Monday, September 25, 2017

Keerthivasan

ஈழப் போரின் இறுதி நாட்கள் – 13

புலிகளின் ஆயுத விமானம் ரத்னகிரியில் (மும்பை அருகே) தரையிறங்கிய ரகசியம்!


வன்னியில் இறுதி யுத்தத்தில் ஈடுபட்டிருந்த புலிகள், ஆயுதங்களை பெறுவதற்கு எடுத்த அனைத்து முயற்சிகளும், நடுக்கடலில் அடிபட்டுப் போன விவகாரம் பற்றி கடந்த அத்தியாயத்தில் எழுதியிருந்தோம்.

கடல் புலிகளின் தளபதி சூசையால் ஒரு கப்பல் ஆயுதங்களை கூட கொண்டுவந்து சேர்க்க முடிந்திராத நிலையில், புலிகளின் உளவுப் பிரிவின் தலைவர் பொட்டு அம்மான் செய்த சோலோ முயற்சி ஒன்று பற்றியும் குறிப்பிட்டிருந்தோம்

ஆச்சரியகரமாக பொட்டு அம்மானால் ஏற்பாடு செய்யப்பட்ட கப்பல், முல்லைத்தீவு கடலுக்குள் அடிபடாமல் வந்து சேர்ந்தது. அதற்கு காரணம் என்ன? புலிகளின் கப்பல் நடமாட்டங்களை கண்காணித்துக் கொண்டிருந்த உளவுத்துறைகள் எவையும், கம்யூனிகேஷன் விஷயத்தில் இவர்கள் செய்த ட்ரிக்கை உடனடியாக கண்டுபிடிக்க முடியவில்லை.

கப்பலில் வெவ்வேறு இலக்கமுடைய 10 சட்டலைட் செல்போன்கள். கனடாவில் 10 வெவ்வேறு இலக்கமுடைய சட்டலைட் போன்கள் ஆகியவற்றை மட்டுமே பயன்படுத்தி, அந்தக் கப்பல் நகர்ந்திருந்தது. கப்பலும் கார்கோ கப்பல் அல்ல,  மீன்பிடி  ட்ரோலர். அதிலிருந்த  மாலுமிகளோ, இந்தோனேசியர்கள்.  இவை  எல்லாவற்றுக்கும்  மேலாக,  இந்தக் கப்பலில்  எந்தவொரு  துறைமுகத்தில்   வைத்தும் ஆயுதங்கள் ஏற்றப்படவில்லை.

பொட்டு அம்மானின் திட்டத்தில் இவ்வளவு திசை திருப்பல்களும் இருந்ததால், எந்தவொரு உளவுத்துறையும் இந்தக் கப்பல்மீது சந்தேகம் கொள்ளவில்லை.

புலிகளுக்கு என பிரத்தியேகமாக வந்த இறுதிக் கப்பல் இதுதான். யுத்தம் முடிவதற்கு 3 மாதங்களுக்கு முன், பிப்ரவரி மாதத்தில் (2009) முல்லைத்தீவு கடலை சென்றடைந்தது இந்தக் கப்பல்.

கடல் புலிகளின் தளபதி சூசையுடன் சவால் விட்டு, கடல் புலிகளால் முடிந்திராத காரியத்தை கடலில் செய்த வகையில் இந்த சோலோ முயற்சி பொட்டம்மானுக்கு வெற்றிதான். ஆனால், இறுதி யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில், புலிகளுக்கு இந்தக் கப்பலால் பலன் ஏதும் இருக்கவில்லை.

காரணம், கப்பலில் ஆயுதங்கள் ஏதும் வரவில்லை. பொட்டு அம்மானின் உளவுப்பிரிவினர் தமக்கு தேவையான சில பொருட்களையே அதில் இறக்கியிருந்தனர்.

அதன்பின் யாரும் இதுபோன்ற கப்பல் முயற்சி ஒன்றை செய்ய முடியாதபடி, யுத்தம் இறுதிக் கட்டத்தை அடைந்துவிட்டது. இறுதி நாட்களில், பொட்டு அம்மானும் வேறு சில சிக்கல்களில் சிக்கியிருந்தார். அவற்றையெல்லாம், தொடரின் இறுதிப் பகுதியில் பார்க்கலாம்.

இப்போது மற்றொரு கேள்வி.

பொட்டு அம்மானால், யுத்தத்தின் இறுதி நேரத்தில் ஒரு கப்பலை தருவிக்க முடிந்ததுபோல, யுத்தம் துவங்கிய நாளில் இருந்து கடல் புலிகளின் தளபதி சூசையால் ஏன் ஒரு கப்பலைக்கூட கொண்டுவர முடியவில்லை? தொடர்ந்து முயற்சி செய்தும், ஒவ்வொரு கப்பலாக ஏன் அடி மேல் அடி வாங்கி, அனைத்தும் கடலடியே போயின?

இந்தக் கேள்விக்கு மிக சிம்பிளான பதில் ஒன்று உள்ளது. கிராமப் பகுதிகளில் சர்வ சாதாரணமாக கூறும் ஒரு வாக்கியமே அந்தப் பதில். “குதிரையின் வேலையை, குதிரைதான் பார்க்க வேண்டும். கதிரையில் (சேரில்) இருப்பவர் பார்க்க முடியாது”

எமது நோக்கம், யுத்தத்தில் உயிரிழந்தவர்கள் பற்றி விமர்சிப்பது அல்ல. தனிப்பட்ட ஒருவர் இறந்த விவகாரமல்ல இது. ஒரு விடுதலை இயக்கமும், அவர்களது போராட்டமும் முற்றாக அழிக்கப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான போராளிகளின் உயிர் தியாகத்தால் உச்ச நிலையை அடைந்த இயக்கம் அது.

அந்த இயக்கத்தை வளர்ப்பதற்காக தமது மகனை, மகளை, சகோதரனை, சகோதரியை, தந்தையை, தாயை பலி கொடுத்த குடும்ப உறுப்பினர்களுக்கு, தோல்விக்கான காரணத்தை தெரிந்து கொள்ள உரிமை இல்லையா?

அதை இப்படிப் பாருங்கள். யுத்தம் 18-ம் தேதி, புலிகளுக்கு தோல்வியில் முடிந்தது. புலிகள் தரப்பில் யுத்தத்தை நடத்தியவர்களுக்கு அந்த முடிவு நிச்சயம் தெரிந்திருக்கும். அப்படியிருந்தும், 16-ம் தேதி, யுத்தத்தில் ஜெயிக்கலாம் என்று நம்பிக்கை ஊட்டப்பட்டு, துப்பாக்கியுடன் முன்னரணுக்கு அனுப்பப்பட்டு உயிரிழந்த ஒரு போராளியின் குடும்பத்தினருக்கு, தோல்விக்கான காரணம் சொல்லப்பட வேண்டுமா, இல்லையா?

“உஷ்.. இதெல்லாம் இனியும் ரகசியம்” என்றால், இது மக்களுக்காக நடத்தப்பட்ட யுத்தம் இல்லையா? எந்தவொரு ரகசியத்தையும் காக்க வேண்டிய அவசியமும் தற்போது இருப்பதாக தெரியவில்லை. காரணத்தை தெரிந்து வைத்திருப்பவர்கள், அதை இப்போது சொல்ல வேண்டிய தார்மீக கடமையும் உள்ளது.

விடுதலைப் புலிகள் இயக்கம் ஏன் தோல்வியைத் தழுவ நேர்ந்தது என்ற கேள்விக்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், பிரதான காரணங்களில் ஒன்று, ஆயுத சப்ளை இல்லை என்பதே.

ஆயுதங்கள் கடல் மூலமாகவே வந்து சேர வேண்டியிருந்தன. ஆயுதங்களுடன் வந்த ஒவ்வொரு கப்பலும் மூழ்கடிக்கப்பட்டன. அப்படியிருந்தும், மீண்டும் மீண்டும், மில்லியன் டாலர்கள் பெறுமதியாக ஆயுதங்களுடன் கப்பல்களை ஏன் தருவிக்க முயன்றார்கள்? காரணம், புலிகளின் வெற்றி தோல்வியை அந்த ஆயுதங்கள்தான் முடிவு செய்ய வேண்டிய நிலையில், யுத்தம் இருந்தது.

2002-ம் ஆண்டு வரை ஆயுதங்கள் எந்தத் தடையுமின்றி ஸ்மூத்தாக கப்பல் கப்பலாக வன்னிக்கு போய்க்கொண்டிருந்தன. புலிகள் ராணுவத்தை தாக்கினார்கள். பல வெற்றிகள் கிடைத்தன. 2002-ன் பின் கப்பல் போக்குவரத்து, கடல்புலிகளின் தளபதி சூசையிடம் போனது. கப்பல்கள் அடிபட்டன. ஆயுத சப்ளை வெட்டுப்பட்டது.

கையிருப்பில் இருந்த ஆயுதங்களை வைத்துக் கொண்டு தற்காப்பு யுத்தம் புரிந்தபடி புலிகள் பின் வாங்க துவங்கினார்கள். அதன்பின் ஏற்பட்ட முடிவு அனைவருக்கும் தெரிந்ததுதான்.

இப்போது, உங்களுக்கு 2 கேள்விகள் எழலாம்.

1) 2002-ம் ஆண்டுவரை எப்படி தடங்கல் இல்லாமல் வெற்றிகரமாக ஆயுதங்கள் அனுப்பி வைக்கப்பட்டன?

2) ஆயுத சப்ளை தடங்கல் இல்லாமல் கிடைத்தால்தான் வெற்றி பெறலாம் என்ற நிலையில் இருந்த புலிகள் இயக்கம், கடல் மார்க்கம் சறுக்கினால் என்ன செய்வது என்பதை முதலிலேயே யோசிக்கவில்லையா? Plan-B என்று எதுவுமே அவர்களிடம் கிடையாதா?

இரண்டுக்குமே பதில்கள் உள்ளன. இரண்டாவது கேள்விக்கான பதிலை முதலில் பார்க்கலாம்.

ஆம். புலிகளிடம் ஒரு Plan-B இருந்தது. இது பற்றிய விபரங்கள், புலிகள் இயக்கத்தில் இருந்த பலருக்கேகூட தெரிந்திராது. காரணம் இந்த Plan-B, புலிகளின் உளவுப் பிரிவின் கைகளில் இருந்தது. மொத்தம் 5 பேர்தான் இதில் தொடர்பு பட்டிருந்தனர். அதில் 2 பேர் இன்னமும் வெளிநாடுகளில் உயிருடன் உள்ளனர்.

ஆயுத சப்ளைக்கான கப்பல் போக்குவரத்து கே.பி.-யின் கையில் இருந்து எடுக்கப்பட்டு, கடல் புலிகளின் தளபதி சூசையிடம் ஒப்படைக்கப்பட்ட பின், கடல்புலிகளால் இதை ஹான்டில் பண்ண முடியுமா என்ற சந்தேகத்தை முதலில் எழுப்பினார் பொட்டு அம்மான். ஆனால், புலிகள் இயக்கத்துக்குள் இருந்த ‘உள்வீட்டு அரசியல்’, முழுமையாக கப்பல் போக்குவரத்தையும் கடல் புலிகள் வசமே போகும்படி செய்தது.

அதையடுத்து பொட்டு அம்மான் தமது ஆட்களை வைத்து டெவலப் செய்ததுதான், Plan-B.

கப்பல் விவகாரத்தை முழுமையாக சூசையிடம் விட்டுவிட்டு, விமானம் மூலம் ஆயுதங்களை இறக்க முயற்சி செய்தார் பொட்டு அம்மான்.

மொத்தம் 5 பேர் அடங்கிய டீம் அது. அதில் இருந்த இருவர், 2006-ல் வெளிநாடுகளுக்கு வேறு பெயர்களில் அனுப்பி வைக்கப்பட்டனர்.

வெளிநாடுகளில் புலிகளின் அன்டர்-கவர் ஆபரேஷனாக இயங்கிய அந்த இருவரையும், வெளிநாட்டு ஈழத் தமிழர்களுக்கு ‘வேறு பெயரில்தான்’ தெரியும் என்பதால், அவர்களது பெயர்களை விட்டுவிடலாம். மூன்றாவது நபர், பொட்டு அம்மான். மற்றைய இருவரும் வன்னியில் இருந்து இந்த விமான ஆபரேஷனை கவனித்த ஞானவேல், தமிழ் குமரன்.

2006-ம் ஆண்டில் இருந்து துவங்கிய இந்த ஆபரேஷனில், விமான மூலம் ஆயுத இறக்குமதிக்கான தொடர்புகளை மேற்கொள்ளவே, 2 வருடங்கள் பிடித்தன. 2008-ம் ஆண்டு ஆபரேஷன் செயல்பட தயாராகியது. இதற்கிடையே யுத்தம், வன்னியில் உக்கிரமாக நடந்து கொண்டிருந்தது.

வெளிநாட்டில் இயங்கிய இருவரும் பிடித்த தொடர்புகள் அனைத்துமே உக்ரேன் நாட்டில் இருந்தன. இங்கிருந்த ஆயுத வியாபாரி ஒருவரும், அவர் மூலமான அறிமுகமான கார்கோ விமான நிறுவனம் ஒன்றும்தான் இவர்களது தொடர்புகள். குறிப்பிட்ட கார்கோ விமான நிறுவனம், ஆபிரிக்க நாடுகள் சிலவற்றுக்கு ஆயுத சப்ளை செய்த ஆட்கள்.

எல்லாம் தயார் என்ற விபரம் உக்ரேனில் இருந்து வன்னிக்கு அறிவிக்கப்பட்டது. ஆயுதங்களுக்கான பண ஏற்பாடுகளை ஞானவேல் கவனித்துக் கொண்டார்.


உக்ரேனின் simferopol ஏர்போர்ட்டில் கார்கோ விமானங்கள் லோட் செய்யப்படும் பகுதி

ஆரம்பத்தில் தமிழ் குமரன், உக்ரேனில் இருந்தவர்களுக்கும், பொட்டு அம்மானுக்கும் இடையே வன்னியில் தொடர்பாளராக இருந்தார். ஏற்பாடுகள் அனைத்தும் ரெடி என்ற நிலையில், உக்ரேனில் இருந்த இருவருடன் பொட்டு அம்மானே நேரில் டீல் பண்ண துவங்கினார்.

உக்ரேனில் இவர்கள் டீல் பண்ணிய ஆயுத வியாபாரிக்கு ‘சுற்றி-வளைத்து’ இலங்கை உளவுத் துறையுடன் தொடர்புகள் இருந்தன என்பது, ஆயுத டீலில் புதிதாக இறங்கியிருந்த இவர்களுக்கு தெரிந்திருக்கவில்லை.

முதலாவது விமான லோட் ஆயுதங்களுக்கான பணம் உக்ரேனில் வைத்து செட்டில் செய்யப்பட்டது. முதல் ட்ரிப்புக்கான தேதியும் குறிக்கப்பட்டது.

குறிப்பிட்ட தேதி ஒன்றில், இரணமடுவில் இருந்த புலிகளின் விமான ஓடுதளத்தில் உக்ரேன் விமானம் இறங்குவதற்கான ஏற்பாடுகளை ஞானவேல் கவனித்தார். அன்றைய தினத்தில் விமானத்தில் ஆயுதங்கள் வருகின்றன என்ற விபரம், புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு பொட்டு அம்மானால் சொல்லப்பட்டது.

கப்பலில் ஆயுதங்களை இறக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்த சூசைக்கு இந்த விபரங்கள் ஏதும் தெரிவிக்கப் பட்டிருக்கவில்லை. (அந்த நேரத்தில் அவரது கப்பல்கள் பல அடிபட்டிருந்தன)

அன்றைய தினத்தில், உக்ரேனில் உள்ள Simferopol (IATA code: SIP) என்ற சிறிய ஏர்போர்ட்டில் இருந்து இவர்கள் ஏற்பாடு செய்த கார்கோ விமானம் புறப்பட்டதை, பொட்டு அம்மானால் அனுப்பி வைக்கப்பட்ட இருவரும் பார்த்தார்கள். 1930-களில் அமைக்கப்பட்ட பழைய விமான நிலையம் அது.

அதன் கார்கோ டர்மினலில் இருந்து புறப்பட்ட விமானத்துக்குள் நிஜமாக என்ன லோட் செய்யப்பட்டிருந்தது என்பதை அருகில் நெருங்கி செக் பண்ண இவர்கள் அனுமதிக்கப்படவில்லை.

Simferopol விமான நிலையத்தில் வைத்து, இரணமடுவுக்கு செல்வதற்கான பிளைட்-பிளான் ஒன்று இவர்களுக்கு காட்டப்பட்டது. அங்கிருந்து சுமார் 6450 கி.மீ. தொலைவில் உள்ளது இரணமடு.

இரணமடுவில், அதிகாலை நேரத்தில் விமானம் வந்து சேரும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், விடிந்த பின்னரும் வந்து சேரவில்லை. வன்னியில் இருந்து உக்ரேனுடன் தொடர்பு கொள்ளப்பட்டது. உக்ரேனில் இருந்தவர்கள், ஆயுத வியாபாரியை தொடர்பு கொண்டார்கள். விமானத்தை எப்படியும் தொடர்பு கொண்டபின் விபரம் தெரிவிப்பதாக கூறினார் ஆயுத வியாபாரி.

சில மணி நேரத்தின்பின் ஆயுத வியாபாரி விசித்திரமான தகவல் ஒன்றை கொடுத்தார்.

“விமானம் தரையிறங்கி விட்டது. ஆனால், தவறான இடத்தில் இறங்கியுள்ளது. அங்கே சிக்கலில் மாட்டிக் கொண்டுள்ளார் விமானி” என்றார் ஆயுத வியாபாரி!

தரையிறங்கியதாக கூறப்பட்ட தவறான இடம் எது என்று தெரிந்தால் ஆச்சரியத்தின் உச்சிக்கே செல்வீர்கள்.

அது, இந்தியாவில், மும்பைக்கு அருகில் உள்ள ரத்னகிரி ஏர்போர்ட்! (Ratnagiri Airport – IATA code RTC)

2008-ல் இந்த சம்பவம் நடந்ததாக சொல்லப்பட்ட காலத்துக்கு சில வாரங்களின்பின் மகாராஷ்டிரா மாநில பொதுப்பணித் துறையிடம் இருந்து, இந்திய கடலோரப் பாதுகாப்பு படையிடம் ஒப்படைக்கப்பட்ட விமான நிலையம் அது. புலிகளுக்கு ஆயுதம் ஏற்றிச் சென்றதாக கூறப்பட்ட உக்ரேன் விமானம் ஏன், எதற்கு, எப்படி அங்கே தரையிறங்கியது?

அதை, அடுத்த அத்தியாயத்தில் சொல்கிறோம்!

தொடரும்...

Source
nadunadapu  

Keerthivasan

About Keerthivasan -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :