Saturday, July 11, 2015

Keerthivasan

திருக்கோயில் வகைகள் – இளங்கோயில் மற்றும் கரக்கோயில் – 3

திருக்கோயில் வகைகள் – இளங்கோயில் மற்றும் கரக்கோயில் – 3

இளங்கோயில்

இளங்கோயில் என்பதனைச் சிலர் பாலாலயம் என்று கூறுவர். பழைய கோயிலைப் புதுப்பிக்கிறபோது, கோயில் திருப்பணி முடிகிறவரையில் அக்கோயில் மூலவிக்கிரகத்தைத் தற்காலிகமாக அமைக்கப்பட்ட சிறு கட்டடத்தில் வைத்திருப்பார்கள். இந்தத் தற்காலிகமான ஆலயத்திற்குப் பாலாலயம் என்பது பெயர். ஆனால், திருநாவுக்கரசர் கூறுகிற இளங்கோயில் பாலாலயம் அன்று; கோயிற் கட்டட வகைகளில் ஒன்றைத்தான் இளங்கோயில் என்று கூறுகிறார். சிலர், இளங்கோயில் என்பது முருகன் கோயிலுக்குப் பெயர் என்று கூறுவர். இதுவும் சரியன்று.

இளங்கோயிலைப் பற்றித் தேவாரத்திலும் சாசனங்களிலும் கூறப்படுகிறது. சோழநாட்டு மீயச்சூர் கோயில் இளங்கோயில் என்று அப்பர் சுவாமிகள் கூறுகிறார். மீயச்சூர் என்பது இப்போது பேரளம் என்று வழங்கப்படுகிறது. "கடம்பூர் இளங்கோயிலிலும் கயிலாய நாதனையே காணலாமே" என்று அப்பர் சுவாமிகள் கூறுகிறார். ஆகவே, கடம்பூர்க் கோயிலும் இளங்கோயில் எனத் தெரிகிறது. (கடம்பூர்க் கோயிலில் கரக்கோயிலும் உண்டு. கடம்பூர்க் கரக்கோயிலைத் திருநாவுக்கரசரே வேறு இடத்தில் கூறுகிறார். கடம்பூர்க் கோயிலிலே கரக்கோயில், இளங்கோயில் என்னும் இரண்டுவகையான கட்டடங்களும் உள்ளன.)

பூதத்தாழ்வார் தமது இரண்டாந்திருவந்தாதியில் ‘வெள்ளத் திளங்கோயி’லைக் கூறுகிறார். இராஜராஜன் காலத்துச் சாசனம் ஒன்று கடம்பூர் இளங்கோயிலைக் குறிப்பிடுகிறது.

திருச்சி மாவட்டம் குளித்தலைத் தாலுகா இரத்தினகிரி என்னும் ஊரில் உள்ள சாசனம், பாண்டியன் ஜடாவர்மன் ஆன திரிபுவன சக்கரவர்த்தி சுந்தர பாண்டியத் தேவர் (கி. பி. 1254 – 1264) காலத்தில் எழுதப்பட்டது. இதில், திருவாலீசுரமுடைய நாயனார், திருக்கயிலாயமுடைய நாயனார் என்னும் இரண்டு கோயில்களும் இளங்கோயில்கள் என்று கூறப்படுகின்றன.

இளங்கோயில் (ஸ்ரீகரக் கோயில்) விமானம்
சித்தூர் மாவட்டம் சந்திரகிரி தாலுக்கா திருச்சோகினூரில் இருந்த ஒரு கோயில் இளங்கோயில் என்று பெயர் பெற்றிருந்தது. இக்கோயிலில் இருந்த கடவுளுக்குத் திரு இளங்கோயில் பெருமானடிகள் என்று பெயர் இருந்தது. இக்கோயில் சில காலத்துக்கு முன்னர் இடிக்கப்பட்டது.

நெல்லூர் மாவட்டம் நெல்லூரில் உள்ள ஒரு வடமொழிச் சாசனம் எளங்கோயில் ஒன்றைக் கூறுகிறது. இளங்கோயிலைத்தான் இந்த வடமொழிச் சாசனம் எளங்கோயில் என்று கூறுகிறது.

சிலர் கருதுவதுபோல் இளங்கோயில் பாலாலயமாக இருந்தால், இந்த வடமொழிச் சாசனம் வடமொழிச் சொல்லாகிய பாலாலயம் என்பதையே கூறியிருக்கும். ஆனால், இளங்கோயில் என்று கூறுகிறபடியால்,இளங்கோயில் பாலாலயம் அன்று என்பதும், கோயில் அமைப்பில் ஒரு வகையானது என்றும் ஐயமறத் தெரிகிறது.

தமிழில் இளங்கோயில் என்று கூறப்படுவதும், சிற்ப நூல்களில் ஸ்ரீகரக் கோயில் என்று கூறப்படுவதும் ஒரே விதமான கட்டடம் என்று தோன்றுகிறது. ஸ்ரீகரம் என்னும் கட்டடம் நான்கு பட்டையான விமானத்தை(சிகரத்தை) உடையது என்று காமிகாகமமும் சிற்ப நூல்களும் கூறுகின்றன. மகாபலிபுரத்துத் திரௌபதையம்மன் இரதம் என்று இப்போது தவறாகப் பெயர் வழங்கப்படுகிற கொற்றவை கோயில் அமைப்பு, ஸ்ரீகரம் என்னும் அமைப்புடையது. இளங்கோயில் என்பதும் இதுவாக இருக்கக்கூடும்.

கரக்கோயில்

தேர் போன்ற வடிவில் கோயில் கருவறை.
திருக்கடம்பூர் கோயில் அமைப்பு கரக்கோயில் அமைப்பு என்று திருநாவுக்கரசர் தமது தேவாரத்தில் கூறியிருக்கிறார். (திருக்கடம்பூர் கோயிலில் இளங்கோயிலும் ஒன்று உண்டு.) சுந்தரமூர்த்தி சுவாமிகளும் கடம்பூர்க் கரக்கோயிலைக் குறிப்பிடுகிறார்.

கரக்கோயிலைக் கற்கோயில் என்னும் சொல்லின் திரிபு என்று சிலர் கருதுவது தவறு. கரக்கோயில் என்பது கோயில் வகையில் ஒரு விதத்தைக் குறிக்கிறது. விஜயம் என்று சிற்ப நூல்கள் கூறுகிற கட்டட அமைப்பு, கரக்கோயிலாக இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. தேர் போன்ற வடிவில் சக்கரங்களுடன் கூடிய கருவறையும், வட்டமான விமானத்தையும் (சிகரத்தை) உடைய கோயிற் கட்டடத்திற்கு கரக்கோயில் (விஜயம்) என்று சிற்ப நூல்கள் பெயர் கூறுகின்றன.

அடுத்த திருக்கோயில் பற்றி இனி வரும் பதிவுகளில் காண்போம்.

ஞான ஆரண்யம்

Keerthivasan

About Keerthivasan -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :