Monday, December 22, 2014

Keerthivasan

குருவின் அவசியம் - 3 - குரு பரம்பரை தோற்றமும் ஸ்ரீ மாத்வாச்சாரியார் வரலாறும்

கடந்த பதிவில் குரு என்கிறவர் நம் வாழ்க்கையில் இருக்கவேண்டியதன் அவசியம் பற்றி பதிவு செய்தேன்.


இந்த பதிவில் குரு பரம்பரை எப்படி தத்துவ ரீதியாக தோன்றியது என்று பார்க்கலாம்.

மனிதன் தோன்றியவுடன் அவனுடன் தத்துவங்கள் தோன்றவில்லை. நாகரீகம் வளர்ந்ததும் நல்லது, கெட்டது எது என்று சொந்த அனுபவம் மூலமும் மற்றவர்களின் அனுபவம் மூலமும், இறைவனின் அருள் மூலமும் உணர்ந்து, எப்படி வாழ வேண்டும், எதை செய்ய வேண்டும், எதை செய்ய கூடாது என்று ரிஷிகளும் முனிவர்களும் வகுத்தார்கள்.

கிருத யுகம், திரேதா, யுகம், துவாபர யுகங்களில் கடவுள் பூமியில் அவதாரம் செய்தார், பக்தர்களை காக்க நேரடியாக வந்தார். ஆகவே அந்த யுகங்களில் தத்துவ ரீதியாக மனிதர்களிடம் பேதம் இல்லை. ஆனால் கலி யுகத்தில் கடவுள் ரீதியாக பிளவு வந்தது.

சிவ பெருமான் மற்றும் மகா விஷ்ணுவை வணங்குகிறவர்கள் சைவர்கள், வைணவர்கள் என்று பிரிந்தார்கள். இது தவிர தத்துவ ரீதியாக அத்வைதம், துவைதம், விசிஷ்ட அத்வைதம் என்றும் தத்துவங்கள் தோன்றியது. இதை தோற்றுவித்தவர்கள் முறையே, ஆதி சங்கரர், மாத்வாச்சாரியார், ராமானுஜர் ஆவார்கள். இந்த மூன்று தத்துவங்களை விளக்குவதற்கு முன் இதை தோற்றுவித்தவர்களின் பின்னணியை பார்ப்போம்.

அகத்தியர், காஸ்யபர், அத்திரி, பரத்வாஜர், வியாசர், கவுதமர், வசிஷ்டர் ஆகிய ஏழு ரிஷிகளை சப்த ரிஷிகள் என்று அழைக்கிறோம். இவர்களில் வசிஷ்ட முனிவரின் வழி தோன்றலான பராசர முனிவரின் மகன் வேத வியாசர்.

வேத வியாசரின் சிஷ்யர் சுக பிரம்மர். சுக பிரம்மரின் சிஷ்யர் கெளட பாதர். கெளட பாதரின் சிஷ்யர் கோவிந்த பகவத்பாதர். கோவிந்த பகவத் பாதரின் சிஷ்யர் ஆதி சங்கரர். இவர் தான் அத்வைத தத்துவத்தை உலகிற்கு அறிமுகப்படுத்தினார். இவர் 788 கிபி ஆண்டில் பிறந்து 820 கிபி வரையில் வாழ்ந்தார். இவர் 32 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்தாலும் பாரத வர்ஷம் முழுவதும் விஜயம் செய்தார். இதை சங்கர விஜயம் என்று சொல்லுவார்கள். இது பற்றிய விவரங்களை பிறகு பார்ப்போம்.

துவைத தத்துவத்தை உலகிற்கு அறிமுகப்படுத்திய மாத்வாச்சாரியார் கிபி 1199 வருடம் உடுப்பிக்கு அருகே உள்ள ஒரு கிராமத்தில் நாராயண பட்டருக்கும் வேதவதிக்கும் பிறந்தார். அவர் பிறப்பதற்கு முன்பு அவர் பெற்றோர் அருகில் உள்ள ஒரு கோவிலுக்கு சென்றார்கள். அப்போது இரண்டு கால்கள் இல்லாத ஒருவன் கோவில் கொடிமரத்தில் ஏறி "காற்றின் கடவுளாகிய வாயு தேவன் சனாதன தர்மத்தை காப்பதற்கு கூடிய விரைவில் பிறப்பார்" என்று சொன்னான். அதை பார்த்த இந்த தம்பதியர் மிகவும் ஆச்சரியம் அடைந்தனர்.


சில காலம் கழித்து தங்களுக்கு பிறந்த குழந்தைக்கு வாசுதேவர் என்று பெயர் சூட்டினர். அவரும் மிகச்சிறிய வயதிலேயே வேதம், சாஸ்திரம், சோதிடம், விளையாட்டு என்று எல்லாவற்றையும் வெகு வேகமாக கற்று வந்தார்.
அவரது பதினோராவது வயதில் அச்யுத ப்ரஞர் என்கிற சந்நியாசியிடம் சிஷ்யனாக சேர்ந்து சந்நியாசம் வாங்கி கொண்டார். வாசுதேவருக்கு அவரது குரு ஆனந்த தீர்த்தர் என்று பெயரிட்டார். பிறகு இவரே மாத்வாச்சாரியார் என்று அழைக்கப்பட்டார். துவைத தத்துவத்தை பாரத வர்ஷம் முழுவதும் பரப்பினார்.

தென்னிந்தியா மட்டுமின்றி வடக்கே உள்ள பத்ரிநாத் க்ஷேத்திரத்திற்கும் பயணம் செய்தார். பத்ரிநாத் செல்லும் வழியில் வேத வியாசர் வாழ்ந்த தலத்திற்கு சென்ற மாத்வாச்சாரியார் நர-நாராயணர்கள் தவம் செய்த தீர்த்தத்திற்கு சென்று அங்கே பகவத் கீதையின் தத்துவத்தை பற்றி விளக்கம் எழுதினார். அங்கிருந்து திரும்பி தென்னகம் வரும் வழியில் பிரம்ம சூத்திரம் என்கிற நூலை எழுதினார்.

உடுப்பிக்கு மீண்டும் வந்த மாத்வாச்சாரியார் உத்தர கன்னடம் மற்றும் தக்ஷின கன்னட மாவட்டங்களில் இருபது மடங்களை தோற்றுவித்தார். அந்த இருபது மடங்களுக்கும் தனது சிஷ்யர்களை மடாதிபதிகளாக நியமனம் செய்தார். உலக புகழ் பெற்ற பெஜாவர் மடம் மாத்வாச்சாரியார் தோற்றுவித்தது தான். இது மட்டுமின்றி தனது கடைசி காலங்களில் உடுப்பி மற்றும் அருகில் உள்ள கிராமங்களில் மூடநம்பிக்கையை ஒழித்து சமூக விழிப்புனர்ச்சியும் இறை பக்தியையும் மக்களிடம் ஏற்படுத்தினார். மாத்வாச்சாரியார் கிபி 1278 ஆண்டு பத்ரிநாத் க்ஷேத்திரத்தில் முக்தி அடைந்தார். அசரீரியின் வாக்குப்படி வாயு பகவானின் மூன்றாவது மகனாக தான் ஸ்ரீ மாத்வாச்சாரியார் பார்க்கப்படுகிறார்.

விசிஷ்ட அத்வைதத்தை தோற்றுவித்த ஸ்ரீ ராமானுஜர் பற்றியும் துவைத, அத்வைத, விசிஷ்ட அத்வைத தத்துவங்களை பற்றியும் அடுத்த பதிவில் பார்ப்போம்.

ஆக்கம்: விவேக ஜோதி

Keerthivasan

About Keerthivasan -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :