நாதுராம் கோட்சே வாக்குமூலம் – குற்றப்பத்திரிகைகான மறுமொழி – 5
![]() |
நிற்போர்: சங்கர் கிச்தியா, கோபால் கோட்சே, மதன்லால் பக்வா, திகம்பர் பட்கே. அமர்ந்திருப்போர்: நாராயண் ஆப்தே, வினாயக் தாமோதர் சாவர்க்கர், நாத்தூராம் கோட்சே, விஷ்ணு ராமகிருஷ்ண கார்கரே |
கோட்சே வாக்குமூலம் – 3
24. நான் மேலே கூறியதுபோன்று கடுமையான தலைவலியால் உடல் நலமின்றி
இருந்ததால், நான் பிரார்த்தனை மைதானத்துக்குக் கூட செல்லவில்லை. மலையில்
6.00 மணி வாக்கில் ஆப்தே மெரினா ஓட்டலுக்குத் திரும்பி வந்து, தாம்
பிரார்த்தனைக் கூட்டத்தைப் பார்த்ததாகவும், ஓரிரு நாளில் ஆர்ப்பாட்டத்தை
நடத்த இயலும் என்றும் என்னிடம் தெரிவித்தார். ஏறத்தாழ ஒருமணி நேரம் கழித்து
காந்திஜி யின் பிரார்த்தனைக் கூட்டத்தில் ஒரு குண்டுவெடிப்பின் காரணமாக
கொந்தளிப்பு ஏற்பட்டதைக் கேட்டோம். ஓர் அகதி கைதாகி இருப்பது பற்றியும்
கேள்விப்பட்டோம். உடனடியாக டெல்லியைவிட்டுச் செல்வது உசிதமானதென்று ஆப்தே
எண்ணியதால் நாங்கள் அவ்வாறே புறப்பட்டுவிட்டோம். நான் பாட்கேயை இந்துசபா
பவனில் 1948 ஜனவரி 20 அன்று சந்தித்தேன் என்பது உண்மையன்று. பிர்லா
இல்லத்தில் 1948 ஜனவரி 20 அன்று நான் இருந்ததாகப் பல சாட்சிகள் சாட்சியம்
கூறி உள்ளனர். ஆனால் அவர்கள் வெகுவாகத் தவறு புரிந்துள்ளனர் என்பதை நான்
அழுத்தம் திருத்தமாகக் கூறுகிறேன். அவர்கள் வேறு யாரோ இருந்ததைப்
பார்த்து, நான் இருந்ததாகக் குழப்பிக்கொண்டுள்ளார்கள் என்பதைப் பணிவுடன்
தெரிவித்துக் கொள்கிறேன். நான் அன்றைய நாளில் பிர்லா இல்லத்தில் இல்லை என்ற
உண்மையால், இந்தச் சாட்சிகளில் பலர் அடையாளப்படுத்தியது முற்றிலும்
நம்பமுடியாததாகிறது. நான் துக்ளக் சாலை காவல் நிலையத்தில்
வைக்கப்பட்டிருந்தபோது, இந்தச் சாட்சிகளில் பலருக்குக்
காண்பிக்கப்பட்டபோதுதான் இவர்கள் என்னை அடையாளப்படுத்தினர். மேலும் என்
தலையில் கட்டுப்போடப்பட்டிருந்ததால், அதுவும் அக்கட்டு 1948 பிப்ரவரி 12வரை
இருந்ததால் என்னை அடையாளப்படுத்துவது எளிதாகப் போயிற்று. காவல்துறை
சாட்சிகள் இதற்கு மாறாக சாட்சியம் கூறியுள்ளதோடு, அவர்களே சட்டத்தை கையில்
எடுத்துக்கொண்டுள்ளனர். டெல்லி சாட்சிகளுக்காக, பம்பாயில் முதன்முதலாக நடந்த
அடையாளப்படுத்தும் அணிவகுப்பில் இதுபற்றி நான் ஒரு புகார்
கொடுத்துள்ளேன்.
25. டெல்லியில் காந்திஜியின் பிரார்த்தனை கூட்டத்தில் ஆர்ப்பாட்டம்
நடத்துவது பற்றிய எதிர்காலத் திட்டத்தை விரிவாகக் கருதியபின்னர் ,நான்
ஆப்தேயுடன் இணைவதற்க்கு விரக்தியுடன் சம்மதித்தேன். இப்புதிய சூழ்நிலையில்,
பம்பாயிலிருந்தும் பூனாவிலிருந்தும் ஆர்வமுள்ள வலுவான தொண்டர்களைக்
கொண்டுவருவது என்பது இயலாததாயிற்று. இதற்கிடையில் எங்கள் பணம் முழுவதும்
தீர்ந்துவிட்டது. பம்பாயிலிருந்து டெல்லிக்கும், பின்னர் திரும்பிச்
செல்வதற்க்கும் தொண்டர்கள் அணிக்கு செலவு செய்ய எங்களால் இயலாமல் போயிற்று.
ஆகவே நாங்கள் குவாலியர் சென்று டாக்டர். பர்சூர் அவர்களை பார்க்க முடிவு
செய்தோம். அவரிடம் இந்து ராஷ்ட்ர சேனாவில் இருந்த தொண்டர்கள்
இருந்தனர். குவாலியரிலிருந்து டெல்லிக்குத் தொண்டர்களை அழைத்துச் செல்வது
கிட்டத்தட்ட சிக்கனமான திட்டமாக இருந்தது. ஆகவே 1948 ஜனவரி 27 அன்று
டெல்லியை விமானம் மூலம் அடைந்து அங்கிருந்து குவாலியர் புறப்பட்டோம்.
இரவு
நேரத்தில் ரயில் வண்டியில் பயணம் செய்து குவாலியருக்கு அதிகாலையில் போய்ச்
சேர்ந்தோம். அப்போது இருட்டாய் இருந்ததால் ரயில் நிலையத்திற்கு அருகாமையில்
ஒரு தர்ம சாலையில் தங்கிவிட்டு, காலையில் நாங்கள் டாக்டர். பார்சூரை அவரது
இல்லத்தில் பார்த்தோம். அவர் தமது மருந்தகத்துக்குச் செல்லும் அவசரத்தில்
இருந்தார். அவர் எங்களை பிற்பகல் வந்து சந்திக்குமாறு கூறினார். அவரை மாலை
நான்கு மணிக்குச் சந்தித்த போது அவர் எங்களுக்கு உதவ விரும்பவில்லை
என்பதையும், அவருடையத் தொண்டர்கள் உள்ளூர்ப்பிரச்சனைகளில்
ஆழ்ந்திருந்தார்கள் என்பதையும் தெரிந்து கொண்டோம். முழுமையான ஏமாற்றத்துடன், நான் ஆப்தேயை பம்பாய் அல்லது பூனாவுக்குச் சென்று அங்குத் தொண்டர்களுக்கு
முயன்று பார்க்குமாறு கூறிவிட்டு, அகதிகளில் தொண்டர்கள் கிடைப்பார்களா
என்று நான் முயல்வதாக ஆப்தேயிடம் கூறிவிட்டு டெல்லி
திரும்பினேன்.
ஆப்தேயும், நானும் துப்பாக்கி அல்லது கைத்துப்பாக்கி
கள்ளத்தனமாக விற்பனைக்குக் கிடைப்பதால், அவற்றை வாங்குவதற்கு
குவாலியருக்குச் சென்றோம் என்பதை உறுதியாகவும், அழுத்தம் திருத்தமாகவும்
மறுக்கிறேன். நான் டெல்லியை அடைந்ததும், மனக்கசப்போடு டெல்லியிலிருந்த
அகதிகள் முகாம்களைப் பார்வையிட்டேன். முகாம்களில் நான் சுற்றியபோது, என்
எண்ணங்கள் நிச்சயமானதும் முடிவானதுமான ஒரு திருப்பத்தை அடைந்தன. எதேச்சையாக,
ஆயுதங்களை விற்பனை செய்யும் அகதி ஒருவரைக் குறுக்கிட வேண்டியிருந்தது. அவர்
என்னிடம் ஒரு கைத்துப்பாக்கியைக் காட்டினார். அதை வைத்துக்கொள்ள நான்
விரும்பி ஈர்க்கப்பட்டு, அவரிடமிருந்து நான் அதனை வாங்கினேன். பின்னர் நான்
சுடுவதற்க்காகப் பயன்படுத்திய கைத்துப்பாக்கி அது. டெல்லி ரயில்
நிலையத்துக்கு வந்ததும் 29ஆம் தேதி இரவெல்லாம் இப்போதைய
குழப்பத்தையும், இந்துக்களின் தொடர் அழிவையும் முடிவுக்குக் கொண்டுவர நான்
மேற்கொண்ட உறுதிப்பாடு பற்றிய சிந்தனையிலும், மறு சிந்தனையிலும்
கழித்தேன். இப்போது, அரசுத் தரப்பில் பெரிதாகக் குறிப்பிட்டுள்ள
அரசியலிலும், மற்றவற்றிலும் வீர சாவர்க்கரிடம் என்னுடைய உறவுகள் குறித்து
விளக்குகிறேன்.
நன்றி: சாலிய மஹரிஷி சாலியர்
நன்றி: சாலிய மஹரிஷி சாலியர்