Saturday, July 25, 2015

Keerthivasan

நாதுராம் கோட்சே வாக்குமூலம் – குற்றப்பத்திரிகைகான மறுமொழி – 3

கோட்சே வாக்குமூலம் – 3

குற்றப்பத்திரிகைகான மறுமொழி – 2.

14. பத்தி B(1);(2)ஆகியவற்றின் கீழ் உள்ள குற்றச்சாட்டு தொடர்பாக, என் வசம் தானியங்கிக் கைத்துப்பாக்கி எண் 606824, துப்பாக்கிக் குண்டுகள் ஆகியவற்றை வைத்திருந்தேன் என்பதை ஒப்புக் கொள்கிறேன். ஆனால், என் வசமிருந்த கைத்துப்பாக்கி தொடர்பாக நாராயண் டி. ஆப்தே அல்லது விஷ்ணு ஆர். கார்கரே ஆகியவர்கள் எதுவும் செய்வதற்கில்லை என்பதைச் சொல்லிக் கொள்கிறேன்.


15. ஆனால் "ஏழாவதாக" என்ற தலைப்பின் கீழ் குறிப்பிட்டுள்ள குற்றச்சாட்டுக்குச் செல்வதற்கு முன்பாக நான் எப்படி டெல்லி வர நேர்ந்தது, ஏன் நான் டெல்லி வந்தேன் என்பனவற்றை விளக்குவது புறம்பானதாய்ப் போகாது. காந்திஜீயுடைய சித்தாந்தத்துக்கு எதிரான சித்தாந்தத்தை அல்லது கொள்கைக் குழாத்தை நான் ஆதரித்தேன் என்ற உண்மையை நான் எப்போதுமே மறைத்துக் கொண்டதில்லை. காந்திஜியால் ஆதரிக்கப்பட்ட முழுமையான அஹிம்சையின் போதனைகள் இந்து சமுதாயத்தை ஆண்மையற்றதாகச் செய்து, இறுதியில் மற்ற சமுதாயங்களின்-குறிப்பாக முஸ்லிம்களின் ஆக்கிரமிப்பை எதிர்ப்பதற்குச் செயலற்றதாகச் செய்துவிடும் என்பதை நான் உறுதியாக நம்பினேன். இந்தத் தீமைக்கு எதிர்ச்செயலாக நான் பொது வாழ்வில் நுழைவதற்கு முடிவு செய்து, இதே கருத்தைக் கொண்டிருந்தவர்களாலான ஒரு குழுவை அமைத்தேன். இதில் ஆப்தேயும் நானும் முன்னோடிப் பங்கேற்று, அதன் பிரச்சாரப் பகுதியாக. 'அக்ரானி ' என்ற நாளிதழைத் தொடங்கினோம். இங்கு நான் குறிப்பிடக்கூடியது என்னவென்றால், நானும், என் குழுவும் அதிகமாக எதிர்த்தது காந்தீய அஹிம்சை போதனைகளை அல்ல. ஆனால் காந்திஜி அவருடைய கருத்துக்களைக் கூறும்போது எப்போதுமே முஸ்லீம்களுக்கு ஆதரவைக் காட்டினார் அல்லது வெளிப்படுத்தினார். அது இந்து சமுதாயத்துக்கும் அதன் நலன்களுக்கும் தப்பெண்ணம் ஏற்ப்படுத்துவதாகவும், தீங்காகவும் இருந்தது. பின்வருவனவற்றில் என் கருத்துக்களை முழுமையாக விவரித்து எண்ணற்ற சம்பவங்களையும் மேற்கோள் காட்டி, அவற்றின் மூலமாக இந்து சமுதாயதிற்க்கு நேர்ந்த எண்ணற்ற இடர்ப்பாடுகளுக்கும், அது தாங்கிக்கொள்ள வேண்டியிருந்த துன்பங்களுக்கும் காந்திஜி எப்படிப் பொறுப்பானார் என்பதைத் தவறாமல் நிறுவியுள்ளேன்.


16. என்னுடைய செய்தித்தாள்களான 'அக்ரானி', "ஹிந்து ராஷ்ட்ரா" ஆகியவற்றில் காந்திஜியின் கருத்துக்களையும், அவருடைய நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வதற்காகப்பின்பற்றிய உண்ணாவிரதம் போன்ற முயற்சிகளையும் நான் எப்போதுமே கடுமையாக விமர்சித்துள்ளேன். காந்திஜி பிரார்த்தனைக் கூட்டங்களை நடத்தத் தொடங்கியபின்னர், நாங்கள்–நானும் ஆப்தேயும்–எதிர்ப்புத் தெரிவிக்கும் அமைதியான ஆர்ப்பாட்டங்கள் நடத்த முடிவு செய்தோம். இத்தகைய ஆர்ப்பாட்டங்களை நாங்கள் பஞ்சகனி, பூனா, பம்பாய், டெல்லி ஆகிய ஊர்களில் நடத்தினோம். இரண்டு சித்தாந்தங்களுக்கும் இடையே பெருத்த இடைவெளி இருந்தது. முஸ்லீம்களுக்கு சலுகைக்கு மேலாக சலுகைகளைக் கொடுக்கக் கொடுக்க அந்த இடைவெளி அகன்றுகொண்டே வந்தது. காந்திஜியின் ஆலோசனை அல்லது மறைமுக ஆதரவு, காந்திஜியால் வழிநடத்தப்பட்ட காங்கிரசின் ஆதரவு, இவற்றால் 1947 ஆகஸ்ட் 15 அன்று நாடு பிரிவினையில் போய் முடிந்தது. இந்தப்பிரச்சனை பற்றி இனி விவரமாக கையாள்கிறேன். 1948 ஜனவரி 13 அன்று நான் கேள்விப்பட்டது, காந்திஜி சாகும்வரை  உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளாரென்பதாகும். இந்த உண்ணாவிரதத்துக்குக் கொடுக்கப்பட்ட காரணம், இந்திய ஐக்கிய நாட்டில் இந்து-முஸ்லீம் ஒற்றுமைக்கான வாக்குறுதியை அவர் விரும்புகிறார் என்பதாகும். ஆனால் நானும் ,மற்றவர்களும் இந்த உண்ணாவிரதத்துக்கான உண்மையான நோக்கம், சொல்லப்பட்டுவரும் இந்து-முஸ்லீம் ஒற்றுமை மட்டுமன்று என்பதையும், ஐக்கிய அரசை பாகிஸ்தானுக்கு ஐம்பத்தைந்து கோடி ரூபாயைக் கொடுக்கச் செய்ய வேண்டும் என்பதற்காகும் என்பதையும் எளிதாகக் கண்டுகொண்டோம். இத்தொகையை அரசு கொடுக்க முடியாது என்று தீவிரமாக மறுத்துவந்தது. இதற்கு மறுமொழியாக, காந்திஜியின் பிரார்த்தனைக் கூட்டங்களில் கடுமையான ஆனால் அமைதியான ஆர்ப்பாட்டம் நடத்துவது என்ற பழைய முறையை ஆப்தே ஆலோசனையாகக் கூறினார். நான் இதற்கு அரைமனத்துடன் சம்மதித்தேன். ஏனென்றால் அதன் பயனின்மையை நான் எளிதாகப் பார்க்க முடிந்தது. இருந்தாலும், மாற்றுத் திட்டம் எதுவும் இன்னும் என் மனதில் தோன்றாததால்  நான் அவருடன் இணைவதற்கு சம்மதித்தேன். இந்தக் காரணத்துக்காகத்தான் என்.டி.ஆப்தேயும்,நானும் 1948 ஜனவரி 14 அன்று பம்பாய் சென்றோம்.


17. நாங்கள்-நானும், ஆப்தேயும்- 1948 ஜனவரி 15 அன்று காலையில் தாதரில் உள்ள இந்து சபா அலுவலகத்துக்கு செல்ல நேர்ந்தது. நான் அங்கே பாட்கேயை காண நேர்ந்தது. என். டி. ஆப்தேயயும், என்னையும் கண்டதும், என். டி ஆப்தேவிடம் பாட்கே பேசினார். அவர் பம்பாய் வந்ததற்க்கான காரணம் என்னவென்று அவரிடம் கேட்டார். ஆப்தே அவரிடம் காரணத்தைக் கூறினார். அதன் பின்னர் பாட்கே, தாம் டெல்லி வருவதற்கும், ஆர்ப்பாட்டத்தில் இணைந்து கொள்வதற்கும்- எங்களுக்கு அவர் அங்கே வருவதில் மறுப்பு எதுவும் இல்லையென்ற நிலையில்- தம் சொந்த விருப்பத்தினை தெரிவித்தார். எங்களை ஆதரிப்பதற்க்கும், முழக்கங்கள் எழுப்புவதற்கும் ஆட்கள் தேவைப்பட்டனர். ஆகவே அவர் வருவதாகக் கூறியதை ஏற்றுக்கொண்டோம். நாங்கள் எப்போது புறப்படப் போகிறோம் என்பதை அவரிடம் தெரிவித்தோம். அதன் பின்னர் பாட்கே, தாம் பிரவீண்சந்திர சேத்தியாவுக்குச் சில பொருள்களைக் கொடுக்க வேண்டியிருப்பதாகவும், அதை ஓரிரு நாள்களில் செய்து முடித்துவிடுவதாகவும், எங்களை 1948 ஜனவரி 17 அன்று பார்ப்பதாகவும் ஆப்தேயிடம் சொன்னார்.


18. தாதரில் இந்துசபா அலுவலகத்தில் பாட்கேயை 1948 ஜனவரி 15 அன்று சந்தித்த பிறகு நான் 1948 ஜனவரி 17 அன்று காலையில் பாட்கேயைப் பார்த்தேன்.


19. நாங்கள் பாட்கேயுடன் தீட்சித் ஜீ மகராஜிடம் சென்றது, தீட்சித் ஜீ மஹாராஜைப் பார்த்தது பற்றியும், காந்திஜி, பண்டித ஜவகர்லால், அஹ்ரவார்டி ஆகியோரைத் தீர்த்துக்கட்டும் பணியை சாவர்க்கர் ஆப்தேயிடமும் என்னிடமும் ஒப்புவித்திருக்கிறார் என்று ஆப்தே, பாட்கேயிடம் சொன்னது பற்றியும் பாட்கே கொடுத்துள்ள அறிக்கை சுத்தமான கட்டுக் கதையாகும். அது பாட்கே மூளையின் விளைபொருளாகும். இதுபோன்று ஆப்தேயோ நானோ, பாட்கேயிடமோ அல்லது வேறு யாரிடமோ எதையும் கூறவில்லை.

வீர சாவர்க்கரின் வழிகாட்டலில் நான் செயல்பட்டேன் என்றும், அவர் உடந்தையாய் இல்லாமல் இருந்திருந்தால் நான் நடந்துகொண்ட வழியில் செயல்பட்டிருக்கவே மாட்டேன் என்றும் தவறாகவே அரசுத்தரப்பில் கூறி வருவதை நான் ஆணித்தரமாக மறுக்கிறேன். உண்மையற்றதும் நியாயமற்றதுமான இந்த குற்றச்சாட்டுக்கு எனது பலத்த ஆட்சேபத்தைத் தெரிவிக்கிறேன். அது என் அறிவுத்திறனுக்கும், மதிப்பீட்டுத் திறனுக்கும் ஏற்படுத்தும் அவமதிப்பு என்று மேலும் கருதுகிறேன். வேறு யாரோ ஒருவரின் கைகளில் நான் ஒரு கருவியாக இருந்தேன் என்று அரசுத்தரப்பில் நிறுவ முயல்வது உண்மைக்கு அப்பாற்பட்ட பழிதூற்றலாகும்.உண்மையிலேயே அது ஒரு பிறழ்வு நிலையின் வெளிப்பாடாகும். 

Keerthivasan

About Keerthivasan -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :