Friday, December 26, 2014

Keerthivasan

யார் தமிழ்க் கடவுள்? - 5

சங்க இலக்கியத்தில் தமிழ்க் கடவுள்.

ஐம்பெருங் காப்பியங்களுக்கு வருவோமா?

தொல்காப்பியக் காலத்தில் = நடுகல்லும், மாயோன்-சேயோனும் மக்களிடையே இயைந்து இருக்க...

பின்னர் வந்த சிலம்பு/ மணிமேகலை காலத்தில் = இதர சமயங்கள், கொற்றவை, அருகர், புத்தர் போன்றோரும், பேசப்பட ஆரம்பிக்கின்றனர்.
வடமொழியால் வந்த பண்பாடும் நன்கு கலக்கத் துவங்கி விட்டது!
ஐம்பெரும் காப்பியங்கள்:கி.பி 200

1. சிலப்பதிகாரம் - நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் என்றோர் மணி ஆரம் படைத்த - இளங்கோ அடிகள்
2. மணிமேகலை - சீத்தலைச் சாத்தனார்
கி.பி 900-1000
3. சீவக சிந்தாமணி - திருத்தக்க தேவர்
4. வளையாபதி -இயற்றியவர் யார் என்று தெரியவில்லை
5. குண்டலகேசி - நாதகுத்தனார்

ஒவ்வொன்றாகப் பார்த்துச் சுவைக்கலாமா? உண்மை = எல்லாருக்குமே சுவைக்கும்..சிலருக்கு மட்டுமே கசக்கும்..

* வேங்கட மலையில் நிற்பவன் = பெருமாளா? முருகனா?
* மாதவி ஆடும் நாட்டியம் = முதல் வணக்க நடனம் = யாருக்கு?
* மதுரைக்குப் போகும் "Route" - பழமுதிர் சோலை வழியாகப் போகலாமா?
* கோவலன் - கண்ணகி ஊரை விட்டு கிளம்பும் முன், எந்தக் கோயிலுக்குச் சென்று வேண்டிக் கொண்டார்கள்??
=> சிலப்பதிகாரத்தில் தமிழ்க் கடவுள்.

* பல்வேறு சமயத் தலைவர்களுக்குள் விவாதம் நடக்கிறது மணிமேகலையில்! ஆனால் விண்ணவம் மட்டும் வாயை மூடிக் கொண்டு..
=>மணிமேகலையில் தமிழ்க் கடவுள்.

* நப்பின்னையைக் கண்ணன் ஏறு தழுவி ஏற்றுக் கொள்ளவில்லையா? அதே போல் என் மகளையும் ஏற்றுக் கொள்! - இப்படிச் சொல்லும் தந்தை யார்?
=>சீவக சிந்தாமணியில், தமிழ்க் கடவுள்!

சீவக சிந்தாமணி, மற்றும் வளையாபதி/ குண்டலகேசி பின்னாளைய காப்பியங்கள்! சிலம்பு போல் முற்பட்டது அல்ல. எனினும் ஐம்பெரும் காப்பியங்களுள் ஒன்றாக இவை வழங்கப்படுகின்றன!

வளையாபதி/ குண்டலகேசி பாடல்கள் முழுமையாகக் கிடைக்கவில்லை. அதிலும் வளையாபதி கதை என்னதென்றே கண்டு பிடிக்க முடியாதபடி நிலைமை. இவை சங்க காலம் கிடையாது. ஆழ்வார்கள் காலத்துக்கும் (கி.பி 5 - கி.பி 7) பிந்தி தான். எனவே திருமால் = தமிழ்க் கடவுள் என்கிற தரவுக்கு, வளையாபதி/ குண்டலகேசியை நான் எடுத்துக் கொள்ளவில்லை.

ஆழ்வார்களையும் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை! அவங்க திருமால் பக்தர்கள் தானே! அதனால் அது தரவில் சேராது!!

சங்க நூல்கள் மட்டுமே கணக்கில் கொள்வோம்,
18 கீழ்க் கணக்கு! (கி.பி 300 - கி.பி 500)
மொத்தம் 36 பழந்தமிழ் நூல்கள்!
* பதினெண் மேல்கணக்கு = 8 தொகை + 10 பாட்டு = 18
* பதினெண் கீழ்க்கணக்கு = 18
மேல் கணக்கு = பார்த்தாகி விட்டது! கீழ்க்கணக்கு நூல்களை இப்போது பார்க்கலாம்.

ஐம்பெருங் காப்பியங்கள், இவற்றுக்குப் பின்னால் தான்.இருப்பினும் காவியச் சுவை கருதி முன்னமே பார்த்து விட்டோம்.

18 கீழ்க் கணக்கு நூல்களில் தலையாய நூல் = திருக்குறள்!.தமிழ் மறை! தமிழர் நெறி.

கீழ்க்கணக்கில் பொதுவாகவே அற நூல்கள்/ நீதி நூல்கள் தான், Moral Science
திருக்குறள் மட்டுமே அறம், பொருள் என்று மட்டும் நின்று விடாமல், "இன்பத்தையும்" சேர்த்துப் பேசியது. அதுவே அதன் சிறப்பு.
அற நூல்கள்:
1. திருக்குறள்
2. நாலடியார்
3. நான்மணிக்கடிகை
4. இன்னா நாற்பது
5. இனியவை நாற்பது
6. திரிகடுகம்
7. ஆசாரக்கோவை
8. பழமொழி நானூறு
9. சிறுபஞ்சமூலம்
10. ஏலாதி
11. முதுமொழிக்காஞ்சி
அகத்திணை:
1. ஐந்திணை ஐம்பது
2. திணைமொழி ஐம்பது
3. ஐந்திணை எழுபது
4. திணைமாலை நூற்றைம்பது
5. கைந்நிலை
6. கார் நாற்பது

புறத்திணை:
1. களவழி நாற்பது
கீழ்க் கணக்கு நூல்களில் திருமால் - ஒவ்வொன்றாகப் பார்ப்போமா?
* திருக்குறளில் திருமால் பற்றிய சொல்லாட்சி இருக்கா என்ன?
* அப்படியே இருந்தாலும் திருக்குறளைச் சமயத்துக்குள் அடைக்க முடியாது. அடைக்கவும் கூடாது,

* ஒரு நூலில் எடுத்துக்காட்டுக்குச் சொல்லப்படும் "சொல்லாட்சி" என்பது வேறு! "சமய நூல்" என்பது வேறு. - திருக்குறள் சமய நூல் அல்ல.
வள்ளுவரை "எங்கள் சமயம்" என்றெல்லாம் சமயப் போர்வைக்குள் அடைக்கவே கூடாது.

அவர், நக்கீரரைப் போல், திருமுருகாற்றுப்படை எழுதி இருந்தால், அப்போ சரி! ஆனால் வள்ளுவரின் நோக்கம் சமய நூல் அல்லவே.
=>திருக்குறளில் திருமால் பற்றிய சொற் குறிப்புக்கள்!.
* திருமாலின் மூன்று அடிகள் என்னென்ன?

=>திரிகடுகம் - அதில் திருமால் சொற் குறிப்பு.
* நிலவு, கதிரோன், வயற்காட்டுத் தாமரை, காயாம்பூ - இதெல்லாம் யாரைப் போல் இருக்கு?

=>நான்மணிக் கடிகையில் தமிழ்க் கடவுள்.
* நரிக்கு "நாரண" அம்பா? நிறைகுடம் நீர் தளும்புமா?

=>பழமொழி 400-இல் தமிழ்க் கடவுள்.
* தமிழக ஆண்களின் "கருப்பு" நிறத்தின் மீது, பெண்களுக்கு எத்தனை காதல் இலக்கியத்தில்?
* வானவில், கார்கால மேகம், கடலும் மணலும் உறவாடும் காட்சி - அங்கே மாயோன் வருவானா? கடல் நெய்தலாச்சே! அங்கே எப்படி முல்லை நில மாயோன்?

=>ஐந்திணை ஐம்பது, கார் நாற்பது...இவற்றில் தமிழ்க் கடவுள்!
நிறைவாக........
பண்டைத் தமிழ்த் தொன்மத்துக்கு இறை என்பதால் தான் = திருமாலும் முருகனும் "தமிழ்க் கடவுளே" தவிர....
* இயேசுநாதர்-இறைவன்(பிதா-சுதன்),
* இன்ஷா அல்லா,
* தென்னாடுடைய சிவ பெருமான், அன்னை உமையவள்,
* அன்பின் அருகர்,
* கருணையே உருவான ததாதகர் - புத்த பிரான்,
...என்று தமிழ் மக்கள் ஏற்றுக் கொண்டுள்ள அனைவரும் "தமிழர் கடவுளே! கிஞ்சித்தும் மறுப்பில்லை!!

இன்னொரு கேள்வி நீங்கள் கேட்கலாம்:

ஏன் மாயோன்/ சேயோன் தமிழ்க் கடவுள் என்று சொல்லுபவர்கள்,
வேந்தன்/ வருணன் என்ற மற்ற இருவரைத் தமிழ்க் கடவுள் என்று சொல்லவில்லை?

= ஏனென்றால் அவர்கள் மக்கள் வாழ்வியலில் கலக்கவில்லை.
வெறும் நிலத்துக்கான அடையாளங்களாக மட்டும் நின்று விட்டனர்/
* காதல், வீரம், கலை என்று மக்களோடு மக்களாக அவர்கள் இல்லை.
* வேங்கடம், அரங்கம், செந்தூர், ஏரகம் என்று தலங்களைக் காட்டும் சங்க நூல்கள், வேந்தன்/ வருணனுக்கு அப்படி ஒன்றுமே இல்லை,
* அவர்களுக்கென்று மக்கள் மத்தியில் கூத்தோ, வழிபாடோ, ஆலயமோ....ஒன்றும் அமையவில்லை...மருத/நெய்தல் நிலத்தில் கூட.
வேந்தன் = மருத அரசன்; வருணன் = கடல் காற்று; மாறிக் கொண்டே இருப்பவை; மாயோன்-சேயோன் போல் நிலைத்த தொன்மங்களாய் இல்லை!
இப்போது சொல்லுங்கள்!

Going back to the earliest available history of tamizh civilization,What is that civilization's irai? = That is the basis of tamizh kadavul

மாயோனும், சேயோனும், மக்கள் தெய்வமாகப் பேசப் படுகின்றார்கள்
வெறும் பேச மட்டுமா? இல்லை.. மக்களின் அன்றாட வாழ்வியலிலும் இடம் பெறுகின்றார்கள்
* குரவைக் கூத்து போன்ற ஆட்டம் பாட்டம் கலைகளிலும்
* காதலன் தன் காதலை மெய்ப்பிக்க, திருமால் மேல் சத்தியம் (சூள்) செய்வதும்
* அரசன் திருமாலைப் போல் என்றும், போர் மறவர்கள் திருமாலைப் போல் கருப்பாய் விளங்குகிறார்கள் என்றும்...காதல், வீரமாய் நிறைந்து.

அண்மைக் காலங்களில், முருகனைத் தமிழ்க் கடவுளாகப் பேசிய அளவு,
திருவிளையாடல் சினிமா வசனங்களில் காட்டிய அளவு,
திருமாலைப் பேசாததால்...காட்டாததால்...அவன் தமிழ்க் கடவுள் இல்லை என்று ஆகிட மாட்டான்.

புரட்சித் தலைவர் = எம்.ஜி.ஆர் என்று சொல்வதால்...
தந்தை பெரியார் = புரட்சித் தலைவர் இல்லை என்று ஆகி விட மாட்டார்
யார் செய்த புரட்சி அதிகம் என்று உங்களுக்கே தெரியும்.

தாய்த் தமிழ் மேல் ஆணை! சங்கத் தமிழ் மேல் ஆணை =முருகனும், திருமாலும் என்றென்றும் தமிழ்க் கடவுளே!

இதன் முயற்சியினையும், இதைக் கூகுளில் தேடப் போகும் வரும் தலைமுறையின் தமிழ்த் தேடலையும்...தமிழின் உணர்வுக்கே காணிக்கை ஆக்குகின்றேன் அவ்வண்ணம் மாற்றுக் கருத்து கொண்டிருப்பினும், இத்தனை இலக்கியத் தேடல்களுக்கும், நன்மைக்கும் அவனே உந்துதல் வாழி! கதியாய், என் "விதி"யாய் வருவாய் குகனே!

**முற்றும்***


ஆக்கம்: Ramachandran Krishnamurthy

Keerthivasan

About Keerthivasan -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :