Monday, September 25, 2017

Keerthivasan

ஈழப் போரின் இறுதி நாட்கள் – 14

புலிகளின் பகுதிக்கு, சொன்னது போல ஒரு விமானம், அதிகாலை 4.30-க்கு வந்தது!

Just for Representation mentioned in this Article | Image Source: http://imgproc.airliners.net

விடுதலைப் புலிகளின் ஆயுத சப்ளைக்கான கப்பல் போக்குவரத்து கே.பி.-யின் கையில் இருந்து எடுக்கப்பட்டது. புலிகளின் கப்பல்கள் கடல் புலிகளின் தளபதி சூசையிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது, கடல் புலிகளால் இதை ஹான்டில் பண்ண முடியுமா என்ற சந்தேகத்தை எழுப்பிய பொட்டு அம்மான், தமது உளவுப் பிரிவு ஆட்களை வைத்து டெவலப் செய்த, Plan-B பற்றி கடந்த அத்தியாயத்தில் கூறியிருந்தோம்.

பொட்டு அம்மானால் ஆயுதம் வாங்க உக்ரேன் நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக நாம் குறிப்பிட்ட இரண்டுபேரும், அங்கே இவர்கள் டீல் பண்ணிய ஆயுத வியாபாரியால் ரொம்பவும் அலைய விடப்பட்டனர். அத்துடன், அந்த வியாபாரிக்கும், இலங்கை உளவுப் பிரிவுக்கும் இடையே ஏற்கனவே இருந்த தொடர்பும், உக்ரேனில் புதிதாக போய் இறங்கிய இவர்கள் இருவருக்கும் தெரிந்திருக்கவில்லை.

உக்ரேனில் உள்ள Simferopol ஏர்போர்ட்டில் இருந்து புலிகளின் ஆயுதங்களுடன் புறப்பட்டதாக இவர்களுக்கு காட்டப்பட்ட விமானம், ஒரு AN-72 ரக விமானம்.


AN-72 விமானம். இது ஒரு மீடியம் சைஸ் ஜெட் விமானம். ரஷ்ய தயாரிப்பு.

அதில் ஆயுதங்கள் வருவதாகவும், விமானம் இரணமடுவில் உள்ள ரன்வேயில் இறங்குவதற்கு ஏற்பாடு செய்யுமாறும், வன்னியில் இருந்த பொட்டு அம்மானுக்கு தகவல் அனுப்பியிருந்தார்கள்.

யுத்தம் முடிவுக்கு வந்தபின், 2011-ல் இதில் தொடர்புடைய ஒருவரை சந்திக்க நேர்ந்தது. அவரிடம், “2008-ம் ஆண்டு உக்கிரேனில் இருந்து புறப்பட்ட அந்த விமானத்தில் நிஜமாகவே ஆயுதங்கள் லோட் செய்யப்பட்டு இருந்தனவா என்பது உங்களுக்கு தெரியுமா?” என்று கேட்டேன்.

“தெரியாது. அது நடந்த நேரத்தில் வன்னி யுத்தத்தில் நாம் (புலிகள்) பின்வாங்கிக் கொண்டிருந்தோம். அவசரமாக ஆயுதங்கள் தேவையாக இருந்தன. விமானத்தில் ஆயுதங்கள் ஏற்றப்பட்டு இருந்ததாக அவர்கள் கூறியதை நம்புவதை தவிர எமக்கு வேறு வழி இருக்கவில்லை” என்றார்.

தற்போது எல்லாவற்றையும் இணைத்துப் பார்த்தால், புலிகளுக்கு கூறப்பட்டதுபோல அந்த விமானத்தில் ஆயுதங்கள் ஏதும் இருக்கவில்லை என்று ஊகிக்க முடிகிறது.

விமானம் Simferopol ஏர்போர்ட்டில் இருந்து புறப்பட… விமானம் வரும் என்று வன்னியில் புலிகள் காத்திருக்க… “விமானம் தவறுதலாக மும்பைக்கு அருகில் உள்ள ரத்னகிரி ஏர்போர்டில் தரையிறங்கி விட்டது” என்றார் உக்ரேன் ஆயுத வியாபாரி! அதன்பின் இந்திய அதிகாரிகளை ‘எப்படியோ சரிக்கட்டி’ விமானத்தை மீட்டு வந்துவிட்டோம். ஆயுதங்களை இந்திய அதிகாரிகள் பறிமுதல் செய்து விட்டார்கள்” என்றும், ஆயுத வியாபாரி கூறிவிட்டார்.

வன்னியிலோ இலங்கை ராணுவம் வேகமாக முன்னேறிக்கொண்டு இருந்தது. சூசையின் ஆயுதக் கப்பல்கள் வந்து சேரும் என்ற நம்பிக்கை இயக்கத்தின் உயர்மட்டத்தில், விஷயம் தெரிந்த பலருக்கும் அற்றுப் போயிருந்தது. ஆயுதங்கள் வந்து சேராவிட்டால், தோல்வி நிச்சயம் என்ற நிலை சிறிது சிறிதாக ஏற்பட்டுக் கொண்டிருந்தது.

வன்னியில் இருந்து பொட்டு அம்மான், “மீண்டும் ஒரு தடவை விமானம் மூலம் ஆயுதம் அனுப்ப முயற்சி செய்யுங்கள்” என்று உக்ரேனுக்கு அவசர தகவல் அனுப்பினார்.

இவர்கள் ஏற்கனவே, போய்ச் சேராத ஒரு லோட் ஆயுதங்களுக்காக உக்ரேன் ஆயுத வியாபாரியிடம் பணம் கொடுத்திருந்தார்கள். அந்த ஆயுதங்கள் இந்திய அதிகாரிகளிடம் சிக்கி விட்டதால், மறுபடியும் பணம் கொடுத்தால்தான், அடுத்த முயற்சி செய்ய முடியும் என்று ஆயுத வியாபாரி சொல்லி விட்டார்.

இந்த விபரம் பொட்டு அம்மானுக்கு தெரிவிக்கப்பட்டது.

அடுத்த லோட் ஆயுதங்களுக்காக பணம் ஏற்பாடு செய்வதாக பொட்டு அம்மான் தெரிவித்தார். இந்த விபரம் புலிகளின் தலைவர் பிரபாகரன் வரை போய், அப்போது புலிகளின் வெளிநாட்டு பிரிவுக்கு பொறுப்பாக இருந்த காஸ்ட்ரோ என்கிற மணிவண்ணனின் ஐரோப்பிய முகவர் மூலமாக பணம் ஏற்பாடு செய்யப்பட்டது. ஒரு வாரத்துக்குள் பணமும், உக்ரேன் போய் சேர்ந்தது.

உக்ரேன் ஆயுத வியாபாரியின் விமானம் இந்தியாவில் தரையிறங்கிய ‘கதை’ நிஜம் என்று பொட்டு அம்மான் நம்பினாரா? அல்லது, யுத்தத்தின் முடிவு நெருங்குவதை புரிந்து கொண்டு, வேறு வழியில்லாமல் மீண்டும் அதே உக்ரேன் ஆயுத வியாபாரிக்கு பணம் கொடுத்து ஒரு முயற்சி செய்ய முடிவு செய்தாரா? இது, சரியாக தெரியவில்லை.

பொட்டு அம்மானால் அனுப்பி வைக்கப்பட்ட சில மில்லியன் டாலர் தொகை, இரண்டாவது தடவையும் உக்ரேன் ஆயுத வியாபாரிக்கு கொடுக்கப்பட்டது.

ஆனால், இம்முறை பணம் கொடுக்கும் முன், உக்ரேனில் இருந்த பொட்டு அம்மானின் ஆட்கள் இருவரும், ஆயுத வியாபாரியுடன் சற்று கடுமையாகவே நடந்து கொண்டார்கள். ஆயுத விமானம் வன்னிக்கு செல்வது தொடர்பான அனைத்து விபரங்களையும் கொடுக்கும்படி கேட்டார்கள். “அந்த விபரங்கள் திருப்திகரமாக இருந்தால்தான் டீல்” என்றார்கள்.

கிடைத்த விபரங்களை, பொட்டு அம்மானிடம் அனுப்பி வைத்தார்கள்.

பொட்டு அம்மான், வெளிநாட்டில் விமானங்களுடன் தொடர்புடையவராக இருந்த தமது சோர்ஸ் ஒருவரிடம் சொல்லி, “இப்படியொரு விமான ஆபரேஷன் சாத்தியமா?” என்று விசாரித்த போது, “அது சாத்தியம்தான்” என்று பதில் கிடைத்திருக்கிறது. அதன் பின்னரே, பணம் கொடுக்குமாறு பொட்டு அம்மான் கூறியிருந்தார்.

மீண்டும் அதே AN-72 ரக விமானம். இம்முறை அதில் ஆயுதங்கள் உள்ளனவா என பார்க்க வேண்டும் என்று முன்கூட்டியே பொட்டு அம்மானின் ஆட்கள் கூறியதில், விமானத்தில் ஆயுதங்கள் லோட் செய்யப்பட்டது அவர்களுக்கு காண்பிக்கப்பட்டது.

விமானம் புறப்படும் நேரம், பறக்கும் நேரம், வன்னிக்கு அருகே விமானம் வரும் நேரம், இரணமடு ரன்வேயில் தரையிறங்கப் போகும் நேரம் அனைத்துமே துல்லியமாக வழங்கப்பட்டிருந்தன. அனைத்து தகவல்களும், வன்னியில் பொட்டு அம்மானுக்கும் கொடுக்கப்பட்டிருந்தது.

இது நடைபெற்ற காலப்பகுதியை சரியாக சொல்ல வேண்டுமென்றால், 2008-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தின் 2-வது வாரத்தில் நடைபெற்றது. புலிகளின் விமான ரன்வே அமைந்திருந்த இரணமடுவுக்கு அருகே யுத்தம் வந்துவிட்டிருந்தது. இலங்கை ராணுவத்தின் 57-வது டிவிஷன், மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ் தலைமையில் வன்னியில் கிளிநொச்சி மாவட்டத்தின் அக்கராயன் குளக்கட்டு அருகே வந்து விட்டது.

அக்கராயன் குளத்தில் இருந்து, ஏ-9 வீதியை கடந்துவிட்டால், இரணமடு!

அதாவது, புலிகள் தமது விமான ரன்வே அமைந்திருந்த இரணமடுவை இழப்பதற்கு சில வாரங்களுக்கு முன், அங்கே உக்ரேன் விமானத்தை தரையிறக்க ஏற்பாடு செய்யப்பட்டது. குறிப்பிட்ட தினத்தில் விமானம் அதிகாலை 4 மணியில் இருந்து 4.30க்குள் ரன்வேயை அப்ரோச் பண்ணும் என்று உக்ரேனில் கூறினார்கள்.

விமானமும் புறப்பட்டது. இரணமடு ரன்வே இருகே ஆயுதங்களை ஏற்றிச் செல்வதற்கு ஆயத்தமாக பொட்டு அம்மானின் ஆட்கள் வாகனங்களுடன் காத்திருந்தார்கள். எல்லாமே ரகசியமாக வைக்கப்பட்டிருந்தன. அந்த நாட்களில், இலங்கை விமானப்படை குண்டுவீச்சு விமானங்கள், இரவு நேரங்களில் குண்டுவீச வருவது அபூர்வம். இதனால், விமானப்படை குண்டுவீச்சு பயமின்றி, ஆயுதங்களை ஏற்றிச் செல்லலாம் என்று நினைத்திருந்தார்கள்.

அதிகாலை 4.30 மணி. விமானம் வரும் ஓசை கேட்டது. கீழே நின்றிருந்தவர்கள் தயாரானார்கள்.

வந்த விமானம் திடீரென இரணமடு பகுதியில் குண்டுவீச துவங்கியபோதுதான், அது இலங்கை விமானப்படையின் குண்டுவீச்சு விமானம் என்று புரிந்தது. ஒன்றல்ல இரண்டு விமானங்கள்!

குண்டுவீச்சில் இரணமடு ரன்வே சேதமடைந்தது.

மறுநாள் பொட்டம்மானின் ஆட்கள் பேசுமுன்னே, உக்ரேனில் இருந்த ஆயுத வியாபாரி எகிறத் துவங்கி விட்டார். “எமது விமானத்தை வரச் சொல்லி விட்டு, அந்த தகவலையும் உங்கள் ஆட்கள்தான் எப்படியோ இலங்கை விமானப் படைக்கு லீக் செய்து விட்டார்கள். எமது விமானமும், விமானியும் உயிர் தப்பியதே பெரிய விஷயம். இனியும் வேண்டாம் இந்த வியாபாரம்” என்றார் அவர்.

இரண்டாவது தடவை கொட்டிக் கொடுத்த பணமும் கோவிந்தா!

அத்துடன், புலிகள் விமானம் மூலம் ஆயுதம் இறக்கும் முயற்சி முடிவுக்கு வந்தது. அதன்பின் முயற்சி செய்ய முடியாதபடி, இலங்கை ராணுவத்தின் 57-வது டிவிஷன் டிசம்பர் 1-ம் தேதி அக்கராயன்குளத்தை கடந்து ஏ-9 வீதியில் கொக்காவில் என்ற இடத்தைக் கைப்பற்றியது. மற்றொரு படைப்பிரிவான 58-வது டிவிஷன், ஜனவரி 8-ம் தேதி முரசுமோட்டை என்ற இடத்தைக் கைப்பற்றியது.

இந்த இரு இடங்களுக்கும் நடுவே அமைந்திருந்தது, புலிகளின் விமான ரன்வே!

யுத்தம் முடிந்தபின் சமீபத்தில், இலங்கை விமானப்படை சோர்ஸ் ஒருவரிடம் இருந்து ஒரு விபரம் தெரியவந்தது. அந்த விபரம் என்னவென்றால், இரணமடுவில் புலிகள் காத்திருந்த தினத்தில், உக்ரேன் விமானம் வரவே இல்லை.

உக்ரேன் ஆயுத வியாபாரி, இலங்கை உளவுத்துறைக்கு முன்கூட்டியே தகவல் கொடுத்து, அன்று அதிகாலை இரணமடு ரன்வே அருகே புலிகளின் உளவுப்பிரிவு முக்கியஸ்தர்கள் காத்திருக்க சான்ஸ் உள்ளது என்று கூறியிருந்தார். அதையடுத்தே சரியான நேரத்தில், இலங்கை விமானப்படை விமானம் குண்டுவீச வந்து சேர்ந்தது.

புலிகள் யுத்தத்தில் தோல்வியடைந்தது ஏன் என்று ஆளாளுக்கு பல காரணங்களை கூறுகிறார்கள். ஆனால், திரை மறைவில் நடைபெற்ற இதுபோன்ற பல சம்பவங்கள்தான் முக்கிய காரணம் என்பது தெரியப்படாத உண்மையாகவே உள்ளது. காரணம், இந்த விஷயங்கள் ரகசியமாக நடந்தவை. இவற்றில் சம்மந்தப்பட்ட ஓரிருவர் மட்டுமே தற்போது உயிருடன் உள்ளார்கள்.

2002-ம் ஆண்டுக்குப் பின், கே.பி.-யிடம் இருந்து ஆயுதக் கொள்வனவும் கப்பல் போக்குவரத்தும் கைமாறியபின், ஈறுதி யுத்தம் முடியும்வரை வன்னிக்கு போய் சேர்ந்த ஆயுதங்கள் மொத்தமாகவே சுமார் 25 டன் (25,000 கிலோ) மட்டுமே. அதாவது 7 ஆண்டுகளில், அடிபடாமல் போய்ச் சேர்ந்தவை அவ்வளவுதான்.

2002-க்கு முன், புலிகள் யுத்தத்தில் வெற்றிமுகம் காட்டிய நாட்களில், சில சமயங்களில் மாதம் ஒன்றுக்கு 25 டன் ஆயுதங்கள் போய் சேர்ந்த காலமும் இருந்தது.

ஆயுதம் வாங்குவதும், அதை அனுப்பி வைப்பதும், ஒரு கலை. அதை யாராலும் செய்ய முடியும் என்று சிலர் கூறியதை, புலிகளின் தலைவர் பிரபாகரன் ஏற்றுக் கொண்டார். அதற்கான விலையையும் அவர் கொடுக்க நேர்ந்தது. ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் ஆயுத இறக்குமதி அடிபட்டிருந்தால் பரவாயில்லை. அல்லது யாரோ ஒருவர் செய்த முயற்சி அடி வாங்கியிருந்தால் பரவாயில்லை என்று ஏற்றுக் கொள்ளலாம்.

ஆனால், 2002-க்கு பின் அனைவர் செய்த அனைத்து முயற்சிகளும் ஒவ்வொன்றாக அடி வாங்கியதை என்னவென்று சொல்வது?

நடந்த சம்பவங்களில் உள்ள ரகசியங்கள் வெளியாகும்போதுதான், காரணங்கள் பல புரியவரும். ரகசியங்களை பேண வேண்டிய அவசியமும் இனி கிடையாது என்பதால், தோல்விக்கான காரணங்களை புரிந்துகொள்ள விரும்பியவர்கள் புரிந்து கொள்ளுங்கள். தற்போது புரிந்துகொள்ள விரும்பாதவர்களை, எதைச் சொல்லியும் நம்ப வைக்கவும் முடியாது. நம்ப வைக்க வேண்டிய அவசியமும் யாருக்கும் கிடையாது.

அப்படியானவர்கள் இன்னமும் 5 வருடங்களின்பின், அல்லது 10 வருடங்களின்பின் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் புரிந்து கொள்ளுங்கள். அது உங்க இஷ்டம்.

கடல் புலிகளின் தலைவர் சூசையின் ஆயுதக் கப்பல்கள் ஒவ்வொன்றாக அடிபட்ட பின்னணியிலும் பல விஷயங்கள் உள்ளன. சூசையின் கப்பல் முயற்சியில் நம்பிக்கை இழந்த பொட்டு அம்மான் செய்த விமான முயற்சியை தந்திருக்கிறாம்.

உண்மையில், ஆயுதங்களை வன்னிக்கு கொண்டுவர பொட்டு அம்மான் செய்திருந்த 2-வது முயற்சி அது. அதற்குமுன் 2006-ல் பொட்டு அம்மான் செய்த மற்றொரு முயற்சியும் உள்ளது. மேற்கு ஆபிரிக்க நாடு ஐவரி கோஸ்ட்டில் (Ivory Coast) இருந்து ஆயுதம் கொண்டுவர செய்த முயற்சி அது.

தொடரும்...

Source
nadunadapu  

Keerthivasan

About Keerthivasan -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :