Monday, August 1, 2016

Keerthivasan

எங்கே பிராமணன்? – விவாகரத்து – 30


கேள்வி : அப்படியே இருக்கட்டும். ஆனால், ஏதோ சில நிபந்தனைகளுக்குட்பட்டு, ஒரு ஆண், மனைவி இருக்கும்போதே இன்னொரு பெண்ணை மணக்க முடிந்தது. அவனுக்குத்தானே இந்த மாதிரி உரிமை இருந்தது? ஒரு பெண், தன் கணவன் உயிருடன் இருக்கும்போதே, இன்னொரு திருமணம் செய்து கொள்ள வழி இருந்ததா? இல்லையே! அதாவது, இது ஆண்களின் சார்பாக இருந்த பாரபட்சமான வழிமுறைதானே?

சோ : கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன் என்று நினைத்தே ஒரு மனைவி வாழ வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அந்தக் காலத்தில் இருந்தது என்பது உண்மையே. ஆனால், நீங்கள் சொல்கிற மாதிரி, ஆணுக்கு உள்ள உரிமை, பெண்ணுக்கு அறவே மறுக்கப்பட்டது என்பது சரியல்ல. சில சமயங்களில், ஒரு பெண் தன் கணவனைத் துறந்து, புதிய வாழ்க்கையைத் தேடிக் கொள்ள அந்தக் கால நூல்கள் வழி செய்தன.

‘இழிவான செயலைச் செய்து விட்ட – அல்லது தேசத் துரோகம் செய்து விட்ட – அல்லது அயல்நாடு சென்று திரும்பி வராத – அல்லது தாம்பத்திய உறவுக்கு அருகதை அற்றவனாக உள்ள – கணவனை ஒரு பெண் கைவிடலாம்’ என்று அர்த்தசாஸ்திரம் கூறுகிறது.

ஆக, மனைவியைக் கைவிட்டு மறுமணம் செய்து கொள்ள கணவனுக்கு இருந்த உரிமை – பெண்களுக்கும், சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு இருந்தது. ஆண்களுக்கும், இந்த உரிமை, நிபந்தனைகளுக்குட்பட்டதுதான் என்பதை ஏற்கெனவே பார்த்தோம். ஆகையால் இதில் பெண்களுக்கு எந்த அநீதியும் இல்லை.



கேள்வி : நீங்களே கூட, இவ்விஷயத்தில் அர்த்தசாஸ்திரத்தை மேற்கோள் காட்டுகிறீர்களே ஒழிய, மனு நீதியை இதற்கு ஆதாரமாக உங்களால் சொல்ல முடியவில்லையே?

சோ : அர்த்தசாஸ்திரத்தின் பல விதிமுறைகள் மனுஸ்ம்ருதியை ஒட்டியவையே. அது இருக்கட்டும். இந்த விஷயம் பற்றி மனுஸ்ம்ருதி சொல்வதைப் பாருங்கள்:

‘ஏதோ ஒரு நல்ல காரியம் செய்வதற்காக கணவன் அயல்நாடு சென்றிருந்தால், அவன் திரும்பி வருவதற்கு எட்டு வருடங்கள் – கல்விக்காகவோ, புகழ் தரும் செயல் புரிவதற்காகவோ கணவன் அயல்நாடு சென்றிருந்தால், அவன் திரும்பி வருவதற்கு ஆறு வருடங்கள் – இன்னொரு மனைவியைப் பார்க்க தூரதேசம் சென்றிருந்தால், அவன் திரும்பி வருவதற்கு மூன்று வருடங்கள் காத்திருந்து, அதன் பின் கணவன் திரும்பவில்லையெனில், மனைவி தன் வழி செல்லலாம்.இப்படி மனுஸ்ம்ருதியும், அர்த்தசாஸ்திரமும் கூறினாலும், இவையெல்லாம் தர்ம விதிப்படி, பெற்றோரால் நிச்சயிக்கப்பட்டு, வைதிக முறைப்படி நடத்தப்பட்ட திருமணங்களில் அவ்வளவாக ஊக்குவிக்கப்படவில்லை. இது, விவாகரத்து விதியிலிருந்து தெளிவாகவே தெரிகிறது.


கேள்வி : விவாகரத்தா? அது அப்போது இருந்ததா?

சோ : தர்மத்தைக் காப்பதற்காக நடக்கிற திருமணங்கள் – அதாவது மேலே நான் கூறிய மாதிரியான வைதிகத் திருமணங்கள் – தவிர, மற்ற திருமணங்களுக்குத்தான் இந்த விதிமுறை செல்லும் என்ற ஷரத்துடன், விவாகரத்துக்கான வழிமுறை கூறப்பட்டிருக்கிறது.

அர்த்தசாஸ்திரத்தில், விவாகரத்து ‘விடுதலை’ என்றுதான் குறிப்பிடப்பட்டிருக்கிறது. மொழி பெயர்ப்புகளில் ‘விவாகரத்து’ என்று கூறப்பட்டாலும், அர்த்தசாஸ்திர நூலில் இது ‘மோக்ஷம்’ என்று குறிப்பிடப்படுகிறது – அதாவது திருமணம் என்பது ஒரு பந்தம்; ஒரு கட்டு; அப்படிப்பட்ட திருமணத்திலிருந்து விலகுவதால், இதற்கு ‘விடுதலை’ என்று கூறப்பட்டிருக்கிறது. பிறப்பு, இறப்பு என்ற சக்கரச் சுழலிலிருந்து பெறுகிற விடுதலை – மோக்ஷம்; திருமணம் என்ற பந்தத்திலிருந்து பெறப்படுகிற விடுதலை – மோக்ஷம்.

ஆனால், கணவன் – மனைவி இருவரும் சேர்ந்து கோருகிறபோதுதான் விவாகரத்து கிட்டும் என்றும் அர்த்தசாஸ்திரம் கூறியிருக்கிறது. இப்போது கூட ‘டைவோர்ஸ் பை கன்ஸன்ட்’ என்று கூறப்படுகிறதே – அம்மாதிரி வழிமுறை.

அமோக்ஷ்யா பர்துரகாமஸ்ய
த்விஷதி பார்யா, பார்யாஸ்ச பர்த்தா
பரஸ்பரம் த்வேஷான் மோக்ஷ:

கணவன் மீது அன்பு அகன்றுவிட்ட மனைவியோ, மனைவி மீது அன்பு நீங்கிவிட்ட கணவனோ கேட்பதால், ‘விடுதலை’ கிட்டாது. இருவருமே பரஸ்பரம், ஒருவர் மீது ஒருவர், வெறுப்புற்று, பிரிவை நாடுகிறபோது விடுதலை கிட்டும்.அதாவது, விதவைகள் மறுமணம், விவாகரத்து போன்றவற்றிற்கான வழிமுறைகள் அன்றே சிந்திக்கப்பட்டுள்ளன. ஆகையால், அன்று பெண்கள் சங்கிலியினால் பிணைக்கப்பட்டிருந்தனர் என்றும், இன்றுதான் மேலைநாட்டு பாதிப்பின் காரணமாக, இந்த ‘நவீன சிந்தனை’கள் வந்துள்ளன என்றும் நினைப்பது தவறு.



– CHO
– தொகுப்பு : அல்லயன்ஸ் ஸ்ரீனிவாசன்

Keerthivasan

About Keerthivasan -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :