Saturday, July 11, 2015

Keerthivasan

எங்கே பிராமணன் ? – 20 – மனுநீதி – (மனு ஸ்ம்ருதி) – 5

எங்கே பிராமணன் ? – 20 – மனுநீதி – (மனு ஸ்ம்ருதி) – 5

சோ: மனு ஸ்ம்ருதி கூறியுள்ள சில விஷயங்களைப் பார்ப்போம். இவற்றைப் பார்த்தாலே, மனு ஸ்ம்ருதி பற்றி ஏற்பட்டுள்ள தவறான கருத்துக்கள் மாறக் கூடும்; இத்தனைக்கும், இவை ஒரு ‘ஸாம்பிள்’தான். இம்மாதிரி, இன்னமும் கூட மனு ஸ்ம்ருதியில் பல விதிமுறைகள் உள்ளன.

‘பிராமணன்’ என்பவன், வேதம் கற்றிருந்தால் மட்டும் போதாது; துர்குணம் இல்லாதவனாகவும் அவன் இருக்க வேண்டும். பிறருக்கு உதவாத, கருமியாக வாழ்கிற ஒருவன், பிராமண குலத்தில் பிறந்திருந்தாலும், அவன் தாழ்ந்தவனாகவே கருதப்படுவான்.
ச்ரோத்ரியஸ்ய கதர்யஸ்ய
வதான்யஸ்ய ச வார்துஷே:
மீமாம்ஸித்வோ பயம் தேவா:
ஸமமன்னம் அகல்பயன்

ஒருவன் வேதங்களை நன்கு கற்றறிந்த, கருமியாக உள்ள பிராமணன்; மற்றொருவன் தாராள குணம் உடைய, ஆனால் பெரும் வட்டிக்கு பணம் தருகிற தொழிலை நடத்துபவன். இப்படிப்பட்ட இருவரைப் பார்க்கையில், இவர்கள் அளிக்கிற உணவு, சமமாக இகழத் தக்கதே – என்று தேவர்கள் கூறினர்.

இவ்வாறு சொன்னதுடன் மனு ஸ்ம்ருதி நிறுத்தி விடவில்லை; கருமியாக வாழ்கிற, கற்றறிந்த பிராமணனைப் பற்றி, மேலும் இவ்வாறு சொல்லப்பட்டிருக்கிறது.
தான்ப்ரஜாபதிராஹைத்ய மா
க்ருத்வம் விஷமம் ஸமம்
ச்ரத்வாபூதம் வதான்யஸ்ய
ஹதமச்ரத்தயேதரத்
(இருவரும் சமம் என்று நினைத்த) தேவர்களிடம், பிரம்ம தேவன் ‘மாறுபட்ட குணாதிசயங்களையும் அவற்றுக்கிடையே முரண்பட்ட குணங்களும் கொண்ட இந்த இருவரிடையே – பெரும் வட்டிக்குப் பணம் தருகிற வர்த்தகம் செய்பவனின் அன்னம், தயையினால் சுத்தப்படுத்தப்பட்டது; ஆனால் கருமியாக உள்ள வேதம் அறிந்த பிராமணனின் உணவோ, மனமில்லாமல் தரப்படுவது; ஆகையால் அது குற்றமுடையது.

பெரும் வட்டிக்குப் பணம் தருகிறவன் இழிவு உடையவனாகக் கருதப்பட்டதுடன், அவனையும் விட, இழிவானவனாகக் கருமியாக உள்ள பிராமணன் திகழ்கிறான் – என்று மனு ஸ்ம்ருதி கூறுகிறது. வேதங்களை நன்கு கற்றறிவதால் மட்டும், ஒருவன் மேன்மை உடையவனாகி விடுவதில்லை; அவனிடம் குறை இருக்கக் கூடாது என்பது இதிலிருந்து தெளிவாகிறது.

‘பிராமணன்’ என்ற வர்ண அடையாளம் மட்டும் இருப்பதால், ஒருவர் ‘தகுதி’ பெற்றவர் ஆகிவிடவில்லை என்பதையும், மனு ஸ்ம்ருதி பல இடங்களில் விளக்குகிறது. அவற்றில் ஒன்றைப் பார்ப்போம்:
அவ்ரதானாம் அமந்த்ராணாம்
ஜாதிமாத்ரோப ஜீவிநாம்
ஸஹஸ்ரச: ஸமேதானாம்
பரிஷத்வம் ந வித்யதே

விரதங்களைக் கடைப்பிடிக்காத, வேதங்களை அறியாத, தங்கள் ஜாதியை மட்டுமே காட்டி வாழ்கிற, பிராமணர்கள், ஒரு ஆலோசனை சபையில் ஆயிரக்கணக்கில் கூடியிருந்தாலும், அது ஒரு ஆலோசனை சபை என்று ஒருபோதும் ஏற்கப்படாது.

கேள்வி : சரி, பிராமணன் என்ற ஜாதியை மட்டும் நம்பி வாழ்க்கை நடத்த முனைபவர்கள், தகுதியற்றவர்கள் என்று சொல்கிறீர்கள். மனு ஸ்ம்ருதி கூறியதைச் சுட்டிக்காட்டினீர்கள். அது பற்றி ஒரு கேள்வி. அப்படி தகுதியில்லாமல் இருந்தும் கூட, தானம் பெற முனைகிற பிராமணன் பற்றி மனு ஸ்ம்ருதி ஏதாவது சொல்லியிருக்கிறதா?

சோ : அப்படிப்பட்ட பிராமணனுக்குத் தரப்படுகிற தானம், பயன் தராது என்பது மட்டுமல்ல – தானம் தருகிறவனையும் வீழ்த்தும் – என்றும் கூட, மனு ஸ்ம்ருதி கூறியதை ஏற்கெனவே பார்த்தோம். நீங்கள் கேட்ட மாதிரி, அப்படி தகுதியற்றவனாக இருந்தும் தானம் வாங்குகிற பிராமணன் பற்றி மனு ஸ்ம்ருதி கூறுவதைப் பார்ப்போம்.

 – CHO
– தொகுப்பு : அல்லயன்ஸ் ஸ்ரீனிவாசன்

Keerthivasan

About Keerthivasan -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :