Thursday, March 24, 2016

Keerthivasan

எங்கே பிராமணன் ? – 27 – ஜோதிடம் - 3

எங்கே பிராமணன் ? – 27 – ஜோதிடம் – 3



சோ : வராஹமிஹிரர் தனது ‘ப்ருஹத் ஸம்ஹிதை’ என்கிற நூலில் ஜோதிடர்கள் பற்றியும், அவர்களுக்குத் தேவையான தகுதிகள் பற்றியும், அந்தத் தகுதிகள் இல்லாமல் ஜோதிடர்கள் என்று சொல்லிக் கொள்பவர்களைப் பற்றியும் கூறியிருப்பதில் ஒரு பகுதியைப் பார்ப்போம்:

‘ஜோதிட சாஸ்திரத்தை சரியாகப் புரிந்து கொள்ள முடியாமலும், அது பற்றிய சந்தேகங்களைக் கேட்கிற மாணவர்களுக்குச் சரியான விளக்கங்கள் கூற முடியாமலும், தன்னிடம் கேட்கப்படுகிற ஒரு கேள்விக்கும் பதில் சொல்ல முடியாமலும் இருப்பவரை, ஜோதிடர் என்று எப்படிக் கூறுவது?

‘சாஸ்திரம் சொல்லியிருப்பதற்குத் தவறான அர்த்தம் கற்பித்து, வான சாஸ்திரக் கணக்குகளைத் தவறாகப் போடுகிறவன், அறிவற்றவனாவான். தரமற்ற மாதர்களின் குணங்களைக் கூறி, தெய்வத்தை வர்ணிப்பவனுக்கும் அவனுக்கும் வித்தியாசமில்லை.

‘சரியாக விஷயமறிந்த ஜோதிடனின் ஆலோசனை கிட்டாத அரசன் – பார்வையற்றவன் போலும், இருளில் சிக்கியவன் போலவும் திண்டாடுவான்’.

இப்படி சரியான சாஸ்திர அறிவில்லாத ஜோதிடர்களைப் பற்றி கூறியுள்ள வராஹமிஹிரர், ஜோதிட சாஸ்திரம் எவ்வளவு கடினமானது என்பதையும் இவ்வாறு விளக்கியிருக்கிறார்.

‘ஒருவேளை காற்று உதவினால், நன்றாக நீந்தி, கடலின் மறுபுறத்தை அடைந்து விடலாம். ஆனால், தவமற்றவன் காலம் எனும் கடலைக் கடந்து, ஜோதிட சாஸ்திரத்தை அறிவது கடினம்’.

கேள்வி : இன்றைக்குள்ள ஜோதிடர்கள் எல்லாம் தவம் செய்தவர்களா?

சோ : தவம் என்பதை இன்று, ‘தூய்மை’ என்று கொள்ள வேண்டும். தவம் என்பது கடும் முயற்சியையும் குறிக்கும். தூய்மையானவன், கடுமையாக உழைத்துப் பெறக் கூடியது – ஜோதிட சாஸ்திர ஞானம். அதனால்தான் வராஹமிஹிரர் ஜோதிடனுக்கு உரிய பல தகுதிகளைக் குறிப்பிடுகிறார்.

அவற்றில் சில: நற்குலத்தில் பிறந்திருக்க வேண்டும்; பொய் பேசாதவனாக இருக்க வேண்டும்; பொறாமை அற்றவனாக இருக்க வேண்டும்; மனத் தூய்மை, சரீர சுத்தம், வாக்கு வன்மை; மனோதிடம்; சாதுர்யம்; சடங்குகளை நடத்தி வைக்கக் கூடிய ஞானம்; விரதங்களை அனுஷ்டிக்கிற வாழ்க்கை; நக்ஷத்திரங்களின் கதியை எடுத்துச் சொல்கிற வான சாஸ்திர அறிவு; காலப் பிரமாணங்களைப் பற்றிய கணக்குகளில் தெளிவு; முஹூர்த்தம் – நாடி – பிராணன் (ஒரு மூச்சு விடுகிற நேரம்) – போன்ற கணக்குகளையும், வசிஷ்டர், பிரும்ம தேவர் போன்றோர் வகுத்துள்ள வான சாஸ்திர விதிமுறைகளையும் பற்றிய அறிவு; அறுபது ஆண்டுகால அளவுகள் ஆரம்பம் மற்றும் முடிவு பற்றிய தெளிவு; கிரஹ சஞ்சாரங்களுக்கான காரணங்கள் பற்றிய அறிவு; பூமி தனது அச்சில் சுற்றி, சூரியனையும் சுற்றி வருகிறபோது ஏற்படுகிற மாற்றங்கள்; சூரிய, சந்திர கிரஹணங்களின் தன்மை பற்றிய தெளிவு… என்று பற்பல விஷயங்களைக் குறித்த நல்ல ஞானம் உள்ளவனே ஜோதிடன் ஆவான்’.

இவ்வாறு சொல்லி விட்டு, வராஹமிஹிரர், ஜோதிடத்தை நன்றாக அறிந்தவனைப் பாராட்டவும் செய்கிறார். ஜோதிட சாஸ்திரத்தை நன்கு கற்று, அனுபவ ரீதியாகவும் அதை உணர்ந்த ஜோதிடர் – தன் கண் முன்னே பார்ப்பது போல – கூறுகிற ஜோதிடம் பொய்க்காது. ஆகையால், வெற்றிகளையும், புகழையும், செழுமையையும் விரும்புகிற அரசன், நன்கு கற்ற மிகச் சிறந்த ஜோதிடனை தன்னுடன் வைத்திருக்க வேண்டும்’.

‘அதே சமயத்தில், சில விஷயங்களை ரகசியமாகக் கேட்டறிந்து கொண்டு ஜோதிடம் கூறுபவனும், சில சாத்தான்களின் உதவியோடு ஜோதிடம் கூற முற்படுபவனும், பாவம் செய்கிறவர்கள் ஆவார்கள். ஜோதிட சாஸ்திரத்தைக் கற்காமல், ஜோதிடம் கூற முற்படுகிறவன் பாவியே’.

இப்படியெல்லாம் வராஹமிஹிரரின், பிருஹத்சம்ஹிதை கூறுகிறது.
கேள்வி : நீங்கள் சொல்வதைப் பார்த்தால், ஜோதிடத்தில், நேரத்தைப் பற்றிய கணக்கு ரொம்ப முக்கியமானதாகக் கருதப்படுகிறது போலிருக்கிறதே?
சோ : ஆமாம். இது பற்றி ஒரு விவரம் இருக்கிறது.

 – CHO
– தொகுப்பு : அல்லயன்ஸ் ஸ்ரீனிவாசன்

Keerthivasan

About Keerthivasan -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :