Wednesday, September 14, 2016

Keerthivasan

எங்கே பிராமணன்? – தர்மம் – 36


ஆபஸ்தம்ப சூத்திரம் சொல்வது – ‘நான்தான் தர்மம், இதோ நான்தான் அதர்மம் என்று அவை இரண்டும் தங்களை அடையாளம் காட்டிக் கொண்டு நம் முன்னே வந்து அலைவதில்லை; தேவர்களோ, கந்தர்வர்களோ, பித்ருக்களோ தோன்றி இது தர்மம், இது அதர்மம் என்று கூறுவதில்லை. பெரியவர்கள் எதை ஏற்கிறார்களோ, அது தர்மம். அவர்கள் எதை நிராகரிக்கிறார்களோ, அது அதர்மம்’.

இதில் நமக்கென்ன பிரச்சனை என்றால் – நம்மிடையே பெரியவர்கள் யார் என்பதே நமக்குப் புரிவதில்லை. இன்றைய சமூகத்தில் பெரியவர்களைக் காணோம்.

ஒருவனைக் கொலை செய்வது என்பது கூடாது. அது அதர்மம். அதுவும் ஓர் ஆச்சார்யனை, அதாவது குருவாக இருந்தவரைக் கொலை செய்வது என்பது மிகப் பெரிய பாதகம். இதற்கு தண்டனை உண்டு என்பது மட்டுமல்ல, அந்த பாவத்திற்கு பிராயச்சித்தம் கிடையாது. அதிலிருந்து விமோசனம் கிடையாது. வயோதிகர்களைக் கொல்லக் கூடாது.

இவையெல்லாம் அதர்மமான காரியங்கள். ஆனால் இந்த விதிமுறைக்கு விதிவிலக்கும் இருக்கிறது. அது ‘மனுஸ்ம்ருதி’யில் கூறப்பட்டிருக்கிறது.

குரும்வா பாலவ்ருத்தௌ வா
ப்ராம்ஹணம் வா பஹுச்ருதம்
ஆததாயினமாயாந்தம்
ஹன்யாத் ஏவ அவிசாரயன்
‘குருவாக இருந்தாலும் சரி, இளைஞனாக இருந்தாலும் சரி, வயோதிகனாக இருந்தாலும் சரி, நன்றாக வேதங்களை ஓதிய பிராமணனாக இருந்தாலும் சரி, அவன் கெட்ட நோக்கத்துடன் எதிர்த்து வந்தால், சிறிதும் கவலைப்படாமல் அவனைக் கொன்று விடு’.– இவ்வாறு மனுஸ்ம்ருதி கூறுகிறது. இவ்வாறாக கொலை செய்யக் கூடாது என்பதற்கு, அங்கே விதிவிலக்கு கிடைக்கிறது. அந்த மாதிரி கொலை, ‘அதர்மம்’ ஆகாது!

இப்படி பல நேரங்களுக்குரிய தர்மம் எது என்று கூறப்பட்டுள்ளதையும், அவற்றிற்கான விதிவிலக்குகளையும், பார்க்கும்போது ஒன்று தெளிவாகிறது. எது ‘லார்ஜர் குட்’ – ஜன சமூகத்திற்கு எது நல்லதோ, நிறைய மனிதர்களுக்கு எது நல்லதோ – அதுதான் இறுதியில் தர்மமாகும்.

என்னுடைய தர்மம் என்று ஒன்றை நான் சொல்லிக் கொண்டு, சமூகத்திற்கே அதனால் இடைஞ்சல் வருகிற மாதிரி நான் நடந்து கொண்டால், அது அதர்மமாகி விடும்.

இப்படி லார்ஜர் குட் – பெருமளவில் நன்மை – என்பதன் அடிப்படையில்தான் ‘விதுர நீதி’யில் ஓர் அறிவுரை கூறப்பட்டிருக்கிறது.

த்யஜேத் குலார்த்தே புருஷம்
க்ராமஸ்யார்த்தே குலம் த்யஜேத்
க்ராமம் ஜனபதாஸ்யார்த்தே
ஆத்மார்த்தே ப்ருத்வீம் த்யஜேத்.
விதுர நீதி சொல்வது –

‘ஒரு குடும்பம் அல்லது குலத்திற்காக ஒரு மனிதனை தியாகம் செய்து விடலாம்; ஒரு கிராமத்திற்காக ஒரு குலத்தை தியாகம் செய்யலாம்; நாட்டிற்காக ஒரு கிராமத்தை தியாகம் செய்யலாம்; தனக்காக உலகத்தையே தியாகம் செய்யலாம்’.

தனக்காக என்றால் தன் ஆத்மாவிற்காக. நீ கடைத்தேற வேண்டும் என்றால், உலகத்தையே தியாகம் செய்து விட நீ தயாராக இருக்க வேண்டும்.

இதோடு இணைந்தவாறே இன்னொரு தத்துவத்தையும் பார்க்க வேண்டும். இப்படி பெருவாரியான நன்மை என்பது ஓர் அம்சம்.

மற்றொரு அம்சம் ‘ஸ்வதர்மம்’. பகவத் கீதையில் கிருஷ்ண பரமாத்மாவினால் மிகவும் வலியுறுத்தப்படுவது இந்த ஸ்வதர்மம். ஸ்வதர்மம் என்றால் உடனே அது ஒரு ஜாதிக்குரிய தர்மம் என்றோ, அது ஒரு குலத்திற்கான தர்மம் என்றோ, அது ஒரு வர்ணத்திற்கான தர்மம் என்றோ எடுத்துக் கொண்டு விடக் கூடாது.

கேள்வி : பின் ஸ்வதர்மம் – தன்னுடைய தர்மம் – என்றால் என்ன? அதற்கு என்ன விளக்கம் கூறப்பட்டிருக்கிறது?
சோ: குல தர்மம், வர்ண தர்மம் இவையெல்லாம் வேறு இடங்களில், வேறு வகையில் கூறப்படுகின்றன. ஆகையால், ஸ்வதர்மம் என்பது இவற்றிலிருந்து மாறுபட்டது. ஒரு மனிதனின் மனசாட்சி, அவனிடம் என்ன கூறுகிறதோ, அதுதான் ஸ்வதர்மம் என்று கூறிவிடலாம்.

ஆனால் நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளக் கூடாது. நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளாமல், நமக்கு நாமே பொய் சொல்லிக் கொள்ளாமல், ஒரு விஷயத்தை ஆராயும்போது, இதுதான் சரி என்று நமக்கு எது படுகிறதோ அதுதான் நமது தர்மம். அதுதான் ஸ்வதர்மம். இதை நேர்மையாக நிச்சயித்துக் கொள்ள ஒரு மனிதன் முற்படுகிறபோதுதான், தனி மனிதனுடைய தீர்மானத்திற்கு முக்கியத்துவம் கிடைக்கிறது.

மொரார்ஜி ஒருமுறை என்னிடம் கூறினார்: “எந்த விஷயத்தையுமே முழுமையாக, நன்றாக ஆலோசனை செய்து பார். உன்னை நீயே ஏமாற்றிக் கொள்ளாமல், அந்த ஆராய்ச்சி அமைய வேண்டும். அப்படி ஆராய்ந்த பின் இதுதான் சரி என்று உன் மனதிற்கு எது படுகிறதோ, அதைச் செய். உலகமே எதிர்த்தாலும் அதுபற்றிக் கவலைப்படாதே” என்றார்.

நான் அறிந்த வரையில் இதுதான் ஸ்வதர்மம். நாம் நியாயத்தைத்தான் செய்கிறோம் – இதனால் பெருவாரியான நன்மைதான் விளையும் – நாம் நமது மனசாட்சிக்கு விரோதமாக நடந்து கொள்ளவில்லை – என்று எந்த அணுகுமுறை நமக்கு உணர்வூட்டுகிறதோ, அந்த அணுகுமுறைதான் ஸ்வதர்மம். கெட்ட நோக்கம் இருந்தால், அது தர்மமாகாது. சகுனி சூதாடினான். சூதாடுவது கேவலமான விஷயம். சாஸ்திர விரோதமானது. தர்மபுத்திரர் இதைச் சுட்டிக் காட்டினார்.



– CHO
– தொகுப்பு : அல்லயன்ஸ் ஸ்ரீனிவாசன்

Keerthivasan

About Keerthivasan -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :