Monday, September 25, 2017

Keerthivasan

ஈழப் போரின் இறுதி நாட்கள் – 15

பொட்டு அம்மானின் ‘ஐவரி கோஸ்ட்’ கப்பல், வந்து கொண்டே இருக்கிறது!



விடுதலைப் புலிகள் அமைப்பின் உளவுப் பிரிவு தலைவர் பொட்டு அம்மானால் செய்யப்பட்ட முதலாவது ஆயுத இறக்குமதி முயற்சி 2006-ம் ஆண்டு பிற்பகுதியில் துவங்கியது. உக்ரேனில் இருந்து விமானம் மூலம் ஆயுதம் இறக்க பொட்டு அம்மான் செய்த முயற்சிக்கும் இதற்கும் உள்ள பெரிய வேறுபாடு, இந்த டீலுக்காக பொட்டு அம்மான் பிரத்தியேகமாக யாரையும் வன்னியில் இருந்து அனுப்பவில்லை.

ஏற்கனவே பிரான்ஸில் வசித்து வந்த ஒருவர்தான், பொட்டு அம்மானின் முதலாவது ஆயுத இறக்குமதி டீலின் முகவர். நாம் குறிப்பிடும் நபர் தற்போதும் ஐரோப்பாவில் வசிப்பதால், பெயர் வேண்டாம். வேறு சில விபரங்கள் தருகிறோம்.

இந்த நபர், வன்னியில் பொட்டு அம்மானின் கீழ் பணிபுரிந்தவர். இலங்கையின் முக்கிய அரசியல் தலைவர் ஒருவரை கொல்லும் மனித வெடிகுண்டு தாக்குதல் முயற்சியில் தொடர்புடையவர். அந்த தாக்குதலுக்காக பொட்டு அம்மானால் வன்னியில் இருந்து கொழும்பு அனுப்பி வைக்கப்பட்டவர்.

கொழும்பில் குண்டு வெடித்தது. ஆனால், அரசியல் தலைவர் காயத்துடன் தப்பித்துக் கொண்டார்.

இதையடுத்து, இலங்கை உளவுத்துறை அதனுடன் தொடர்புடைய சிலர் பற்றி தெரிந்து கொண்டு தேடத் துவங்கியது. இவருக்கும், அந்த குண்டு வெடிப்புக்கும் இடையிலுள்ள தொடர்பை இலங்கை உளவுத்துறை தெரிந்து கொண்டதை புலிகளின் உளவுப்பிரிவு தெரிந்து கொண்டது.

அதையடுத்து இவரை கொழும்புவில் இருந்து வன்னிக்கு வருமாறு சொன்னார்கள். அவரோ, வன்னிக்கு செல்லாமல், கொழும்பில் இருந்து வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றார். அவர் போய் சேர்ந்த இடம், பிரான்ஸ்.

பிரான்ஸில் இருந்து அவர், பொட்டு அம்மானுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டார். அப்போதுதான், பொட்டு அம்மான் புலிகளின் உளவுப்பிரிவு சார்பில் ஆயுதம் இறக்க யோசித்துக் கொண்டிருந்த காரணத்தால், ஏற்கனவே வெளிநாட்டில் இருந்த இவர் உதவ முன்வந்தார்.

மேற்கு ஆப்பிரிக்க நாடு ஐவரி கோஸ்ட்டில் (Ivory Coast) இருந்து ஆயுதம் இறக்கலாம் என்ற ஐடியாவை இவர் கொடுத்தார். அந்த முயற்சிக்கு இவரையே தமது பிரதிநிதியாக நியமித்துக் கொண்டார் பொட்டு அம்மான்.

ஆயுதம் வாங்குவதற்கு ஐவரி கோஸ்ட் நாட்டை இவர் எப்படி தேடிப் பிடித்தார்?


ஐவரி கோஸ்ட் ஒருகாலத்தில் பிரான்ஸ் நாட்டின் காலனியாக இருந்த நாடு. 1960-ல் பிரான்ஸிடம் இருந்து சுதந்திரம் பெற்றாலும், அதன்பின்னரும் பிரான்ஸ் நாட்டுடன் பல விஷயங்களில் தொடர்பில் இருந்தது. அந்த ஆப்பிரிக்க நாட்டின் அரசு மொழியே பிரெஞ்ச்தான்.

ஐவரி கோஸ்ட்டின் பிரஜைகள் பலர் பிரான்ஸில் வசிக்கிறார்கள் (நம்ம பாண்டிச்சேரிக்காரர்கள் பிரான்ஸில் வசிப்பது போல). அப்படி வசித்த ஒருவர், ஐவரி கோஸ்ட் ராணுவத் தளபதி ஒருவரின் உறவினர். அவர்தான், பொட்டு அம்மானின் பிரதிநிதியின் ஐவரி கோஸ்ட் தொடர்பாளர்.

பொதுவாகவே ஆப்பிரிக்க நாடுகளில் ஊழல் அதிகம். அரசு அலுவல்களில் பணம் கொடுத்து பல காரியங்கள் செய்யலாம். அதே நேரத்தில் ஏமாற்றுபவர்களும் அதிகம். பிரான்ஸிலுள்ள ஐவரி கோஸ்ட்காரர், “நீங்க நேரில் சென்றால், எனது உறவினர் மூலம் சுலபமாக ஆயுதம் வாங்கலாம்” என்று பொட்டு அம்மானின் ஆளிடம் கூறியிருக்கிறார்.

இந்தக் கதை வன்னிக்கு செல்லவே, தமது பிரதிநிதியை, பிரான்ஸில் இருந்து ஐவரி கோஸ்ட்டுக்கு அனுப்பி வைத்தார் பொட்டு அம்மான். அனுப்பி வைக்கப்பட்ட நபர், அதற்குமுன் வாழ்க்கையில் ஒரு தடவைகூட ஆயுதம் வாங்கிய அனுபவமற்ற ஆள்!

இவர்கள் ஐவரி கோஸ்டில் இருந்து ஆயுதம் இறக்கலாம் என்று எப்படி நம்பினார்கள் என்பதே மகா ஆச்சரியமான விஷயம். ஒருவேளை ஐவரி கோஸ்ட்டின் ராணுவ நிலவரம் பற்றி இவர்களுக்கு அவ்வளவாக தெரிந்திருக்கவில்லையோ, என்னவோ!

ஐவரி கோஸ்ட், பிரான்ஸில் இருந்து சுதந்திரம் பெற்றபின் ஒரு வருடத்துக்கு நாட்டுக்கு ராணுவமே இல்லாமல் இயங்கியது. அதன்பின் பிரான்ஸின் உதவியுடன் சிறியதாக ராணுவம் ஒன்றை அமைத்துக் கொண்டது. Force Republiques de Cote d’Ivoire (FRCI) என்பதே அவர்களது ஆயுதப் படைகளின் பொதுப் பெயர்.

ஐவரி கோஸ்ட்டில், 550 கி.மீ. நீளமான கடல் எல்லை இருந்தும், அவர்களது கடற்படை மிகவும் சிறியது. வெறும் 650 பேரை மட்டுமே கொண்டிருந்த படை அது. விமானப்படையில் 100-க்கும் குறைவானவர்களே இருந்தார்கள்.

1987-ல் FRCI மாற்றியமைக்கப்பட்டது. ராணுவம், ஐந்து பிராந்திய தலைமையகங்களாக பிரிக்கப்பட்டன. ஒவ்வொன்றுக்கும் தலைவராக ஒவ்வொரு கர்னல் நியமிக்கப்பட்டார். இந்த ஐந்து பிரிவுகளில் ஒன்று Bouaké என்ற இடத்தில் அமைந்திருந்தது. அதன் தலைவரான கர்னலின் உறவினர்தான், நம்ம பொட்டு அம்மானின் பிரான்ஸ் பிரதிநிதியின், ஆபிரிக்க வழிகாட்டி.

Bouaké-வில் அமைந்திருந்த ராணுவ தலைமையகத்தில் ஐவரி கோஸ்ட்டின் இன்ஃபான்ட்ரி, ஆட்டிலரி, மற்றும் இஞ்சினியரிங் பட்டாலியன்கள் இருந்தன. ஆனால், இவர்கள் நேரடியாக ஆயுதம் வாங்குவதில்லை. நாட்டின் பெரிய நகரமான Abidjan-ல் (தலைநகர் அல்ல) இருந்த தலைமை அலுவலகமே ராணுவத்துக்கு ஆயுதம் வாங்கும் பணியை கவனித்தது.

அப்படியிருந்தும், Bouaké ராணுவ கர்னலால் ஆயுதம் பெற்றுக் கொடுக்க முடியும் என்பதை பொட்டு அம்மானின் ஆட்கள் எப்படி நம்பினார்கள் என்பது புரியவில்லை.

அதைவிட, பொட்டு அம்மானின் ஆள் ஐவரி கோஸ்ட்டில் போய் இறங்கிய 2006-ம் ஆண்டு, ராணுவ ரீதியில் அவர்களுக்கே மகா சிக்கலான காலப்பகுதி.

2004-ல் பிரான்ஸ் நாட்டு அமைதிப்படை ஐவரி கோஸ்ட்டில் இருந்தது. பிரான்ஸ் அமைதிப்படை மீது ஐவரி கோஸ்ட் விமானப்படை முட்டாள்தனமாக குண்டு வீசியது. அப்போது பிரான்ஸ் ஜனாதிபதியாக சிராக் இருந்தார். அவர் போட்ட உத்தரவு என்ன தெரியுமா? “ஐவரி கோஸ்ட் விமானப் படையின் அனைத்து விமானங்களையும் அழித்து விடுங்கள். யமோசோக்ரோ விமான நிலையத்தையும் கைப்பற்றி விடுங்கள்”

பிரெஞ்ச் ராணுவம் களத்தில் இறங்கி, ஐவரி கோஸ்ட் விமானப்படையை துடைத்து எடுத்துவிட்டது. விமானப் படையின் Su-25 தரை தாக்குதல் விமானங்கள், Mi-24 தாக்குதல் ஹெலிகாப்டர்கள் அனைத்தும் அழிக்கப்பட்டன. யமோசோக்ரோ விமான நிலையம் கைப்பற்றப்பட்டது.

அதன்பின் ஐவரி கோஸ்ட் ராணுவ ரீதியாக என்ன செய்கிறது என்பதில் பிரான்ஸ் எப்போதும் ஒரு கண் வைத்திருந்தது. பிரான்ஸை மீறி, ஐவரி கோஸ்ட்டுக்கு யாரும் ஆயுதம் விற்க முடியாது என்ற நிலைமை இருக்கையில்தான், ஆயுதம் வாங்க ஐவரி கோஸ்ட் போய் இறங்கினார் பொட்டு அம்மானின் ஆள்.

2006-ல் துவங்கிய இந்த முயற்சியால், 2007-ம் ஆண்டு நடுப்பகுதிவரை ஐவரி கோஸ்ட் ஆயுதங்கள் வருகின்றன என்று பொட்டு அம்மான், பிரபாகரனுக்கு சொல்லிக் கொண்டு இருந்தார். சுமார் 6 மில்லியன் டாலர் பணம் முன்பணமாக கொடுக்கப்பட்டதாக சொல்லப்பட்டது.

2002-ம் ஆண்டு அமைதிப் பேச்சுக்களின்பின், வெளிநாடுகளில் உள்ள தமிழர்களிடம் பெருமளவு பண வசூலில் புலிகள் அமைப்பு இறங்கியிருந்த காரணத்தால், இந்த 6 மில்லியன் டாலர் பெரிய விஷயமாக அவர்களுக்கு இருக்கவில்லை.

2007-ன் நடுப் பகுதியில் பொட்டு அம்மானின் பிரான்ஸ் பிரதிநிதி, “ஆயுத டீல் ஊத்திக் கொண்டது” என்பதை வன்னிக்கு அறிவித்தார். ”ஆனால், மற்றொரு டீலை பிடித்திருக்கிறேன். ஐவரி கோஸ்டில் புலிகளுக்காக கப்பல் ஒன்றை வாங்கலாம். மேலும் கொஞ்சம் பணம் தேவை” என்றார்.

இந்த கப்பல் நிதிக்காக, ஐரோப்பிய நாடு (சுவிஸ்) ஒன்றில் தமிழ் மக்களிடம் பிரத்தியேக வசூல் செய்யப்பட்டது. “உங்கள் பெயரில் பேங்கில் கடன் எடுக்கிறோம். அதன் மாத இன்ஸ்டால்மென்டை நாமே கட்டி விடுகிறோம்” என்ற டீலில் சில மில்லியன் டாலர்கள் சேர்ந்தன. அவை ஐவரி கோஸ்ட் கப்பலுக்காக அனுப்பி வைக்கப்பட்டன.

கடல் புலிகளின் தலைவர் சூசை இயக்கிய கப்பல்கள் ஒவ்வொன்றாக ஆயுதங்களுடன் வந்து அடிபட்டு மூழ்கிவிட்ட நிலையில், இந்த ஐவரி கோஸ்ட் கப்பல் எங்கே என்று கேட்டார் பிரபாகரன்.

“வந்துகொண்டு இருக்கிறது” என்று சொன்னார்கள். 2009-ம் ஆண்டு மே மாதம் யுத்தம் முடியும்வரை ஐவரி கோஸ்ட் கப்பல் வரவில்லை. அதற்குப் பின், “கப்பல் எங்கே?” என்று கேட்க ஆளில்லை.

வராத கப்பலுக்காக சுவிஸ்ஸில் பல தமிழர்கள் இன்னமும் இன்ஸ்டால்மென்ட் கட்டிக் கொண்டு இருக்கிறார்கள்.

சரி. கப்பல் வாங்க போன பொட்டு அம்மானின் ஆள் எங்கே? அவர் ஐரோப்பிய நாடு ஒன்றில், 3 சூப்பர் மார்க்கெட்டுகளுக்கு உரிமையாளராக ஜம்மென்று இருக்கிறார். அடுத்த ஈழப் போர்வரை அவர் வியாபாரத்தை கவனிக்கட்டும்.
“புலிகள் ஏன் தோற்றார்கள்?” என்று கேட்டால், “அவர் காட்டிக் கொடுத்தார், இவர் காட்டிக் கொடுத்தார்” என்று திரும்பிய திசையில் எல்லாம் கைகளை காட்டுகிறார்கள். புலிகள் தோற்ற முக்கிய காரணமே, யுத்தம் புரிய போதிய ஆயுதங்கள் இல்லாமைதான். 2002-ம் ஆண்டின்பின், வன்னிவரை போய் சேர்ந்ததே மொத்தம் சுமார் 25 டன் (25,000 கிலோ) மட்டுமே. அதாவது 7 ஆண்டுகளில், அடிபடாமல் போய்ச் சேர்ந்தவை அவ்வளவுதான்.

ஆயுத வியாபாரத்தின் அரிச்சுவடிகூட தெரியாத ஆட்கள் ஆயுதம் வாங்க நியமிக்கப்பட்ட நிலையில், இவர்களை காட்டிக் கொடுக்க யாராவது வெளியே இருந்து வரவும் வேண்டுமா? சொந்த முயற்சியிலேயே சொதப்பினார்கள் என்று பச்சையாக சொல்ல முடியாது. “யாரோ காட்டிக் கொடுத்தார்கள்” என்றே கௌரவமாக வைத்துக் கொள்வோம்.

லண்டனில் உள்ள புலிகளின் முக்கியஸ்தர் ஒருவர், கடல் புலிகளுக்காக Naval Optronics Radar Tracker சாஃப்ட்வேர் ஒன்றை வாங்க, தமது சொந்த கிரெடிட் கார்டில் ஆர்டர் கொடுத்ததை சொல்லவா? கனடாவில் இருந்து ஆயுதம் வாங்க அமெரிக்கா போன புலிகளின் பிரதிநிதிகள் இருவர், ஆயுத வியாபாரி அமெரிக்க உளவுத்துறை FBI ஏஜென்ட் என்பதைகூட புரிந்து கொள்ளாமல், பேரம் பேசி சிக்கிக் கொண்டதை சொல்லவா?

சொந்தமாகவே சிக்கிக் கொள்ளும் திறமைசாலிகளை காட்டிக் கொடுக்க, வெளியே இருந்து யாராவது ‘துரோகி’ வரவும் வேண்டுமா?

2002-ம் ஆண்டுவரை புலிகளுக்கு கே.பி.-யின் ஆயுத சப்ளை ஒழுங்காக சென்று கொண்டிருந்த காரணம், அந்த ட்ரேடின் நெளிவு சுழிவுகள் அவருக்கு தெரிந்திருந்ததே. அப்போது போய் இறங்கிய ஆயுதங்கள்தான் புலிகளின் ராணுவ வெற்றிகளுக்கு பெரிதும் காரணமாக இருந்தன.

தோளில் வைத்து டாங்கிகளையே சுடக்கூடிய RPG (Rocket Propelled Grenade – shoulder-fired, anti-tank weapon system which fires rockets equipped with an explosive warhead) கே.பி.-யால் புலிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்ட போது, இலங்கை ராணுவத்திடமே அவ்வகை ஆயுதங்கள் இருக்கவில்லை. புலிகள் அவற்றை உபயோகித்தபோது, அது என்ன என்று புரியாமல் திணறியது இலங்கை ராணுவம்.

புலிகள் அந்த ஆயுதத்தை உபயோகித்து தாக்குதல் நடத்தியபோது, புலிகளின் தளபதிகள் மட்டத்தில், “இதை யார் அனுப்பியது?” என்ற பேச்சே பிரதானமாக இருந்தது. அப்போது, புலிகளின் சில தளபதிகள் சென்னையில் இருந்தனர். ஆயுதங்கள் அனுப்பியதால் இயக்கத்துக்குள் ஏற்படும் கியாதி எப்படியானது என்பதை, புலிகளுக்கு RPG போய்ச் சேர்ந்த நாட்கள் காட்டின.

பின்னாட்களில், வன்னிக்குள் இலங்கை ராணுவத்தின் கமாண்டோ தாக்குதலில் கொல்லப்பட்ட புலிகளின் தளபதி சங்கரும் அப்போது சென்னையில் இருந்தார். (சங்கர்தான் புலிகளின் விமான பிரிவை ஆரம்பத்தில் உருவாக்கியவர்)

சென்னையில் இருந்த சங்கர், தமது சோலோ முயற்சி ஒன்றில் புலிகளுக்கு ஆயுதம் இறக்க முயன்றார். அவருடைய தொடர்பாளர்கள் இருவர் லண்டனில் இருந்தார்கள். இவர்களது முயற்சியில் ஆயுதம் இறக்க, சூயஸ் கால்வாய் அருகே, செங்கடலில் புலிகளின் கப்பல் ஒன்று காத்திருந்த கதையை அடுத்து பார்க்கலாம்… 

தொடரும்...

Source
nadunadapu 

Keerthivasan

About Keerthivasan -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :