Saturday, August 1, 2015

Keerthivasan

நாதுராம் கோட்சே வாக்குமூலம் – குற்றப்பத்திரிகைகான மறுமொழி – 7

நாதுராம் கோட்சே வாக்குமூலம் – குற்றப்பத்திரிகைகான மறுமொழி – 7

Narayan Apte - நாராயணன் ஆப்தே

கோட்சே வாக்குமூலம் – 7


32. இந்த நாளிதழின் நிருபர்களாக ஆப்தேயும், நானும் இந்து சங்கத்தார் அலுவலகத்தைப் பார்வையிடுவது வழக்கம். அது வீர சவர்க்கரின் இல்லத்துத் தரைத் தளத்தில் நடுவிலிருந்த பொது அறையில் இருந்தது. இந்து சங்கத்தார் அலுவலகம் வீர  சவர்க்கரின் செயலாளர் ஜி.வி.டாம்லே, வீர சவர்க்கரின் மெய்ல்காவலர் அப்பா கசர் ஆகியோர் பொறுப்பிலிருந்தது. வீர சவர்க்கர் பத்திரிகைகளுக்கு வெளியிடும் போது அறிக்கைகளைச் செயலாளர் டாம்லேயிடம் பெறுவதற்கும், தலைவரின் சுற்றுப்பயணம் பற்றிய முக்கியத் தகவல்களையும், பேட்டிகள் முதலியவற்றையும் குறித்துக் கொள்வதற்கும் நாங்கள் அலுவலகத்துக்குச் செல்வது வழக்கமாயிருந்தது. அவற்றை வெளியிட செயலாளர் உரிமையளிக்கப் பட்டிருந்தார். அதே வீட்டின் தரைத் தளத்தின் இரு அறைகளில், ஆங்கில வார இதழான  ஃப்ரீ இந்துஸ்தான் இதழைச் செப்பம் செய்து கொடுக்கும் ஏ.எஸ்.பிடே என்பவரும் குடித்தனக்காரராக குடும்பத்துடன் வசித்து வந்தார். ஆப்தேயும், நானும் சவர்க்கர் சதனுக்குச் செல்வதற்கு இரண்டாவது காரணம், இந்து சங்கத்தார் அலுவலகத்தில் கூடுகின்ற பிடே, டாம்லே, கசர் மற்ற சபையின் தொண்டர்கள் முதலியோரைச் சந்திப்பதற்க்காகும். அவர்களுடன் ஒருவருக்கொருவர் தனிப்பட்ட முறையில் நண்பர்கள் ஆகி விட்டோம். அவர்கள் அனைவரையும் சந்திக்கவும், நட்புடன் அளவளாவவும் பம்பாய் செல்லும் போதெல்லாம் இந்த அலுவலகத்துக்குச் செல்வோம்.சிலசமயங்களில் அங்கு இந்து சங்கத்தார் பாணியையும் அவர்களுடன் விவாதிப்பது வழக்கம். அவர்களில் சிலர் எங்கள் செய்தித்தாளுக்கு விளம்பரங்கள் பெறுவதற்கு உதவி செய்வது வழக்கம்.

33. ஆனால் சவர்க்கர் சதனுக்கு மேற்கொள்ளும் எங்களுடைய இயல்பான வருகையானது பொதுவாக தரைதளத்திலிருந்த இந்துசங்கத்தார் அலுவலகத்தோடு மேற்சொன்ன காரணங்களுக்காக மட்டும் வரையறுக்கப்பட்டிருந்தது.வீரசவர்க்கர் அவ்வீட்டின் முதல் தளத்தில் குடியிருந்தார். வீர சவர்க்கரை நேரடியாக பேட்டி காண்பது. மிக அரிதாகத் தான் நிகழும்-அதுவும், சந்திப்புக்கு தனி அனுமதி பெற்றால்தான் நிகழும்.

34. மூன்றாண்டுகளுக்கு முன்னர் வீர சவர்க்கரின் உடல் நலம் மிகவும் பாதிக்கப்படதால் அதிலிருந்து அவர் படுக்கையிலேயே இருந்து வந்தார். ஆகவே அவர் பொது நடவடிக்கைகளை நிறுத்தி விட்டு, ஏறத்தாழ பொது வாழ்விலிருந்தே ஓய்வு பெற்று விட்டார். அவருடைய வீரியம் மிக்கத தலைமையும், காந்த ஈர்ப்புடைய செல்வாக்கும் கிடைக்காமல் போனதால், இந்து மகா சபையின் நடவடிக்கைகளும், செல்வாக்கும் முடங்கிப் போயின். டாக்டர். முகர்ஜி தலைவரான போது, மகாசபையானது காங்கிரஸின் கைப்பாவை நிலைக்குக் குறைந்து விட்டது. காந்திய சூழ்ச்சியால் ஒருபுறமும், முஸ்லிம் லீக்கால் மறுபுறமும் நடத்தப்பட்ட ஆபத்தான இந்து எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு எதிர்ச்செயல் புரிய மகாசபை மிகவும் இயலாத நிலைக்கு ஆளாகிவிட்டது. இதையெல்லாம் பார்த்த பின்னர் இந்து சங்கத்தார் இயக்கத்தை மகாசபை சட்டங்களின் படி நடத்துவதற்கான கொள்கை திறனில் எனக்கு எல்லா நம்பிக்கையும் போய்விட்டது. நான் அங்கிருந்து விலகிக் கொள்ளத் தொடங்கினேன். இந்துசங்கதார் இளைஞர் அணி ஒன்றை உருவாக்கி, காங்கிரஸ், முஸ்லீம் லீக் இவற்றிற்கு எதிராகப் போராடச் செயல்த்திட்டம் ஒன்றைப் பின்பற்றுவது என்று உறுதி பூண்டேன். பெயர் அற்ற ஆனால் வயது முதிர்ந்த, மகாசபைத் தலைவர்கள் யாரையும் நான் கலந்து ஆலோசிக்கவில்லை.

35. வீர சவர்க்கரையும், மற்ற வயது முதிர்ந்த மகாசபைத் தலைவர்களையும் இனிமேலும் நான் நம்பிப் பயனில்லை என்ற உண்மையை உணர்த்திய இந்த சமயத்தில் நடந்த பல நிகழ்ச்சிகளில், என் கண்களைத் திறந்துவிட்ட இரு நிகழ்ச்சிகளை இங்கு நான் குறிப்பிடுகிறேன். காந்திஜியின் நடவடிக்கைகளை உள்ளிருந்தும், முஸ்லீம் லீக் நடவடிக்கைகளை வெளியிலிருந்தும் எதிர்க்கும் நோக்கத்துடன் இளைஞர்களை இணங்குவித்து, வழிகாட்டி, போராடவைக்க முடிவு செய்தோம். 1946 அல்லது அந்த காலகட்டத்தில் நவகாளியில் சுரவார்டியால் அரசு ஆதரவுடன் இந்துக்களின் மீது நடத்தப்பட்ட முஸ்லிம்களின் அட்டூழியம் எங்கள் உதிரத்தைக் கொதிக்க வைத்தது. அதே சுரவார்டிக்கு காந்திஜி பாதுகாப்புத் தர முன்வந்ததையும், அவருடைய பிராத்தனைக் கூட்டங்களில் அவனை ஷாஹித் ஸாஹேப் (தியாக ஆன்மா) என்று போற்றியதையும் நாங்கள் கண்டபோது எங்கள் அவமானமும், உள்ளக்கொதிப்பும் எல்லை கடந்தன.

அதுமட்டுமன்று, டெல்லிக்கு வந்தபின்னர் பங்கிக் குடியிருப்பில் உள்ள ஒரு இந்துக் கோவிலில் அவருடைய பிரார்த்தனைக் கூட்டத்தை நடத்தத் தொடங்கினர். அங்கு வழிபாடு நடத்திய பக்தர்கள் மறுப்புத் தெரிவித்தபோதும், இந்துக் கோவிலுக்குள்ளே பிரார்த்தனையின் ஒரு பகுதியாக குர்-ஆனிலிருந்து சில பகுதிகளைப் படிக்குமாறு வற்புறுத்தினார். முசுலீம்களின் எதிர்ப்புக்கெதிராக அவரால் மசூதிகளில் கீதையைப் படிக்கத் துணிய முடியவில்லை அவர் அவ்வாறு செய்திருந்தால், முஸ்லீம் எதிர்ச்செயல் எவ்வளவு கொடூரமாக இருந்திருக்கும் என்பதை அவர் அறிந்திருந்தார். ஆனால் சகிப்புடைய இந்து உணர்வுகளை அவர் பாதுகாப்பாக மிதித்துச் செல்லலாம். இந்த நம்பிக்கையைப் பொய்யாக்க, இந்துவின் மரியாதை அவமதிக்கப்படும்போது அவனும் பொறுமை இழப்பான் என்பதைக் காந்திஜிக்கு நிரூபிக்க நான் உறுதி பூண்டேன்.

36. ஆப்தேயும், நானும் டெல்லியில் அவருடைய கூட்டங்களில் தொடர்ந்து ஆர்ப்பாட்டங்கள் நடத்தி, அத்தகைய பிரார்த்தனைக் கூட்டங்களை நடத்துவதை இயலாததாகச் செய்ய முடிவு செய்தோம். ஆப்தே, அகதிகளின் ஒரு பெரும் பிரிவோடு டெல்லியில் ஓர் ஊர்வலம் நடத்தினார். காந்திஜியையும், அவருடைய ஷாஹித் சுரவார்டியையும் கண்டித்து, பங்கிக் குடியிருப்பில் அவருடைய பிரார்த்தனைக் கூட்டத்துக்குள் முண்டியடித்துச் சென்றனர். கொந்தளிப்பான எதிர்ப்பு தொடர்ந்ததைக் கண்ட காந்திஜீ கம்பியிட்ட, பாதுகாக்கப்பட்ட கதவுகளுக்குப் பின்னர் மறைந்து ஒதுங்கிக் கொண்டார். அந்தச் சமயத்தில் பலாத்காரத்தைப் பயன்படுத்தும் எண்ணம் ஒரு சிறிதும் எங்களிடையே இல்லை.

நன்றி: சாலிய மஹரிஷி சாலியர்

Keerthivasan

About Keerthivasan -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :