மாவால் வருபவை தான். எனவே, வலி, துன்பம் எல்லாமே மனதிற்குரியவையே தவிர, எனக்குரியவை அல்ல. வியாதிகள் எல்லாம் கூட உடலில் இல்லை. மனதில் தான் இருக்கின்றன. மனம் கவனிக்காவிட்டால் வியாதி வருத்தாது. வியாதியை அதிகப்படுத்தி வருந்துவது மனமே! மனம் தான் வலி, நோய், துன்பம் எல்லாவற்றிற்கும் காரணம்.

உலகம் என்பது மனதில் தான் உள்ளது. நம் மனப் போக்கின்படி தான் உலகம் காட்சியளிக்கும். உலகம் இனியது என்று சொல்வதும், உலகம் துன்பக்கடல் என்று சொல்வதும் அவரவர் மனப்பாங்கின் வெளிப்பாடே என்பது இப்போது விளங்குகின்றதா? நடைமுறை வாழ்க்கையில் ஒவ்வொரு சின்னச் சின்ன விஷயங்களையும் உன்னித்துக் கவனிக்கப் பழகுங்கள்.

ஒரு சிறிய துாசி தானே என்றால், அது கூடச் சின்ன விஷயம் அல்ல, தெரியுமா? அலட்சியமாகத் துாசி தானே! என்று சொன்னாலும், அதுவே கண்ணுக்குள் விழுந்து உறுத்தும்போது, என்ன பாடு படுகிறோம்! அதை வெளியே எடுக்கும் வரை நாம் சும்மா இருக்கிறோமா? இப்படித்தான் நம் வாழ்க்கையில் இடைப்படும் ஒவ்வொரு விஷயமும், ஏதாவது ஒரு விதத்தில் நம்மோடு சம்பந்தப்படும். பாதிப்பை ஏற்படுத்தும். ஏதாவது செய்யும்படி நம்மைத் துாண்டும். இயற்கையும், நமக்கு ஏற்படுகின்ற சம்பவங்களும், நமக்குப் பாடம் கற்பித்துக் கொண்டே இருக்கின்றன. அந்தப் பாடத்தைப் படிக்கின்ற பார்வை நமக்கு ஏற்பட்டிருக்கிறதா? என்பது தான் கேள்வி.

அப்படி அந்தப் பார்வை நமக்கு ஏற்பட்டுவிட்டால், பிறகு எங்கேயும் போகத் தேவையில்லை. எந்த வித வெளி விவகாரங்களும், விழாக்களும், ஆட்ட பாட்டங்களும் நம்மை ஈர்ப்பதில்லை. தனிமையில் இருந்துத் தன்னுள் ஆழ்வதே சுகம் என்பது புரிந்துவிடும். யாரையும் குறை சொல்லத் தோன்றாது. கூட்டத்தினிடையே இருந்தாலும், அந்த ஆரவாரங்களில் பங்கு பெறாமல், அமைதி காக்கின்ற தன்மை விரியும். முயன்று பாருங்கள்!

எந்தச் சந்தோஷமான சூழ்நிலையிலும், எந்தத் துன்பமான சூழ்நிலையிலும் அப்படியே அதில் ஆழ்ந்து போய்விடாமல், சில நிமிடங்களில் அதிலிருந்து விடுபட்டு, உங்களது இயல்புத் தன்மையாகிய வெட்டவெளி அமைதி நிலைக்குத் திரும்பி விடுவதற்கு இந்தப் பயிற்சி, அதாவது ஆத்ம நிலையிலிருந்து வெளிப்பட்டு, செய்ய வேண்டியவற்றிற்காகச் செயல்பட்டு, உடனே உள்முகமாகத் திரும்பி விடுகின்ற பயிற்சியாக உதவும். கடலில் மிதக்கின்ற மிதவைக் கட்டை (buoy) போன்ற தன்மை உங்களில் ஏற்பட்டு விடும்.

இப்போது உங்களின் பார்வையில் உலகம் துன்ப மயமானதா? ஒவ்வொருவரின் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் எத்தனை, எத்தனை விதமான துன்பங்கள்! ஞானம் பெற்ற பின் அந்தத் துன்பங்கள், துன்பத்தைத் தருகின்றனவா? இன்றும் துன்பங்கள் நமக்கு இருந்தாலும், அவை வருத்துகின்றனவா? இதுவரை ஏற்பட்ட துன்ப துயரங்கள் தான், நம் மனநிலையை இந்த அளவிற்குப் பக்குவப்படுத்தியிருக்கின்றன என்று சொல்லலாமா? இப்படிப் பார்த்தால் உலகத்தில் துன்பமும் இருக்க வேண்டுமல்லவா? துன்பம் வாழ்க்கையில் இருக்க வேண்டும்! துன்பத்தை ஏற்றுக்கொண்டேன் என்ற மனநிலையைப் பெறுவது தான் ஆன்மீக முதிர்ச்சி நிலை!

தொகுப்பு: கிருஷ்ணபரமாத்மா

Keerthivasan

About Keerthivasan -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :