Wednesday, October 28, 2015

Keerthivasan

சிவலிங்கம் இந்துமதம் இன்னபிற: பழ.கருப்பையாவுக்கு ஒரு எதிர்வினை

October 24, 2015 |  


SAME KARUPPPAIYA ON ISLAM
பழ. கருப்பையாவின் “காதலால் சொன்னேன்” என்ற கட்டுரை தினமணியில் (அக்-21) வந்துள்ளது. தன்னுடைய சுயலாபத்தைத் தவிர வேறு எதையும் பொருட்படுத்தாத கடைந்தெடுத்த அரசியல்வாதியான கருப்பையா எழுதும் எந்தக் கருத்தின் மீதும் எப்போதும் எனக்கு மரியாதை இருந்ததில்லை. அவரது அரசியல் அழுத்தங்கள் புரிந்து கொள்ளக் கூடியவையே. ஆனால் மேற்குறிப்பிட்ட கட்டுரையில் சம்பந்தமே இல்லாமல் இந்துமதத்தையும், ஆதி சங்கரரையும், இந்து ஞான மரபின் மணிமுடியான வேதாந்தத்தையும், விவேகானந்தரையும் மிகக் கீழ்த்தரமாக அவதூறு செய்திருக்கிறார். அதனாலேயே இந்த எதிர்வினை. இந்தக் கட்டுரையின் மூலம் தனது கலாசார அறிவீனத்தையும், திராவிட இயக்க மூடத்தனத்தையும் கொட்டுமேளம் கட்டி அறிவிக்கிறார் பழ.கருப்பையா. தினமணி போன்ற ஒரு மரியாதைக்குரிய நாளிதழ் இந்த முடைநாற்றம் வீசும் குப்பையைப் பதிப்பித்து தனது தரத்தைத் தாழ்த்திக் கொண்டுள்ளது. இதற்காக அந்தப் பத்திரிகைக்கு எனது கடும் கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


PAZHA KARUPPAIYA
// கோயில் வழிபாடு என்பதும், கருவறைக்குள் ஆவுடையுள் நிலை கொண்டிருக்கும் லிங்கத்தை வழிபடுவது என்பதும் திராவிட வழிபாட்டு முறைகள்தாம்! ஆரிய முறை வேறு; தீயை வழிபடுபவர்கள் அவர்கள்! “தீயினைக் கும்பிடும் பார்ப்பான்’ என்று தெளிவுபடுத்திக் கூறுகிறான் பாரதி. லிங்கத்தின் மீதோ, முருகனின் மீதோ, திருமாலின் மீதோ நீரைச் சொரிந்து கழுவி, பூவிட்டுப் பூசை செய்வது திராவிட முறை…. லிங்க வழிபாட்டைச் “சிசுன வழிபாடு’ என்று ஆதிசங்கரர் நகையாடினார். பக்தி இயக்கம் திராவிடச் சமயங்களை நிறுவனப்படுத்தியபோது, சிசுன வழிபாட்டைத் தமிழ்நாடு முழுதும் சுற்றிச் சுற்றிப் பரப்பிய ஆரியரான ஞானசம்பந்தரை “திராவிடச் சிசு’ என்று பழித்தார் ஆதிசங்கரர்! //

இந்த 3-4 வாக்கியங்களில் எத்தனை ஆதாரமற்ற பொய்களையும், கீழ்த்தரமான வெறுப்புணர்வையும் அநாயாசமாக உதிர்த்துச் செல்கிறார் பாருங்கள்.

லிங்கம்:

“லிங்கம்” என்பதே அடிப்படையில் சம்ஸ்கிருதச் சொல் தான் – “திராவிட” மொழிச் சொல் அல்ல. அச்சொல் முதன்முதலில் வேத மந்திரங்களில் தான் வருகிறது. இமயம் முதல் குமரி வரை எல்லா சிவபூஜைகளிலும் தவறாமல் இடம்பெறும் “நிதனபதயே நம:” எனத் தொடங்கும் அர்ச்சனையில் “ஊர்த்வாய நம:, ஊர்த்வலிங்காய நம:” முதல் “சிவாய நம: சிவலிங்காய நம:” “பரமாய நம: பரமலிங்காய நம:” வரை லிங்கரூபங்கள் துதிக்கப் படுகின்றன. இம்மந்திரமும், “ஸத்யோஜாதம் ப்ரபத்யாமி” என்று தொடங்கி ஐந்து முகங்களுக்குமான மூலமந்திரங்கள் மற்றும் சிவபூஜையில் ஓதும் சகல மந்திரங்களும் யஜுர்வேதத்தின் ஒரு பகுதியான “தைத்திரிய சம்ஹிதா”வில் இருந்தே தொகுக்கப் பட்டவை.

நீரும் நெருப்பும்:

வேத சடங்ககளைக் குறித்து அடிப்படையான அறிவு கொண்டவர்கள் கூட, தீயும் நீரும் (அக்னி, ஆப:) அதில் இணையாகவே பயன்படுத்தப் படுவதை உணர்வார்கள். அக்னேராப: (தீயினுள் நீர்) என்பது வேதவாக்கியம். பஞ்சபூதங்களையும் அவற்றின் இணைவையும் பேசும் ஏராளமான மந்திரங்கள் வேதங்களில் உள்ளன. இன்றும், கலசத்தில் வருணனை ஆவாஹனம் செய்யாமல் எந்த அக்னி கார்யத்தையும் வேள்விச் சடங்கையும் செய்வதில்லை என்பது கண்கூடு. ஆரியர்கள் தீயையும், திராவிடர்கள் நீரையும் வழிபாட்டுக்குப் பயன்படுத்தினார்கள் போன்ற கேனத்தனமான கருத்துக்கள் திராவிட இயக்கக் கற்பனைகளே அன்றி அவற்றுக்கு எந்த ஆதாரமும் கிடையாது.

“செந்தழல் ஓம்பிய செம்மை வேதியர்க்கு அந்தியுள் மந்திரம் அஞ்செழுத்துமே” என்பார் சம்பந்தர். பன்னிரு சைவத் திருமுறைகளிலும் ஆயிரக் கணக்கான இடங்களில் நான்மறைகளும், வேள்விகளும் மீண்டும் மீண்டும் போற்றப் பட்டுள்ளன என்பதை உண்மையான தமிழ்ச் சைவர்கள் உணர்வார்கள். சைவ சமயக் குரவர்கள் போற்றிய மகத்தான மரபை, வெறும் சல்லிக்காசு அரசியல் லாபத்திற்காக அவதூறு செய்யும் பழ.கருப்பையா போன்ற கீழ்த்தரமான அரசியல்வாதிகளின் உண்மை முகத்தை உணருங்கள். கருணாநிதியை எதிர்க்கிறார் என்ற காரணத்தை மட்டும் வைத்து இத்தகைய ஒரு கயமையை சகித்துக் கொள்ள முடியாது.
“தீயினைக் கும்பிடும் பார்ப்பார்” என்று பாரதி கூறியது தீயையும் பார்ப்பானையும் இழிவுபடுத்தி அல்ல, மிகவும் பெருமைப் படுத்தித் தான்.

தீவளர்த்தே பழவேதியர் -நின்றன்
சேவகத்தின் புகழ் காட்டினார்;-ஒளி
மீவளருஞ்செம்பொன் நாட்டினார்-நின்றன்
மேன்மையினாலறம் நாட்டினார்


என்று அக்னிகர்ப்பனான முருகக் கடவுளைப் பாடியிருக்கிறார் இதே பாரதி. வேத தெய்வமான அக்னியைப் போற்றி “வேள்வித் தீ” முதலான பாடல்களையும் அழகிய வசன கவிதைகளையும் எழுதியிருக்கிறார். தனது மட்டமான அரசியலுக்காக மகாகவி பாரதியின் ஒரு வரியை உருவி அதைத் திரிக்கிறார் இந்த ஆசாமி.


சிசுனம்:

சிசுனம் என்று இவர் இங்கு எழுதும் சொல் வேத இலக்கியத்தில் ஆண்குறியைக் குறிப்பதற்காக வரும் சிஷ்ணா (शिष्ण – shiSHNaa) என்ற சொல். அந்தச் சொல்லையும், அதனுடன் எந்த வகையிலும் தொடர்பில்லாத, குழந்தை என்ற பொருள் கொண்ட சிசு (शिशु – shishu) என்ற சொல்லையும் குழப்பியடிக்கிறார் இந்த பிரகஸ்பதி. அதைவிடக் கொடுமை என்னவென்றால், ‘திரவிட சிசு’ என்பது அந்தக் குறிப்பிட்ட சுலோகத்தில் (சௌந்தரிய லஹரி, 67), ஒரு மகத்தான புகழுரையாக வருகிறதே அன்று இழிசொல்லாக அல்ல, “ஹிமவானின் புதல்வியே, உன் திருமுலைப்பாலை அருந்தியதால் அன்றோ அந்தத் தமிழ்க் குழந்தை, திரவிட சிசு, அமுதமயமான பாடல்களைப் புனையும் சக்தி பெற்றது!” என்பதே அதன் பொருள். இதில் திரவிட சிசு என்று சம்பந்தரை அல்ல, தன்னையே கவியாகிய ஆதி சங்கரர் குறிப்பிடுகிறார் என்றும் கூறுவார்கள்.

ஒரு விஷயத்தைப் பற்றி எழுதும் முன்பு, அதன் முதல்நிலைத் தகவல்களைக் கூட அறிந்து கொள்ள முற்படாமல் (அதுவும் இந்த இணைய யுகத்தில்) “ஆரியரான ஞானசம்பந்தரை “திராவிடச் சிசு’ என்று பழித்தார் ஆதிசங்கரர்” என்று எழுதும் மடமையின் எல்லையை எப்படி வசைபாடுவது என்று கூடத் தெரியாமல் திகைத்து நிற்கிறேன்.

மேலும், சிவலிங்கம் பழங்குடி ஆண்குறி வழிபாட்டினின்றும் பிறந்தது என்று மேற்கத்திய ஆராய்ச்சியாளர்கள் கூறுவதை சுவாமி விவேகானந்தர் தனது பேருரைகளில் கடுமையாக மறுக்கிறார். பின்னாளில் வாமாசார தாந்திரீகம் ஓங்கியபோது ஆத்மா, ஜீவன், பிரம்மம் என்று எல்லா சமயக் குறியீடுகளுமே ஆண்-பெண் உறவை மையமாக வைத்து விளக்கப்பட்டபோது சிவலிங்கம் பற்றிய உருவகம் இவ்வாறு மாறியதே தவிர அதன் மூலம் அதுவல்ல என்றும் அவர் குறிப்பிடுகிறார். சிவலிங்க வழிபாட்டின் மூலம் வேத காலத்தில் வேள்விகளில் வணங்கப் பட்ட யூபஸ்தம்பம் (கம்பம்) என்பதையும் தெளிவாகக் கூறியுள்ளார்.

“The Swami said that the worship of the Shiva-Linga originated from the famous hymn in the Atharva-Veda Samhita sung in praise of the Yupa-Stambha, the sacrificial post. In that hymn a description is found of the beginningless and endless Stambha or Skambha, and it is shown that the said Skambha is put in place of the eternal Brahman. As afterwards the Yajna (sacrificial) fire, its smoke, ashes, and flames, the Soma plant, and the ox that used to carry on its back the wood for the Vedic sacrifice gave place to the conceptions of the brightness of Shiva’s body, his tawny matted-hair, his blue throat, and the riding on the bull of the Shiva, and so on — just so, the Yupa-Skambha gave place in time to the Shiva-Linga, and was deified to the high Devahood of Shri Shankara. In the Atharva-Veda Samhita, the sacrificial cakes are also extolled along with the attributes of the Brahman.

In the Linga Purna, the same hymn is expanded in the shape of stories, meant to establish the glory of the great Stambha and the superiority of Mahadeva.”

(From: Complete-Works / Volume 4 / Translations: Prose / The Paris congress)

// வடநாட்டினர்க்குத் தனி மெய்யியல் கிடையாது. பார்ப்பனரல்லாதாரான விவேகானந்தர் வேறு வகை தெரியாமல் வேதாந்தத்தை உலகம் முழுவதும் எடுத்துச் சென்று விட்டுத் தென்னாட்டிலும் இந்து மதம் என்று பேச வந்தபோது “நாங்கள் இந்துக்கள் அல்லர்’ என அவரைத் திருவனந்தபுரத்திலேயே வழிமறித்து அவருடைய கருத்தை விலைபோகாமல் செய்துவிட்டார் மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை. //

மீண்டும், இந்த ஒரு வாக்கியத்தில் எத்தனை அபத்தங்கள்! ஐயோ !

ஆறு தரிசனங்கள் என்றும் (தமிழ் மரபில் அறுசமயம் என்றும்) கூறப்படும் மெய்யியல் துறைகள் – சாங்கியம், யோகம், நியாயம், வைசேஷிகம், மீமாம்சம், வேதாந்தம். இவற்றின் பெயர்களும், இந்த தரிசனங்களுக்கான மூலநூல்களும் எல்லாம் வடமொழி எனப்படும் சம்ஸ்க்ருதத்தில் உள்ளன என்பது உலகறிந்த உண்மை. ஆனால் “வடநாட்டினர்க்குத் தனி மெய்யியல் கிடையாது” என்று ஒரு பேருண்மையை இந்த மேதாவி உதிர்க்கிறார்.

சரி, விவேகானந்தர் தான் வேறுவழியில்லாமல் வேதாந்தத்தை உலகம் முழுவதும் எடுத்துச் சென்று விட்டார் (ஆமாமாம், எவ்வளவு எளிய செயல் – பக்கத்து ஊருக்கு பஸ்ஸில் டிக்கெட் எடுத்து கருப்பையா சென்று விடுவது மாதிரி). ஆனால் என்ன ஆயிற்று இந்த இழவெடுத்த தமிழன்கள் திருமூலனுக்கும், மெய்கண்டனுக்கும்? அவன்களும் அல்லவா வேதாந்தம் அத்துவிதம் என்று கூவுகிறான்கள். அந்தத் தமிழ்த் துரோகிகளின் நூல்களை உடனே கொளுத்த ஒரு இயக்கம் ஆரம்பிக்காமல் என்ன செய்து கொண்டிருக்கிறார் பச்சைத் தமிழர் பழ கருப்பையா?

வேதாந்தம் சுத்தம் விளங்கிய சித்தாந்தம்
நாதாந்தம் கண்டோர் நடுக்கற்ற காட்சியர்
பூதாந்த போதாந்த மாகப் புனஞ் செய்ய
நாதாந்த பூரணர் ஞானநே யத்தரே.

வேதாந்தம் தொம்பதம் மேவும் பசுஎன்ப
நாதாந்தம் பாசம் விடநின்ற நன்பதி
போதாந்தம் தற்பதம் போய்இரண் டைக்கியம்
சாதா ரணம்சிவ சாயுச்சிய மாமே.

- திருமந்திரம்
பண்ணையும் ஓசையும் போலப் பழமதுவும்
எண்ணுஞ் சுவையும்போல் எங்குமாம்– அண்ணல்தாள்
அத்துவிதம் ஆதல் அருமறைகள் ஒன்று என்னாது
அத்துவிதம் என்று அறையும் ஆங்கு.

.. அத்துவிதம் ஆதல் அகண்டமும் தைவமே
அத்திவிதி அன்பின் தொழு!

- சிவஞான போதம்
இருபதாம் நூற்றாண்டின் மிகச் சிறந்த உலக சிந்தனையாளர்களில் ஒருவராக மதிக்கப் படும் சுவாமி விவேகானந்தரின் கருத்தை “விலைபோகாமல் செய்துவிட்டாராம்” மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை. ஆமாமாம், உண்மை தான், விலைபோகாததால் தான் இன்று தமிழ் நாட்டிலும், கேரளத்திலும் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் ஆயிரக் கணக்கில் விவேகானந்த வித்யாலயங்கள் இருக்கின்றன. கோடிக்கணக்கானவர்கள் விவேகானந்தரது சிந்தனைளைப் பயின்று கொண்டும் அதனால் உத்வேகம் பெற்றும் வருகிறார்கள்! அதைவிடக் கொடுமை, அந்த விலைபோகாத வேதாந்தத்தை எடுத்துக் கொண்டு, தனது நூலின் மையமான தத்துவக் கருவாக்கி மனோன்மணீயம் என்ற ஒரு காவியத்தையே எழுதி வைத்துவிட்டுப் போயிருக்கிறார் சுந்தரம் பிள்ளை? அதுவும் ஒரு சம்ஸ்கிருத காவியத்தின் தழுவலாக வேறு! உண்மையில் அவரையும் தன்னுடைய நீளமான தமிழ்த் துரோகி பட்டியலில் தான் கருப்பையா சேர்க்க வேண்டும்.

ஏற்கனவே பிரபல சமயச் சொற்பொழிவாளர் ஒருவர் விடுத்த சவடாலுக்கு எதிர்வினையாக “வேத நெறியும் சைவத்துறையும் முரண்படுகின்றவா” என்று ஒரு நீண்ட பதிவை முன்பு எழுதியிருந்தேன். அதே வகையிலான விஷக் கருத்துக்கள் மீண்டும் மீண்டும் வெகுஜன தமிழ்ச் சூழலில் சுற்றிக் கொண்டிருப்பது அயர்ச்சி ஏற்படுத்துகிறது. இது நமது சாபக்கேடு (அந்தப் பதிவை இங்கே வாசிக்கலாம்)

// இசுடாலின் திராவிட முன்னேற்றக் கழகத்திலுள்ளவர்களில் தொண்ணூறு விழுக்காட்டினர் இந்துக்கள் என்று சொல்லக் கேட்பதே மேனி முழுவதும் கம்பளிப் பூச்சி ஊர்கின்ற உணர்ச்சியை ஏற்படுத்துகிறது! //

இசுடாலின் கூறியதைப் படித்தவுடன் ஏற்பட்ட மகிழ்ச்சி இப்போது இருமடங்காகிறது. இப்படியே அரிப்பு வந்து புழுத்து ஒழிந்து சாகட்டும் திராவிட இயக்கம் என்ற நச்சுக் கருத்தியல். அந்த நன்னாள் வெகுசீக்கிரமே வந்து கொண்டிருக்கிறது.

// திராவிட அடலேறுகளே’ என்று இனம் சுட்டி அழைக்கப்பட வேண்டியவர்கள் “இந்துக்களே’ என்று இல்லாத மதத்தின் பேரில் அடையாளப்படுத்தப்படுவார்களேயானால், அது திராவிட இயக்கத்திற்கு மூடுவிழா நடத்துகின்ற முயற்சியாகிவிடும். //

அப்படியென்றால், இல்லாத மதத்தின் பேரில் “இந்து அறநிலையத் துறை” என்று ஒன்றை எதற்கு உங்கள் இழவெடுத்த அரசு வைத்திருக்கிறது? உங்களது மற்றும் உங்களது பொஞ்சாதி புள்ளைகுட்டிகளின் சான்றிதழ்களில் எல்லாம் மதம் என்பதில் என்ன எழுதுகிறீர்கள் ? உங்கள் குடும்ப திருமணங்களை எந்த மதத்தின் சிவில் சட்டத்தின் கீழ் பதிவு செய்கிறீர்கள்? குடும்ப சொத்து விவகாரங்களை எந்த மதத்தின் சிவில் சட்டத்தின் கீழ் கையாள்கிறீர்கள்? “இல்லாத மதத்தின் பேரால்” ! ஒரு பத்திரிகையில் எழுத இடம் கிடைத்து விட்டால், என்ன வேணுமானாலும் எழுதலாம் என்ற எண்ணமா? தமிழக மக்களை இன்னும் உங்கள் மடத்தனமான இனவாத பிரசாரங்களால் ஏமாற்ற முடியாது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

அதிமுக ஆட்சிக் காலத்தில் முழு பாதுகாப்புடன் கருணாநிதியை வசைபாடி எழுதுவார் கருப்பையா (அது ஏதோ உயிரைப் பணயம் வைத்து செய்யும் புரட்சி என்று அவரது துணிவைப் பாராட்டும் அப்பாவிகளும் உள்ள தமிழ்நாடு இது). எந்த ஆழமான வாசிப்பும் சிந்தனையும் இல்லாமல், அடித்தளமே ஆட்டம் காணும் தனது அபத்தமான புரிதலை வைத்துக் கொண்டு மகாபாரதத்தைப் பற்றி தாறுமாறாக என்னென்னவோ எழுதி வாசகர்களைக் குழப்புவார். அடுத்த சூட்டிலேயே, துக்ளக் பத்திரிகை தனக்கு அளிக்கும் இடத்தில், ஜாகீர் நாயக் வகையறாக்களே கூச்சத்தில் நெளியும்படி முகமது நபியையும் குரானையும் ஆகா ஓகோ என்று புகழ்ந்து தள்ளுவார் (அவர் வழக்கமாக போட்டியிட்டு வெல்லும் தொகுதியில் முஸ்லிம்கள் கணிசமான எண்ணிக்கையில் உள்ளார்கள் என்பது கவனத்துக்குரியது). தமிழ் ஊடக உலகத்திற்கு வாய்த்துள்ள மகாமோசமான பச்சோந்திகளில் ஒருவர் இந்தக் கருப்பையா.

(ஜடாயு தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியது)

Keerthivasan

About Keerthivasan -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :