Friday, January 22, 2016

Keerthivasan

ரத்தத்தில் முளைத்த என் தேசம் - 23

ரத்தத்தில் முளைத்த என் தேசம் - 23

Englightened Master

பொது ஆண்டு 871ல், இன்றைய ஆப்கானிய காபூலை பிடித்தான் கிழக்கு ஈரானை சேர்ந்த "சஃபார்" (Ya'qub bin Laith as-Saffar) "சஃபார்" என்றால் செப்பு கொல்லன் என பொருள்படும். ஒரு செப்பு கொல்ல‌னாக தொடங்கி போர் படைவீரனாக மாறி பல தேசங்களை பிடித்தான் அவன். அதில் ஈரான், தஜிகிஸ்தானின் பகுதிகள் மற்றும் பண்டைய பாரத‌ பகுதிகளான பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகியவை அடங்கும். அவனது அரச பரம்பரை "சஃபாரித் அரசு" (Saffarid Dynasty) என்று அழைக்கப்பட்டது. அதிக வருடங்கள் நீடிக்காத அந்த "சஃபாரித் அரசை" பொது ஆண்டு 913ல் "சமானித் அரச ப‌ரம்பரை" ( Samanid Dynasty) கைப்பற்றியது.

"இஸ்மாயில் சமானி" (Ismail Samani) என்பவனின் தலைமையில் வந்த அந்த சமானிய படை வெறும் 20000 வீரர்களை மட்டுமெ கொண்டிருந்தது. ஆனால் 70000 வீரர்களை கொண்ட வலிமை மிக்க "சஃபாரிய" படையை தோற்கடித்தது. இத்தனைக்கும் "சமானிய படைகள்" வசம் கேடயங்களோ, வாள் போன்ற ஆயுதங்களோ இல்லை. ஆனால் அல்லாவுக்காக போர் புரிகிறோம் என்கிற உத்வேகம் அவர்கள் மத்தியில் தோற்றுவிக்கப் பட்டு இருந்தது. அதுவே வெற்றிக்கு காரணமாக இருந்ததாக சொல்லப்படுகிறது. அப்போதைய "அபாசித் கலீஃபாக" இருந்த "அல்முதாயித்" (Al-Mu'tadid ) சஃபாரிய‌ர்களை அங்கீகரிக்காமல், சமானியர்களை அங்கீகரித்ததும் வெற்றிக்கு ஒரு காரணம் என்கிறார்கள் ஆய்வாளர்கள். மேலும் இஸ்மாயில் சமானின் மத்திய ஆசிய தாக்குதல்கள் அவனுக்கு வீரர்கள் மத்தியில் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தியதும் ஒரு காரணம் என சொல்லப்படுகிறது.

அதன் பின் சில ஆண்டுகளில் சமானித் அரசின் அமீராக இருந்த "அப்த் அல் மாலிக்" ( Abd al-Malik) இறந்துவிட, அவருக்கு அடுத்து யார் ஆள்வது என்பதில் சர்ச்சை கிளம்பியது இதை மேற்கே புதியதாக‌ முஸ்லீம்களாய் மதம் மாறி இருந்த‌ துருக்கிய மக்களால் உருவாக்கப்பட்ட "கர்லுக்ஸ் படை" (Karluks) நன்கு பயன்படுத்திக் கொண்டது. கர்லுக்ஸ் படை, "கரகனித் அரசு" (Kara-Khanid) என்று ஒரு அரசை உருவாக்கி, சமானிய பகுதிகள் மீது போர் தொடுத்து கைப்பற்றினர்.

இந்த வாரிசு பிரச்னையை பயன்படுத்திக் கொண்டு, சமானத் பேரரசின் அடிமை தளபதியாக இருந்த "அல்ஃப் டிகின்" (Alp Tigin) தன்னுடைய ஆளுமையின் கீழ் இருக்கக் கூடிய ஒருவனை அமீராக‌ ஆட்சியில் வைப்பதற்கு தீர்மானித்தான். ஆனால் அதை சமானித் அமைச்சர்கள் ஆதரிக்காமல், "மன்சூர்" ( Mansur I ) என்பவனை நியமித்தார்கள். புதிய அமீரால் தனக்கு ஆபத்து என்பதை உணர்ந்த அல்ப் டிகின் "இந்துகுஷ்" மலைப்பகுதியின் தெற்கே படை எடுத்து சென்றான். அங்கு உள்ள ஆப்கானிய பகுதியான கஜ்னாவை (Ghazna) பொது ஆண்டு 962ல், லாவிக் (Lawik dynasty) அரசிடம் இருந்து கைப்பற்றினான்.

சமானித் அரசின் கீழ் கஜ்னியின் கவர்னராக தன் மருமகன் "செபுக் டிகினை" (Sebük Tigin) அமர வைத்தான் அல்ஃப் டிகின் சமானித் அரசு வீழ்ச்சி பெற துவங்கியதும், கஜ்னாவை தலைநகராக கொண்ட பகுதிகளை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து சுயாட்சியை அறிவித்தான் செபுக் டிகின். இதன் மூலம் கஜ்னவித் பேர‌ரசு ( Ghaznavid Empire) உதயமாகியது.

கஜ்னவித் அர‌சு துருக்கிய வம்சத்தை சேர்ந்தது என்றாலும், அது பாரசீக (ஈரான்-ஈராக்) கலாச்சாரம், மொழி, பழக்க வழக்கங்களையே கொண்டிருந்தது. ஆகையால் அதை சிலர் பாரசீக சாம்ராஜ்யம் என்றும் கூறுவார்கள். செபுக் டிகினின் மரண‌த்திற்கு பிறகு அவனின் மகன் "இஸ்மாயில்" சிறிது காலம் ஆட்சி புரிந்தான். ஆனால் முஸ்லீம்களின் சரித்திரத்தில் அடிக்கடி நிகழும் நிகழ்வான‌ சகோதர யுத்தம் அங்கும் தொடங்கியது. இஸ்மாயிலை பொது ஆண்டு 998ல் "கஜ்னி போரில்" (the Battle of Ghazni) அவன் சகோதரன்"மஹ்முத் கஜினி" வீழ்த்தி ஆட்சியை கைப்பற்றினான். ஆட்சியை கைப்பற்றியதும் மேற்கே துருக்கிய "கரகனித்" அரசோடு அவன் ஒப்பந்தங்கள் செய்துக் கொண்டு எல்லைகளை நிர்னயித்துக் கொண்டான். அதன் பின் சிந்து பகுதிக‌ள் மற்றும் முல்டான் பகுதிகளை அவன் கைப்பற்றினான்.

"கஜினி முகம்மது" என்று அழைக்கப்பட்ட அந்த கொடுங்கோலனின் பார்வை செல்வ செழிப்பு மிகுந்த பாரதத்தின் பகுதிகள் மீது திரும்பியது.

Keerthivasan

About Keerthivasan -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :