Friday, June 26, 2015

Keerthivasan

எங்கே பிராமணன் ? – 17 – மனுநீதி – (மனு ஸ்ம்ருதி) – 2

எங்கே பிராமணன் ? – 17 – மனுநீதி – (மனு ஸ்ம்ருதி) – 2


கேள்வி : மனு ஸ்ம்ருதியின் சில அம்சங்களைப் பற்றிச் சொல்வதற்கு ஆரம்பமாக, ஒரு விஷயத்தை விளக்குங்கள். மனு ஸ்ம்ருதியில் ஒரே குற்றத்திற்கு, வெவ்வேறு வர்ணத்தவருக்கு வெவ்வேறு தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறதா, இல்லையா?

சோ : உண்மைதான். மனு ஸ்ம்ருதியில் – ஒரு குற்றம் – ஒரு திருட்டு நடந்தால், குற்றம் செய்தவனின் வர்ணத்தைப் பொறுத்து அவனுக்குத் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.


கேள்வி : அதாவது – பிராமணனுக்குச் சலுகை; ஒரு குற்றத்தை ஒரு பிராமணன் செய்தால் அவனுக்குக் குறைவான தண்டனை; அல்லது தண்டனையே கிடையாது. மற்ற வர்ணத்தவர் செய்தால் கடும் தண்டனை! இது என்ன நியாயம்?

சோ : நீங்கள் அவசரப்படுகிறீர்கள். வர்ணத்தைப் பொறுத்து தண்டனை மாறுபடுகிறது என்று நான் சொன்னேனே தவிர, பிராமணனுக்குக் குறைவான தண்டனை என்று சொல்லவில்லை.


கேள்வி : என்ன சொல்கிறீர்கள்? பிராமணனுக்கும் மற்றவர்களைப் போலவே தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறதா?

சோ : இல்லை. மற்றவர்களை விட, பிராமணனுக்கு – ஒரே குற்றத்திற்கு அதிக தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.
அஷ்டாபத்யம் து சூத்ரஸ்ய ஸ்தேயே பவதி கில்பிஷம்/
ஷோடசைவ து வைச்யஸ்ய த்வாத்ரிம்சத் க்ஷத்ரியஸ்ய ச//
ப்ராம்மணஸ்ய சது: ஷஷ்டி: பூர்ணம் வாபி சதம் பவேத்/
த்விகுணாவா சது: ஷஷ்டி: தத்தோஷ குணவித்தி ஸ://
– என்று மனு ஸ்ம்ருதி கூறுகிறது.

இதன் அர்த்தம்:
‘குற்றம் புரிந்த சூத்ரனுக்கு (அவன் விதிமுறையை அறிந்தவனாயின்), வழக்கத்தைவிட நான்கு மடங்கு அதிக தண்டனை வழங்கப்பட வேண்டும். குற்றம் புரிந்தவன் வைச்யனாக இருந்தால், பதினாறு மடங்கு தண்டனையும்; க்ஷத்ரியனாக இருந்தால், முப்பத்திரண்டு மடங்கு தண்டனையும் விதிக்கப் பட வேண்டும்.

குற்றம் புரிந்தவன் பிராமணனாக இருந்தால் – அவன் குற்றத்தின் தன்மையை உணர்கிற நிலையில் உள்ளதால் – அவனுக்கு அறுபத்தி நான்கு மடங்கு அல்லது நூறு மடங்கு அல்லது நூற்றி இருபத்தெட்டு மடங்கு தண்டனை விதிக்கப்பட வேண்டும்.

குற்றத்தின் தன்மையை உணர்ந்தவனாகவும், அது செய்யத் தகாத காரியம் என்பதை முழுமையாக அறிந்தவனாகவும், பிராமணன் இருப்பான் என்ற எண்ணத்தின் அடிப்படையில், அவனுக்கு மற்றவர்களை விடப் பல மடங்கு அதிகத் தண்டனையை மனு ஸ்ம்ருதி விதிக்கிறது.

உண்மை இப்படியிருக்க, தண்டனை விஷயத்தில், பிராமணர்களுக்கு மனு ஸ்ம்ருதி சலுகைகள் காட்டுவதாகச் சொல்வது தவறு அல்லவா? ஆனால், ஒரு விஷயம். பிராமணனுக்கு ஒரு தண்டனையில் மட்டும் வித்தியாசம் காட்டப்பட்டிருக்கிறது. பிராமணனுக்கு மரண தண்டனையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. ‘மரண தண்டனைக்குரிய குற்றத்தை ஒரு பிராமணன் செய்தால், அவனை நாடு கடத்த வேண்டும்’ என்று மனு ஸ்ம்ருதி கூறுகிறது.

பிராமணனுக்கு மரண தண்டனையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டதற்கு, ‘பிரம்மஹத்தி – அதாவது பிராமணனைக் கொலை செய்வது – கொடிய பாவம்’ என்ற நம்பிக்கை காரணமாக இருந்திருக்கலாம்.



கேள்வி : அப்படி என்றால், மற்ற தண்டனைகளில் பிராமணனுக்குக் கூடுதல் தண்டனை என்றாலும் – மரண தண்டனை என்று வருகிறபோது, அவனுக்கு ஒரு சலுகை இருக்கிறதே?

சோ : உண்மைதான். ஆனால், யாருக்கு இந்தச் சலுகை? பிராமணனுக்கு. பிராமணன் என்றால் – பிராமண குலத்தில் பிறந்த அனைவரும் அல்ல. இப்படி நான் சொல்வதற்குக் காரணமும் மனு ஸ்ம்ருதிதான்.

பிராமணனுக்குப் பல கட்டுப்பாடுகளை மனு ஸ்ம்ருதி விதிக்கிறது. அவற்றிலிருந்து தவறுகிறவனை பிராமணனாக மனு ஸ்ம்ருதி ஏற்கவில்லை.

இப்போது, அரசியல் சட்டம் இந்தியக் குடிமகனுக்கு சில உரிமைகளை அளிக்கிறது. ஆனால், யார் இந்தியக் குடிமகன்? அதையும் சட்டமே விளக்குகிறது. இந்தியாவில் குடியிருப்பதால், ஒருவர், ‘நானும் குடிமகன்தான்’ என்று கூறிக் கொண்டு, அந்த உரிமைகளைக் கோர முடியாது.

அதேபோல், பிராமணன் யார் என்பதை மனு ஸ்ம்ருதி விளக்குகிறது. அந்த இலக்கணப்படி வாழாதவன், ‘நானும் பிராமணன்தான்’ என்று கூறிக் கொண்டு, மரண தண்டனையிலிருந்து விலக்குப் பெற முடியாது. இது பற்றி மேலும் நாம் பார்க்க வேண்டிய அம்சங்கள் இருக்கின்றன.


 – CHO
– தொகுப்பு : அல்லயன்ஸ் ஸ்ரீனிவாசன்

Keerthivasan

About Keerthivasan -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :