Friday, June 26, 2015

Keerthivasan

எங்கே பிராமணன் ? – 18 – மனுநீதி – (மனு ஸ்ம்ருதி) – 3

எங்கே பிராமணன் ? – 18 – மனுநீதி – (மனு ஸ்ம்ருதி) – 3

கேள்வி : பிராமணன், கொல்லத் தகுந்தவன் அல்ல; அவனைக் கொல்வது மிகப் பெரிய பாவம் என்றெல்லாம் மனு ஸ்ம்ருதி கூறுகிறது அல்லவா?

சோ : ஆமாம். அப்படித்தான் சொல்கிறது. ஆனால், யார் பிராமணன் என்பதையும் மனு ஸ்ம்ருதி விளக்குகிறது; பிராமணத் தாய் – தந்தைக்குப் பிறந்தும், பிராமணனுக்கு விதிக்கப்பட்ட வழிமுறைகளின்படி வாழாதவனை, மனு ஸ்ம்ருதி பிராமணனாகவே ஏற்கவில்லை.


கேள்வி : அதைப் பிறகு சொல்லுங்கள். இப்போது நான் கேட்பது இதுதான். ‘பிராமணனைக் கொல்வது மஹா பாவம்’ – இல்லையா?


சோ : அதற்கும் கூட விதிவிலக்கு இருக்கிறது. தன்னைத் தாக்க வருகிற பிராமணனை ஒருவன் கொன்று விடலாம்.

குரும் வா பாலவ்ருத்தௌ வா
ப்ராம்மணம் வா பஹுச்ருதம்
ஆததாயின மாயாந்தம்
ஹன்யாதேவாவிசாரயந்
(350/378)

குருவோ, இளைஞனோ, வயோதிகனோ, மெத்தப் படித்த பிராமணனோ – அவன் வன்முறை எண்ணத்துடன் வந்தால், அவனைத் தயங்காமல் கொன்று விட வேண்டும். இதில் ஒன்றைக் கவனிக்க வேண்டும். தாக்க வருகிற பிராமணன் கொல்லப்படலாம் என்று கூறுகிற மனு ஸ்ம்ருதி, இன்னார்தான் அவனைக் கொல்லலாம் என்று சொல்லவில்லை. நான்கு வர்ணங்களில், எந்த ஒரு வர்ணத்தைச் சேர்ந்தவனாக இருந்தாலும் சரி – தன்னைத் தாக்க வருகிற பிராமணனை அவன் கொல்லலாம். இது நான்கு வர்ணங்களுக்கும் பொருந்துகிறதே!

ஆகையால், பிராமணனைக் கொல்லவே கூடாது என்ற மனு ஸ்ம்ருதி, அதற்கு விதிவிலக்கையும் கூறியிருக்கிறது. தவிர, பிராமணனுக்கு உண்டான விதிமுறைகளைக் கடைப்பிடிக்காமல் வாழ்கிற பிராமணனைப் பற்றி, மனு ஸ்ம்ருதி பல இடங்களில் கடுமையாக விமர்சிக்கிறது :
கோரக்ஷகான் வாணிஜிகாம்ஸ்ததா
காருகுசீலவான்
ப்ரேஷ்யான் வார்துஷிகாம்ஸ்சைவ
விப்ரான் சூத்ர வதாசரேத்
ஆடு, மாடுகளை காத்தும்; வர்த்தகம் செய்தும்; கை வேலை செய்பவர்களாகவும், நடிகர்கள் மற்றும் பாடகர்களாகவும், வட்டிக்குப் பணம் தருகிறவர்களாகவும் வாழ்கிற பிராமணர்கள், சூத்ரர்களாகவே கருதத்தக்கவர்கள்.


கேள்வி : அப்படியானால், பிராமணனுக்கு விதிக்கப்பட்ட வாழ்க்கை முறைதான் என்ன? அதாவது, அவன் ஜீவிப்பது எப்படி?

சோ : வேதத்தைக் கற்பது, வேதத்தைக் கற்பிப்பது; யாகம் செய்வது, யாகங்களைச் செய்விப்பது; தானம் வாங்குவது, தானம் செய்வது – என்ற ஆறு ‘தொழில்கள்’ பிராமணனுக்கு விதிக்கப்பட்டுள்ளன.
இதைக் கூறுகிற மனு ஸ்ம்ருதி வாசகம் இது :
அத்யாபனம் அத்யயனம்
யஜனம் யாஜனம் ததா
தானம் ப்ரதிக்ரஹ ஸ்சைவ
ஷட் கர்மாண்யக்ரஜன்மன:
(75/467)
இந்த ஆறு வழிகளில் – தானம் வாங்குவது என்பது, தனக்காக மட்டும் அல்ல – தானம் கொடுப்பதற்காகவும் கூட. இம்மாதிரி ஆறு கடமைகள் பிராமணனுக்கு உள்ளதால்தான், திருவள்ளுவர் கூட பிராமணர்களை ‘அறுதொழிலோர்’ என்று வர்ணிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 – CHO
– தொகுப்பு : அல்லயன்ஸ் ஸ்ரீனிவாசன்

Keerthivasan

About Keerthivasan -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :