Tuesday, August 11, 2015

Keerthivasan

நாதுராம் கோட்சே வாக்குமூலம் – குற்றப்பத்திரிகைகான மறுமொழி – 12

நாதுராம் கோட்சே வாக்குமூலம் – குற்றப்பத்திரிகைகான மறுமொழி – 12

Gandhi (centre) is pictured with other Indian resistance leaders in South Africa
60. காந்திஜியின் அரசியல் வாழ்க்கை நான் முன்பே குறிப்பிட்டவாறு மூன்று தலைப்புகளில் பகுக்கப்படும் :
  1. 1915 முதல் 1939-40  - க்கு இடைப்பட்ட காலம்.
  2. மஹாத்மாவின் தலைமையின் கீழ் இந்திய தேசிய காங்கிரஸ் ஜின்னாவிடம் சரணடைந்து பாகிஸ்தானை ஏற்றுகொண்ட காலமாகிய 1939-40 -க்கும் 1947 ஜூன் 3 - க்கும் இடைப்பட்ட காலம் .
  3. பிரிவினை நாள் முதல் அவர் கடைசியாகச் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து , அதனால் பாகிஸ்தானுக்கு 55 கோடி ரூபாய்களைக் கொடுப்பதில் முடிந்த நாள் வரையுமான இடைப்பட்ட காலம்.

61. காந்திஜி 1914-இன் இறுதியில் இந்தியாவுக்குக் கடைசியாகத் திரும்பி வந்த போது, தென்னாப்பிரிக்க இந்தியர்களுக்குத் துணிவு மிக்க தலைமை வகித்த மிக உயர்ந்த புகழை அவர் தம்மோடு கொண்டு வந்தார். அந்நாட்டில் வெள்ளையர் கொடுங்கோன்மையை எதிர்த்தும், இந்தியாவின் சுயமரியாதையையும், நம்முடைய குடியுரிமையையும் வலியுறுத்தியும், கொள்கையை நிறுவியும், அப்போராட்டத்துக்குத் தாமே தலைமை வகித்தார். அவரை இந்துக்களும், முஸ்லிம்களும், பார்ஸிகளும் போற்றினர்; பின்பற்றினர். தென்னாப்பிரிக்காவிலுள்ள எல்லா இந்துக்களுக்கும் தலைவராக அவர் உலகெங்கும் பாராட்டப்பெற்றார். வாழ்க்கையில் அவருடைய எளிமை, அவர் தம்முடையதாக எடுத்துக்கொண்ட செயல் நோக்கத்துக்குத் தன்னலமற்ற ஈடுபாடு, ஆப்பிரிக்கர்களின் இனத்திமிருக்கு எதிரான போராட்டத்தில் அவர் தம்மையே தியாகம் செய்தது, உண்மையாக செயல்பட்டது ஆகிய எல்லாம் இந்தியர்களின் மரியாதையை உயர்த்தின. இந்தியாவில் அவர் எல்லோருக்கும் உற்றதோழரானார்.


62. நாட்டுமக்களின் சுதந்திரப் போராட்டத்தில் பணியாற்ற அவர் இங்கு திரும்பி வந்தபோது, ஆப்பிரிக்காவைப் போன்று இங்கும் எல்லா சமுதாயத்தினரின் எதிர்ப்பில்லாத நம்பிக்கையையும், மரியாதையையும் பெறுவோம் என்று  நியாயமாய் எதிர் பார்த்தார்.ஆனால் இந்த எதிர்பார்ப்பில் விரைவிலேயே ஏமாற்றம் அடைந்தார்.இந்தியா, தென்னாப்பிரிக்காவாக இல்லை. தென்னாப்பிரிக்காவில் இந்தியர்கள், மறுக்கப்பட்ட உரிமையான குடியுரிமை தவிர வேறு எதையும் கேட்கவில்லை. அவர்கள் அனைவருக்குமே பொதுவான, தீவிரமான மனக்குறை இருந்தது. போயர்களும், பிரிட்டிஷாரும் அவர்களைக் கால்மிதிகளைப் போன்று நடத்தினார்கள். ஆகவே இந்துக்கள், முஸ்லிம்கள், பார்ஸிகள் அனைவரும் பொதுவான எதிரிக்கு எதிராக ஒன்றுபட்டு, ஒரே மனிதனாக நின்றார்கள். தென் ஆப்பிரிக்க அரசுக்கு எதிராக அவர்களுக்கு வேறு சச்சரவு ஏதுமில்லை. தாய் நாட்டில் இந்திய சிக்கல் முற்றிலும் வேறானது. நாங்கள் உள்ளாட்சிக்கும், தன்னாட்சிக்கும், சுதந்திரத்திற்கும் கூட போராடிக்கொண்டிருந்தோம்.

இந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையே இருந்த வேற்றுமையைத் தீவிரப்படுத்தும்' பிரித்தாளும் சூழ்ச்சி' உட்பட எல்லா வழிமுறைகளையும் கையாண்டு எங்கள் மீது அரசியல் ஆதிக்கத்தைத் தொடர்வதற்கு உறுதிபூண்ட மன்னராட்சியைத் தூக்கி எறிவதே எங்கள் உள்நோக்கம். இவ்வாறு, காந்திஜி தென்னாப்பிரிக்காவில் தாம் அனுபவித்தே அறியாத இதைப் போன்ற சிக்கலை முதலிலேயே அவர் எதிர்க்க வேண்டியிருந்தது. உண்மையில் தென்னாப்பிரிக்காவில் அவரது பயணம் முற்றிலும் இலகுவாக இருந்தது. அங்கு பல்வேறு சமுதாயத்தினரிடையேயும் தங்கள் ஒன்றுபட்ட நலன்குறித்த அடையாளம் முழுமையாயிருந்ததால், ஒவ்வொரு இந்தியரும் அவருக்குப் பின்னால் அணிவகுத்தார். ஆனால் இந்தியாவில் சாதி வாக்கெடுப்பு, தனித்தனி வாக்காளர் தொகுதி போன்றவை நாட்டின் ஒற்றுமையை முன்பே வேரறுக்கத் தொடங்கி விட்டன. இவைபோன்று இன்னும் பலவும் வரவிருந்தன. பிரிட்டிஷாரால் கெட்ட நோக்குடைய சாதிச் சலுகைக் கொள்கை மிகவும் விடாப்பிடியாக மன உறுத்தலின்றி பின்பற்றப்பட்டது. ஆகவே, தென் ஆப்பிரிக்கா போன்று இந்தியாவில் இந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் கேள்விக்கு அப்பாற்பட்ட தலைமையைப் பெறுவது என்பது மிகவும் கடினமாயிருந்ததை காந்திஜி கண்டார். ஆனால், அவர் எல்லா இந்தியர்களுக்கும் தலைவராக இருந்து பழகிவிட்டதால், ஒரு பிரிவுபட்ட நாட்டின் தலைமையை அவரால் மிகவும் வெளிப்படையாகப் புரிந்து கொள்ள முடியவில்லை. பிளவுபட்டு, ஒன்றுக்கொன்று எதிராகிப் போன படையின் தளபதியாக இருக்க சம்மதிக்க எண்ணுவது அவருடைய நேர்மையான மனத்துக்குப் பொருளற்றதாகப்பட்டது.

63. அவர் இந்தியாவுக்குத் திரும்பிய முதல் ஐந்தாண்டுகளில் இந்திய அரசியலில் அவர் உச்சநிலைத் தலைமையை அடைவது என்பதற்கான வாய்ப்பு அதிகம் இல்லாதிருந்தது. தாதாபாய் நௌரோஜி, சர் பெரோஸ் ஷா மேத்தா, லோகமான்ய திலகர், ஜி.கே.கோகலே மற்றும் பலர் இன்னும் உயிரோடு இருந்தனர். காந்திஜிக்கு அவர் இருந்தநிலையில் மரியாதை கிடைத்தது. அவர் அளவுக்கு செல்வாக்கு இருந்தது. அந்தப் பெருந்தலைவர்களை ஒப்பிடும்போது வயதிலும், அனுபவத்திலும் அவர் இன்னும் இளையவராகவே இருந்தார். ஆனால் இரக்கமற்ற விதி அவர்கள் எல்லோரையும் ஐந்தாண்டுகளில் அகற்றிவிட்டது. 1920 ஆகஸ்டில் லோகமான்ய திலகர் இறந்ததும், காந்திஜீ உடனே முன்னணிக்குத் தள்ளப்பட்டார்.

64. அன்னிய ஆட்சியாளர்கள் 'பிரித்தாளும் சூழ்ச்சி'யைக் கொண்டு முஸ்லீம்களின் நாட்டுப்பற்றைக் குலைப்பதை அவர் பார்த்தார். தாய்நாட்டுக்குப் பொதுவான பக்தியையும், சகோதரத்துவத்தையும் அவர் ஏற்படுத்தினாலொழிய விடுதலைப் போரில் ஒருங்கிணைந்த படைக்கு அவர் தலைமை தாங்குவதற்கு வாய்ப்பில்லை என்பதையும் கண்டார். ஆகவே அவர் இந்து - முஸ்லீம் ஒற்றுமையைத் தம்முடைய அரசியலின் அடித்தளமாக்கினார். பிரிட்டிஷ் தந்திரத்துக்கு எதிர் முழக்கமாக, அவர் முஸ்லீம் சமுதாயத்திடம் மிகுந்த நட்புபூண்ட அணுகுமுறையைப் பின்பற்றத் தொடங்கினார். முஸ்லீம்களுக்கு தாராளமான, மட்டற்ற உறுதிமொழிகளால் அதனை உறுதிப்படுத்தினார். இந்தியாவின் ஜனநாயக தேசீய விடுதலைக்காக தொடர்ந்து இப்படி செய்து வந்தது ஒன்றும் தவறன்று. ஆனால் காந்திஜி இதனை - அவருடைய பிரச்சாரத்தின் இன்றியமையா நோக்கமான ஒற்றுமையை - முற்றிலும் மறந்து விட்டார். விளைவுகளை நாம் எல்லோரும் இப்போது அறிந்து கொண்டுள்ளோம்.

Keerthivasan

About Keerthivasan -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :