Tuesday, July 26, 2016

Keerthivasan

ரத்தத்தில் முளைத்த என் தேசம் - 25

ரத்தத்தில் முளைத்த என் தேசம் - 25

முகம்மது கஜினி பாரதத்தை வருடம் தோறும் தாக்க சபதம் எடுத்துக் கொண்டதற்கு மிக முக்கியமாக சொல்லப்படுவது அவனின் ரத்தத்தில் ஊறி இருந்த மதவெறியே !! முகம்மது நபி அவர்கள் எப்படி முஸ்லீம் படையின் தொடக்கத்தில் அரேபியாவில் இருந்த பாகன் நம்பிக்கையாளர்களின் கோவில்களை தேடி தேடி தாக்கி அழித்தாரோ அவ்வாறே பாரதத்தில் உள்ள இந்து காஃபிர்களின் (முஸ்லீம் அல்லாதவர்கள்) கோவில்களை அழிக்க வேண்டும் என்பது ஒரு மதரீதியான உந்துதலாக அவனுக்கு இருந்தது. மேலும் காந்தாரம் போன்ற (இன்றைய ஆப்கானிஸ்தான்) விவசாயம் இல்லாத வற‌ண்ட மலைகள் நிறைந்த நிலப்பரப்பை கொண்டிருந்த அவனுக்கு செல்வ செழிப்பான பாரதத்தின் பகுதிகள் மிகுந்த ஈர்ப்பை ஏற்படுத்தி இருந்தன. அந்த செல்வ வளங்களை கொள்ளை அடிக்க வேண்டும் என்பது தீராத வேட்கையாக அவனிடம் இருந்தது.

பொது ஆண்டு நவம்பர் 28, 1001 தன்னுடைய முதல் தாக்குதலை முகம்மது தொடங்கினான். இன்றைய பாகிஸ்தானில் பெஷாவரில் நடந்த‌ போரில், ஷாஹி வம்சத்தின் ஜெயபாலரோடு நடந்த யுத்தத்தில் முகம்மது கஜ்னி அவரை தோற்கடித்தான். தோல்வியை தாங்க இயலாமல் தன்னை தானே நெருப்பு மூட்டிக் கொண்டு ஜெயபாலர் இறந்ததாக சொல்லப்படுகிறது. ஜெயபாலரின் பல பகுதிகளை கைப்பற்றினான் முகம்மது. அதன் பின் அவன் கிழக்கே ஒவ்வொரு வருடமும் பாரதத்தை நோக்கி தன் சக்தி வாயந்த குதிரை படையை செலுத்தினான்.

பொது ஆண்டு 1006ல் அவன் மூலஸ்தானத்தை (முல்தான்) பிடித்தான். ஜெயபாலரின் மகனான ஆனந்த பாலாவை அவன் இடைஇடையே எதிர்கொண்டு போரிட்டான். பொது ஆண்டு 1008ம் ஆண்டு எட்டாவது முறையாக பாரதத்தை நோக்கி வந்த முகம்மது கஜ்னியை ஆனந்தபாலா பெரும் படையோடு தடுத்து நிறுத்தினார். தன் தந்தையின் தோல்வி மற்றும் மரணத்திற்கு பழி வாங்க அவர் மிகப்பெரும் படையை திரட்டி இருந்தார். அவரின் படை வெற்றி பெற்றுவிடும் என்கிற நிலையில் ஆனந்தபாலரின் துரதிஷ்டமோ என்னவோ, அவரின் மிகப்பெரிய படையின் முன்னே சென்றுக் கொண்டிருந்த யானை திடீரென மதம் பிடித்து பின் வாங்கி, தன் சொந்த படைகளையே மிதித்துக் கொண்டு ஓடத் தொடங்கியது. இது ஆனந்தபாலரின் படைக்கு மிகப்பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. இதை பயன்படுத்திக் கொண்ட கஜ்னியின் குதிரைப் படை ஆனந்தபாலரின் படையை கடுமையாக தாக்கி வெற்றிக் கொண்டது.

யானை திடீரென மதம்பிடித்து ஓடியதற்கு இரண்டு காரணங்கள் சொல்லப்படுகின்றன. இரவோடு இரவாக ஆனந்தபாலரின் யானைக்கு ஆப்கானிய "அபின்" போதை மருந்துகளை கஜினியின் ஆட்கள் கொடுத்து விட்டிருந்தனர் என்பது ஒன்று. கஜ்னியின் படையை சேர்ந்த யாரோ ஒருவர் வீசிய 'நெருப்பு அம்பு' சரியாக யானையின் கண்களில் பட்டதுதான் காரணம் என்பது இரண்டு. எது எப்படியோ யானை மதம் பிடித்து பின்வாங்கி ஓடியதே போரில் தோற்றதற்கு காரணம் என்கிறார்கள் சரித்திர ஆய்வாளர்கள்.

இந்த போரின் வெற்றியின் மூலம் முகம்மது கஜ்னியின் கைவசம் 'ஷாஹி'களின் பிரதேசங்கள் வந்து சேர்ந்தன. அவனின் ஆளுமையும், ஆற்றலும் இதனால் அதிகரித்தது. அவன் பாரதத்தின் செழிப்பான பிரதேசங்களான இன்றைய பஞ்சாப், குஜராத் மற்றும் உத்தர பிரதேசத்தை நோக்கி திருப்பினான்.

Englightened Master

Keerthivasan

About Keerthivasan -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :