Saturday, July 25, 2015

Keerthivasan

சைவ சித்தாந்தம்: நான் புரிந்து கொண்டது. – 11

சைவ சித்தாந்தம்: நான் புரிந்து கொண்டது. – 10

திருச்சிற்றம்பலம்

மனம்.வாக்கு,காயம் மூன்றையும் இறைவனுக்குத் தொண்டு செய்யும் அடிமையாக்கச் சித்தாந்தம் நான்கு நெறிகளைக் கூறும்.
இறைவனுக்கு மனமுவந்து
1. உடலால் தொண்டு செய்தல் - சரியை
2. வாயாலும் உடலாலும் செய்தல் - கிரியை
3. அந்தக்கரணங்களால் செய்தல் - யோகம்
4. சிந்தித்து தெளிந்து மெய்ப்பொருள் காண்பது - ஞானம் 
இப்பதிவில் யோகம் பற்றி காண்போம்.

யோகம் சைவ நாற்பாதங்களில் மூன்றாவது படியாகக் கூறப்படுவதாகும். சரியை, கிரியை ஆகிய நெறிகளை விட மேலானதாக இந்நெறி சாத்திர நூல்களில் கூறப்படுகின்றது. இதற்கு
இயமம்,
நியமம்,
ஆசனம்,
பிராணாயாமம்,
பிரத்தியாகாரம்,
தாரணை,
தியானம்,
சமாதி
ஆகிய அட்டாங்க யோக உறுப்புக்கள் உள்ளன. இவ்வட்டாங்க யோகங்களிலும் பயிற்சி பெற்று படிப்படியாகத் தேறியவரே யோக நெறியை அனுசரிக்க முடியும். இதனை யோகியரிடம் பயின்ற திடசித்த முடையவர்களே அனுட்டித்து ஈடேற முடியும்.

அட்டாங்க யோகம் எனப்படும் இஃது இந்து சமயத்திற்குப் பொது; சைவ சைவத்திற்கும் உரியது.
யோகத்திற் சரியை - இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம்.
யோகத்திற் கிரியை - பிரத்தியாகாரம், தாரணை.
யோகத்தில் யோகம் - தியானம்.
யோகத்தில் ஞானம் - சமாதி.

யோகமாவது மேற்சொன்ன எட்டு நிலைகளில் படிப்படியாக நிற்றல் ஆகும். அஃதாவது, உலகப் பொருள்களில் செல்லும் ஐம்புலன்களையும் ஒடுக்கி, உள்ளும் புறமும் செல்லும் மூச்சுக் காற்றினைத் தடுத்து நிறுத்தி, மனத்தை ஒருநிலைப்படுத்திப் பரம்பொருளை ஒளிவடிவமாகத் தியானித்தல் எனச் சுருங்கச் சொல்லலாம்.

திருமந்திரம் எட்டு வகையான யோக நிலைகளைக் குறிப்பிட்டு அவற்றை அட்டாங்க யோகம் என்கிறது.
1. இயமம் - கொல்லாமை, வாய்மை, கள்ளாமை, வெஃகாமை(பிறர் பொருளைக் கவர நினையாமை), புலன் அடக்கம் என்பனவாம்.

2. நியமம் - தவம், மனத்தூய்மை, வாய்மை, தத்துவ நூலோர்தல், பெற்றது கொண்டு மகிழ்தல், தெய்வம் வழிபடல்.

3. ஆசனம் - உடலைப் பல்வேறு கோணங்களில் நிறுத்தி, பயிற்சி செய்தல். 

4. பிராணாயாமம் - உயிர் மூச்சைக் கட்டுக்குள் கொண்டுவருதல். இதுவும் இரண்டு வகைப்படும். மந்திரமில்லாது நிறுத்தல் ஒருவகை. பிரணவம் காயத்திரி முதலான மந்திரத்தைச் சொல்லிக்கொண்டு நிறுத்தல் இன்னொரு வகை.

5. பிராத்தியாகாரம் - மனமானது, புலன்கள் வாயிலாக விஷயாதிகளில் சென்று பற்றி உழலாவண்ணம் அடக்குதல்.

6. தாரணை - உந்தி( நாபி),இதயம்,உச்சி என்னும் மூன்றிடத்தும் உள்ளத்தை நிலைநிறுத்தல்;

7. தியானம் - கண்களைத் திறந்தும் திறவாமலும் வைத்துக்கொண்டு சிவ பரம்பொருளை உள்நோக்குதல்.

8. சமாதி - அடிப்படை ஏதுமின்றி மனம் முழுவதும் ஒரே அலை வடிவமாக இருந்து இடம், மையம் இவற்றின் உதவியின்றி எண்ணத்தின் கருத்து மட்டும் நிலைத்து இருப்பது சமாதியாகும். ‘நானே பிரம்மம்’ என்ற கருத்து மறைந்து அதுவே உண்மையாகிவிட்ட அனுபவமே சமாதி. இந்திரியங்கள் எதிலும் ஈடுபடாமலும் மனம் அங்கும் இங்கும் அலையாமலும், துன்பங்களை நீங்கி இன்ப நிலையை அனுபவிப்பது சமாதி.
சமாதிசெய் வார்க்குத் தகும்பல யோகம்
சமாதிகள் வேண்டாம் இறையுட னேகிற்
சமாதிதா னில்லை தானவ னாகிற்
சமாதியில் எட்டெட்டுச் சித்தியும் எய்துமே.திருமந்திரம் - 631.
ஞானிக்கும் காயம் சிவமே தனுவாகும்
ஞானிக்கும் காயம் உடம்பே அதுவாகும்
மேல்நிற்கும் யோகிக்கும் விந்துவும் நாதமும்
மோனிக்குக் காயம்முப் பாழ்கெட்ட முத்தியே.
- (திருமந்திரம் - 2135)

பொருள்: சிவத்தையே நினைந்திருப்பதால் ஞானியின் உடம்பு சிவதனுவாகும். தேவ தர்மத்தை மறந்திருத்தலால் ஞானிக்குரிய உடம்பு சிவத்தினுடையதாகும். சிரசின் மேல் சிந்தித்திருக்கும் யோகிக்கும் விந்துவும் நாதமும் உடம்பாகும். மோனம் என்ற பிரணவ யோகத்தை முடித்தவர் ஆணவம் கன்மம் மாயை என்னும் மூன்றுமான உடம்பு கெட்டு சிவசாயுச்சியம் பெறுவர்.
இத்தகு அட்டாங்க யோகத்தினால் அட்டமா சித்திகளை அடைந்தவர்களே சித்தர்கள் ஆவார்கள்.
அடுத்த பதிவில் ஞானம் பற்றிச் சிந்திப்போம்.

திருச்சிற்றம்பலம்.

பதிவை பற்றிய உங்கள் கருத்துக்களுக்கு: Janarthanam Karthik

Keerthivasan

About Keerthivasan -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :