Saturday, July 11, 2015

Keerthivasan

எங்கே பிராமணன் ? – 21 – மனுநீதி – (மனு ஸ்ம்ருதி) – 6

எங்கே பிராமணன் ? – 21 – மனுநீதி – (மனு ஸ்ம்ருதி) – 6

சோ : தகுதியற்ற பிராமணன், தங்கம் அல்லது தான்யங்களை தானமாகப் பெற்றால் – அவன் ஆயுள் குறையும்; நிலம் அல்லது பசுவை, அவன் தானமாகப் பெற்றால், அவனுடைய உடல் நலம் கெடும்; அவன் குதிரையைத் தானமாகப் பெற்றால் அவன் பார்வையை இழப்பான்; துணியைத் தானமாகப் பெற்றால் – அவன் சரும நோய் வரப் பெறுவான்; வெண்ணையைப் பெற்றால் – அவன் சக்தியை இழப்பான்; எள்ளை தானமாகப் பெற்றால் – அவனுடைய சந்ததியே பாவமுறும்.

கேள்வி : சரி. இவ்வளவு சொன்னாலும், தகுதியற்றவனை பிராமணன் என்றே மனு ஸ்ம்ருதி சொல்கிறதே?

சோ : அது அவன் ஜாதியின் பெயர். முதலில் ஜாதிகள் இல்லை. பின்னர் அது தோன்றியது. மனு ஸ்ம்ருதி இயற்றப்பட்டபோது ஜாதிகள் வந்துவிட்டன. முதலில் எல்லோருமே பிராமணர்கள்தான்.


கேள்வி : இது உங்கள் கருத்தா…?

சோ : ஆதியில் எல்லோருமே பிராமணர்களாகத்தான் இருந்தனர் என்று நான் சொல்வது – என் கருத்து என்று நீங்கள் சந்தேகப்படுவது தவறு. இது நமது நூல்களிலேயே விளக்கப்பட்டிருக்கிறது.

மஹாபாரதத்தில், ‘பல விதமான மனிதர்கள் எப்படி நான்கே வகைகளில் (வர்ணங்களில்) அடக்கப்படுகிறார்கள்?’ என்ற கேள்வி இடம் பெறுகிறது. இது பரத்வாஜரால் கேட்கப்படுகிறது.இதற்கு ப்ருகு முனிவர் இவ்வாறு பதில் அளிக்கிறார்: ‘அந்த நான்கு வகைகளைச் சார்ந்தவர்களிலேயே ஏற்றத் தாழ்வு கிடையாது. முதலில் எல்லோருமே பிராமணர்களாகத்தான் இருந்தார்கள்.

பிரம்மாவினால் இப்படிச் சமமாகப் படைக்கப்பட்ட மனிதர்கள், வெவ்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டபோது, அவற்றிற்கேற்ப அவர்கள் நான்கு வர்ணங்களாக வகைப்படுத்தப்பட்டனர்.மேலும் கூட, ப்ருகு முனிவர் இதை விளக்குகிறார். முதலில், இந்தப் பிராமணர்கள் இடையே மாறுதல்கள் தோன்றியதை அவர் இவ்வாறு எடுத்துரைக்கிறார்:

‘உலக இன்பங்களில் ஆர்வம்; கோப தாபங்கள்; துணிவு – ஆகியவற்றை முதன்மையாகக் கொண்டு வாழ்பவர்கள் – க்ஷத்ரியர்கள் ஆனார்கள். விவசாயம், ஆடு, மாடுகளைப் பராமரிப்பது போன்ற வர்த்தக வாழ்க்கை முறைகளை மேற்கொண்டவர்கள் – வைசியர்கள் ஆனார்கள். ஆசைகளை வளர்த்துக் கொண்டு, பல வகைத் தொழில்களைச் செய்ய முனைந்தவர்கள் – சூத்திரர்கள் ஆனார்கள்’.

அதாவது, ஆசைகள் இன்றி, விரதங்களையும், நியமங்களையும் கடைப்பிடித்து, ஞானத்தை அடைய முனைந்தவர்கள் – பிராமணர்கள் ஆனார்கள்.இவ்வாறு கூறிய ப்ருகு ‘வெவ்வேறு வகையைச் சார்ந்தவர்களாகி விட்ட இவர்கள் அனைவருமே பிராமணர்களாக இருந்தவர்கள்தான் என்பதால் – யாகத்தைச் செய்வதிலும், தர்மத்தை அனுஷ்டிப்பதிலும், இவர்கள் யாருக்கும் எந்தத் தடையும் இல்லை’ என்றும் சொல்கிறார்.

ப்ருகு முனிவரின் சொல், இவ்வாறு அமைந்திருக்கிறது:

இத்யேதி: கர்மபிர்வ்யஸ்தா
த்விஜா வர்ணாந்தரம் கத:
தர்மோ யக்ஞ்யக்ரியா தேஷாம்
நித்யம் ந ப்ரதிஷித்யதே

பிராமணர்களே தங்கள் நியமங்களைக் கைவிட்டதால், வெவ்வேறு செயல்முறைகளை மேற்கொண்டு, மற்ற மூன்று வர்ணங்களைச் சார்ந்தவர்கள் ஆனார்கள். ஆகையால், தர்ம காரியங்களைச் செய்வதிலும், யாகங்களை நடத்துவதிலும், யாருக்கும் தடை கிடையாது.
மனு ஸ்ம்ருதியும் கூட, ஆதியில் எல்லோரும் பிராமணர்களாக இருந்தனர் என்றே கூறுகிறது. வாழும் வகையை ஒட்டியே வர்ணங்கள் அமைகின்றன என்பதை இது நிரூபிக்கிறது.மனு ஸ்ம்ருதி ஒரு படி மேலேயும் போகிறது. வர்ணங்கள், பிறப்பினால் அடையப்படுகிறவை அல்ல என்பதற்கு, இதைவிட வேறு அத்தாட்சியே தேவையில்லை – என்று கூறும்படியாக, இப்படிச் சொல்கிறது மனு ஸ்ம்ருதி:

சூத்ரோ ப்ராம்மணதாமேதி
ப்ராம்மணஸ்சைதி சூத்ரதாம்
க்ஷத்ரியாஜ்ஜாதமேவம் து
வித்யாத் வைச்யாத் ததைவ ச

சூத்திரன் பிராமணன் ஆகலாம்; பிராமணனும் சூத்திரன் ஆகலாம்; அதேபோல, க்ஷத்ரிய மற்றும் வைச்ய வகைகளைச் சார்ந்தவர்களின் மகன்களும், வேறு வர்ணத்தை அடையலாம்.

இப்படி தெளிவாக, வெவ்வேறு அம்சங்களை விளக்கியுள்ள மனு ஸ்ம்ருதியைக் குறை கூறுவது, துவேஷத்தை திருப்தி செய்யலாமே தவிர, உண்மையை நிலைநாட்ட உதவாது.

 – CHO
– தொகுப்பு : அல்லயன்ஸ் ஸ்ரீனிவாசன்

Keerthivasan

About Keerthivasan -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :