ரத்தத்தில் முளைத்த என் தேசம் - 14
– Englightened Master
பல இஸ்லாமிய பெரியவர்கள் முகம்மது அவர்கள் வன்முறையை விரும்பவில்லை, மூட நம்பிக்கைகளை ஒழிக்கவே அவர் பாடுபட்டார் என்கிறார்கள். ஏக இறை வழிபாட்டை விட்டு விட்டு, பலர் பலவிதமான குருட்டு நம்பிக்கைகளை கையாளத் தொடங்கியதால் அல்லாவின் கோபத்திற்கு அவர்கள் ஆளானார்கள் என்கிறார்கள். அதுவே அவர்கள் மீதான தாக்குதலுக்கு காரணம் என்கிறார்கள். மேலும் இஸ்லாம் என்பது அமைதி மார்கமே, வன்முறையை அது ஒரு போதும் முன்நிறுத்தவில்லை என்கிறார்கள்.
குரானை படிப்பவர்கள் ஒவ்வொருவருக்கும் இது ஏற்க முடியாத ஒன்றாக இருக்கிறது. குரானில் பல வசனங்களில் வன்முறை மட்டும் இல்லாமல் காலத்திற்கு ஒவ்வாத அரேபிய பழக்க வழக்கங்கள் இருப்பதையும் பார்க்க முடிகிறது. ஒன்று உத்மான் தொகுத்து வழங்க வைத்த குரான் முகம்மது அவர்கள் கூறாத வசனங்களை கொண்டதாக இருக்க வேண்டும். அதாவது அது பல இடைச்செருககளை கொண்டிருப்பதாக இருக்க வேண்டும். ஆனால் மிகப்பெரும்பாலானவர்கள் கூறுவது என்னவென்றால், குரான் இம்மி அளவு கூட இடைச்செருகல்கள் இல்லாதது என்பதே. ஆகையால் அதில் உள்ள வன்முறை வசனங்கள், பிற்போக்கான குறிப்புகள் அனைத்துமே முகம்மது அவர்களின் வெளிப்பாடுகளே என்பது தீர்மானமாகிறது.
குரானின் வசனங்கள் இப்படி இருக்கையில், அதை பின்பற்றுபவர்கள் பலரும் தங்கள் மனோநிலைக்கு ஏற்றவாறு அதை கையாளத் தொடங்கினார்கள். மேலும் பல நூற்றாண்டுகளுக்கு குரான் அரபி மொழியிலேயே இருந்துவிட்டதால் அரபி மொழி தெரியாமல் முஸ்லீமாக மாற்றப்பட்ட பலரும் அதை மனப்பாடமே செய்து வந்தார்கள். அவர்கள் அரபியர்கள் அதற்கு கூறிய விளக்கங்களையே சார்ந்து இருந்தனர். 9ம் நூற்றாண்டில் குரான் சிந்தி மொழியில் மொழிப்பெயர்க்கப்பட்டது என்று கூறப்பட்டாலும் 19ம் நூற்றாண்டில்தான் அது முதல் முதலில் இந்திய மொழியான உருதில் மொழி பெயர்க்கப்பட்டது. அதன் பின்னர்தான் மற்ற இந்திய மொழிகளில் அது மொழிப்பெயக்கப்பட்டது. ஆக குரானை படித்து அதன் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு மதம் மாறினார்கள் என்கிற வாதம் ஏற்க முடியாததாகிறது.
குரானுக்கு அடுத்து மிக முக்கியமானதாக "சுன்னா" எனப்படும் முகம்மது அவர்களின் போதனைகள் இடம் பெறுகின்றன. இந்த போதனைகள் ஹடித்திலும், சிராவிலும் (முகம்மதின் சுயசரிதை) தொகுத்து வைக்கப்பட்டுள்ளன. முகம்மது அவர்களின் சீடர்களும், அவரோடு இருந்தவர்களும் இதை தொகுக்தார்கள். எப்படி வாழ வேண்டும் என்று நம்பிக்கையாளர்களுக்கு இதுவே ஆதாரமாக இருக்கிறது. குரானை ஏற்றுக் கொள்வது போல் இந்த "சுன்னா" தொகுப்புகளை முஸ்லீம்கள் அனைவரும் ஏற்றுக் கொள்வதில்லை. ஒவ்வொரு இஸ்லாமிய அமைப்புகளும் பல்வேறு விதமான ஹடீத் தொகுப்புகளை ஏற்பதும், நிராகரிப்பதுமாக இருக்கின்றன. எந்த ஹடித்துகள் சிறந்தது ? எது தவறானது ? என்பதில் கருத்து வேறுபாடுகள் இவர்களுக்குள் மிக அதிகமாக காணப்படுகின்றன.
இதில் காலத்தோடு ஒவ்வாத மிக பிற்போக்கான கருத்துக்களை கொண்ட ஹடீத்துக்கள் வேறு பல புழக்கத்தில் இருப்பதை பார்க்க முடிகிறது. குரானோடு ஒத்துப் போகும் சுன்னாக்கள் தான் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்று மேம்போக்காக சொல்லப்பட்டாலும், பல விஷயங்களில் எது குரானோடு ஒத்து போகிறது ? எது ஒத்து போகவில்லை என்பது மிகுந்த குழப்பத்தை இவர்களுக்கு மத்தியில் ஏற்படுத்தியே வருகிறது.
இவை எல்லாம் ஒரு பக்கம் இருக்க, உத்மானின் படுகொலை மற்றும் அலி-ஆயிஷா பிளவால் ஏற்பட்ட ஒட்டகப் போரிற்கு பிறகு முஸ்லீம் படை பலவாறு பிளவு படத் தொடங்கியது. "தடி எடுத்தவனெல்லாம் தண்டல் காரன்" என்பது போல், ஒவ்வொரு படையும் தாங்களே முஸ்லீம் படை என்பதாக சர்வ நாசத்தில் இறங்கியது.
மேலும் பார்ப்போம்.