Tuesday, July 26, 2016

Keerthivasan

எங்கே பிராமணன்? – மறுமணம் – 29


கேள்வி : ஹிந்து மத நூல்களில், மனுஸ்மிருதி – அது இது என்று ஆயிரம் பேசினாலும், சில விஷயங்களில், பெண்களுக்கு அநீதி இழைக்கிற வகையில்தானே ஹிந்து மத சட்ட திட்டங்கள் இருந்திருக்கின்றன? நவீன காலத்தில், அதுவும் ஆங்கிலேயர் ஆட்சிக்குப் பிறகுதானே, ஹிந்து பெண்களுக்கு ஓரளவாவது நீதி கிட்ட ஆரம்பித்திருக்கிறது?

சோ : குறிப்பாக ஏதாவது ஒரு சட்டத்தைச் சொல்லுங்களேன்.


கேள்வி : விதவைகள் மறுமணத்தை எடுத்துக் கொள்ளுங்கள். முன்பு இருந்த ஹிந்து சட்டத் திட்டத்தின்படி – இது நடக்காத காரியம். ஆங்கிலேயர்களுக்குப் பின்னர் வந்த சட்டத்தில் இதற்கு அனுமதி இருந்தது, இல்லையா?

சோ : இளம் வயதிலேயே கணவனை இழந்து வாடுகிற பெண்மணி, வாழ்நாள் முழுவதும் ‘விதவை’ என்ற பட்டத்துடனேயே வாழ்ந்து தீரத்தான், ஹிந்து மத நூல்கள் வழி செய்தன என்று ஒரு அபிப்பிராயம் இருக்கிறது. இது தவறு.

அர்த்த சாஸ்திரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் விதவைகளின் மறுமணம் பற்றி வருகிறது. அதைக் கொஞ்சம் பார்ப்போம்:

‘கணவனை இழந்த பெண்மணி, தன்னைப் பக்தி மார்க்கத்தில் ஈடுபடுத்திக் கொண்டு வாழ நினைத்தால் – திருமணத்தின்போது அவளுக்கு அளிக்கப்பட்ட நகைகளும், செல்வமும் அவளையே சாரும். இவற்றைப் பெற்றுக் கொண்ட பிறகு, அந்தப் பெண் மீண்டும் ஒரு மணம் செய்து கொண்டால் – அந்த நகைகளையும், செல்வத்தையும் அவள் வட்டியுடன் திருப்பித் தர வேண்டும்.
‘ஆனால், கணவனை இழந்த பிறகு, தன் குடும்பத்தைப் பார்த்துக் கொண்டு, வேறு திருமணம் செய்து கொள்ளாமல் அவள் வாழ்ந்தால், கணவன் தரப்பிலிருந்து தரப்பட்ட செல்வம் அவளையே சாரும். மாமனாரின் விருப்பத்திற்கு மாறாக, அவள் மறுமணம் செய்து கொண்டால்தான் – முதல் கணவன் வீட்டிலிருந்து பெற்ற செல்வங்கள் அவளைச் சாராது போகும்.’மேலும் பாருங்கள் : ‘மகன்களைப் பெற்ற பிறகு, ஒரு பெண் விதவையாகி விட்டால், அவளுடைய கணவன் அளித்திருந்த செல்வம், அவளைச் சாராது – ஆனால், அவளுடைய மகன்களுக்கு அது போய்ச் சேரும்’. இந்த மாதிரி விதிமுறைகளிலிருந்து என்ன தெரிகிறது? விதவைகள் மறுமணம் செய்து கொள்வது அப்போதும் சாத்தியமாகவே இருந்தது. கணவனிடமிருந்து பெற்ற சொத்துக்களை அவர்கள் இழப்பார்கள் – அவ்வளவுதான்.ஆகையால், இது ஏதோ ஆங்கிலேயர்கள் வந்த பிறகு, ஹிந்துப் பெண்களுக்குக் கிடைத்த ஒரு வரம் என்று நினைப்பது தவறு.


கேள்வி : சரி. இருக்கட்டும். ஒரு ஆண், பல பெண்களை மணப்பது என்பது, முன்பு சர்வ சாதாரண விஷயமாக இருந்ததே? அதற்கு என்ன சொல்கிறீர்கள்?

சோ : நீங்கள் சொல்வது போல, ஒருவன் பல பெண்களை மணப்பது என்பது, சர்வ சாதாரணமான விஷயமாக இருக்கவில்லை. அதற்கும் பல நிபந்தனைகள் இருந்தன. இதற்கும் கூட அர்த்த சாஸ்திரம் கூறுகிற விதிமுறைகளையே பார்ப்போம்.

‘திருமணம் நடந்து எட்டு வருடங்கள் ஆகியும், தன் மனைவிக்கு குழந்தையே பிறக்கவில்லை என்றால் ஒருவன் மறுமணம் செய்து கொள்ளலாம். அல்லது திருமணம் ஆகி பன்னிரண்டு ஆண்டுகள் கழிந்த பிறகும், தனக்கு ஒரு மகன் பிறக்கவில்லை என்றாலும், அவன் மறுமணம் செய்து கொள்ள முடியும். இப்படியல்லாமல், ஒருவன் அந்த நிபந்தனைக்குட்படாமல் மறுமணம் செய்து கொள்ள முற்பட்டால் – அவன் முதல் மனைவிக்கு நஷ்டஈட்டுத் தொகையும், அபராதத் தொகையும் கட்ட வேண்டும் என்ற விதிமுறை இருந்தது.

இப்படி, ஒருவன் தன் மனைவி இருக்கும்போதே மறுமணம் புரிவது என்பது சாதாரணமான காரியமாக இருக்கவில்லை.



– CHO
– தொகுப்பு : அல்லயன்ஸ் ஸ்ரீனிவாசன்

Keerthivasan

About Keerthivasan -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :