Thursday, March 24, 2016

Keerthivasan

எங்கே பிராமணன்? – 27 – ஜோதிடம் – 4

எங்கே பிராமணன்? – 27 – ஜோதிடம் – 4



சோ: ஜோதிடம் தொடர்பாக, ஒரு சுவாரஸ்யமான நிகழ்ச்சி வரலாற்றில் இடம் பெற்றிருக்கிறது. இதை முதலில் எழுதியது ஒரு பாரஸிக யாத்ரீகர். வேறு நூல்களிலும் இது இடம் பெற்றிருக்கிறது. பாஸ்கராச்சார்யர் என்பவர் பெரிய கணித மேதை. இன்றும் கூட, அவருடைய கணித நூல்கள், பெரும் மரியாதைக்குரியவையாகவும், ஆராய்ச்சிக்குரியவையாகவும் கருதப்படுகின்றன.

அவருடைய மகள் (சிறுமி) லீலாவதிக்கு, மாங்கல்ய பலம் சரியாக அமையாததால், அவள் திருமணம் புரிந்தால், விதவையாகி விடுவாள் என்று ஜோதிடர்கள் கூறியிருந்தார்கள். இதைத் தவிர்க்க விரும்பிய பாஸ்கராச்சார்யர், மகளின் ஜாதகத்தை நன்கு ஆராய்ந்து ஒரு முடிவிற்கு வந்தார். ஒரு குறிப்பிட்ட நேரத்தில், அவளுக்கு திருமணம் நடந்தால், அவள் தீர்க்க சுமங்கலியாக இருப்பாள் என்று தீர்மானித்த பாஸ்கராச்சார்யர், தன் மகள் திருமணத்தை அந்த குறித்த நேரத்திலேயே நடத்தினார். ஆனாலும், அவள் விதவையாவதை அவரால் தடுக்க முடியவில்லை.

பாஸ்கராச்சார்யர், தனது கணக்கு தவறாகிப் போனது எப்படி என்று புரியாமல் நின்றார். ஒரு சந்தேகம் வரவே, நேரம் குறிக்கிற சாதனத்தை ஆராய்ந்தார். மேலே ஒரு பாத்திரம்; கீழே ஒரு பாத்திரம்; மேல் பாத்திரத்தில் ஒரு மிகச் சிறிய ஓட்டை; அதன் வழியே மேல் பாத்திரத்தில் ஊற்றப்பட்ட தண்ணீர் கீழ் பாத்திரத்தில் சேகரம் ஆகும்; அந்த சிறிய துவாரத்தின் வழியே, நீர் சொட்டுச் சொட்டாக விழுவதற்கு ஆகிற நேரம், நொடிக் கணக்கில் துல்லியமாக அறியப்படும்.

இப்போது அந்த சாதனத்தை எடுத்துப் பார்த்த பாஸ்கராச்சார்யர், அந்த மேல் பாத்திரத்தின் துவாரத்தை, ஒரு சிறிய மூக்குத்தி, ஓரளவு அடைத்துக் கொண்டிருப்பதைப் பார்த்தார்.

லீலாவதி, சிறிய பெண்; திருமணத்தன்றும் அவள் விளையாடிக் கொண்டிருந்தாள். அப்போது அந்த சாதனத்தை அவள் எட்டிப் பார்க்க, அவளையும் அறியாமல் அவளுடைய மூக்குத்தி, மேல் பாத்திரத்தில் விழுந்து அதன் துவாரத்தை ஓரளவு அடைத்து விட்டது; அதனால் பாஸ்கராச்சார்யர் குறிப்பிட்ட நேரம், தவறி விட்டது; தண்ணீர் விழுகிற நேரம் தடைப்பட்டதை அறிந்து, பாஸ்கராச்சார்யர், ‘தான் குறித்த நேரத்தை தவற விட்டு, நேரம் கடந்து திருமணத்தை நடத்தி விட்டோம்’ என்பதை புரிந்து கொண்டார்! ஆக, அவருடைய கணிதம் தவறவில்லை; விதி விளையாடி விட்டது.
இதிலிருந்து, ஒரு விஷயத்தை நாம் புரிந்து கொள்ளலாம். ஜோதிடத்தின் மூலமாக, நடக்கப் போகிற நிகழ்ச்சியை அறிந்து கொள்ளலாம்; ஆனால், அந்த நிகழ்ச்சி நடந்துதான் தீரும் என்ற விதி இருந்தால், ஜோதிடம் அதைத் தடுத்து விடாது. விதி வலியது.

கேள்வி : அப்படியானால் எதற்கு ஜோதிடம் பார்க்க வேண்டும்? விதியின்படி நடப்பது நடந்தே தீரும் எனும்போது, ஜோதிடம் ஏன்…?

சோ : சொல்லப் போனால், அதுவும் கூட நமது விதிகளைப் பொறுத்துதான். ஒரு பாதகமான நிகழ்ச்சி, நடக்கக் கூடும் என்ற நிலையில் கிரஹ அமைப்புகள் இருந்தாலும், தெய்வத்தைத் தொழுவதன் மூலம் அந்த நிகழ்ச்சி தவிர்க்கப்படும் – என்று நமது விதி இருந்தால் – நாம் ஒரு நல்ல ஜோஸ்யரைப் பார்த்து, நேரம் சரியில்லை என்பதை புரிந்து கொண்டு, பரிகாரம் செய்ய, அவர் சொல்கிற ஸ்தலங்களுக்குச் சென்று, இறைவனை வழிபடுவோம்.

மாறாக, நடக்க இருக்கிற நிகழ்ச்சி, தடுக்கப்படக் கூடியது அல்ல என்பது நமது விதியானால், நாம் ஜோஸ்யத்தைப் பார்க்க மாட்டோம்; பார்த்தாலும் விவரமறிந்த ஜோதிடரை அணுக மாட்டோம்; அப்படியே அணுகினாலும், அவர் சொல்கிற பரிகாரத்தை ஒழுங்காகச் செய்து முடிக்க மாட்டோம். அதுவும் நமது விதிதான். இது என் கருத்து.


 

கேள்வி : இப்படி எல்லாம் பேசினால் கூட, ஜோஸ்யம் என்பதை, ஒரு உண்மையான விஷயமாக எடுத்துக் கொள்ள முடியவில்லை. மனம் போன போக்கில், ஏதோ சொல்கிறார்கள்; அதில் குருட்டாம் போக்கில் ஒன்றிரண்டு பலித்து விடுகின்றன. அதனால் அது உண்மையான விஷயமாகி விடுமா?

சோ : நான் முன்பு சொன்ன மருத்துவ உதாரணத்தையே இதற்கும் நினைத்துப் பாருங்கள். சில சமயங்களில் மருத்துவம் பலிக்காது; சில சமயங்களில் பலிக்கும். பலிக்கிற சமயங்களில் குருட்டாம் போக்கானவை என்று கூற முடியுமா? அது போலத்தான் இதுவும். நான் ஒரு சில நிகழ்ச்சிகளைச் சொல்கிறேன். அவற்றையும் நீங்கள் நினைத்துப் பாருங்கள்.

 – CHO
– தொகுப்பு : அல்லயன்ஸ் ஸ்ரீனிவாசன்

Keerthivasan

About Keerthivasan -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :