Saturday, September 3, 2016

Keerthivasan

காஷ்மீர் கற்று தரும் பாடம் - 03

காஷ்மீர் கற்றுத்தரும் பாடம்
- திரு. அரவிந்தன் நீலகண்டன் அவர்கள் திருப்பூரில் ஆற்றிய உரையின் தொகுப்பு.
பாக். ஆக்கிரமித்த பகுதி போக எஞ்சிய காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்து செயல்பட‌ ஆரம்பித்தவுடன் ஷேக் அப்துல்லா மீண்டும் பிரச்சினையை ஆரம்பித்தார். [ நேருவின் ஆதரவுடன் என்பதை சொல்லத்தேவையில்லை.]

காஷ்மீருக்கு சில விஷேச உரிமைகள் வேண்டும் என்று கேட்டார்.

1. காஷ்மீருக்கு என்று தனி கொடி வேண்டும்

2. காஷ்மீர் முதல்வர் பிரதமர் என்று அழைக்கப்படவேண்டும்

3. இந்தியாவின் இதர பகுதிகளில் இருந்து காஷ்மீருக்குள் நுழைய பர்மிட் வாங்க வேண்டும்

4. இந்தியாவின் இதர பகுதிகளைச்சேர்ந்த எவரும் காஷ்மீரில் எந்த சொத்தையும் வாங்கமுடியாது

5. காஷ்மீரில் வசிக்கும் ஹிந்து காஷ்மீரி அல்லாத பெண்ணை மணந்துகொண்டால் அவர் காஷ்மீரி என்ற அந்தஸ்தை இழப்பார். அதே சமயம் காஷ்மீரில் வசிக்கும் இஸ்லாமியப்பெண் பாகிஸ்தானி முஸ்லீம் ஒருவரை மணந்துகொண்டால், அந்த பாகிஸ்தானி, காஷ்மீரியாக அறிவிக்கப்படுவார்.
 
அப்போது இந்திய அரசியல் சாசனத்தை இறுதி செய்யும் பணியில் பாபாசாகிப் அம்பேத்கர் அவர்கள் அடங்கிய அரசியல் சாசன வரைவுக்குழு ஈடுபட்டிருந்தது. அம்பேத்கரிடம் சென்ற ஷேக் அப்துல்லா, மேற்படி சட்டங்களை இந்திய அரசியல் சாசனத்தில் இணைக்கும்படி கேட்டுக்கொண்டார். அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த அம்பேத்கர், நாங்கள் இந்தியாவை ஒன்றிணைக்க எண்ணுகிறோம். நீங்கள் பிரிக்க நினைக்கிறீர்கள். இதற்கு நான் உடன்பட முடியாது என்று மறுத்துவிட்டார்.

அரசியல் சாசன வரைவுக்குழுவின் இன்னொரு உறுப்பினரான திரு. கோபால்சாமி அய்யங்கார் என்பவர்மூலம் மேற்படி ஷரத்துகளை அரசியல் சாசனத்தில் சேர்க்கும் பணியை வெற்றிகரமாக செய்துமுடித்தது நேரு - ஷேக் அப்துல்லா ஜோடி. அதுதான் பிரசித்தி பெற்ற‌ அரசியல் சாசனத்தின் 370வது பிரிவு.

காஷ்மீருக்கு வழங்கப்பட்ட இந்த சிறப்பு தகுதிகள் அதை இந்தியாவிடம் இருந்து பிரிக்கிறது. காஷ்மீர் பாரதத்துடன் ஒன்றிணைந்த பகுதி எனில், அதற்கு வழங்கப்பட்ட நியாயமற்ற சலுகைகள் ரத்து செய்யப்பட வேண்டும். குறிப்பாக காஷ்மீருக்குள் நுழைய பர்மிட் வாங்கவேண்டும் என்ற அநீதியை எதிர்த்து போர் முழக்கம் செய்தார் ஒரு மாபெரும் மனிதர். அவர்தான் பாரதீய ஜனசங்கத்தின் [ பின் நாளைய பாரதீய ஜனதா கட்சி ] நிறுவனர் டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜி.

டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜி அவர்கள் ஜம்மு காஷ்மீர் மாநில அரசிற்கு தனிக் கொடி, தனிச் சின்னம், தனி பிரதம மந்திரி இருப்பதை கடுமையாக எதிர்த்தார். ஒரு நாட்டில் இரண்டு அரசியல் அமைப்பு சட்டமும், தேசிய சின்னமும் இருக்க இயலாது என வாதிட்டார். மேலும் ஜம்மு காஷ்மீர் மாநில பிரதமரின் அனுமதியின்றி, இந்திய நாட்டுக் குடியரசுத் தலைவரும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்குள் செல்ல இயலாது என்ற விதியை கடுமையாக எதிர்த்தார். ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு தனிக் கொடி, தனி பிரதம மந்திரி போன்ற சிறப்பு தகுதிகள் வழங்கும், இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் பிரிவு 370ஐ நீக்கக் கோரி, முகர்ஜி தலைமையிலான பாரதிய ஜனசங்கம், இந்து மகாசபை மற்றும் ராம ராஜ்ஜிய சபையுடன் இணைந்து குரல் கொடுத்து, சத்தியாகிரகப் போராட்டங்களில் ஈடுபட்டது.

காஷ்மீர் அரசின் அனுமதி அடையாள அட்டையின்றி காஷ்மீரில் உள்ள லக்கன்பூர் என்ற ஊரில் நுழைந்த சியாமா பிரசாத் முகர்ஜியை, ஜம்மு காஷ்மீர் மாநில காவல் துறையினரால், 11 மே 1953இல் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 23 ஜூன் 1953இல் விஷக்காய்ச்சலால் மரணமடைந்தார் என காவல் துறை அறிவித்தது.

காவல் துறையினரின் காவலில் இருந்த சியாமா பிரசாத் முகர்ஜியின் மரண இரகசியம் குறித்து விசாரிக்க, தனி விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என்ற முகர்ஜியின் தாயாரின் கோரிக்கையை பிரதமர் ஜவகர்லால் நேரு ஏற்கவில்லை. இதனால் இன்று வரை முகர்ஜியின் மரண சர்ச்சை தீரவில்லை. திரு. சியாமா பிரசாத் முகர்ஜியின் கைது, ஜவகர்லால் நேருவின் சதித் திட்டம் என்பது ஊரறிந்த ரகசியம்.

திரு. முகர்ஜி அவர்களின் பலிதானம் காஷ்மீர் பற்றிய மக்களின் எண்ண ஓட்டத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த நியாயமற்ற சலுகைக‌ள் ஒவ்வொன்றாக ரத்து செய்யப்பட்டன. தனி கொடி, காஷ்மீருக்குள் நுழைய பர்மிட் போன்றவை ரத்து செய்யப்பட்ட‌ன. காஷ்மீர் முதல்வரை பிரதமர் என்ற அழைக்கப்படுவதும் நிறுத்தப்பட்டது. இவ்வாறாக அரசியல் சட்டத்தின் 370 வது பிரிவை நீர்த்துப்போகும் முயற்சிகள் தொடர்ந்து நடந்து, காஷ்மீர் முழுமையாக இந்திய தேசிய நீரோட்டத்துடன் இணையும் தருவாயில் காஷ்மீரை மீண்டும் கொதிக்கும் பாத்திரமாக்கும் வேலையில் இறங்கினார் அன்றைய பாரதப்பிரதமர் இந்திரா காந்தி.

காஷ்மீரில் தொடர்ந்து பிரச்சினைகள் நீடிப்பது தன்னுடைய அரசியலுக்கு நல்லது என்று நினைத்தார் இந்திரா. இந்திராகாந்திக்கு என்று சில வக்கிரமான குணங்கள் உண்டு. தன்னுடைய அரசியல் எதிரிகளை வீழ்த்த, தேசநலனை மனதில் கொள்ளாமல் சில குறுக்குவழிகளை கையாள்வது அவரது சுபாவம். பஞ்சாபில் இந்த வேலையில் இறங்கித்தான் பிந்தரன்வாலே என்ற பயங்கரவாதியை அவர் உருவாக்கினார். காஷ்மீரில் அப்போது செயல்பட்டு வந்த தன்னுடைய அரசியல் எதிரிகளை பழிவாங்க, பிரிவினைவாத சக்திகளை வளர்த்து விட ஆரம்பித்தார். காஷ்மீரில் உள்ள கல்விச்சாலைகள், குறிப்பாக இஸ்லாமிய குழந்தைகள் பயிலும் மதரசாக்கள் மெல்ல மெல்ல ஜமாயத் ஏ இஸ்லாமி என்ற அமைப்பின் கீழ் கொண்டுவரப்பட்டன. இந்த இடத்தில் நாம் மிக முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் தற்போது தமிழகத்திலும் இந்த நடவடிக்கைகள் ஆரம்பித்துள்ளன.

இன்று காஷ்மீரில் என்ற‌ பயங்கரவாதத்தில் ஈடுபட்டு வரும் ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பு ஜமாயத் ஏ இஸ்லாமி அமைப்பில் இருந்து உருவானதாகும். அந்த ஜமாயத் ஏ இஸ்லாமி அமைப்பு தமிழகத்திலும் செயல்பட்டு வருகிறது ஜமாயத் ஏ இஸ்லாமி ஹிந்த்என்ற‌ பெயரில். இங்கிருக்கும் மனிதநேய மக்கள் கட்சி, தௌஹீத் ஜமாத் போன்ற இயக்கங்களுக்கெல்லாம் ஜமாயத் ஏ இஸ்லாமி ஹிந்த் தான் தாய் அமைப்பு. இந்த அமைப்பு பாகிஸ்தானிலும் இருக்கிறது. இந்திய மாநிலங்கள் அனைத்திலும் இதற்கு அமைப்புரீதியான செயல்பாடு உண்டு.

இந்த ஜமாயத் ஏ இஸ்லாமி அமைப்பின் கீழ் காஷ்மீரின் கல்விச்சாலைகள் கொண்டு வரப்படும் திட்டம் டெல்லியில் இருந்து செயல்படுத்தப்பட்டது. அவர்கள் தெளிவான செயல்திட்டத்துடன் களமிறங்கினார்கள். அவர்களின் நோக்கம், காஷ்மீரின் இயல்பான பண்பாட்டை சிதைத்துவிட்டு, அதை அரேபிய மயமாக்குவது. காஷ்மீரில் அதற்கு முன்புவரை ரிஷி - சுஃபி எனப்படும் இஸ்லாமிய முறைதான் பின்பற்றப்பட்டு வந்தது. ரிஷிகளாக இருந்து பின்னர் இஸ்லாத்துக்கு மாறிய சுஃபி எனப்படும் புனிதர்களையும் வழிபடும் முறை. இது சுருக்கமாக காஷ்மீரியத் என்று அழைக்கப்படும், கிட்டத்தட்ட இதே முறைதான் தமிழகத்திலும் சிலகாலம் முன்பு வரை இருந்தது.

இதை இன்னும் சற்று தெளிவாக விளங்கிக்கொள்வதென்றால், சமீபத்தில் திருச்சியில் நடைபெற்ற ஷிர்க் ஒழிப்பு மாநாட்டை எடுத்துக்கொள்ளலாம். அந்த மாநாட்டின் நோக்கம் என்ன? இந்திய இஸ்லாமியர்களை, இந்தியப்பண்பாட்டின், இந்திய பழக்க வழக்கங்களில் இருந்து முழுமையாக பிரித்து, அவர்களை அரேபிய பண்பாட்டில் இணைப்பதுதான். இப்படிச்செய்வது என்பது இஸ்லாமியர்களை இந்திய தேசிய நீரோட்டத்தில் இருந்து பிரிப்பதன் முதல் படி. அந்த வேலை காஷ்மீரில் மும்முரமாக நடக்க ஆரம்பித்தது.அதன் விளைவுகள் விரைவிலேயே தென்படத்துவங்கின.
தொகுப்பு: சரவண குமார்
 

Keerthivasan

About Keerthivasan -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :