Wednesday, September 27, 2017

Keerthivasan

ஈழப் போரின் இறுதி நாட்கள் – 17

புலிகளின் ஆயுதங்களுக்காக கடலில் காத்திருந்த கப்பலும், மச்சக்கார அமைச்சரும்!




விடுதலைப் புலிகளுக்காக லண்டனில் அல்ஜீரியாகாரரிடம் பேரம் பேசி 1 மில்லியன் பவுண்ட்ஸ் முன்பணமும் கொடுத்துவிட்டு, ஆயுதங்களை எடுத்துக் கொண்டு வர புறப்பட்டது, சங்கர் தலைமையிலான டீம். சிங்கப்பூரில் நின்றிருந்த புலிகளின் கப்பலை உடனடியாக அனுப்பி வைக்குமாறு பிரபாகரன் கூறியதையடுத்து, அந்தக் கப்பலும் புறப்பட்டது.

20 ஆண்டுகளுக்கு முன், ஒன்றரை மில்லியன் பவுண்ட்ஸ் என்பது மிகப்பெரிய தொகை. அவ்வளவு பணம் கொடுத்து வாங்கப்படும் ஆயுதங்களை ஜாக்கிரதையாக கொண்டுவந்து சேர்க்க வேண்டும் என்பதால், புலிகளின் கப்பல் ஆபரேஷனில் இருந்த அதி திறமைசாலிகளை அனுப்பி வைக்குமாறு, கே.பி.-யிடம் பிரபாகரன் கூறியிருந்தார்.

சின்னவர் என அழைக்கப்படும் ஒருவர்தான் கப்பலின் கேப்டனாக அனுப்பி வைக்கப்பட்டார். கேப்டன் சின்னவர் செலுத்திய கப்பலில் இஞ்ஜினியராக செயல்பட்டவர், சாந்தன்.

இவர்களது கப்பல் செங்கடல் நோக்கிச் செல்லுமுன், இந்திய கடல் பகுதிக்குள் வந்தது. சென்னையில் இருந்து சங்கர், மனோ மாஸ்டர், தினேஷ் ஆகியோர் ஒரு படகு மூலமாக சென்று இந்தக் கப்பலில் ஏறிக் கொண்டனர். விடுதலைப்புலிகளும், மாலுமிகளுமாக மொத்தம் 20 பேர் இருந்தனர்.

லண்டனில் உள்ள அல்ஜீரியாக்காரர் கூறியபடி, கப்பலை செங்கடல் நோக்கி செலுத்துமாறு சங்கர் கூறினார். செங்கடலில், அல்ஜீரியாக்காரரின் கப்பல் எங்கே வந்து இவர்களை சந்திக்கும் என்று சங்கருக்கு தெரிந்திருக்கவில்லை. செங்கடலின் பரப்பளவு, 4 லட்சத்து 38 ஆயிரம் சதுர கி.மீ!

கப்பலில் ஏறியவுடன் சங்கருடன் வந்திருந்த தினேஷ், தாம் கொண்டு சென்றிருந்த ஹெச்.எஃப். செட் ஒன்றை இயக்க துவங்கினார். அதில்தான் சங்கர், பிரபாகரனுடனும், லண்டனில் இருந்த தமது ஆட்கள் இருவருடனும் தொடர்பு கொண்டு, தாம் கப்பலில் ஏறிவிட்ட விஷயத்தை தெரிவித்திருந்தார்.

லண்டனில் இருந்த இருவரில் ஒருவர், தற்போது உயிருடன் இல்லை. மற்றையவர் உருத்திரகுமாரனின் மெகா அமைச்சரவையில் ஒரு அமைச்சராக உள்ளார் என ஏற்கனவே கூறியிருந்தோம்.

சங்கரிடம் பேசிய கேப்டன் சின்னவர், “செங்கடலின் எந்த பகுதிக்கு வரவேண்டும் என்று தெரிந்தால், தேவையற்ற அலைச்சலை தவிர்க்கலாம். சரியான விபரத்தை தாருங்கள்” என்றார். ஆனால், “செங்கடலை நோக்கி செல்லுங்கள்” என்பதைத் தவிர வேறு எந்த தகவலும் சங்கரிடம் இல்லை.

அவர், ஹெச்.எஃப். செட் மூலம் லண்டனில் இருந்த அமைச்சரை தொடர்பு கொண்டு, “செங்கடலில், எந்த இடத்துக்கு வரவேண்டும் என்று கேட்கிறார்கள்?” என்று கேட்டார்.

அமைச்சரோ, செங்கடலை உலக வரைபடத்தில் மட்டுமே பார்த்த அனுபவசாலி. அவருக்கும் சரியாக சொல்ல தெரியவில்லை.

ஒரு வழியாக லண்டனில் அல்ஜீரியாகாரரை தேடிப் பிடித்து விசாரித்த போது, அவரோ, “செங்கடலில் சும்மா சென்று கொண்டிருங்கள். எங்கே வரவேண்டும் என்று அப்புறம் சொல்வோம்” என்றார்.

இதை கேட்ட கேப்டன் சின்னவருக்கு தலை சுற்றியது!

காரணம், இந்த செங்கடல் என்பது, இந்தியக் கடலின் ஒரு நீட்சியாக, சர்வதேச கப்பல் ரூட்டில் உள்ளது. அரேபிய வளைகுடாவுக்கும், ஆபிரிக்காவுக்கும் இடையே உள்ள கப்பல் போக்குவரத்தின் இணைப்பு இந்த கடல் பகுதி. பல கப்பல்கள் பயணித்துக் கொண்டிருக்கும் இந்த செங்கடலில் சும்மா எங்கே போவது?

இதையடுத்து கேப்டன் சின்னவர், சங்கருக்கு ஒரு விஷயத்தை தெளிவு படுத்தினார். “போக்குவரத்து அதிகமுள்ள செங்கடலில் சும்மா உலாவிக் கொண்டிருக்க முடியாது. வேண்டுமானால், செங்கடலின் தெற்கு வாயிலான பாப் எல் மான்டெப் (Bab-el-Mandeb) வரை போய், அங்கே காத்திருக்கலாம். அதற்கு மேல் போக வேண்டாம்.

அந்த இடத்திலிருந்து வட திசையில் கடல் இரு பாதைகளாக பிரிகிறது. சூயஸ் கால்வாய் வழியாக மெடிட்டரேனியன் கடலுக்கு செல்லும் பாதை அது. அதற்குள் உள்ளே புகுவதற்கு முன், அனைத்துக் கப்பல்களும் சோதனையிடப்படும். எனவே நாம் வெளியே காத்திருப்போம்” என்றார்.

இதையடுத்து, இவர்களது கப்பல், பாப் எல் மான்டெப் பகுதி வரை போய் நின்று கொண்டது.

சங்கர், பிரபாகரனை தொடர்பு கொண்டு, “ஆயுதங்களை பெற்றுக் கொள்ளும் இடத்துக்கு வந்து விட்டோம். இனி ஆயுதங்களை ஏற்றிக் கொண்டு புறப்பட வேண்டியதுதான்” என்று தெரிவித்தார்.

ஏ.கே.-47
இந்த ஆயுதங்கள் பற்றிய மற்றொரு தகவல் என்னவென்றால், ஆர்.பி.ஜி. போன்ற ஆயுதங்களும் கொடுப்பதாக கூறியிருந்தாலும், பெருமளவில் ஏ.கே.-47 ரக துப்பாக்கிகளை கொடுப்பதாகவே அல்ஜீரியாக்காரர் கூறியிருந்தார். அதற்கு அவர் கூறிய காரணம், 2-ம் உலக யுத்தத்தில் உபயோகிப்பதற்காக தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் அவை. தயாரிப்பு முடிந்த நிலையில், 2-ம் உலக யுத்தமும் முடிந்து விட்டதால், அவற்றை ‘பல்க்’ விலையில் வாங்கலாம் என்பதுதான்.

அதன்படி புலிகளுக்காக கே.பி.யால் வாங்கப்பட்ட ஏ.கே.-47களை விட மிகக் குறைந்த விலையில், ஆயிரக்கணக்கான ஆயுதங்களை கொடுப்பதாக பேச்சு.

ஆயுதம் ஏற்ற வேண்டிய இடத்துக்கு வந்துவிட்டதாக சங்கர் தெரிவித்ததையடுத்து பிரபாகரன், புலிகளின் ராணுவ ரீதியான

வளர்ச்சிக்கான அடுத்த திட்டங்களை தீட்டினார். ஆயிரக்கணக்கில் துப்பாக்கிகள் வரவுள்ளதால், இயக்கத்தில் மேலதிக ஆட்களை இணைத்துக் கொள்ளுமாறு இலங்கையில் இருந்த தளபதிகளுக்கு உத்தரவிட்டார்.

இதையடுத்து, புலிகள் இயக்கத்தின் பயிற்சி அணிகள் வழமைக்கு மாறாக, குறுகிய காலப் பகுதியில், அதிக அளவில் ஆரம்பிக்கப்பட்டன.

புலிகள் அமைப்புக்கு இந்த எக்ஸ்பான்ஷன் அப்போது தேவையாகவும் இருந்தது. காரணம், டெலோ இயக்கம் அதீத வளர்ச்சி அடைந்து கொண்டிருந்த காலம் அது. இலங்கையில் சில தாக்குதல்களையும் டெலோ நடத்த துவங்கியிருந்தது.

விரைவில் ஆயுதங்கள் வந்துவிடும் என பிரபாகரன் நம்பிக் கொண்டு, புதிய உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொண்டிருக்க, செங்கடலின் தெற்கு வாயில் பாப் எல் மான்டெப் பகுதியில் கப்பலுடன் காத்திருந்தார் சங்கர். நாட்கள் ஓடியதே தவிர, ஆயுதக் கப்பல் வருவதாக தெரியவில்லை.

சுமார் 1 மாத காலம் காத்திருந்த நிலையில், கப்பலில் இருந்த உணவுப் பொருட்கள் மற்றும் தண்ணீர் ஸ்டாக் குறைய துவங்கி விட்டது. இனி ஆயுதக் கப்பல் வந்து, ஆயுதங்களை ஏற்றினாலும், அதன்பின் எங்காவது துறைமுகத்துக்கு போய், உணவு மற்றும் தண்ணீர் ஸ்டாக் பண்ண வேண்டும் என்று சொன்னார் கேப்டன் சின்னவர்.

சங்கர், பிரபாகரனிடம் “ஆயுதக் கப்பல் வருவதற்கு சிறிது தாமதமாகிறது. அதற்குமுன் கப்பலில் உணவு, மற்றும் தண்ணீர் தீர்ந்துவிடும் போலிருக்கிறது” என்றார்.

பிரபாகரன், கே.பி.-யை தொடர்பு கொண்டு, ஏதாவது செய்யும்படி கூறவே, ஆபிரிக்க நாடான ட்ஜிபோடிக்கு (Djibouti) தமது ஆள் ஒருவரை அனுப்பி வைத்தார் கே.பி.

இந்தக் கப்பலுக்கு 2 மாதங்களுக்கு தேவையான உணவு மற்றும் தண்ணீர் சப்ளை செய்வதற்கு ட்ஜிபோடி நாட்டு துறைமுகத்தில் (Port of Djibouti) ஏற்பாடு செய்யப்பட்டது. கப்பல், பாப் எல் மான்டெப் பகுதியில் இருந்து ட்ஜிபோடி துறைமுகத்துக்கு சென்று பொருட்களை நிரப்பி வந்து, மீண்டும் காத்திருக்க துவங்கியது.

கப்பலில் இருந்த 20 பேருக்கும் பொழுதுபோக்கு வாலிபால் விளையாடுவதும், சீட்டுக்கட்டு விளையாடுவதும்தான்.

சங்கர் அவ்வப்போது பிரபாகரனுடன் தொடர்பு கொண்டு, அல்ஜீரியாகாரரின் ஆயுதக் கப்பல் ‘இதோ வருகிறது, அதோ வருகிறது’ என்று சொல்லிக் கொண்டிருந்தார். பாவம், அவரும்தான் என்ன செய்வது? லண்டனில் இருந்து ‘அமைச்சர்’ கூறியதை, இந்தப் பக்கம் கூறிக்கொண்டிருந்தார்.

அதன்பின், மற்றொரு தடவை சங்கர் பிரபாகரனுடன் தொடர்பு கொண்டு, “கே.பி.-யின் ஆளை ட்ஜிபோடிக்கு அனுப்ப சொல்லுங்கள்” என்றார்! அதன் அர்த்தம், கப்பலில் ஏற்றப்பட்ட 2 மாத சப்ளை முடிகிறது! கப்பல் இன்னமும் செங்கடல் வாயிலில் காத்திருக்கிறது.

கதை அத்துடன் முடியவில்லை. கே.பி.-யின் ஆள் அதற்குப் பின்னரும் இரு தடவைகள் ட்ஜிபோடிக்கு செல்ல வேண்டியிருந்தது!

கப்பல் வெற்றிகரமான 8-வது மாதத்தை செங்கடலில் பூர்த்தி செய்தது! அதுவரை சங்கரும், இதோ வருகிறது ஆயுதக் கப்பல், அதோ வருகிறது ஆயுதக் கப்பல் என்று சொல்லிக்கொண்டு இருந்தார். புலிகள் அமைப்பில் புதிதாக இணைக்கப்பட்ட பலருக்கு கொடுப்பதற்கு ஆயுதங்கள் இல்லை. டெலோ இயக்கம், புலிகளை விட வெற்றிகரமாக இயங்கத் துவங்கியது.

கே.பி.-யை தொடர்பு கொண்டார் பிரபாகரன். “உடனடியாக ஆயுதங்கள் வேண்டும்” என்றார்.

“ஆயுதங்களை 10 நாட்களில் ஏற்பாடு செய்து விடலாம். ஆனால் அவற்றை ஏற்றி வருவதற்கு கப்பல் இல்லையே? கப்பல்தான் 8 மாதங்களாக செங்கடலில் நிற்கிறது” என்றார் கே.பி.

இந்த 8 மாதங்களில் கொஞ்சம் கொஞ்சமாக பொறுமையை இழந்திருந்தார் பிரபாகரன்.

சங்கர் ஏற்பாடு செய்த ஆயுதங்களுக்காக 1 மில்லியன் பவுண்ட்ஸ் முன்பணம் கொடுக்கப்பட்டுள்ளது. அரை மில்லியன் பவுண்ட்ஸ், ட்ரவலர்ஸ் செக்குகளாக மாற்றப்பட்டு, லண்டனில் உள்ள அமைச்சரின் வீட்டில் இருக்கிறது. ஒரு கப்பலும், அதில் 20 பேரும், செங்கடலில் வாலிபால் விளையாடிக் கொண்டு இருக்கிறார்கள். அந்த ஆயுதங்களை நம்பி, புலிகள் இயக்கத்தில் புதிதாக இணைக்கப்பட்டவர்கள், ஆயுதங்கள் இல்லாமல் இருக்கிறார்கள்.

பொறுமை இழக்காமல் இருக்க முடியுமா?

“அல்ஜீரியாக்காரரை தேடிப்பிடித்து, 1 மில்லியன் பவுண்ட்ஸை உடனே வாங்கவும். கப்பலுடன் திரும்பி வரவும்” என்று இரண்டு.

உத்தரவுகள் பிரபாகரனிடம் இருந்து சங்கருக்கு சென்றன. சங்கர், இதை தனது லண்டன் கூட்டாளிகளுக்கு தெரியப்படுத்தினார்.

“இதற்குப் பிறகு, அல்ஜீரியாக்காரரிடம் இருந்து 1 மில்லியன் பவுண்ட்ஸ் பணத்தை, லண்டனில் இருந்த அமைச்சரும், மற்றையவரும் வாங்கியிருப்பார்களா?”

இந்தக் கேள்விக்கான பதிலை அநேகமாக நீங்கள் ஊகித்திருப்பீர்கள். “அது பட்டை நாமம்தான்” என்று பட்டென்று சொல்லியும் விடுவீர்கள்.

ஆனால், அதுவல்ல கிளைமாக்ஸ்!

லண்டனில் இருந்து நமது அமைச்சர், அவசர அவசரமாக சங்கரை தொடர்பு கொண்டார். “அல்ஜீரியாக்காரருடன் கொஞ்சம் கடுமையாக பேசினோம். பணத்தை கொடுத்து விடுமாறு கடுமையாக கூறினோம்” என்று துவங்கினார்.

“பணம் கிடைத்ததா?”

“நான் சொல்ல வந்தது வேறு விஷயம்” என்ற அமைச்சர், “அல்ஜீரியாக்காரர் என்னுடைய வீட்டுக்கு வந்து, வீட்டை உடைத்து, நாம் வைத்திருந்த அரை பில்லியன் பவுண்ட்ஸ் ட்ராவலர்ஸ் செக்குகளையும் எடுத்துச் சென்றுவிட்டார்” என்றார்!

ஓலலா!

பின்கதை சுருக்கம் என்ன?

1) வாலிபால் கப்பல் திரும்பி வந்தது.

2) சங்கர் வந்து பிரபாகரனை கட்டிப் பிடித்து அழுதார். லண்டனில் இருந்தவர்கள் (அமைச்சரும், மற்றையவரும்) சொதப்பி விட்டார்கள் என்று அந்தப் பக்கம் கையை காட்டிவிட்டார்.

3) சங்கருடன் சென்றிருந்த மனோ மாஸ்டர், சங்கர்மீது கடும் கோபத்தில் குமுறிக் கொண்டிருந்தார்.

4) “இவர்கள் சொன்ன விலைக்கு ஆயுதங்கள் வாங்குவதற்கு சான்சே இல்லை. அதுவும் இப்படி புடலங்காய் வாங்குவதுபோல ஏ.கே.47 வாங்க முடியாது என்று நான் ஆரம்பத்தில் இருந்தே சொன்னேன்” என்றார் கே.பி., பிரபாகரனிடம்.

5) சங்கர் கூறிய காரணங்களை பிரபாகரன் ஏற்றுக் கொண்டார். சங்கர் மன்னிக்கப்பட்டார்.

6) லண்டன் கூட்டாளிகள் வசமாக சிக்கினர். ஆனால், இதில் வரும் அத்தனை பேரிலும், அதிஷ்டசாலி ஒருவர் உண்டென்றால், அந்த மச்சக்காரர், நம்ம லண்டன் அமைச்சர்தான்!

7) லண்டன் கூட்டாளிகள் இருவரையும் இலங்கைக்கு அழைத்து தண்டனை கொடுப்பது என்று முதலில் முடிவு செய்யப்பட்டது. ஆனால், நம்ம அமைச்சரின் குடும்பத்தில் வேறு ஆட்கள் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்தனர். வெளியே இருந்த ஒரேயொரு நபர் இவர்தான். இவர்தான் குடும்பத்துக்காக உழைக்க வேண்டும் என்ற காரணத்துக்காக, இலங்கைக்கு அழைக்கப்படாமல், தப்பித்துக் கொண்டார்.

8) லண்டனில் இருந்த மற்றையவர், இலங்கைக்கு அழைக்கப்பட்டார். இயக்கத்தில் இருந்த அனைத்துப் பொறுப்புகளும் அவரிடம் இருந்து பறிக்கப்பட்டன. அதன்பின், வன்னியில் அவருக்கு கொடுக்கப்பட்ட ‘வேலை’ என்ன என்பதை எழுத நாம் விரும்பவில்லை. விஷயமறிந்த யாரிடமாவது விசாரித்து கொள்ளவும். வன்னியில் நடைப்பிணம் போல வாழ்ந்த அவர், பின்னர் மாரடைப்பில் மரணமடைந்தார்.

9) 2009-ல் யுத்தம் முடிந்து, யாரும் இல்லை என்ற நிலை ஏற்பட்டபின், இந்த மச்சக்காரர், உருத்திரகுமாரனின் நாடு கடந்த அரசில் அமைச்சரானார். அவரது வீட்டை உடைத்து களவாடப்பட்டதாக கூறப்பட்ட அரை மில்லியன் பவுண்ட்ஸ் பற்றி ‘வேறு கதை’ ஒன்றும் இப்போது தெரியவந்துள்ளது.

எத்தனையோ மில்லியன் போய்விட்டதாம், இந்த அரை மில்லியனும் போகட்டும், விட்டு விடலாம்!

இந்த விவகாரம் முடிந்தபோது, புலிகளுக்கு ஆயுதங்கள் மிக மிக அவசரமாக தேவைப்பட்டன. இல்லாவிட்டால், டெலோவின் கை பல விஷயங்களில் உயர்ந்துவிடும் என்ற நிலை இருந்தது. ஆயுதம் வாங்குவதற்காக உடனடியாக லெபனான் புறப்பட்டார் கே.பி.

யாரிடமும் சிக்காமல், மும்பை வழியான சென்னைக்கு ஆயுதம் கொண்டுவந்த கதையை, அடுத்த பாகத்தில் பார்க்கலாம்!

தொடரும்...

Source
nadunadapu 

Keerthivasan

About Keerthivasan -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :