Saturday, July 11, 2015

Keerthivasan

சைவ சித்தாந்தம்: நான் புரிந்து கொண்டது. – 7

சைவ சித்தாந்தம்: நான் புரிந்து கொண்டது. – 7

திருச்சிற்றம்பலம்.

மூவகை உயிர்கள் :
உயிர்கள் எண்ணற்றவை யாயினும் பாசப் பிணிப்புப் பற்றி அவற்றை மூவகைப் படுத்திக் கூறுவர். அவை விஞ்ஞானகலர், பிரளயாகலர், சகலர் என்பன.


மும்மலங்களுள் ஆணவமலம் ஒன்றை மட்டும் உடைய உயிர்கள் விஞ்ஞான கலர். ஆணவத்தோடு கன்மத்தையும் உடைய உயிர்கள் பிரளயா கலர். ஆணவம், கன்மம், மாயை என்னும் மூன்று மலங்களையும் உடைய உயிர்கள் சகலர். விஞ்ஞானகலர், பிரளயா கலர் என்ற பெயர்களில் உள்ள அகலர் என்பதற்குக் கலை இல்லாதவர் என்பது பொருள். சகலர் என்பதற்குக் கலையோடு கூடியவர் என்பது பொருள். கலை என்பது மாயையைக் குறிக்கும். மாயையோடு கூடியவர் சகலர் எனப்பட்டனர். அத்தகைய மாயையோடு கூடாமையால் மயக்கம் இல்லாதவர் என்ற பொருளில் ஏனைய இருவகையினரும் அகலர் எனப்பட்டனர். சகலர் ஆகிய நாம் வாழும் உலகம் இதுவாக, பிரளயாகலர் வாழும் உலகங்களும், விஞ்ஞான கலர் வாழும் உலகங்களும் வேறு வேறாய் உள்ளன. இம்மூவகை உயிர்களுக்கும் முதல்வன் ஞானத்தை உணர்த்தும் முறையை கூறுகின்றார் மெய்கண்ட நாயனார்.

மெய்ஞ்ஞானம் தானே விளையும் விஞ்ஞானகலர்க்கு;
அஞ்ஞான அச்சகலர்க்கு அக்குருவாய் - மெய்ஞ்ஞானம்
பின் உணர்த்தும்; அன்றிப் பிரளயா கலருக்கு
முன் உணர்த்தும் தான் குருவாய் முன்.
(சிவஞானபோதம் - 47)
இதன் பொருள்:
விஞ்ஞானகலர்க்கு முதல்வன் உயிர்க்குயிராய் உள்நின்று ஞானத்தை உணர்த்துவான். இவ்வாறு உணர்த்துதல், தன்மையில் நின்று உணர்த்துதல் எனப்படும்.

பிரளயா கலருக்கு முதல்வன் நான்கு தோள்களும், முக்கண்ணும், கறைமிடறும் முதலியவற்றை உடைய தனது இயற்கை வடிவோடு- முத்தொழிலை நடத்துவதற்குக் கொள்ளும் இந்த உருவோடு முன்னே நின்று குருவாய் உபதேசம் செய்து உண்மை ஞானத்தை உணர்த்துவான். இவ்வாறு உணர்த்துதல் முன்னிலையில் நின்று உணர்த்துதல் எனப்படும்.


சகலருக்கு முதல்வன் குருமூர்த்தி வடிவாய் மானுட வடிவிலே மறைந்து நின்று உண்மை ஞானத்தை உணர்த்துவான். இவ்வாறு உணர்த்துதல் படர்க்கையில் நின்று உணர்த்துதல் எனப்படும்.

விளக்கம்:
ஞானத்தை உணர்த்தும் முறை மூன்றாதல் :
விஞ்ஞானகலர் முதலிய மூவருக்கும் முறையே தன்மை, முன்னிலை, படர்க்கையில் நின்று இறவைன் ஞானத்தை உணர்த்துவான் என வரையறுத்துக் கூறினாராயிற்று.

எனவே எல்லாவுயிர்களுக்கும் இறைவன் ஞானத்தை உணர்த்தும் முறை இவ்வாறு மூன்றாகும் என்பது விளங்கும்.
மேலும், இறைவன் உணர்த்தாது எவருக்கும் ஞானம் நிகழாது என்பதும் பெறப்படும்.


தானே விளையும் என்பதன் பொருள் :
முதலடியில், விஞ்ஞானகலர்க்கு இறைவன் உணர்த்தாமலே ஞானம் தானே விளையும் என்பது போலக் கூறப்பட்டுள்ளது. அவ்வாறு பொருள் கூறினால் அது சித்தாந்தத்திற்கு மாறாகும். எனவே, தானே விளையும் என்பதற்கு எளிதில் விளையும் என்று பொருள் காணுதலே தக்கது.

இனி முதல்வன் எல்லாவுயிர்க்கும் ஒரு வகையிலே ஞானத்தை உணர்த்தாமல் மேற்கூறியவாறு வேறு வேறு வகையில் உணர்த்துதற்குக் காரணம் என்னை? என்னும் வினாவுக்கு விடையாக இரண்டாம் எடுத்துக் காட்டினைக் கூறுகின்றார்.

சகலர்க்கு இறைவன் குருவாகி எழுந்தருளி வந்து உபதேச மொழியாலும் நூல்கள் வாயிலாகவும் உண்மைகளை உணர்த்தி அவற்றைக் கேட்டும் பல காலும் சிந்தித்தும் படிப்படியே தெளிவுடையுமாறு செய்வித்தாலேயே, அவர்களுக்குத் தூல நிலையை உடைய ஆணவ மலம் நீங்கி உண்மை ஞானம் விளங்கும்.

பிரளயாகலருக்கு இவ்வாறெல்லாம் மிகவும் உணர்த்த வேண்டுவதில்லை. இறைவன் ஒரு முறை தன் இயற்கை வடிவிலே தோன்றி உணர்த்திய அளவிலே, சூக்கும நிலையை உடைய ஆணவ மலம் நீங்கி அவர்க்கு உண்மை ஞானம் விளங்கும்.

விஞ்ஞான கலருக்கு இறைவன் வெளிப்பட்டுத் தோன்ற வேண்டும் என்பதும் இல்லை. உயிருக்குயிராய் உள்நின்று உணர்த்தினாலே அதி சூக்கும நிலையை உடைய ஆணவ மலம் நீங்கி உண்மை ஞானம் விளங்கும்.

அறிவிக்க அன்றி அறியா உளங்கள்;
செறியுமாம் முன்பின் குறைகள்- நெறியின்
குறையுடைய சொற்கொள்ளார் கொள்பவத்தின் வீடுஎன்;
குறைவில் சகன் சூழ்கொள் பவர்க்கு.
(சிவஞானபோதம் - 48)

இதன் பொருள் :
படிமுறையில் தம் தம் பக்குவ நிலைக்கு ஏற்ப அறிவிக்கவே அறியும் தன்மையுடையன உயிர்கள். எனவே எல்லாவுயிர்க்கும் ஒரு முறையிலே அறிவித்தால் அறிய வல்லன அல்ல என்பது விளங்கும்.

உயிர்களுள் பிரளயாகலரும், சகலரும் குறைவில்லாத குருமூர்த்தியின் உபதேசத்தைப் பெற்றே உண்மையை உணர்பவர் ஆவர். அவர்க்கு அவ்வுபதேசமாகிய இன்றியமையாப் பொருள் முறையே முன்னிலையிலும் பின் நிலையிலும் கிடைக்கும்.

இனி, அத்தகைய உபதேசத்தைக் கொள்ளாமலே ஞானம் பெறுதற்கு உரியவர் விஞ்ஞான கலர். அவ்வுயிர்களிடத்தில் இறைவனது இருப்பு மாத்திரத்தில் உண்மை ஞானம் நிகழும்.

திருச்சிற்றம்பலம்.
பதிவை பற்றிய உங்கள் கருத்துக்களுக்கு: Janarthanam Karthik

Keerthivasan

About Keerthivasan -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :