Tuesday, October 27, 2015

Keerthivasan

விருதுகளும் வேடங்களும் – அறிவுஜீவிகளின் அரசியல்

 முதலில் சில தகவல்களைத் தெளிவு படுத்தி விடுவோம். சாகித்ய அகாதமி விருது என்பது அரசு நேரடியாக அளிப்பது அல்ல. அரசு ஆதரவில் இயங்கும் அமைப்பு அது. அதில் விருது அளிக்கத் தீர்மானிக்கும் நடுவர் குழுவில் இடதுசாரி “அறிவுஜீவிகள்” மட்டுமே இடம் பெறுவர். தொடர்ந்து நடந்த காங்கிரஸ் – கம்யூனிச அரசுகள் அவ்வாறு நடக்கும் வகையில் பார்த்துக் கொண்டிருக்கின்றன. இந்து / இந்திய சிந்தனை உள்ளவர்கள் அகாதமியில் இடம் பெறுவது இயலாத காரியம். இப்படிப் பட்டவர்கள் கூடி அப்படி யாருக்கு விருது அளிப்பார்கள்? இவர்களைப் போலவே இந்து/இந்திய சிந்தனை துளியும் இல்லாத, இந்த நாட்டின் மீது வெறுப்பும், பெரும்பான்மை இந்துக்கள் மீது காழ்ப்பும் கொண்டவர்களுக்கே விருது. அண்மையில் எழுத்தாளர் ஜோ டி க்ரூஸ் அவர்களுக்கு சாகித்ய அகாதமியில் விருது அளித்த போது, அவர் வலது சாரி சிந்தனை உள்ளவர் என்று பின்னர் தெரிந்ததும் வருந்தினார் நடுவர் குழு உறுப்பினர். அந்த வருத்தத்தை வெளியிடவும் செய்தனர். இந்த நிலையில் தான் இருக்கிறது சாகித்ய அகாதமி அமைப்பு.

மேலை நாடுகளில் அரசே நேரடியாக இலக்கியத்துக்கு எல்லாம் விருது அளிப்பது அரிது. அங்கே தனியார் அமைப்புகள் தான் இந்த விருது அரசியலில் ஈடுபடுகின்றன. அரசிடமிருந்து அதிக பட்சமாக இந்த விருது அமைப்புகளுக்கு வரி விலக்கு அளிக்கக் கூடும். அதற்கு மேல் நேரடியாக அரசு தலையிடுவதில்லை. மன்னராட்சி காலத்தில் புலவர்களை வைத்து தம்மைப் புகழ்ந்து பாட்டெழுதச் சொல்லி பரிசளிப்பார்கள். இதனால் கூட்டம் கூட்டமாக புலவர்கள் மன்னரைப் புகழ்ந்து பாடி மக்கள் மத்தியில் மன்னனின் புகழைப் பரப்புவர். நவீன காலத்திலும் காங்கிரஸ் – கம்யூனிச அரசுகள் சாகித்ய அகாதமி போன்ற அமைப்புகளை வைத்து எழுத்தாளர்களை தம் கைத்தடியாக உபயோகப் படுத்தி வந்துள்ளனர். இப்போது ஆட்சியில் இல்லாத போதும் கூட, இந்த அறிவு ஜீவிக் கைத்தடிகளை வைத்து காங்கிரஸ் அருமையாக காய் நகர்த்தி மோதி அரசுக்கு சிக்கலை ஏற்படுத்த முயற்சித்து வருகிறது.

இந்த எழுத்தாளர்கள், தம்மைப் போன்ற இதர கைத்தடி எழுத்தாளர்களுக்கு விருது கொடுப்பது, அடுத்த தலைமுறையிலும் தம்மைப் போலவே ஒத்த “கொள்கையுடைய” நடுவர்களையும் நியமிப்பது என்றுதான் அறுபது எழுபது ஆண்டுகளாக இந்திய அறிவு ஜீவி உலகம் இயங்கி வருகிறது. அதனாலேயே நேரடியாக அரசு தரும் விருதாக இல்லாவிட்டாலும், அரசு தரும் விருதைப் போலவும் தற்போதைய அரசின் மீது அதிருப்தியால் அதைத் திருப்பி தருவதாகவும் ஒரு நாடகத்தை பீகார் தேர்தலுக்கு முன்பாக அரங்கேற்றுகின்றனர்.

இவ்வாறு வரிசை கட்டி விருதைத் திருப்பி தருவதற்கு என்ன காரணம்? கல்புர்கி என்ற எழுத்தாளர் கொலை செய்யப்பட்டதுதான் காரணம் என்கின்றனர். அந்த கல்பர்கி எதனால் கொல்லப் பட்டார் என்பது இன்னும் முடிவாகவில்லை. விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. அதோடு கல்புர்கி கொலை செய்யப் பட்டு இரண்டு மாதங்களுக்குப் பின் திடீரென்று விழித்துக் கொண்டு விருதுகளை ஏன் திருப்பித் தரவேண்டும்? வேறென்ன பீகார் தேர்தல் அரசியல் தான். இவர்களுக்கு விருது கொடுத்ததும் அரசியல், அதை இன்று திருப்பிக் கொடுப்பதாக ஆடும் நாடகமும் அரசியல் தான்.

இன்று விருதுகளை திருப்பித் தருவதாக நாடகம் ஆடுவோருக்கு கொஞ்சமாவது மனசாட்சி இருந்தால் சில கேள்விகள். மற்றவர்களின் நம்பிக்கைகளை புண்படுத்துவது போல் கல்புர்கி பேசி வந்த போது எத்தனை பேர் மனசாட்சியுடன் அதனை கண்டித்தீர்கள்? தஸ்லிமா நஸ்ரீனுக்கு எத்தனை பேர் துணை நின்றீர்கள்? எழுத்தாளர் ஜோடி க்ருஸ் மீது வழக்குகள் போடப் பட்டபோது எத்தனை பேர் எதிர்ப்பு தெரிவித்தீர்கள்? சீக்கியர் படுகொலைக்கும், காஷ்மீர் பண்டிட்டுகள் வன்முறையாக வெளியேற்றப் பட்ட போதும் எத்தனை பேர் அதற்காக போராடினீர்கள்? சிறுபான்மைக்கும் – பெரும்பான்மை மக்களுக்கும் பிளவு ஏற்படுத்தி அரசியல் செய்து வந்த காங்கிரஸ் – கம்யூனிஸ்ட் அரசுகளுக்கு எதிராக ஒரு வார்த்தையாவது எழுதி இருக்கிறீர்களா? நமது ராணுவத்தினர் ஜிகாதிகளாலும், நக்சல்களாலும் கொடூரமாக கொலை செய்யப்பட்டபோது எத்தனை எழுத்தாளர்கள் அதற்காக பொங்கி எழுந்தனர்? தமிழ் நாட்டில் பத்துக்கும் மேற்பட்ட இந்து இயக்கத் தலைவர்கள் படுகொலை செய்யப் பட்டபோது என்ன செய்து கொண்டிருந்தீர்கள்?

நயன்தாரா என்கிற எழுத்தாளர் 1986ல் விருது வாங்கிக் கொண்டிருக்கிறார். அதற்கு இரு வருடங்கள் முன்புதான் மூவாயிரம் சீக்கியர்கள் காங்கிரஸ் கட்சியினரால் படுகொலை செய்யப் பட்டனர். அப்போதெல்லாம் பேசாமல் இருந்து விட்டு இப்போது சமாஜ்வாதி அரசு ஆட்சி செய்யும் உ.பி மாநிலம் தாத்ரியில் நடந்த குற்றத்துக்கு மத்திய அரசை குற்றம் சாட்டி விருதைத் திருப்பிக் கொடுத்திருக்கிறார். சரி யார் இந்த நயந்தாரா? அப்படி என்ன எழுதினார்? எதற்காக இவருக்கு விருது? வேறு எந்த காரணமும் தேட வேண்டாம். அவர் ஜவஹர்லால் நேருவின் உறவினர். அது போதாதா விருது கொடுப்பதற்கு? இன்று பாஜக ஆட்சி என்றவுடன் தன்னுடைய செல்வாக்கு குறைவதால், விருதை திருப்பி அளிப்பதாக கூச்சலிடுகிறார்.

நரேந்திர மோதி மௌனமாக இதையெல்லாம் அலட்சியம் செய்து விட்டு, தன் பாட்டுக்கு தன் வேலையை செய்வது இவர்களுக்கு கடும் எரிச்சலை ஏற்படுத்துகிறது. சரி ஒரு பேச்சுக்கு இவர்கள் எல்லாம் கேட்பது போல, மாநிலங்களில் அதிகாரத்துக்குட்பட்ட குற்றச்செயல்களாக இருந்தாலும், மோதி ஏதாவது சொல்வாரே ஆனால், அதை இந்த அறிவு ஜீவி கூட்டம் ஏற்றுக் கொள்ளுமா? அதை திரித்துக் கூறுவார்கள். சந்தேகத்தை எழுப்புவார்கள். அதை ஊடகங்கள் பன்மடங்கு பெருக்கி ஒலிபரப்பும். இறுதியில் மோதி இவர்களுக்கு பதில் சொல்வதிலேயே காலத்தைக் கழிக்க வேண்டியதுதான். அரசு நடத்தவே முடியாது.

“ஒரு நாட்டில் எப்போது அறிவு ஜீவிகள் அமைதி இன்றி பலவிதமாக பிரச்சனைகளை கிளப்புகிறார்களோ அப்போது அரசு சரியாக செயல்படுகிறது என்று அர்த்தம்” என்கிறது சாணக்கிய நீதி. முதலில் இவர்கள் நிஜமாகவே அறிவு ஜீவிகள் தானா என்பதை விட்டுவிடுவோம். அரசாங்கம் இவர்கள் பலவிதத்திலும் எதிர்ப்பு தெரிவிக்க வாய்ப்பு அளிக்கும் போதே, அந்த சுதந்திரத்தை அளிக்கும் போதே சரியாகச் செயல்படுகிறது என்று தானே அர்த்தம். இத்தனை வருடங்களாக மோதிக்கும், பாஜகவுக்கும், இந்தியாவுக்கும், இந்துக்களுக்கும் எதிராக எவ்வாறெல்லாம் செயல்பட்டார்கள். முஸ்லிம்கள் உட்பட பெருவாரியான மக்கள் மோதிக்கு ஓட்டளித்த பின்பும், அவருக்கு விசா கொடுக்கக் கூடாது என்று அமெரிக்காவுக்கு பெட்டிஷன் எழுதினார்களே! சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் மோதியின் மீது வெறுப்பைக் கொட்டினார்களே! இவர்களை மோதி என்ன செய்து விட்டார்?

எழுத்தாளனை பொதுமக்கள் விமர்சிப்பதா? நயன்தாராவைப் படித்திருக்கிறாயா? சாரா ஜோசப்பை படித்திருக்கிறாயா என்று சில எழுத்தாளர்கள் கேட்கின்றனர். அவர்களின் எழுத்துக்களை விட அவர்களின் இரட்டை வேடம் தானே இங்கே விமர்சனத்துக்குள்ளாகிறது. மேலும் கம்யூனிச, கிறிஸ்தவ அடிப்படை வாதிகள் எழுத்தாளர்களாவதற்கு இங்கே அரசு, தனியார், பத்திரிகை என்று எல்லா விதத்திலும் லாபகரமான சூழ்நிலை நிலவுகிறது. அதனால் ஒரு வலது சாரி எழுத்தாளருக்கு ஆயிரம் இடது சாரி எழுத்தாளர்கள் இருக்கின்றனர். இவர்களிடம் சார்புநிலை இருக்கிறதே தவிர நடுநிலை எங்கே இருக்கிறது?

மோடி ஆட்சியில் எந்தவொரு எழுத்தாளரும் படைப்பாளியும் அச்சுறுத்தப் படவில்லை. எந்தவொரு வலதுசாரி எழுத்தாளர்களும் இன்று வரை எந்தப் பதவிக்கும் தெரிவு செய்யப்படவில்லை. திருச்செங்கொட்டு மக்களைப் பற்றி ஆதாரம் இல்லாமல் அவதூறு பரப்பிய எழுத்தாளருக்காக, அவருக்கு ஆதரவாகவே கூட மத்திய அரசு நீதிமன்றத்தில் முறையிடுகிறது. இருந்தும் இந்த இடது சாரி எழுத்தாளர்கள், மாவோ, ஸ்டாலின் ஆட்சிகாலத்தில் அப்பாவிகள் அழித்தொழிப்பு செய்யப் பட்டதைப் பற்றி எல்லாம் வாயைத் திறக்காதவர்கள்,   இப்போது அழித்தொழிப்பு நடப்பதாக கூசாமல் பரப்புரை செய்கிறார்கள்.

இது இணைய யுகம். சாமானியர்களும் செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள முடிகிறது. எதிர்வினை ஆற்ற முடிகிறது. சாமானியர்கள் அவர்களுக்குத் தெரிந்த வழியில் தான் போராட முடியும். ஜனநாயகத்தில் எந்த ஒரு மனிதனும் போராட்டம் செய்ய முடியும். அதற்கு உரிமை இருக்க வேண்டும். அந்த போராட்டம் வன்முறையாக வெடிக்காமல் பார்த்துக் கொள்வது மட்டுமே அந்தந்த பிரதேச அரசின்/அதிகாரத்தின் பொறுப்பு.

அண்மையில் இது போன்ற ஒரு சந்தர்ப்பத்தில், கேரளாவில் எம்.எம். பஷீர் (இவர் வைக்கம் முகமது பஷீர் அல்ல) என்ற எழுத்தாளர் (ராமாயணத்தைப் பற்றி தொடர் எழுதிய விவகாரத்தில்) மக்களிடம் எதிர்ப்பைச் சந்தித்தார். உடனே எழுத்தாளர் ஜெயமோகன் அந்த போராட்ட மக்களை, மடையர்கள், தெருப்பொறுக்கிகள் என்று திட்டி ஒரு பதிவு எழுதி இருந்தார். “இன்று எழுந்து வரவேண்டிய குரல் இந்து அறிஞர்களிடமிருந்து. இந்து ஞானிகளிடமிருந்து. பன்முகத்தன்மையும் உள்விவாதத்தன்மையும் கொண்ட இந்து மெய்யியலை, பண்பாட்டை அவர்கள் முன்வைக்கவேண்டியிருக்கிறது. ” என்கிறார் ஜெயமோகன்.

கேரளாவில் அத்தகைய இந்து ஞானிகள் உருவாகக் கூடிய சூழலா இருக்கிறது? தொடர்ந்து நடந்த கம்யூநிச – காங்கிரஸ் அரசுகள் மருந்துக்கும் இந்து மதம் குறித்த புரிதல், மாணவர்கள்/இளைஞர்களிடம் ஏற்படாமல் பார்த்துக் கொண்டிருக்கிறது. கேரளா உருவானதிலிருந்து இன்று வரை அமைந்த அரசுகளில் கல்வி மந்திரிகளாக சிறுபான்மையினர் மட்டுமே (விதிவிலக்காக ஒரே ஒரு முறை தவிர) பதவி வகித்து வருகின்றனர். இந்து மதம் குறித்த அறிமுகம் கூட நசுக்கப் படும் நிலையில் எப்படி இந்து அறிஞர்களும், ஞானிகளும் அங்கே உருவாக முடியும்? (தமிழகத்தில் இந்து கல்வி மந்திரிகள் இருந்தார்களே என்றால், இவர்களும் இந்துக்கள் அல்ல, நாத்திகர்கள்!). இவ்வாறு கேரளாவில் தொடர்ந்து இந்து மதம் நசுக்கப் பட்டு, இன்று கிட்டத்தட்ட சிறுபான்மை மதமாகவே ஆகி விட்டது. அங்கே இருக்கிற கொஞ்ச-நஞ்ச இந்து உணர்வுடையவர்கள் அவர்களுக்குத் தெரிந்த வழியில் போராடுகிறார்கள்.

இறுதியாக சுதந்திரம் வாங்கிய காலத்தில் இருந்து, மாநிலங்களின் மொழி வளர்ச்சிக்காக அரசு இது போன்ற விருதளிக்கும் அமைப்புகளை ஏற்படுத்தி வந்துள்ளது. இனியும் இது தேவையா என்று யோசிக்க வேண்டும். பல கோடி மக்கள் பேசும் மொழியின் வளர்ச்சிக்கு அந்த மக்களில் இருந்தே சில அமைப்புகள் உருவாகட்டுமே, அரசு இதிலிருந்து விலகிக் கொள்வது தான் சரி என்று தோன்றுகிறது. ஜிஹாதிகளின் விடுதலைக்காகவும், மோதி போன்ற தலைவர்களுக்கு எதிராக வெளிநாடுகளின் காலில் விழுந்து கெஞ்சுபவர்களாகவும், இந்தியக் கலாசாரத்தை சற்றும் மதிக்காதவர்களாகவும் இருக்கும் இந்த அறிவுஜீவிக் கூட்டத்தினால் என்ன பயன்? இவர்கள் இது வரை எழுதியவற்றால் சமூகத்துக்குத் தான் என்ன பயன்? இனியும் இது போன்ற விருது அமைப்புகளை அரசு ஆதரிக்க வேண்டுமா? செயல்படுத்த வேண்டுமா என்று யோசிக்க வேண்டிய தருணம் இது.

Keerthivasan

About Keerthivasan -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :