Saturday, December 20, 2014

Keerthivasan

எங்கே பிராமணன் ? – 5 – பிராமணனுக்கு இருக்கும் கட்டுப்பாடுகள், நிபந்தனைகள்!




கேள்வி: பிராமணர்கள் மட்டும்தான் கல்வி கற்க வேண்டும். மற்றவர்கள் கல்விச் சாலைக்கே போகக் கூடாது என்றெல்லாம் பல சட்டத்திட்டங்கள் முன்பு வகுக்கப்பட்டிருந்தன. மனுநீதி கூட அதைத்தான் சொல்கிறது. நான்கு வர்ணங்களை சிருஷ்டி செய்தது மட்டுமல்லாமல், பிராமணனுக்கு மனுநீதி எல்லா கல்வி வாய்ப்பையும் அளித்து, மற்றவர்களுக்கு அதை மறுத்தது. இந்த மாதிரியெல்லாம் அப்போது செய்ததால்தான், இப்போது இடஒதுக்கீடு போன்ற ஏற்பாடுகள் தேவைப்படுகின்றன. இதை மறுக்க முடியுமா?

சோ : இந்த எண்ணங்கள் மிகவும் தவறானவை. நான்கு வர்ணங்களை மனுஸ்ம்ருதி, ஸ்ருஷ்டி செய்யவில்லை. இந்த நான்கு வர்ணங்களில் முதல் மூன்று வர்ணங்களைச் சார்ந்தவர்கள் – அதாவது பிராமணன், க்ஷத்ரியன், வைசியன் ஆகிய வர்ணங்களைச் சார்ந்தவர்கள் வேதங்களைப் படிக்க வேண்டும் என்ற கட்டாயம் உண்டு. இது மனுதர்மத்தில் விதிக்கப்பட்டிருக்கிறது.

நான்காவது வர்ணத்தைச் சார்ந்தவர்கள் வேதங்களைப் படிக்கக் கூடாது என்றும் மனுதர்மம் சொல்லியிருக்கிறது. ஆனால், மற்ற எல்லா கலைகளும் கணிதம், விஞ்ஞானம், ஓவியம், வர்த்தகம், பலவிதமான கைத்தொழில்கள் போன்ற எதுவாக இருந்தாலும், எல்லோருமே படிக்கலாம். அதற்குத் தடை எதுவுமே கிடையாது. மனுதர்மத்தில் அந்த மாதிரி ஒரு தடை விதிக்கப்படவில்லை. ஆனால் ஒன்று. பிராமணன் அந்த விஷயங்களை எல்லாம் கற்றுக் கொள்ளலாமே தவிர, அந்தத் தொழிலுக்கு எல்லாம் போகக் கூடாது. அதே சமயத்தில், மற்ற மூன்று வர்ணத்தினரும் அந்தத் தொழிலைச் செய்யலாம். அதற்காக அந்தக் கல்விகளையும் கற்கலாம்.

நான்காவது வர்ணத்தைச் சார்ந்தவர்கள் வேதங்களைப் படிக்கக் கூடாது என்று சொன்னாலும், அதிலும் ஒரு முரண்பாடு வரும். ஏனென்றால், மனுதர்மத்திலேயே ஒரு விதி வருகிறது.

ஒரு பிரம்மச்சாரிக்கு சரியான குரு கிடைக்கவில்லை என்றால், நான்காவது வர்ணத்தைச் சார்ந்த ஒருவரிடம் சென்று அந்த பிரம்மச்சாரி வேதத்தைக் கற்கலாம். இப்படி மனுதர்மம் வெகு தெளிவாகக் கூறியிருக்கிறது.

அப்படியென்றால், நான்காவது வர்ணத்தைச் சேர்ந்த ஒருவருக்கு வேதங்கள் தெரிந்திருந்தால்தானே, அதைக் கற்பிக்க முடியும்! ஆகையால், அவர் வேதத்தை நன்கு கற்றிருக்க வேண்டும். அதற்கு அதிகாரம் இருந்திருக்கிறது.
அது மட்டுமல்ல. நான்காவது வர்ணத்தைச் சேர்ந்தவரிடம் ஒரு பிரம்மச்சாரி வேதங்களைக் கற்கிறபோது, அந்தப் பிராமண பையன் – பிரம்மச்சாரி – வேதங்களைக் கற்றுத் தரும் நான்காவது வர்ணத்தைச் சேர்ந்த குருவிற்கு சகல மரியாதைகளையும் செய்தாக வேண்டும். அவருக்கு பணிவிடை செய்ய வேண்டும். அவருக்கு கீழ்படிந்து நடந்து, வேதம் கற்க வேண்டும்.

ஆகையால், நீங்கள் சொல்கிற மாதிரி, இது மற்றவர்களுக்கு எல்லாம் தடைபோட்ட சங்கதி இல்லை. வேதம் கற்கிற பிராமணனுக்கு, பலவித கட்டுப்பாடுகள், நிபந்தனைகள் இருந்தன என்பதையும் கவனிக்க வேண்டும். பிராமணன் என்பவன் அடுத்த நாளுக்காக எதையும் சேர்த்து வைத்துக் கொள்ளக் கூடாது. களத்து மேட்டில் உதிர்ந்திருக்கிற தானியங்களை அவன் எடுத்துக் கொள்ளலாம். அதை வைத்துக் கொண்டுதான் அவன் ஜீவனம் நடத்த வேண்டும். இதற்குப் பெயர்தான் ‘உஞ்ஜவிருத்தி’. இப்படி எதுவுமே கிடைக்கவில்லை என்றால், அப்போது அவன் பிட்சை எடுக்கலாம். சகல ஜீவராசிகளையும் அவன் பாதுகாக்க வேண்டும். இந்த மாதிரி ஒரு கட்டுப்பாடு பிராமணனுக்கு விதிக்கப்பட்டிருந்தது. பிரம்மச்சாரிக்கு இன்னமும் கடுமை – அவன் பிட்சை எடுத்துத்தான் சாப்பிட்டாக வேண்டும். வேறு வழியில் அவன் உணவு தேடக் கூடாது. அவன் உண்மையைத் தவிர வேறு எதையும் தப்பித் தவறிக் கூடப் பேசக் கூடாது.
வேதம் கற்பிப்பதற்காக பிராமணன் பணத்தை எதிர்பார்க்கக் கூடாது. கிடைத்ததை வைத்துக் கொண்டு அவன் வாழ்க்கையை ஓட்டலாம். இந்த மாதிரி கடுமையான நிபந்தனைகள். மற்ற எல்லா கல்விகளும் எல்லோருக்கும் கிடைத்தன. அவரவர் விருப்பத்திற்கும் வசதிக்கும் ஏற்ப கற்றனர். 
அன்று பிராமணனுக்கு வேதம் கற்க இருந்த உரிமைக்கும், இன்றுள்ள ரிஸர்வேஷன் முறைக்கும் முக்கியமான வேறுபாடு இருக்கிறது. இன்று இடஒதுக்கீடு பெறுபவர்களுக்கு எந்தவிதமான நிபந்தனையும் கிடையாது. ‘உனக்காக ஸீட் தயாராகக் காத்துக் கொண்டிருக்கிறது; நீ காலேஜ் முடித்தவுடன் உனக்காக வேலை காத்திருக்கிறது; வேலையில் சேர்ந்தவுடன் ப்ரொமோஷன் காத்திருக்கிறது’ என்றெல்லாம் சலுகைகளாகவே இருக்கின்றன, இன்றைய ரிஸர்வேஷன். ஆனால் அன்றோ, வேதம் கற்பதற்காக பிராமணனுக்கு பலவித கட்டுப்பாடுகள், நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்தன. 
ஆகையால், அன்று மற்றவர்களை கல்வி கற்க விடாமல் பிராமணன் கெடுத்தான் என்று சொல்வது மிகவும் தவறு.




 – CHO
– தொகுப்பு : அல்லயன்ஸ் ஸ்ரீனிவாசன்

Keerthivasan

About Keerthivasan -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :