Wednesday, September 14, 2016

Keerthivasan

எங்கே பிராமணன்? – தர்மம் – 37


தர்மர் எப்பேற்பட்டவர்? ‘நூல் விலக்கிய செய்கைகள் அஞ்சும் நோன்பினோன்’ என்று பாரதியார் கூறுகிறார். அதாவது நூல்களினால் – வேதங்களினால் – விலக்கப்பட்ட செய்கைகள் எவையோ, அவற்றை நினைத்து பயப்படுகிறவர் அவர். அவற்றின் பக்கமே போகக் கூடாது என்று நினைப்பவர். சகுனியோ தனது சூதாட்டத்தை நியாயப்படுத்துகிறான் :

‘…தேர்ந்தவன் வென்றிடுவான் – தொழில்
தேர்ச்சியில்லாதவன் தோற்றிடுவான்
நேர்ந்திடும் வாட்போரில் – குத்து
நெறியறிந்தவன் வெலப் பிறனழிவான்
ஓர்ந்திடும் சாத்திரப் போர் – தனில்
உணர்ந்தவன் வென்றிட உணராதான்
சோர்ந்தழி வெய்திடுவான் – இவை
சூதென்றும் சதியென்றும் சொல்வாரோ?

வல்லவன் வென்றிடுவான் – தொழில்
வன்மையில்லாதவன் தோற்றிடுவான்
நல்லவனல்லாதான் – என
நாணமிலார் சொலும் கதை வேண்டா
வல் அமர் செய்திடவே – இந்த
மன்னர் முன்னே நினையழைத்து விட்டேன்
சொல்லுக வருவதுண்டேல் – மனத்
துணிவு இல்லையேல் அதுவும் சொல்லுக…’

அவனுக்கு சூதாட்டம் ஒரு சயன்ஸ். ‘பழிக்கவற்றை ஒரு சாத்திரம் எனப் பயின்றோன்’. அதாவது அதை ஒரு சாத்திரமாக, சயன்ஸாகப் படித்தவன். அவனுடைய பகடை, மாயப் பகடை அல்ல. அவனுடைய சூதாட்டத் திறன் அது. அவனுக்கு அது தர்மமாகப் போய்விட்டது. மன்னர் அழைத்தால், ஆட வர வேண்டும் – வந்துதான் ஆக வேண்டும் என்பது அவன் நினைத்த தர்மம்.

சகுனி ஒன்றும் சாதாரணமான ஆள் அல்ல. சமாதானமாகப் போய்விட வேண்டும் என்று துரியோதனனுக்கு எவ்வளவோ எடுத்துச் சொன்னவர்களில் அவனும் ஒருவன். துரியோதனன் அந்தப் பேச்சை ஏற்கவில்லை. பிறகு சகுனியும், துரியோதனனுக்காகப் போரிட்டான்.

இங்கே எது சரியானது? சூதாட்டம் நடந்தது சரியா, தவறா? இதை ஆராயப் புகுந்தால், ‘தர்மர் ஏன் அதற்கு இணங்கினார்?’ என்ற கேள்வி வரும். அவருக்கு சூதாட்டத்தில் ஒரு பலவீனம் உண்டு. தன்னால் வென்றுவிட முடியும் என்ற நினைப்பு அவருக்கு உண்டு. அதனால்தான் அவர் இணங்கினார்.

ஆனால் சூதாட்டத்தின் மூலம் பாண்டவர்களை அழித்துவிட வேண்டும் என்பது சகுனியின் திட்டம். அங்கே நேர்மைத் திறன் இல்லாததால், அதர்மம் புகுந்து விடுகிறது.

இப்படி சிக்கல் நிறைந்திருப்பதால்தான், தர்மத்தின் பாதை மிகவும் சூட்சுமமானது என்று மஹாபாரதத்தில் மீண்டும் மீண்டும் சொல்லப்படுகிறது. ஞானிகள் கூட அதை உணர்ந்து கொள்வதற்கு மிகவும் சிரமப்படுகிறார்கள் என்று வலியுறுத்தப்படுகிறது.

தொகுப்பு : அல்லயன்ஸ் ஸ்ரீனிவாசன்

Keerthivasan

About Keerthivasan -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :