Wednesday, September 27, 2017

Keerthivasan

ஈழப் போரின் இறுதி நாட்கள் – 18

விடுதலை புலிகளின் கப்பல்கள் வருவதை செல்போனில் ஒட்டுக் கேட்டது உளவுத்துறை!


2002-ம் ஆண்டு வரை, விடுதலைப் புலிகளுக்கு ஆயுத சப்ளை செய்துவந்த கே.பி.யிடம் இருந்து அந்தப் பொறுப்பு மற்றையவர்களின் கைகளுக்கு மாறியபின், ஆயுத சப்ளை செயின் எப்படியெல்லாம் அறுந்தது. யார் யாரெல்லாம் போட்டு குழப்பினார்கள் என்பதை கடந்த 18 அத்தியாயங்களிலும் பார்த்தோம். அவற்றை தவற விட்டிருந்தால், பழைய அத்தியாயங்களை பார்க்கவும்.

விடுதலைப் புலிகள் யுத்தத்தில் தோல்வியடைந்த காரணங்களில் மிக முக்கியமான காரணம் அதுதான். அதாவது, யுத்தம் புரிய ஆயுதங்கள் போய் சேரவில்லை.

இப்போது மற்றொரு கோணத்தில் இந்த தொடர் திரும்புகிறது.

இலங்கை ராணுவம் இந்த யுத்தத்தை எப்படி, யாருடைய உதவியுடன் ஜெயித்தது? யார், என்னவெல்லாம் செய்தார்கள்? எப்படிச் செய்தார்கள்?

இலங்கை அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே சமாதான பேச்சுவார்த்தை தொடங்கியபோது, எப்படியும் மீண்டும் யுத்தம் வெடிக்கும் என்று அனைவருக்கும் தெரியும். காரணம், அதற்குமுன் நடந்த பேச்சுவார்த்தைகள் யாவும் அப்படியே முடிந்தன. இரு தரப்பும், யுத்த ஏற்பாடுகளை செய்வதற்கே பேச்சுவார்த்தை காலங்களை பயன்படுத்தினார்கள்.

அந்த வகையில், சமாதான பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்தபோதே, 2002-ம் ஆண்டு, இலங்கை ராணுவத்தை போருக்கு ஏற்ற வகையில் எப்படி மாற்றி அமைக்க வேண்டும் என்ற ரிப்போர்ட் ஒன்றை தயாரித்து கொடுத்தது யார் தெரியுமா? அமெரிக்க பாதுகாப்பு அமைச்சு!

அமெரிக்க பாதுகாப்பு அமைச்சின் யுத்த திட்டமிடலாளர்கள் அடங்கிய டீம் ஒன்று இலங்கை சென்று சுமார் 10 நாட்கள் தங்கியிருந்து, இலங்கை ராணுவத்தின் பிளஸ்கள் எவை, மைனஸ்கள் எவை என்று கணித்து, விடுதலைப் புலிகளை யுத்தத்தில் ஜெயிக்க வேண்டுமானால், இலங்கை ராணுவத்தை எப்படி மாற்றி அமைக்க வேண்டும் என அறிக்கை ஒன்றை கொடுத்தது.

US Defence Department Report on SL 2002 என்ற அந்த ரிப்போர்ட்டின் முக்கிய விஷயம்:


விடுதலைப் புலிகளுக்கான ஆயுத சப்ளை முற்றாக நிறுத்தப்பட்டால்தான், யுத்தத்தில் இலங்கை ராணுவம் ஜெயிக்க முடியும். அதற்காக இலங்கை கடற்படை சீரமைக்கப்பட வேண்டும். இலங்கை கடற்படையில், Corvettes, Frigates, Destroyers, Battleships ஏதும் இல்லாத நிலையில், ஆழ்கடல் யுத்தத்தில் ஈடுபடும் வசதியை கடற்படை பெற்றுக்கொள்ள வேண்டும்.

இந்த பரிந்துரை, இலங்கை பாதுகாப்பு அமைச்சால் மிகவும் சீரியஸாக எடுத்துக் கொள்ளப்பட்டது. கடற்படையில் மாற்றங்கள் செய்யப்பட்டன.

விடுதலைப் புலிகளுடன் இறுதி யுத்தத்தில் இலங்கை ராணுவம் 2009-ம் ஆண்டு, வெற்றி பெற்றது. அந்த வெற்றிக்கு அடித்தளம் போடப்பட்டது, 2007-ம் ஆண்டு. இலங்கை ராணுவத்தில் 2007-ம் ஆண்டை, ‘கடற்படையின் ஆண்டு’ என்கிறார்கள். அந்த ஆண்டுதான், விடுதலைப் புலிகளின் முக்கிய ஆயுதக் கப்பல்கள் பல ஒவ்வொன்றாக தாக்குதலுக்கு உள்ளாகி, மூழ்கடிக்கப்பட்டன.


2002-ம் ஆண்டு அமெரிக்க அறிக்கை கிடைத்தபின், 2003-ம் ஆண்டு விடுதலைப் புலிகளின் இரு ஆயுதக் கப்பல்கள் மூழ்கடிக்கப்பட்டன. இரண்டுமே டேங்கர் ரக கப்பல்கள். அதன்பின் 3 ஆண்டுகளுக்கு தாக்குதல் ஏதுமில்லை. மீண்டும் 2006-ம் ஆண்டு, செப்டெம்பர் 17-ம் தேதி, இலங்கை மட்டக்களப்பில் இருந்து கிழக்கே 240 கி.மீ. தொலைவில், கடலில் வைத்து புலிகளின் மற்றொரு இலங்கை கடற்படையால் கப்பல் மூழ்கடிக்கப்பட்டது. அதுவும் டேங்கர் ரக கப்பலே.

ஒருவகையில் பார்த்தால், இந்த கப்பல் முற்று முழுதாக கடற்படை தாக்குதலில் மூழ்கடிக்கப்படவில்லை. விமானப்படையின் குண்டுவீச்சு விமானங்களும் வந்து குண்டு வீசி, விடுதலைப் புலிகளின் டேங்கரை மூழ்கடித்தன.

அந்த கப்பல், இலங்கை கரைக்கு அருகில் வரும் தகவல் எப்படி கடற்படைக்கு கிடைத்தது?

விடுதலைப் புலிகளின் சட்டலைட் போன் உரையாடல்களை ஒட்டுக் கேட்பதன் மூலம் அந்த தகவல் கிடைத்தது.

விடுதலைப் புலிகளின் ஆயுதக் கப்பல், இலங்கை கரையில் இருந்து 300 கடல் மைல்களுக்கு அப்பால் வந்தபோது, கப்பலில் இருந்தவர்கள், சட்டலைட் போன் மூலம் வன்னியில் உள்ளவர்களுடன் தொடர்பு கொண்டார்கள். வன்னியில் இருந்த புலிகளின் முக்கியஸ்தர்கள் பலரது சட்டலைட் போன்கள் ஒட்டுக் கேட்கப்பட்டது, புலிகளுக்கு தெரியாமல் இருந்தது.

இலங்கை ராணுவத் தலைமையகத்தில், Directorate of Military Intelligence அலுவலகம் 2-ம் மாடியில் இயங்குகிறது. இதில் வலது கோடியில் உள்ள ஆபரேஷன் ரூமில், விடுதலைப் புலிகளின் சட்டலைட் போன்கள் ஒட்டுக் கேட்கப்படும் கருவிகள் இருந்தன. 24 மணி நேரமும், இந்த ஒட்டுக் கேட்கும் கருவியில், ராணுவ உளவுப் பிரிவினர் பணியில் இருந்தார்கள்.

அப்படி ஒட்டுக் கேட்ட தகவல் மூலம், புலிகளின் கப்பல் வரும் விஷயம் தெரிய, இலங்கை கடற்படையும் விமானப்படையும் கூட்டாக சேர்ந்து, அந்த கப்பலை மூழ்கடித்தன. கொழும்பு பத்திரிகைகள், டி.வி. எல்லாமே கடற்படையும், விமானப்படையும் கூட்டாக சேர்ந்து செய்த இந்த ஆபரேஷனை ஆஹா, ஓஹோ என்று புகழ்ந்து தள்ளின.

இந்த புகழால் வந்தது, சிக்கல்!

இலங்கை ராணுவத்துக்கும், கடற்படைக்கும் இடையே உரசல்கள் இருந்தன! கடற்படையும், விமானப்படையும் கூட்டாக பேர் வாங்கிக் கொண்டு போனதை, ராணுவத்தில் இருந்த ஒரு பிரிவினரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.

அவர்களது கோபத்துக்கு காரணம், என்னதான் கடற்படையும், விமானப்படையும் தாக்குதல் நடத்தினாலும், Directorate of Military Intelligence ஒட்டுக் கேட்டு தகவல் சொல்லாவிட்டால், இவர்களால் தாக்கியிருக்க முடியுமா? ராணுவ உளவுத்துறைக்கு புகழில் பங்கு கிடைக்கவில்லை!

ராணுவத்தில் உள்ள கோபம் கொண்ட பிரிவினர் என்ன செய்தார்கள்?

கீழேயுள்ள போட்டோவில், இலங்கை விமானப்படை விமானத்தில் இருந்து குறிவைக்கப்படும் விடுதலைப் புலிகளின் ஆயுதக் கப்பல். …அடுத்த பக்கம் வாருங்கள்.

ராணுவத்தில் உள்ள கோபம் கொண்ட பிரிவினர், கொழும்பில் இருந்து வெளியாகும் சண்டே டைம்ஸ் பத்திரிகையின் ராணுவ செய்தியாளர் இக்பால் அத்தாஸ் என்பவரை அழைத்து, விடுதலைப் புலிகளின் சட்டலைட் போன் ஒட்டுக் கேட்கப்பட்ட விஷயத்தை சொல்லி, அதனால்தான் புலிகளின் கப்பல் மூழ்கடிக்கப்பட்டது என்ற ரகசியத்தை அவிழ்த்து விட்டார்கள்.

இக்பால் அத்தாஸ் மிக்க ஆனந்தத்துடன், அடுத்த ஞாயிற்றுக்கிழமை வெளியான பத்திரிகையில் விலாவாரியாக போட்டு வாங்கி விட்டார்.

உடனே, விடுதலைப் புலிகளின் தளபதிகள் சட்டலைட் போன்களில், இதுபோன்ற விஷயங்களை பேசுவதை நிறுத்திக் கொண்டார்கள்.

கொதித்து போனது, இலங்கை கடற்படை. ஆனால், அதுவும் செய்ய முடியவில்லை. காரணம், ஒட்டுக் கேட்டல் முழுவதும் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த இலாகாவால் நடத்தப்பட்டது. அவர்களாக பார்த்து தகவல் கொடுத்தால்தான், கடற்படைக்கு எதுவும் தெரியும் என்ற நிலை.

அப்போது இலங்கை கடற்படைக்கு தளபதியாக இருந்தவர், அட்மிரல் வசந்த கரன்னகொட.




அட்மிரல் வசந்த கரன்னகொட, 2005-ம் ஆண்டு செப்டெம்பர் 1-ம் தேதி, இவர் இலங்கை கடற்படைக்கு தளபதியாக்கப்பட்டார். அவர் தலைவராகி சரியாக 1 வருடத்தின்பின் 2006-ம் ஆண்டு செப்டெம்பர் 17-ம் தேதி, புலிகளின் கப்பல் மூழ்கடிக்கப்பட்டது. அத்துடன், புலிகளின் போன் உரையாடலில் இருந்து உளவுத் தகவல் கிடைப்பது அறுந்து போனது.

அதே செப்டெம்பர் மாதம் 8-ம் தேதி (2006) புதிய அமெரிக்க தூதராக கொழும்பு சென்று இறங்கினார், ராபர்ட் ஓ. பிளேக். (கீழேயுள்ள போட்டோவில் இலங்கை ராணுவத்தினருடன் நடந்து வருபவர்)

அட்மிரல் வசந்த கரன்னகொடவுக்கு, அமெரிக்க தூதருடன் மரியாதை நிமித்த சந்திப்பு ஒன்றுக்கு நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. மரியாதை நிமித்த சந்திப்பு என்று தொடங்கி, சீரியஸாக 1 மணி நேரம் நீடித்தது, அந்த சந்திப்பு. அதில் விடுதலைப் புலிகளின் ஆயுதக் கப்பல்களை அழிப்பதற்கு, அமெரிக்க உதவி, இலங்கை கடற்படைக்கு தேவை என்று கோரிக்கை விடுத்தார், வசந்த கரன்னகொட.

புதிய அமெரிக்க தூதர் ராபர்ட் ஓ. பிளேக், எந்த உறுதிமொழியும் அளிக்கவில்லை.

இந்த சந்திப்பு நடந்து 2 வாரங்களின்பின், கொழும்புவில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் இருந்து, இலங்கை கடற்படை தலைமைச் செயலகத்துக்கு ஒரு தொலைபேசி அழைப்பு சென்றது. அமெரிக்க டீம் ஒன்று கொழும்பு வந்திருப்பதாகவும், கடற்படை தளபதி, கடற்படை உளவுப் பிரிவு பொறுப்பாளர், மற்றும் முக்கிய அதிகாரிகளுடன் அவசர சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும், கூறப்பட்டது.

மறுநாள் காலை 10 மணி. நான்கு அமெரிக்கர்கள் கொண்ட டீம் ஒன்று இலங்கை கடற்படை தலைமைச் செயலகத்தில் போய் இறங்கினார்கள். அவர்களுக்கு தலைமை தாங்கியவர் ஒரு பெண்; அமெரிக்க உளவுத்துறை சி.ஐ.ஏ.வை சேர்ந்தவர்.

அட்மிரல் வசந்த கரன்னகொடவிடம் அந்த சி.ஐ.ஏ. பெண் அதிகாரி, “விடுதலைப்புலிகளின் ஆயுத கடத்தல் ஆபரேஷன் பற்றி உங்கள் உளவுத்துறைக்கு என்ன தெரியும் என்பதை முதலில் சொல்லுங்கள். சி.ஐ.ஏ.வுக்கு என்ன தெரியும் என்று நாங்கள் சொல்கிறோம்” என்றார்.

தொடரும்...

Source
nadunadapu 

Keerthivasan

About Keerthivasan -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :