Saturday, July 11, 2015

Keerthivasan

சைவ சித்தாந்தம்: நான் புரிந்து கொண்டது. – 8

சைவ சித்தாந்தம்: நான் புரிந்து கொண்டது. – 8

திருச்சிற்றம்பலம்.

வினைகளின் மூன்று நிலைகள்:

1. பழவினை - தொல்வினை (சஞ்சிதம்) 2. புதுவினை - வருவினை(ஆகாமியம்) 3. ஊழ்வினை - நுகர்வினை(பிராரத்துவம்)

1. பழவினை (சஞ்சிதம்): மூலவினை முதற்கொண்டு செய்த வினைகள் பக்குவப்பட்டுப் பாவ புன்னியப்பயனைக் கொடுக்கும் நிலை அடையும் வரை பலவினையாய்க் குவிந்திருக்கும். தென்னையும் வாழையும் ஒரே நேரத்தில் பயிர் செய்தாலும் அவை தரும் நிலை முன்பின்னாக இருக்கும்.அது போன்றே வினைகளும் முன்பின்னாக பக்குவமடையும்.

2. புதுவினை (ஆகாமியம்): பக்குவப்பட்ட வினைகளை அவ்வவ் உயிர்களே அனுபவிக்க வேண்டுமென்பது நியதி.ஆனால் வினைகளோ உயிர்களோ தாமே சென்று ஒன்டரியோன்று பற்றாது.அவைகளை இறைவனே கூட்டி வைப்பான். அதன் பயனாக வினைகளுக்கு ஏற்பப் பிறப்பு,உடல்,வயது முதலியன உயிர்பெறும்.இவற்றைக்கொண்டு இப்பிறவியில் செய்யும் வினைகள் 'ஆகாமியம்' எனப் பெயர்பெறும்.

3. ஊழ்வினை (பிராரத்துவம்):செய்த எல்லா வினைகளின் பயன்களையும் ஒரே பிறவியில் அனுபவித்துத் தீர்த்தல் முடியாது.எடுத்த பிறவியில் எவ்வெவ் வினைகளை அனுபவிக்க வேண்டுமேன்றுளதோ அந்த அளவு வினையே ஊழ்வினையாம்.ஊழ்வினையை அனுபவிக்கும் பொழுது செய்யும் பலவினைக் குவியலை அடைந்து பக்குவமாகிய பின் புதுவினையாகி அதற்குப்பின் ஊழ்வினையாகும்.

இவ்வாறு உயிரை வினைகள் ஒன்றையொன்று தொடர்ந்து பற்றி வந்தால் பிறவிக்கு எப்பொழுது முடிவு ஏற்படும்.இதற்குச் சைவ சித்தாந்தம் கூறும் விடை என்ன?எல்லாம் வினைப்படியே நடக்கும் என்றால் கடவுள் என ஒருவர் தேவையா?என்ற எண்ணம் சிலருக்குத் தோன்றும்.

உயிருக்கு தனு, கரண, புவன போகங்களைக் கொடுத்து உயிருக்கு உயிராக நின்று இயக்குவது பதி.அவனன்றி ஓர் அணுவும் அசையாது என்று சாத்திரமும் தோத்திரமும் கூறும்.
புத்திமற் காரியத்தால் பூதாதி புருடன் தானும், அத்தனு கரணம் பெற்றால், அறிதலால் அவற்றை மாயை உய்த்திடும் அதனால் மாயைக்கு உணர்வு ஒன்றும் இல்லை என்றே வைத்திடும் அதனால்- எல்லாம் வருவிப்பான் ஒருவன் வேண்டும்.

(சிவஞான சித்தியார் - 37)


மாயையையும் செயல்படுத்துபவனாகிய ஓர் இறைவன் ஏன் என்று கேட்பின் அதற்கு உரிய விடையை உள்ளபடி கூறுவேன் கேட்பாயக. பூதம் முதலிய இவ்வுலகம் அனைத்தும் அறிவுடைய ஒரு பொருளால் இயற்றப்படுவனவே ஆகும். உயிராகிய புருடனும் அறிவுடைப் பொருளே ஆயினும் முதலில் எதனையும் அறியாது இருந்து அதன் பின்னர் உடல் கருவி ஆகியவற்றைப் பெற்ற பிறகே அறிகின்ற தன்மை உடையவனாகிறான். உடல், கருவி முதலியனவும் மாயையை முதற்காரணமாகக் கொண்டே தோன்றுகின்றன. மாயையோ அறிவற்ற பொருள் என்றே கொள்ளப்படும் இவற்றின் அடிப்படையில் பார்த்தால் ஒழிபு அளவையினால் இவ்வனைத்திற்கும் வேறாய் மாயையிலிருந்து பூதம் முதலிய உலகப் பொருள் யாவற்றையும் தோற்றுவிக்கிற கடவுள் ஒருவர் வேண்டும் என்று அறியலாம்.

புத்திமற்காரியம் - அறிவோடு பொருந்திய செயல். இது வடசொல் முடிபு. மண்ணிலிருந்து குடத்தினைத் தோற்றுவிக்கிற அறிவினை உடைய வினைமுதல் ஒருவன் வேண்டும் என்பதை இப்பாடல் உணர்த்திற்று. பூதாதி அறிவற்றது. புருடன் என்னும் ஆன்மா உடல் கருவி இவற்றைப் பெற்ற பிறகே அறிகிறான். மாயையும் அறிவற்றது. இவை மூன்றுக்கும் வேறாக உலகத்தைத் தோற்றுவிக்கிற ஒரு கடவுள் உளன் என்று அருள் நந்தி சிவாச்சாரியார் நிறுவினார்.
நல்குரவும் இன்பமும் நலங்கள்அவை ஆகி,
வல்வினைகள் தீர்த்துஅருளும் மைந்தன் இடம் என்பர்.
– திருஞான சம்பந்தர் ஸ்வாமிகள் தேவாரம்.

திருச்சிற்றம்பலம்.

பதிவை பற்றிய உங்கள் கருத்துக்களுக்கு: Janarthanam Karthik

Keerthivasan

About Keerthivasan -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :