Friday, January 2, 2015

Keerthivasan

தேவாரப் பாடல் பெற்ற தலங்கள் - 01 - அறிமுகம்

தமிழகத்தில் நமது முன்னோர்கள் கை கொண்ட இறை வழிபாட்டு முறை தொன்மை பாரம்பரியம் உடையது.

பண்டைய காலத்தில் ஆலயங்கள் பெரும்பாலும் மண், செங்கல், மரக்கட்டை போன்ற பொருட்களை கொண்டு கட்டப்பட்டது.

மண்ணை கொண்டு கட்டப்பட்ட தளி (தளி - ஆலயம்) மண்டளி - மண் + தளி என்று அழைக்கப்பட்டது.

சோழர்களின் ஆட்சி காலத்தில் இவை கற்றளியாக மாற்றி அமைக்கப்பட்டது.
கற்றளி - கல் + தளி (கற்களால் கட்டப்பட்ட ஆலயம் )
கோயில் என்ற சொல் ஆலயம் என்பதிலிருந்து வேறுபட்டது.

கோயில் - கோ + இல்.
அரசன் குடிகொண்டுள்ள இல்லம்.

சிதம்பரம் கோவில்
அந்த வகையில் தமிழகத்தில் கோயில்கள் இரண்டு.

சைவர்களுககு. - சிதம்பரம்.
வைணவர்களுக்கு - திருவரங்கம்
சிதம்பரத்தில் நடராஜன்
திருவரங்கத்தில் அரங்கராஜன்.



கோயில் என்றால் அது சிதம்பரத்தை குறிக்கிறது.

இது சித் + அம்பரம் என்ற பதங்களின் கூட்டுச் சொல்.

இறைவனது பரவெளி தத்துவத்தின் அடையாளம் இந்த கோயில். இறைவன் இங்கு ஆகாய ரூபமாக திகழ்கிறான். " வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி " என்ற திருவாசகப் பாடல் இதை உணர்த்துகிறது.

சைவர்களுககு உரிய ஆலயங்களில் தலையாயது என்ற பெருமைக்குரிய திருத்தலம். கோயிலின் அமைப்பிலும், வழிபாட்டு முறைகளிலும் மற்ற சிவாலயங்களில் இருந்து முற்றிலும் வேறுபட்டதாக இத்தலம் விளங்குகிறது.

இந்த மானுட பிறவியில் இறை வழிபாட்டின் நோக்கம் " பாசத்தில் இருந்து நீங்குதலும், வீடுபேறு அடைதலும்" என்று சாத்திர நூல்கள் உரைக்கின்றன. இத்தலத்தில் இறைவனது ஆனந்த கூத்தை தரிசித்த உயிர்கள் பிறவி பிணி நீங்கி வீடுபேறு அடைவது இந்த வழிபாட்டின் குறிக்கோள். கூத்துப் பெருமானின் தூக்கிய திருவடி ( குஞ்சிதபாதம்) உயிர்களை ஓயாத பிறவி சுழலில் இருந்து மீட்டெடுத்து காத்தருள வல்லது.

"குனித்த புருவமும். கொவ்வைச் செவ்வாயில் குமிழ் சிரிப்பும்
பனித்த சடையும், பவளம் போல், மேனியில் பால் வெண்ணீறும்
இனித்த முடைய எடுத்த பொற்பாதமும் காணப்பெற்றால்
மனித்தப் பிறவியும் வேண்டுவதே இம் மாநிலத்தே"

- திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம் ( தில்லை )
 
ஆன்மீக சிதறல்கள்:
"சார்ந்ததன் வண்ணமாதல் "
என்ற ஒற்றை தன்மை உடையது.
ஸ்படிகமானது தான் எந்தப் பொருளை சார்ந்து இருக்கிறதோ, அந்த பொருளின் நிறத்தையே தனது நிறமாக காட்டும் இயல்புடையது.
உயிரும் அது போலவே இந்த உடலில் பொருந்தியுள்ள இந்திரியங்கள் உள்ளிட்ட கருவி கரணங்களோடு கூடியிருக்கும் போது இந்த உடலே "நான்" என்று எண்ணி மயங்கி நிற்கிறது.
இந்த உடல் நானல்ல என்ற தெளிவும், "நான்" யார் என்ற ஞானத்தை பெறுவதுமே ஆத்ம விசாரம் என்று கொள்ளலாம்.
"நான்" யாரென்ற கேள்வியே ஞானத்தின் தலைவாயில்.


அநாதி மூலமாகிய சிவபெருமானுக்கு பூவுலகில் எண்ணற்ற ஆலயங்கள் இருக்க, அவற்றுள் 274 ஆலயங்களுக்கு ஒரு தனி சிறப்பு உண்டு.
இவை தேவாரப் பாடல் பெற்ற தலங்கள் என்று அழைக்கப்படுகின்றன.

சைவ சமய பக்தி இலக்கியங்கள் சாத்திரம் மற்றும் தோத்திரம் என இருவகைப்படும். இவற்றில் பன்னிரண்டு திருமுறைகள் கொண்ட தோத்திரங்கள் தமிழகத்தில் பக்தி நெறி பரவ ஆதாரமாக விளங்கின.

தேவாரம் தொடங்கி பெரிய புராணம் வரையிலான பன்னிரண்டு திருமுறைகள் "பன்னிரு திருமுறைகள்" என்று சொல் வழக்கில் அழைக்கப்படுகின்றன.

அந்த வகையில் மேற்சொன்ன 274 சிவத்தலங்கள் தேவாரம் அல்லது திருவாசகம் போன்ற நூல்களில் இருந்து அந்தந்த தலத்து இறைவனை புகழ்ந்து பாடல் பெற்றவையாக திகழும். இவை பெரும்பாலும் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்தவையாக இருக்கும்.

இவ்வாறு தேவார, திருவாசக பாடல்களால் பாடி சிறப்பு பெற்ற தலங்கள் "பாடல் பெற்ற தலங்கள்" என்று அழைக்கப்படுகின்றன.

தேவாரப் பாடல் பெற்ற தலங்கள் 274 என்று பார்த்தோம். இது மாமன்னர் இராஜராஜ சோழனால் தில்லையில் நடராஜப் பெருமான் சந்நிதியின் வடமேற்கு பகுதியில் பூட்டப்பட்ட அறையில் கரையான் செல்லரித்து போனது போக மீதமுள்ள நிலையில் கண்டெடுக்கப்பட்ட திருமுறைகளை உடைய தலங்கள் மட்டுமே.

மறைந்து போன திருமுறைகளும், அவற்றை உடைய திருத்தலங்களும் பற்றிய தகவல்கள் நமக்கு கிடைக்காமல் போனது. "தற்காலத்திற்கு தேவையானவற்றை மட்டும் தந்தருளினோம். செல்லரித்து போனதை தேட வேண்டாம்" என்ற இறைவனது அசரீரி உத்தரவால் தொலைந்து போனவற்றை தேடும் முயற்சி கைவிடப்பட்டது.

இப்படியாக நமக்கு அறிய வருகின்ற சிவத்தலங்கள் - 274
இந்தியாவில் - 271
இலங்கையில் - 2
சீனாவில். - 1

திருக்கயிலாயம்.
மூவரும் தேவரும் முனிவர் குழாமும் அறிவொண்ணாத தேவதேவன் மானுட கண்களுக்கு அருட்காட்சி வழங்கும் திருக்கோலம்.

மோசமான அரசியல் நிலைப்பாட்டால் இந்திய நாடு சீனா வசம் பறிகொடுத்த திருக்கயிலாய மலை.

"காவாய் கனகத்திரளே போற்றி,
கயிலை மலையானே போற்றி போற்றி"


தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் தற்போது சீனா வசம் உள்ள திருத்தலம். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வர் பெருமக்களால் பாமாலை பாடி பரவியேத்த பெற்ற திருத்தலம்.

இலங்கையில் உள்ள தேவாரப் பாடல் பெற்ற தலங்கள் இரண்டு.
1 ) திருக்கேதீச்சரம்,
2 ) திருகோணமலை.

ஆக்கம்: சரவணன் சிவதானு

Keerthivasan

About Keerthivasan -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :