Saturday, August 1, 2015

Keerthivasan

நாதுராம் கோட்சே வாக்குமூலம் – குற்றப்பத்திரிகைகான மறுமொழி – 4

நாதுராம் கோட்சே வாக்குமூலம் – குற்றப்பத்திரிகைகான மறுமொழி – 4

கோட்சே வாக்குமூலம் – 3

20. எனது சகோதரர் கோபால் கோட்சே ஒரு கைத்துப்பாக்கியை வாங்குவதற்கு ஏற்பாடுகள் செய்து கொண்டிருந்தார் என்றும்,அவரைச் சந்திக்க நானும் பூனாசெல்ல விரும்பினேன் என்றும், அவரை பம்பாய்க்குக் கொண்டுவர விரும்பினேன் என்றும் பாட்கேவின் அறிக்கையில் சொல்லப்படவை உண்மையானவை அல்ல. நான் பாட்கேயை 1948 ஜனவரி 15 அன்று சந்தித்த போது, மேலே பத்தி 17-ல் சொல்லப்படதைத் தவிர்த்து எந்தப் பேச்சும் வைத்துக்கொள்ள வில்லை. மேலும் பாட்கே என்னை 1948 ஜனவரி 16 அன்று பூனாவில் சந்தித்தார் என்று அவருடைய அறிக்கையில் கூறியிருப்பதும் பொய்தான். அவருடன் பூனாவில் நான் நிகழ்த்தியதாக கூறப்பட்டுள்ள உரையாடல் பற்றி பாட்கேயின் அறிக்கையில் அளித்துள்ள சான்றாவணமும் பொய்; அது உண்மையன்று. 1948 ஜனவரி 16-அன்று நான் பூனாவில் இல்லை. இதிலிருந்தே பெரிய கைத்துப்பாக்கியை மாற்றிக் கொள்வதற்காக ஒரு சிறு துப்பாக்கியை அந்த நாளில் நான் அவருக்குக் கொடுத்தேன் என்பது உண்மையன்று என்பது தெளிவாக புலனாகும்.

21. நாங்கள்-ஆப்தேயும், நானும்-டெல்லியில் காந்திஜியின் பிரார்த்தனைக் கூட்டத்தில் ஒரு பலமான, ஆனால் அமைதியான ஆர்ப்பாட்டத்தை எத்தனை சீக்கிரமாக முடியுமோ, அத்தகைய வாய்ப்புக்குள் நடத்தத் திட்டமிட்டோம் என்பதை நான் முன்பே கூறியிருக்கிறேன். அந்த நோக்கத்தில் ஆப்தேயும் நானும் அங்கு செல்லவிருந்தோம். பத்தி 17-இல் குறிப்பிட்டதுபோன்று, மேற்குறித்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள பாட்கே டெல்லி வருவதற்கு முன்வந்தார். வெற்றிகரமான ஆர்ப்பாட்டத்தை நடத்துவதற்கு சில தொண்டர்களை எங்களுடன் அழைத்துச் செல்ல வேண்டிய அவசரத் தேவையை நாங்கள் உணர்ந்தோம். நாங்கள் டெல்லி புறப்படுவதற்க்கு முன்பாக, பயணச்செலவுக்கும், தொண்டர்களின் பிற செலவுகளுக்கும் பணம் வசூலிக்கத் தொடங்கினோம்.

22. நாங்கள் 1948 ஜனவரி 17 அன்று சாவர்க்கரைப் பார்த்தோம் என்பதையும் அல்லது சாவர்க்கர் எங்களை 'யஷஸ்வி ஹௌன்யா', 'வெற்றியுடன் திரும்புங்கள்' என்று சொல்லி வாழ்த்தினார் என்பதையும் நான் அழுத்தம் திருத்தமாக மறுக்கிறேன். இதுபோன்று பாட்கேயுடன் உரையாடினோம் என்பதையும்,ஆப்தேயோ அல்லது நானோ, 'தத்யராவணி அசே பவிஷ்ய கேலே அஹே கி காந்திஜி ஷம்பார் வர்ஷே பரலி- அதா அபலே காம் நிஷ்சித ஹோனார் யத் கஹி சன் ஷயா நஹி' என்ற சொற்களை கூறினோம் என்பதையும் நான் மறுக்கிறேன். பாட்கேயை 1948 ஜனவரி 15 அன்று தாதர் ஹிந்து சபா அலுவலகத்தில் சந்தித்த பின்னர், நாங்கள்-ஆப்தேயும், நானும்- அச்சகம் தொடர்பான எங்கள் வேலையில் இறங்கிவிட்டோம்.

23. நானும் ஆப்தேவும் டெல்லிக்கு விமானம் மூலம் 1948 ஜனவரி 17 அன்று வந்து மெரினா ஓட்டலில் தங்கினோம். 1948 ஜனவரி 20 அன்று காலை பாட்கே ஓட்டலுக்கு வந்தார். என் முன்னிலையில் ஆப்தேயிடம் தாமும் தம் வேலையாள் கிஷ்டாவய்யாவும் மாலையில் ஆப்தேயுடன் பிரார்த்தனை மைதானத்துக்குச் சென்று, ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ள இடத்தில் பிரார்த்தனை எப்படி நடைபெறுகிறது என்ற காட்சியைக் காணவிருப்பதாகக் கூறினார். காலையில் பாட்கே வந்தபோது, நான் கடுமையான தலைவலியால் உடல் நலமின்றிப் படுத்திருந்தேன். 

நான் உடல் நலமில்லாமல் இருந்ததால், நான் பிரார்த்தனை மைதானத்துக்கு வர இயலாமல் போகலாம் என்று பாட்கேயிடம் கூறினேன். ஆப்தே, கோபால் கோட்சே, கார்கரே, மதன்லால், பாட்கேயும் அவருடைய வேலையாள் சங்கரும் ஆகிய எல்லோரும் மெரினா ஓட்டலில் ஒன்று சேர்ந்தனர் என்றும், சங்கரும் பாட்கேயும் அங்கு உணவருந்தினர் என்றும் ஆப்தெ, கார்கரே, மதன்லால், பாட்கே ஆகியோர் குளியலறையில் வெடிப்பஞ்சுப்பலகையிலும், கைக்குண்டுகளிலும் வெடிப்பைத் தூண்டும் கருவி, எரியிணைப்புத்திரி, தீவைக்கும் குழாய் ஆகியவற்றைப் பொருத்திக் கொண்டிருந்தனர் என்றும், சங்கரும் நானும் கதவின் இருபுறங்களிலும் நின்றுகொண்டிருந்தோம் என்றும் பாட்கே கூறியுள்ள அறிக்கைகள் முற்றிலுமே பொய்யானவை. 

"பாட்கே இதுதான் நம்முடைய கடைசி முயற்சி; இந்தப் பணி நிறைவேற வேண்டும்- எல்லாம் முறையாக ஏற்பாடு செய்யப்படுவதைப் பார்த்துக் கொள்ளுங்கள் " என்ற சொற்களை பாட்கே என் வாயில் வைத்துத் திணிக்கிறார். அந்த நாளிலோ, வேறு நாளிலோ இத்தகைய சொற்களையோ பாட்கேயிடம் கூறியதாகக் கூறுவதை நான் மறுக்கிறேன். முன்பே கூறியது போன்று, பாட்கே காலையில் அறைக்கு வந்து, தாம் மாலையில் பிரார்த்தனை கூட்டத்தில் கலந்துகொள்ளப் போவதாக என்னிடம் தெரிவித்தார். பாட்கே சொல்லியிருப்பது போன்று அன்று என் அறையில் எந்தக் கூட்டமும் நடபெறவில்லை. எனக்குத் தெரிந்தவரை, கோபால் கோட்சே டெல்லியிலேயே இல்லை. அறையில் யாரும் வெடிப்பஞ்சுப் பலகையில் வெடிப்பைத் தூண்டும் கருவி ,எரியிணைப்புத்திரி, தீவைக்கும் குழாய் ஆகியவற்றை ஏற்பாடு செய்யவோ அல்லது பொறுத்தவோ இல்லை. உண்மையிலேயே அத்தகைய வெடிமருந்துப் பொருட்கள் எதுவும் என்னிடமோ, ஆப்தேவிடமோ இல்லை. குழுவில் ஆயுதங்கள், வெடிமருந்துப் பொருட்கள் ஆகியவற்றை விநியோகித்தது பற்றிய பாட்கேயின் விரிவான விளக்கமும், பொய்யான பெயர்களை ஊகித்திருப்பது ஆகிய எல்லாமே பொய். இவற்றிற்கெல்லாம் சான்றாதாரத்தைப் பற்றியும், இவ்வறிக்கைகளின் பொய்மையைப் பற்றியும் நான் விவாதிக்கத் தேவையில்லை. எனது வழக்கறிஞர் அவருடைய வாதாத்தில் அதனைச் செய்வார்.

Keerthivasan

About Keerthivasan -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :